Adsense

ஹிந்துத்வ சிறுகதைகள் - வாசிப்பனுபவம்.


ஒரு சித்தந்தத்தின் சாரத்தை எடுத்துச் சொல்வதற்கு பல மார்கங்கள் இருக்கின்றன. உரைகள், தொடர் பேச்சுகள், கதையாடல்கள், காவியங்கள், கலை வடிவங்கள் என பல மார்கங்களும் கையாளப்படுகின்றன. அவ்வகையில், கதைகளின் மூலம் ஒரு சித்தாந்தத்தின் சாரத்தை விளக்க முனையும் ஒரு பிரசார புத்தகத்தைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஹிந்துத்வ பிரசார கதைகள் என்ற தொகுதியை முழுவதுமாக வாசித்தேன்.  இக்கதைகளை நான் ஏற்கனவே தனித்தனியாக படித்திருக்கிறேன். ஆனால் ஒரு தொகுதியாக படிக்கும் போது கிடைக்கும் அனுபவமே தனி தான். அவ்வனுபவங்களின் பதிவே இது. 

ஆவணப்படுத்தப்படாத சரித்திரமாகவே இருந்து வந்த இந்தியாவின்  சரித்திரமானது பல்வேறு காவியங்கள் வாயிலாகவும், இதிகாசங்கள் வாயிலாகவும் சாமானிய மனிதன் அறியும் வகையில் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டிருக்கிறது. அகாவியங்கள்  காரணமாகவே, 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒரு எளிய பாமரனாலும் பொது யுகம் தோன்றுவதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மண்ணின் மகத்தான மைந்தர்களைப் பற்றிய அறிந்திருக்க முடிகிறது (அதில் பல்வேறு விதமான கற்பனாவாதங்களும் கலந்தே இருந்தன என்பது மறுப்பதிற்கில்லை – ஆனால் காலவெள்ளத்தில் முற்றிலும் மறக்கப்படவில்லை என்பது மிக முக்கியமான சாதனை). கலாசார பழக்கங்களும் இவ்வளவு காலமாக பெரிதாக அழிந்துவிடவில்லை. இதனாலேயே, வரலாற்று ஆய்வாளர் ஏ எல் பாஷம், “உலகத்திலேயே இந்தியர்களும் சீனர்களும் மட்டுமே தம் பழம் பாரியத்தோடு அற்றுப்போகாத கலாசார தொடர்பிலிருக்கிறார்கள்” என அறுதியிட்டுக் கூறுகிறார்..

1784 ஆம் ஆண்டு சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற கிழக்கிந்திய நீதிபதி, துவக்கிய “ஏஷியாடிக் சொசைட்டி” வாயிலாகவே இந்திய காவியங்களை பிற மொழியாக்கம் செய்யும் பணி துவங்கியது. இதுவே இந்திய வரலாற்றை ஆவணப்படுத்த ஏற்பட்ட முதல் முயற்சி என சொல்லலாம். இதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் துவக்கம்வரை நிகழ்ந்த முயற்சிகள் அனைத்துமே, இந்தியாவின் காவிய மரபை ஆவணப்படுத்தும் முயற்சியாகவே இருந்தன. ஆனால் இவ்வாவண முயற்சியே பின் தோன்றிய மேற்கத்திய இந்திய-ஆய்வாளர்களின் தலைமுறையின் பணிகளுக்கு அடித்தளமாக அமைந்தது. அது மட்டுமன்றி, இவற்றின் வாயிலாக எழுப்பப்பட்ட இந்தியா குறித்த சித்திரம் இந்தியா குறித்த பல முன்முடிவுகளுக்குக் காரணமாக இருந்தன.
உதாரணமாக, சர் வில்லியம் ஜோன்ஸ் 1789ஆம் ஆண்டு மொழிபெயர்த்த சாகுந்தலம், பின்னர் 1792 ஆம் ஆண்டு மொழிபெயர்த்த கீத கோவிந்தம் போன்ற பணிகளின் வாயிலாக, சமகால இந்தியா தன் பழம் பெருமைகளிலிருந்து விலகி சீரழியும் ஒரு சமுகம் என்றும், அதைக் காக்க மேற்கத்திய சிந்தனையாலேயே முடியும் என்ற முன் முடிவையே அவர் வைத்தார். அவரும் அவர் பின்னர் தோன்றிய ஜெர்மனிய, இந்திய-ஆய்வாளர்களின் (ஹெர்டர் (Johann Gottfried Herder) ,ஷ்லேகல் (Wilhelm von Schlegel), மேக்ஸ் முல்லர்) ஆக்கங்கள் இந்தியாவின் பழம் பெருமைகளை மிக உயர்வாகப் பேசினாலும், வில்லியம் ஜோன்ஸ் முன்வைத்த “சிதையும் இந்தியா” என்ற சித்தாந்தத்தையே கட்டமைத்தது.

இவர்களுக்கு இந்தியாவை அணுகுவதில் இருந்த மிகமுக்கிய சிக்கல் இந்து மதம்.  அவர்களுக்கு அவர்களின் சமகாலத்தில் இந்தியாவில் நிலவிய மத ரீதியான பழக்கங்கள் மூடப்பழக்கவழக்கங்களாகவும், அர்த்தமற்ற மத சடங்காகவுமே இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அவர்களால் கிருஸ்துவத்தைத் தாண்டிய மேலான, பழமையான மத அமைப்பு இருக்கும் சாத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனாலேயே அவர்கள் இந்து மதத்தின் துவக்கத்தை பழைய ஏற்பாட்டுக் காலத்திற்கு அருகிலேயே நிறுத்தினர். இந்தியாவில் கிருஸ்துவ மிஷனரி அமைப்பை முறையாக உருவாக்கி இந்தியர்களை கிருஸ்து மார்கத்திற்கு திருப்ப வேண்டும் என்ற முணைப்பில் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் 1813 இந்தியாவில் மிஷனரிகள் அனுமதிக்கப்படுவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர மூன்று மணி நேர தொடர் வாதத்தை முன்வைத்து இதன் காரணமகவே. அதில் வெற்றியும் கண்டார். அவரைப் பொருத்தவரை, இந்தியா என்பதும் இந்து மதம் என்பது இரு வேறு விஷயங்களில்லை. இந்து மதம் என்பது மிகவும் கொடுரமான, இரக்கமற்ற , காமவெறி கொண்ட ஒரு அமைப்பு. அதனால், மிகவும் கருணையும், தூய்மையும் கொண்ட கிருஸ்துவ மதத்தைக் கொண்டு இந்தியாவை தூய்மைப் படுத்தவேண்டும் என்பதே அவர் வாதம். 

வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் முன்வைத்த வாதமும், அதன் விளைவாக கிழக்கிந்திய கம்பெனி, மிஷனரிகளுக்கு அதிகாரபூர்வமாக கதவுகளை திறந்து விட்டதும், ஏதோ அறியாமையால் நிகழ்ந்ததில்லை. அது ஒரு திட்டமிட்ட அரசியல். மதத்தைப் பரப்புவதற்கும், பின்னர் அம்மதத்தின் வாயிலாக பிரிந்த மக்களை தேசிய சிந்தனைகளில் கலக்க விடாமல் செய்வதற்கும் வகுக்கப்பட்ட திட்டமாகவே இதைக் கருத வேண்டும். இது காந்தியின் சத்திய சோதனையில் காலிசரனைப் பற்றிய அவரது கருத்தாக வெளிப்படும் வரிகளில் புலனாகும் (”எனக்கு சராசரி இந்திய கிருஸ்துவரிடம் இருந்த அவநம்பிக்கை அவர் மேல் இல்லை”). தேசியத்திற்காக துணைபோவதாகக் கருதப்பட்ட சில மிஷனரிகள் இந்தியாவை விட்டே விலக்கப்பட்டன. ஆனால், இதையும் தாண்டி  இந்திய சுதந்திர போரட்டத்தில்  இந்திய கிருஸ்துவர்களின் பங்கும் இருந்திருக்கிறது.  உதரணமாக, பாபு காலிசரன் பானர்ஜி (”என்னை இயேசுவின் பாதைக்கு திரும்புவதற்கு இவராலும், அழுத்தமான காரணங்களைத் தர இயலவில்லை” என்கிறார் காந்தி), ரமாபாய் சரஸ்வதி, பிரம்மபந்தோ உபாத்யாய், பால் ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடமுடியும்.
இந்தப் பிண்ணனியில் தான் நாம் தமஸோ மா என்ற நீள்-சிறுகதையில் வரும் ஹென்றி வொயிட்ஹெட் பேசும் வசனங்களை அணுக வேண்டும். 

இத்தொகுதியின் பலம் மற்றும் பலவீனம் இதுவே. இக்கதைகளின் ஊடாக முன் வைக்கப்படும் கருத்துகள் சிலவற்றை அணுக நாம் அதன் பின்புலங்களைத் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவற்றை தேவைப்படும் இடங்களில் குறிப்புகளாக அரவிந்தன் தந்திருக்கிறார். ஆனால் மேம்போக்காக படிக்க விரும்பும் ஒரு வாசகன் இக்கதைகளை எளிதாக பிரச்சாரம் என்ற ஒற்றை வார்த்தையோடு கடந்து சென்று விட முடியும். அப்படி கடந்து செல்லக்கூடிய தகுதியில் எழுதப்பட்டவை என நான் கருதுவன “விலக்கப்பட்ட மலர்”, ”சாட்சி” ஆகிய சிறுகதைகளை மட்டுமே – இவை இரண்டும் முறையே கிருஸ்துவ கூட்டமைப்பில் நிகழும் நிகழ்த்தப்படும் அதிகார துஷ்பிரயோகத்தையும், மதமாற்றத்தின் பிண்ணனியில் நிகழ்த்தப்படும் நாடகங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. இவை பெரும்பாலும் அநேகருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிவதும், மேலும் இந்நிகழ்வுகள் கிருஸ்துவ மதம் சார்ந்தவை மட்டுமேயன்றி இருப்பதாலும், இவற்றை ஒரு பொருட்டாக என்னால் எடுத்துக் கொள்ள இயலவில்லை.

அரவிந்தனின், இத்தொகுதியில் இருக்கும் சிறுகதைகளை இரண்டு வகைக்குள் அடக்கி விடலாம். இந்து தேசிய சிந்தனை மற்றும் கிருஸ்துவ மத விமர்சனம். அதுவே பிரசாரத்தின் நோக்கமாக இருக்க முடியும். இதை வெளிப்படையாகவே அவர் முன்வைக்கிறார். ஆனால், மற்ற பிரசாரத்திலிருந்து இக்கதைகள் மாறுபடும் புள்ளி ஒன்று உண்டு - இக்கதைகளில்  துவேஷத்தைக் காட்டிலும், தேசமே அதிகம் முன்னிறுத்தப்படுகிறது. 

ஹிந்துத்வத்தின் மிக முக்கியமான அடிப்படையான சாதிகளைக் கடந்த நேசம் “பால்” மற்றும் “அமுதம்” ஆகிய கதைகளுக்கு ஆதாரக் கரு. “தெரிஞ்சோ தெரியாமலோ பிறப்பால சக மனுசனை ஒதுக்கி வைக்கிற மகா பாவ காரியத்தை பகவான் பெயராலே தலைமுறை தலைமுறையா செய்றதுக்கான ஒரு சின்ன பிராயச்சித்தம்” என்ற வரிகள் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மையான மனிதத்தை பெரும்பாலும் யாரும் வெளிச்சம் போட்டுக்காட்டுவது கிடையாது. அக்காரணத்தால் மட்டுமே அந்தணர்களின் ஆதிக்கத்தின் மொத்த உருவாக்கமே இந்து மதம் என்ற மிகப்பெரிய மாய பிம்பம் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்து, பின்னர் இந்த பிம்பமே 20ஆம் நூற்றாண்டின் கடைசி இரண்டு பத்தாண்டுகள் வரை வளர்ச்சி பெற்றது. 

சுமைதாங்கி அற்புதமான கதை. இது இன்றைய தேதியில் இந்து மத நம்பிக்கையாளர்கள் முன் மத மாற்றத்திற்கு கருவியாக வைக்கப்படும் மிகப்பெரிய வரலாற்று  திரிபை திட்டவட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மதம் சிறுகதை ஒரு சிறிய ஒளிகீற்று போன்று தோன்றுகிறது. அது பல செய்திகளை பூடகமாக சொல்லிச் செல்கிறது. கிருஸ்துவிற்கு முந்தைய காலத்திலிருந்தே கிழக்கிற்கும் மேற்கிற்கும் இருந்த வர்த்தக உறவு, அக்காலத்தில்இந்திய ஞான மரபு அலெக்சாண்ட்ரியா வரை விரிந்திருந்த உண்மை, தெரெப்யூட், எஸ்ஸீன், மற்றும் நஸரீன் ஆகிய இனக்குழுக்குகள் (பின்னர் அவற்றின் கிளை குழுக்கள்) ஆகியவற்றின்  வெளிப்பாடுகள் பற்றிய செய்தியை இலை மறை காயாகச் சொல்லிச் செல்கிறது.


இந்தத் தொகுதியின் மிக உன்னதமான சிறுகதை என நான் கருதுவது "யாதுமாகி" சிறுகதையைத் தான். இதை நீங்கள் ஒரு பிரசார கதையாக அணுகத் தேவையில்லை. இதன் வடிவமைப்பை கொஞ்சம் செப்பனிட்டால், இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்காவிட்டால் கூட இந்த சிறுகதையின் வீச்சில் நீங்கள்  கலங்கி விடுவீர்கள். அற்புதமான சிறுகதையாக மாறியிருக்கும் இக்கதை. உண்மையில், இப்போது இருக்கும் வடிவத்தில் கூட  மன எழுச்சியை தர வல்லது.

எனக்கு இத்தொகுதியிலிருக்கும் கதைகளில் இருக்கும்  பிரச்சனை இது தான் - இவை அனைத்தையும் சிறுகதை என்ற வரையறைக்குள் நீங்கள் வைத்துப் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால்,
அந்த அளவுகோலும் இதற்குத் தேவையில்லை. ஏனெனில், இது ஒரு சிறுகதை தொகுதியன்று. அரவிந்தன் ஒரு சிறுகதையாளரும் அல்லர். இவை முழுக்க முழுக்க தேசிய சிந்தனைகளும், ஹிந்துத்தவ சாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புனைவுகளின் தொகுதி இது. அம்மட்டே.

இந்த வடிவத்தை அரவிந்தன் தன் எழுத்து பாணியாக வரித்துக் கொண்டால், மிக சவுகரியமாக இருக்கும். அவரின் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்தவர்களுக்கு நான் சொல்வதன் காரணம் புரியலாம். சாமானியனுக்கு அதிகம் அறிமுகமில்லாத வெளிகளை பேசு பொருளைக் கொண்ட கட்டுரைகளை அடர்த்தியான மொழியில் எழுதக்கூடிய அரவிந்தனின் இக் கதைகள் மிகவும் எளிமையாக கடைநிலை வாசகனையும் அடையும் தன்மை கொண்டவை. உண்மையில், இவ்வகை எழுத்தே அரவிந்தனை பலரிடமும் கொண்டு செல்லும். இது போன்ற புனைவும், பின்னர் அதைத் தொடர்ந்த கருத்துகள், தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் கட்டுரைகள் மூன்றும் கலந்த ஒரு புனைவு வகை, அரவிந்தனின் பாணியாகக் கூட அமையலாம். அது அரவிந்தன் போன்ற அபூர்வமான ஆளுமையின் சிந்தனைகளை பலரும் எற்றுக்கொள்ள வழி செய்யும்.


பின் இணைப்புகள்.

பாபு காலிசரன் பானர்ஜி பற்றி காந்தி
http://www.mkgandhi.org/autobio/chap72.htm

வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் ஆற்றிய உரை https://books.google.co.in/books?id=tv76IENjt6AC&pg=PA214&lpg=PA214&dq

No response to “ஹிந்துத்வ சிறுகதைகள் - வாசிப்பனுபவம்.”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman