Adsense

சூரிய சந்திர வம்சம்நான் வெண்முரசு பற்றி பகிர்ந்து கொண்ட என் வாசிப்பனுபவத்தில் குறிப்பிட்டுள்ள சந்திர-சூரிய வம்சத்தைப் பற்றிய கருத்திற்கு, ஜெயமோகன் அளித்த பதிலைப் பார்த்தேன். அவருக்கு என் நன்றிகள்.
இதை நான் ஒரு விமர்சனமாக முன்வைக்கவில்லை. எந்தப் படைப்பையும் அதை அணுகும் போது கிடைக்கும் அனுபவத்தையே ஒரு மனிதனால் பகிர்ந்துக் கொள்ள முடியும் என்பதே என் தெளிவு. அதனால் நான் எதையும் விமர்சனம் செய்வதில்லை. அதனால் வாசிப்பனுபவம் என்ற சொல் ப்ரயோகமே எனக்கு சவுகரியம்.
மேலும், நான் ஏற்கனவே என் வாசிப்பனுபவத்தில் சொன்னபடி என் இலக்கு ஒரு தகவலின் அடிப்படையில் விவாதத்தில் ஈடுபடுவது அன்று. அது போன்று விவாதிக்கத் தக்க தகவல்கள் வெண்முரசு போன்ற படைப்பில் வரும் போது அதை எதிர் கொள்ளும் முறையைப் பற்றியே நான் குறிப்பிட்டுள்ளேன்.
ஜெயமோகன் குறிப்பிட்ட ஒரு கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் மன்னர்களின் பரம்பரை பற்றி நிறுவத்தக்க வகையிலான தரவுகள் நம்மிடையே இல்லை.  (இதை நான் வாசிப்பனுபவத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன்). தரவுகள் என்றால் யூகங்கள் அடிப்படையிலல்லாத தரவுகள். அப்படியிருக்க நாம் ஒரு தகவலை சரியென்றோ தவறென்றோ சொல்வதற்கில்லை.அவ்விவாதத்தில் நான் நுழையவுமில்லை.
நமக்கு பூர்வ பாரத வர்ஷத்தின் மன்னர்கள் பற்றிய தகவல்கள் அனைத்துமே புராணங்கள்/ இதிகாசங்கள்/ மஹாகாவியங்கள் போன்ற செவ்விலக்கியங்கள் வழியாகவே கிடைக்கின்றன. தமிழ் மன்னர்கள் பற்றிய தகவல்களும் அவ்வண்ணமே. அவ்விலக்கியங்கள் ஒன்றுக்கொன்று முரண்படும் போது விவாதப் பொருள்கள் இயல்பாகத் தோன்றுகின்றன. இவ்விலக்கியங்களை மேற்கோள் காட்டுவதைத் தாண்டி தமிழ் மன்னர் சந்திரவம்சத்தவரா அல்லது சூரியவம்சத்தவரா என்று நிறுவ யாராலும் முடியாது – வேண்டுமானால் எவ்வளவு இலக்கியங்களில் எவ்வகையான சார்பு நிலை இருக்கின்றன என்று பட்டியலிடமுடியும். அதைத் தவிர வேறு எந்த முயற்சியும் பொருளற்றது தான் - நான் சொல்ல விரும்பியதும் இதையே.
உலகமெங்கும் மன்னர்கள் எப்படி கடவுளர் வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்று கூற ஒரு செவி வழிக் கதை இருக்கவே செய்கிறது. இலக்கியங்களில் இடம்பெற்றிருப்பதும் அச்செவி வழி கதைகளின் பிம்பமே அன்றி வேறொன்றில்லை. மற்றொரு புராதண நாகரிகமான எகிப்திலும் இதை நாம் காணலாம்.
கிமு 4000 முதல் 3100 வரையிலான காலகட்டத்தை எகிப்த்திய வரலாற்றில் நகாடா காலம் என்றும் நகாடா காலத்தின் பிற்பகுதியை protodynastic (இதை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை) காலம் என்றும் அழைக்கப்படுகிறது. கிமு 3100 முதலே முறையான மன்னர் பரம்பரை எகிப்தில் தோன்றுகிறது. அதற்கு முன் நகாடா காலத்தில் எகிப்து முழுவது 31 மன்னர் பரம்பரைகளால் ஆளப்பட்டது.

கி மு 3100 வாக்கில் Menes தலைமையில் மேல் எகிப்து படைகள் வென்று ஒரே எகிப்தை உருவாக்கின என்று தொன்மங்கள் கூறினாலும், Menes வாழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் நம்மிடையே இல்லை. அவர் இருந்தார் அவர் வாழ்ந்தார் என்பதற்கு நம்மிடையே ஆதாரம் கி மு 3ஆன் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த Menetho எழுதிய குறிப்புகளே ஆகும். அக்குறிப்பில் Menetho, எகிப்தின் முதல் தலைமுறை மன்னர் என Menesஐ குறிக்கிறார். அதன் பின்னர் ஸ்கார்பியன் மற்றும் நார்மர் வாழ்ந்ததற்கான hard evidences நம்மிடையே இருக்கின்றன.  அவர் வாழ்ந்தற்கான மிகப்பெரிய ஆதாரமான Narmar Palette கி மு 3100 ஆண்டில் உருவானது என்பதை நிகழ்கால அறிவியல் ஒத்துக் கொள்கிறது. அதிலும் ஸ்கார்பியன் தான் நார்மர் என்றும் அவரே Menes என்றும் கூறும் கருத்தியல்களும் இருக்கின்றன.

நகாடா காலத்திற்கு முன்பு எகிப்தில் எல்லாமே கர்ணபரம்பரை கதை தான். திடமான தரவுகள் வழியாக நிறுவப்படுவம் செய்திகள் நம்மிடையே இல்லை.

பாரதத்தை எடுத்துக் கொண்டாலும் மன்னர் பரம்பரை பற்றிய நிலை எகிப்தை ஒத்தே இருக்கின்றன.  ஆனால் நம்மிடையே Narmer Palette போன்ற ஒரு ஆதாரம் கி மு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பு இல்லை.

மஹாபாரத்திற்கு முற்பட்ட இதிஹாசமான ராமாயணத்தை அடியொற்றி இயற்றப்பட்ட மஹாகாவியமான ரகுவம்சத்தில் காளிதாசர், விவஸ்வானிலிருந்து தொடங்கும் சூரிய வம்சத்தில் திலிபன் தோன்றினான் என்று கூறி அவனின் வம்சமாக முறையே ரகு, அஜன், தசரதன், ராமன், குசன், அதிதி, நிஷதன், நளன், நபன், புண்டரிகன், ஷேமதன்வா, தேவானீகன், அஹிநகுன், பாரியாத்ரன், ஷீளன், உந்நாபன், வஜ்ரநாபன், சங்கணன், வ்யுஷிதாச்வன், விச்வஸஹன் (இவன் காசி விஸ்வதாதரை பூஜித்ததால் பிறந்ததால் இப்பெயர் பெற்றான்), ஹிரண்யநாபன், கௌஸல்யன், பிரம்மிஷ்ட்டன், புத்திரன், புஷ்யன், த்ருவஸந்தி, சுதர்ஸனன் என்ற வரிசையை சொல்கிறார். சுதர்ஸனனுக்குப் பின்னான வம்சம் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி சொல்லப்பட்டிருந்தாலும் அதை ஒரு கர்ண பரம்பரை கதையாகத் தான் கொள்ள முடியுமே தவிர வேறு எவ்வகையிலும் இதை அணுக இயலா.

மேலும் இந்தியத் தொண்மங்களை அதன் அளவுகோளிலேயெ அளந்தாலும், ராமாவதாரம் நிகழ்ந்த த்ரேதாயுகத்திலுலிருந்து மஹாபாரத காலமான த்வாபரயுகம் வரையான அரசவம்சத்தை நிலை நிறுத்துதல் என்பது சாத்தியமற்ற ஒன்று என நான் தெளிகிறேன். இந்து நம்பிக்கையின் படி த்ரேதாயுகம் எனபது 12,96,000 ஆண்டுகள். த்வாபரயுகம் என்பது 8,64,000 ஆண்டுகள். மகாபாரதம் என்பது த்வாபரயுகத்தின் இறுதியில் நிகழ்ந்தது என்பது நினைவிற்கு (மேலும் இந்த ஆண்டுகளை அத் தொண்மங்களில் குறிக்கும் ஆண்டு கணக்காகவே கொள்ள வேண்டும் - அறிவியல் கணக்கு இதற்கு சரிபடாது). தொண்மமல்லாத சரித்திர அரசர்கள் இவர்கள் என்ற கருதுகோளை எடுத்துக் கொண்டாலும், அதிக பட்சமாக 7000 ஆண்டுகளுக்கு முன்னர் த்ரேதாயுகம் என்ற நடைபெற்றிருக்கலாம் என்று அணுமானித்தால் கூட, 7000 வருடங்கள் என்பது மிகப் பெரிய கால இடைவெளி. அக்கால இடைவெளியில் நடைபெற்றிருப்பவற்றை, வாழ்ந்தவர்களை எப்படி வரிசைப் படுத்துவது ?

இவற்றின் அடிப்படையில், சூரிய குலம் சந்திரகுலம் ஆகியவற்றைப் பற்றிய என் புரிதலை நான் முன்வைக்கிறேன் (தமிழ் மன்னர்கள் எக்குலத்தவர் என்று நிறுவ நான் முயலவில்லை). இது ஒரு பார்வையேயன்றி, எந்த இயலின் மூலமும் நிறுவத்தக்க கருதுகோளன்று.

சூரியகுலம் சந்திரகுலம் என்று காலத்தில் மிகவும் பிரிக்கப்படாவிட்டாலும் இரு வேறு வேறு காலகட்டத்தில் தோன்றிய குலங்கள் என்றும் அவை தொழிலாலல்லாமல், வழிபாட்டு முறைகளால் நிறுவப்பட்ட குலங்கள் என்றும் நான் கருதுகிறேன். இன்றைய மதங்கள் போல.

மேலும், மிகவும் பரந்த ஆர்யவர்த்தத்தில், பல்வேறு இடங்களில் தோன்றிய நாகரிகங்கள் அவர்களுக்கேயுரிய வாழ்க்கை முறை, தெய்வங்கள் என்று அமைந்திருப்பதே இயல்பு. அவ்வகையில், நேரிடையாக காண்பதற்கு தோன்றிய தெய்வங்களான சூரிய சந்திரனை நாகர்களை, மிருகங்களை ஆதி முதல் தெய்வங்களாக குடிகள் கொண்டு அவற்றின் அடிப்படையில், தெய்வங்களால் கருணை பெற்றவன் அரசனென்ற கூற்றை நிருவும் பொருட்டு அரசர்களின் வரிசையில் தெய்வங்களை வைத்திருக்கலாம் என்று நான் துணிகிறேன். (எகிப்திலும் ஒருன்கினைக்கப்பட்ட எகிப்து தோன்றுவதற்கு முன்னர், மேல் மற்றும் கீழ் எகிப்து இரண்டுமே கலாசார, பண்பாட்டு ரீதியாக வெவ்வேறாகவே இருந்திருக்கின்றன). அக்குலங்கள் இணைகோடுகளாக பயணப்பட்டிருக்கும் என்பது என் கருதுகோள். ஆனால் சந்திர சூரிய வம்சங்கள் என்பதே மிகவும் முன்னேறிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிலை என்பது என் எண்ணம்.

அக்குலங்கள் தோன்றுவதற்குப் பண்ணெடுங்காலங்களுக்கு முன்பிருந்த பண்டைய பாரதவர்ஷத்தில் வழங்கப்பட்ட மொழிகள் தங்களுடன் ஒன்றுடன் ஒன்று கலந்ததாலும் தனித்து இயங்கியதாலும் தோன்றிய வகையில் மொழி குடும்பங்களை நிறுவுகிறார்கள், மொழியியல் வல்லுனர்கள். இன்றைக்கு இருக்கும் சமஸ்கிருதம் வேத காலத்து சமஸ்கிருதத்திலிருந்து வேறுபடுகிறது. தமிழும் அவ்வண்ணமே.

இன்றைக்கும் பின்வரும் பெரிய மொழிக்குடும்பங்கள் இந்தியாவில் வழக்கிலிருப்பதை மொழியியல் வல்லுநர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் - அவை Indo Aryan (வட இந்திய மொழிகள், பாகிஸ்தான், இலங்கை, ஆஃபாகின்ஸ்தானில் வழங்கப்படும் மொழிகள்), Dravidian (தமிழ், தெலுங்கு முதலியவை), Austric (அந்தமான் நிகோபார் தீவுகள்),  sino-tibetian (திபெத் நாகாலாந்தில் வழங்கப்படும் மொழிகள்).

இவற்றிலிருந்து திராவிட மொழிகள் மற்றும் ஆரிய மொழிகளும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியிருக்க முடியாதென்றே நான் நினைக்கிறேன். அம்மொழிகள் தனித்தனி அடையாளங்களைக் கொண்டிருப்பதன் மூலம், அம்மொழியை வழங்கிய மக்களும் பண்பாட்டு ரீதியாக தனித்து விளங்கியிருக்கக் கூடும். இக்குடிகளை ஆண்ட அரசும் பண்ணெடுங்காலம் அதே இடத்தில் நிலைபெற்று எவ்வித பூசலும் கலப்புமின்றி தங்கள் பண்பாட்டையும் மொழியையும் நிலைநிறுத்தியிருக்கக்கூடும். அக்காலத்தில் ஆதி பாரத வர்ஷத்தில் மிகவும் பற்பல சிறு/ குறு வம்சங்கள் இருந்திருக்கக் கூடும்.

பின்னர், அவ்வம்சங்கள் அணைத்தும் மிகப் பெரிய கால இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து பெரிய பிரிவுகளையும் வம்சங்களையும் தோற்றுவித்திருக்ககூடும். அதன் பின்னர் வணிகம், திருமணம் முதலிய காரணங்களுக்காக தங்கள் எல்லைகளை விரிவாக்கும் போது பிற குடிகளுடன் இணைந்தும் போரிட்டும் வலிமையான அரசும், குலமும் தோன்றியிருக்கக்கூடும். இவையணைத்தும் சில ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் நிகழ்ந்திருப்பவையேயன்றி சில நூற்றாண்டுகளில் நிகழந்திருப்பவையல்ல.

அவ்வகையிலேயே சூரிய சந்திர வம்சங்கள் விரிவடைந்திருக்கலாம். த்ரேதாயுகத்தில் சூரிய வம்சம் தென்னிந்தியாவில் விரிவடைந்திருக்கலாம். அதற்கு முன்பிருந்த ஆதி வம்சங்கள் தங்கள் பூர்வ அரசியல் அடையாளங்களைத் துறந்து புதிய வம்சத்திற்கான அடையாளங்களைப் பெற்றிருந்தாலும், வலிமையான ஆதி மொழிகள் நீட்சியடைந்திருக்கலாம் (பிற மொழி கலப்பினால்).

No response to “சூரிய சந்திர வம்சம்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman