Adsense

தமிழ்ப் புத்தங்களின் விலை குறித்து


புத்தக விலை குறித்து ஏகப்பட்ட விவாதங்கள் facebookஇல் நடந்துக் கொண்டிருக்கின்றன. விலை அதிகம், லாப நோக்கில் நடத்தப்படும் துஷ்ட பதிப்பகங்கள், காஃபிக்கு காசு கொடுக்க மாட்டியா,  என ஏகப்பட்ட சர்ச்சைகள் இரு தரப்பிலும்.

நான் அறிந்தவரை இன்றைய தமிழ்ச் சூழலில் புத்தகத்தை மிகக்குறைந்த விலையில் வியாபாரம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே நான் பார்க்கிறேன். யாரேனும் புரவலர்கள் வந்தால் சாத்தியப்படலாம்.

இந்தக் கருத்தை நான் சொல்வது என் சொந்த அனுபவத்தினாலேயே. தமிழில் ஒரு பதிப்பகத்தைத் துவக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குமிருந்தது (அனேகமாகப் புத்தகங்களை ரசிக்கும் எவருக்குமே இருக்கும்).ஆனாலும், புத்தகங்கள் யானை விலை குதிரை விலை விற்கிறார்கள் என்ற கருத்தை நான் 2005-06 முதலே சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்றும் அந்தக் கருத்தில் மாற்று இல்லை. அதற்காக நான் புத்தகப் பதிப்பகங்களை குறை கூறமுடியாது.


என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன். 2010 ஆம் ஆண்டு நான் ஆரம்பித்தது letsturnanewleaf.blogspot.com என்ற வலைபக்கம். இது ஒரு சோதனை முயற்சி, community library - தமிழில் சுமுக நூலகம் என்ற திட்டம். இதில் நீங்கள் உங்கள் புத்தகங்களை உங்களுக்கு விருப்பமான விலையில் வாடகைக்குக் கொடுக்கலாம். எப்படி நீங்கள் புத்தகத்தை வேண்டியவர்களுக்குத் தருவீர்கள் என்பது உங்கள் சாமர்த்தியம். இது இலவசமாக அளிக்கப்படும் சேவை. நானே நேரில் சென்று புத்தகத்தை கொடுத்துப் பின்னர் அவர்களிடமிருந்துப் பெற்று வந்தேன்.

பின்னர் இந்த திட்டத்தின் நோக்கம் பற்றி அறிந்து ஞான பாஸ்கரன் அவருடைய புத்தகங்களையும் இணைத்தார். கிழக்கு பதிப்பகம் ஏறத்தாழ 40 புத்தகங்கள் தந்தனர், தூலிகா பதிப்பகம் 10 புத்தகங்கள் தந்தனர். இவை அனைத்துமே வாசகர்களை ஊக்குவிக்க. இது குறித்து ஜெயமோகன் தன் பதிவில் குறிப்பிட்டார். பாரா தனிப்பதிவு எழுதினார்.

யோசித்துப் பாருங்கள், புத்தகம் இலவசமாகப் படிக்கக் கிடைக்கும், வேண்டிய நேரத்தில் உங்களைத் தேடியே வந்து கொடுப்பேன், உங்களிடமிருந்து நானே பெற்றுக் கொள்வேன். அப்படிப் பட்ட திட்டத்தில் எவ்வளவு பேர் புத்தகங்களைப் பெற்றிருப்பார்கள் என நினைக்கிறீர்கள் - மிஞ்சிப் போனால் 15 புத்தகங்கள் - 3-4 பேர் - ஆறு மாத காலத்தில் ! அதன் பின்னர் இதைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று கை விட்டேன். அந்த சமயத்தில் சில நண்பர்கள் கிடைத்தார்கள் - நல்ல அனுபவம் கிடைத்தது என்ற அளவில் இந்த முயற்சி முடிந்தது. இத்தனைக்கும் என் முதலீடு ஒரு பைசா கிடையாது - உடலுழைப்பு மட்டுமே. ஞான பாஸ்கரன் இப்போது எங்கிருக்கிருக்கிறார் என எனக்குத் தெரியாது. இந்தப் பதிப்பகங்கள் தந்த புத்தகத்தை எல்லாம் நூலகத்திற்கு “அந்தந்தப் பதிப்பகங்கள் கொடுத்த நன்கொடை” என முதல் பக்கத்தில் எழுதி நன்கொடையாகக் கொடுத்துவிட்டேன். வலைதளம் இன்னும் இருக்கிறது - வேண்டுமானால் எவ்வகையான புத்தகங்கள் கொடுக்கப்பட்டன என்பதை நீங்களேப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆதலால் புத்தகப் பதிப்பகங்கள் லாபகரமாக நடப்பதற்கு மிகவும் கஷடப்படுவார்கள் என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன். பதிப்பகம் துவக்கும் என் கனவையும் மூட்டைக் கட்டிவிட்டேன்.

இப்படிப்பட்ட சூழலில் புத்தகப் பதிப்பை ஒரு வியாபாரமாக நடத்த அசாதாரணமான துணிச்சலும், பண பின்புலமும் வேண்டும். இவை இரண்டும் எனக்குக் கிடையாது என்பதால், புத்தகப் பதிப்பகம் தொடங்க வேண்டும் என்ற என் ஆவலை ஆவலாக மட்டுமே வைத்துக் கொண்டேன். செயல் வடிவம் காட்டுவது வேறு.

இன்றைக்குப் புத்தகம் குறைவான விலையில் விற்கப்படல் வேண்டும் என்று facebookஇல் சண்டை போடுபவர்கள் 1000 பேர் இருப்பார்களா (அதிக பட்சமாகத் தான் சொல்கிறேன் என்று அறிவேன்). அவர்களுக்குத் தேவையான ஏதேனும் ஒரு புத்தகம் மிகக் குறைந்த விலைக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். தப்பே இல்லை. ஆனால் வியாபாரி தன்னை சிலுவையில் அறைந்துக் கொண்டு அவ்விலைக்குத் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்.

எனக்குத் தெரிந்து புத்தகப் பதிப்பாளர்களிடம் முன்வைக்கப்படும் கேள்வியில் ஒன்று கூட ஆடை தயாரிப்பவர்களிடமும், கைப்பேசி தயாரிப்பவர்களிடமும் முன்வைக்கப்படுவதில்லை. அப்படி வைக்கவும் முடியாது. ஏனெனில் புத்தகப்பதிப்பளர்களுக்கும் ரோட்டோரமாக கீரைக் கடை வைத்திருக்கும் பாட்டிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இங்கு முதலாளிகள் அனைவரும் அணுகும் விதத்தில் இருக்கிறார்கள்.  தெருவுக்கு வந்து தன் பண்டத்தை விற்பனை செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் வாங்குபவர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு பேரம் பேச முடிகிறது. வியாபாரம் படியவில்லை என்றால் புத்தகத்தை என்ன செய்வது ? Inventory manage செய்ய வேண்டுமே. அதற்காகவாவது விற்கவே பதிப்பாளர்கள் முற்படுவார்கள்.

நன்றாக நினைவில் இருக்கிறது, எஸ் வைத்திஸ்வரனின் உதய நிழல் கவிதை தொகுப்பை 2 ரூபாய் கொடுத்து 2003 அல்லது 2004 ஆண்டு நான் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். 1970இல் வெளியான பதிப்பு. யோசித்துப் பாருங்கள் அந்தக் காலத்தில் 2 ரூபாய் கொடுத்து அதை வாங்க யாரும் தயாராக இல்லை 34 வருடம் கழித்து எந்த மதிப்புமில்லாத 2 ரூபாய்க்கு ஒரு அருமையான கவிதைத் தொகுதி விற்கப்படுகிறது. இது தான் நிதர்சனமான சூழல்.

அப்படிக் கேள்வி கேட்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அதை ஒரு குறிப்பிட்ட துறையின் தொழிலதிபர்கள் மீது திணித்து அவர்கள் மீது சேவை, பரிவு போன்ற விழுமியங்களைத் திணித்து விலை குறைப்பு செய்ய முயற்சி செய்வது முற்றிலும் நியாயமற்ற செயலாக நான் பார்க்கிறேன்.

புத்தகத்தின் விலை அதிகம் என்று தோன்றினால் வாங்காதீர்கள். பயனாளிகள் இல்லாத பண்டத்திற்கு என்ன மதிப்பு. நான் எனக்குப் பிடித்த/ தேவையான புத்தகத்தை மட்டுமே வாங்குகிறேன். சந்தையில் கிடைக்கும் அனைத்தோடும், அனைத்துப் பிரிவோடும் வாக்குவாதம் செய்வது என் வேலையில்லை. முற்றிலுமாக நிராகரியுங்கள். அல்லது மாற்றுத் திட்டத்தைக் கொண்டு வந்து இம்முதலாளிகளைத் தோற்கடியுங்கள்.

இப்படிக் கேட்பவர்களில் புத்தகம் எழுதியவர்கள் உண்டு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உண்டு, இலக்கிய தாகம் கொண்டவர்கள் உண்டு. உங்களில் ஏன் சிலர் ராயல்டி வாங்காமல்/ அல்லது மிகக்குறந்த ராயல்டிக்கு எழுதக்கூடாது, அதை உங்களில் சிலர் ஏன் மிகக்குறைந்த விலைக்கு/ லாபத்திற்கு அச்சிட்டுத் தரக்கூடாது, அதை ஏன் மிகக் குறைந்த லாபத்திற்கு விநியோகிக்கக் கூடாது.
மென் பொருள் துறையில் இருப்பது போன்ற open source செயலிகள் அனைத்துமே ப்ரொக்ராமிங் சமுத்தால் உருவாக்கப்பட்டது தான். கட்டற்ற களஞ்சியமாக இன்று பார்க்கப்படும் விக்கிப்பீடியா தகவல்களை இலவசமாகக் கொடுக்கக் காரணம் அதில் சேவையாக முன்வந்து செயல்படுபவர்கள் இருப்பதால் தான். அக்காரணத்தாலேயே ஒரு காலத்தில் 5000 கொடுத்து வாங்கப்பட்ட என்சைக்லோப்பீடியா பிரிட்டாணிக்கா, பலரின் வீட்டுப் புத்தக அறையில் இன்று காணக்கிடைப்பதில்லை.

ஒரு வேளை அப்படிக் கூட்டாக செயல்பட்டால் இன்றைய விலையில் பாதியாக ஏன் இலவசமாகக் கூட நாம் புத்தகங்களைப் படிக்க முடியும். அந்த சூழலில் ஒரு வாசகனாக நானும் உங்களை வாழ்த்தியபடியே ஒரு புத்தகம் வாங்கிப் படிப்பேன்.


ஓம் அவ்வாறே ஆகுக !


No response to “தமிழ்ப் புத்தங்களின் விலை குறித்து”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman