Adsense

வெண்முரசு வாசிப்பனுபவம்


வெண்முரசு வரிசையின் இரண்டாவது நூலாக எழுதப்பட்ட மழைப்பாடலில், விதுரர் திருதராஷ்டிரனிடம் சொல்வது போல், அறிவதால் கிடைக்கும் மகிழ்ச்சியாக மாறிய வாசிப்பனுபவமே வெண்முரசு வாசிக்கும் அனுபவம். ஆனால் அந்த அனுபவத்தைப் பெற என் மூளையைக் காட்டிலும் என் மனமே கலமாகாக மாறியிருக்கிறது. 

உலகை முதலில் பார்க்கும் குழந்தை தன் கைகளாளும், உடலாளும், கண்களாளும் உலகை அறிய முற்படுவது போல புலன்களனைத்தாலும் இந்தப் படைப்பை அணுகுகிறேன். இதை அணுக மூளை மட்டும் பத்தாது என்பது தான் இதைப் படிக்கத் துவங்கிய பின் நான் அடைந்த முதல் தெளிவு. இதைப் படிக்கத் துவங்கியது முதல், கைகளை விரித்தபடி மிதக்கும் தக்கையாக மாறி ஒரு மாபெரும் அலையிடம் என்னை ஒப்புவித்தபடி மிதந்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயமும் என்னை அதன் ஆர்பரிப்புக்கேற்றபடி தூக்கியும் வீழ்த்தியும், கடத்தியும் சென்று கொண்டிருக்கிறது.

கடந்தகாலமென்பதை எதிர்காலமாக்கும் காலத்தின் நுணியில் நின்றுக் கொண்டு எதிர்காலத்தைப் பார்த்து கதை சொல்லுகிறார் ஜெயமோகன்.
அக்கதை சொல்லும் அமைப்பே இவ்வளவு அக எழுச்சியை ஏற்படுத்திய வாசிப்பனுபவம் எனக்கு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சம்பவித்திருக்கிறது என்பதை உணரச் செய்கிறது. 

மிகப்பெரிய வியாக்யானங்களை பதிலாகக் கோரவல்ல கேள்விகளை முன்வைக்கும் இக்கதையை சொல்ல ஆரம்பிக்கும் போதே கதை மாந்தர்களின் எண்ணப்போக்கை தெளிவு படுத்திவிடுகிறார் ஜெயமோகன். அந்த அகதெளிவுகளே இந்த படைப்பை ஒரு பக்தி இலக்கிய மனநிலையிலிருந்து அணுக விடாமல் காவியமாக அணுகச் சொல்லுகிறது. பக்தி இலக்கிய மனநிலை ஒரு மிகப் பெரிய மனத்தடையை உருவாக்கிவிடும்.

பக்தியின் அடிப்படையில் இவை இவ்வண்ணமே ஏற்கப்படல் வேண்டும் என்று சொல்லும் போது வாசகன் மேல் திணிக்கப்படும் நம்பகத்தன்மையை கடந்து செல்லவே முயற்சிக்கும் ஒரு வாசகன் அந்த நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் தன் சிறிய எண்ண வட்டங்களுக்குள்ளும் அறிவின் வட்டங்களுக்குள்ளும் கட்டுப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஊர்ஜிதம் செய்து கொள்ளவே முயற்சிக்கிறான். அப்படி ஊர்ஜிதத்தை இலக்காகக் கொண்டு அரைகுறையாக எதிர்கொள்ளும் படைப்பை எப்படி முழுமையாக ஆரோகணிக்க முடியும். பக்தி இலக்கியத்தை சரணாகதி மனநிலையில்லாமல் எதிர் கொள்ளவே முடியாதென்று தோன்றுகிறது.

காவியம் என்ற இலக்கிய வகைக்கான இலக்கணங்கள் வடமொழி அறிஞர்களால் தெளிவாகவே வகுப்பட்டுள்ளன. அதை ஒரு அளவு கோளாக மட்டுமே கொண்டால், இது மஹாகாவியமென அழைக்கப்பட வேண்டிய படைப்பு என்பது என் கருத்து.

வடமொழியில் இயற்றப்படும் காவியங்களை அதற்கான அடையாளங்களின் அடிப்படையில் வகுத்துத் தரப்படும் கூறுகளில், வெண்முரசு, ச்ரவ்ய காவ்யம் என்ற வகையில் வரலாம். (காதால் கேட்டும், படித்தும் ரசிக்கப்படும் காவியத்தை ச்ரவ்ய காவியம் என்பர்). மேலும் மஹாகாவியத்துக்கான உள்ளடக்கத்திற்கான அடையாளமாக வழங்கப்படுனவற்றில் சில
- உத்தம புருஷனையோ, தேவனையோ, ஷத்ரிய வீரனையோ காவியத்தின் தலைவனாக கொள்ளல் வேண்டும் - அல்லது பலரும் காவியத்தின் தலைவராக இருக்கலாம்
- இதிஹாசங்களையும் புராணங்களையும் அடிப்படையகக் கொண்டதாக இருக்கும்
- துஷ்ட நிந்தனை ஒரு அம்சமாக இருக்கும்
- விரிவான விவரணைகள் நிரம்பியதாக இருக்கும் - காலங்கள், நிலக்கூறுகள், தட்ப வெட்பம், மனித உணர்வுகள், சம்பவங்கள், பிறப்பு, இறப்பு, நீதி, அநீதி, ஆட்சி முறை, நடைமுறை, குடி மக்கள வாழ்வுமுறை, விலங்குகள், உலோகங்கள், பணம், கொடை முதலியவற்றை பற்றிய விரிவன வர்ணனைகள் வேண்டும்
- நவ ரசங்களும் நிரம்பியதாக இருக்க வேண்டும்
- தர்மார்த்தகாமமோக்ஷத்திறகான பாதையை வகுத்துக் கூறுதல் தலையாய பயனாக இருக்க வேண்டும்.

இவைத் தவிரவும், மேலும் பல இலக்கண அடையாளங்கள் இருக்கின்றன (சர்கத்தின் அளவு, எண்ணிக்கை போன்றவை). அவ்வடையாளங்கள் இங்கே நமக்குப் பயன் தராது என்பதால் அவற்றை நாம் பொறுத்திப் பார்க்க வேண்டாம்.

காந்தாரத்தின் நிலப்பரப்புகளையும், அது செல்லும் வழியில் இருக்கும் புவியியல் தகவல்களையும் நிறுவிப் பார்க்க சொல்லும், எந்தக் கதை எந்த புராணத்திலிருந்து வந்தது என்று தேடிப் பார்க்கச் சொல்லும், எந்த கதை மாந்தர் இதிகாச பாத்திரம் என்று கண்டறியச் சொல்லும் மூளையை நிராகரித்த பொழுதிலேயே என்னால் இப்படைப்பை மஹாபாரதம் என்னும் அடையாளத்தை அழித்து அணுக முடிந்தது.

அவ்வடையாளத்தை அழித்த பின்னர் இது என் முன்னோரின் வாழ்க்கை பற்றிய கதை என்னும் சாதாரண கட்டமைப்பில் வந்து விழுந்து விட்டது. அக்கட்டமைப்பை வாசிக்கும் போது எழுவது அத்தனையும் பிரம்மாண்டமே. சாதாரண மானுட வாழ்வை வாழ்ந்த முன்னோரின் கதை. காம க்ரோத லோப மாச்சர்யங்களுக்கு ஆட்பட்ட மனிதர்களின் கதை. வெல்ல அறிதான அம்மாயைகளை வென்றெடுக்க அவர்கள் அகமும் புறமும் நிகழ்த்திய போரின் சித்திரம். அவர்கள் நடமாடியவர்களாக இருந்தால் இப்படி மட்டுமே அவர்களால் வாழ்ந்திருக்க முடியும் - இப்படி மட்டுமே பேசியிருக்க முடியும். இப்படி மட்டுமே சிந்தித்திருக்க முடியும் என என்னால் நம்ப முடிகிறது. 

என்னால் மட்டுமல்ல, பாரதத்தின் கலாசார மரபு பற்றிய புரிதல் ஓரளவேனும் இருக்கும் எவராலும் இதை நம்ப முடியும். அவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு பீஷ்மரும், சத்யவதியும், பாண்டுவும், குந்தியும், திருதராஷ்டிரரும், சகுனியும், காந்தாரியும், அம்பையும், சால்வனும், விதுரரும் உண்டு - எனக்குள் என் தந்தையின் சிறிய எச்சமொன்று உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்ததைப் போல.

இந்த மஹாகாவியத்தின் மிகப் பெரிய அம்சமாக நான் பார்ப்பது -   சாதாரணமாக கடக்கப்பட்ட ஒவ்வொரு கதை மாந்தரின் குணத்தையும் வாசகனுக்கு அருகில் கொண்டு வந்து தருகிறார். விசித்ர வீரியனை முதல் நூலில் கொண்டாடியது போல இரண்டாவது நூலில் பாண்டுவைக் கொண்டாடுகிறார். இருவருமே மிகப்பெரிய சமுத்திரமான மஹாபாரதத்தில் பயணம் செய்யும் சிறு தெப்பங்கள் - அவர்கள் மிகப்பெரிய கப்பல் கலங்களின் நிழலில் பெரும்பாலும் மறைந்து விடுகின்றனர். அவர்களை நீங்கள் அறிய அத்தெப்பத்தில் நீங்களும் பயணிக்க வேண்டும்.

இவ்வளவு அணுக்கமாக நான் பாண்டுவை உணர்ந்ததேயில்லை. எப்படிப்பட்ட தந்தையவன். எப்படிப் பட்ட பித்து நிலையில் மாந்தரை அணுகுகிறான். முழுதுமாக அகவிடுதலை அடைந்த மனிதன் இப்படித்தான் வாழ முடியும். தன் இருப்பையே தன் உடலிலிருந்து வெளியே தள்ளக்கூடிய மனிதர்களால் இப்படித் தான் அன்பைப் பொழிய முடியும்.

குந்திக்கும் விதுரனுக்குமிடையேயான அந்த மெல்லிய சரடு எவ்வளவு மெண்மையாக வந்து போகிறது. யுதிஷ்டிரனின் நாமகரனித்தில் மகா கௌதமருக்கு துர்வாசர் அவியளிக்கிறார். சில விஷயங்களை பூடகமாகவே விட்டுச் செல்கிறார் ஆசிரியர். மிகப்பெரிய தீர்க்க தரிசனம் கொண்ட விதுரனை அறிமுகப்படுத்தும் போது பாரத வர்ஷத்தின் மிகப்பெரும் வரலாறை ஒரு சிறு மணித்துளி உரையாடலாக சுருக்குகிறார். அவர் நிறைஞானி என்பதற்கு ஒரு சோறு பதத்தை அறிமுகத்திலளிக்கிறார்.

ஆனால் சில இடங்கள் நிரடுகின்றன. ஒரு கட்டத்தில், தமிழ் நிலம் ஆண்ட மூவேந்தர்களையும் சந்திரவம்சத்தவர் என்று ஒரேயடியாக சொல்லிவிடுகிறார்

விஷ்ணுவில் இருந்து பிரம்மா பிறந்தார். பிரம்மாவிலிருந்து சந்திரன். சந்திரனில் இருந்து புதன். புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி என்று நீண்டு வந்த வம்சத்தில் வந்தவர் துர்வசு. துர்வசுவின் மைந்தர் வர்க்கன். வர்க்கனின் மைந்தர் கோபானு. அவரது குலவரிசை திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன் என்று நீள்கிறது. வரூதனின் மைந்தரான காண்டீரன் காந்தாரன் என்னும் மாமன்னரைப் பெற்றார்.
“காந்தாரருக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மூத்தகுலம் காந்தாரகுலமாக ஆகி இந்த மண்ணை ஆள்கிறது. பிறநால்வர் சேரர் சோழர் பாண்டியர் கோலர் என்று சொல்லப்பட்டார்கள். அவர்கள் இங்கிருந்து கிளம்பி தட்சிணத்தை அடைந்து அங்கே எங்கேயோ நாடாள்கிறார்கள்"

இவர்களை பாண்டியர்களே சந்திரவம்சத்தவர் என்றும், சோழர்களை சூரியவம்சத்தவர் என்றும் சொல்லும் மரபு இருக்கிறது. மூவருலாவில் ஒட்டக்கூத்தர் குறிப்பிடுவதும் இதையே என அறிகிறேன். இதன் பொருட்டே குருக்ஷேத்திரப் போரில் பாண்டியர் பங்கு கொண்டனர் என்ற கருத்தும் உண்டு. 
அது மட்டுமேயன்றி தமிழ்குடி மன்னர்கள் காந்தாரத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கூற்றை எப்படி எதிர் கொள்வது ? 

சேர சோழ பாண்டியர்களின் ஆதி வரலாறு பற்றிய ஸ்தாபிக்கப்பட்ட செய்தி என எதுவும் இல்லாத நிலையில், இந்தத் தகவலை(?) ஒதுக்கி விட்டு மேல் செல்லுதலே நலம் என நினைக்கிறேன்.

அதே போல முதுமக்கள் தாழி பற்றிய  குறிப்பையும் நாம் கருத வேண்டும் என நான் நினைக்கிறேன். தகவல் ரீதியான தர்க்கத்தில் ஈடுபடும் போது மிகக்குறுகிய துளைவழியே ஆழியை நோக்கும் அனுபவமே மிஞ்சும். ஆழியின் ஆர்பரிப்பையும் ஆழத்தையும் அகலத்தையும் அறிய அதன் நடுவே பயணப்படுதல் அவசியம். ஆகவே விவரணைக்காகவும், அழகியலுக்காகவும் ஜெயமோகன் அளிக்கும் சில தகலவல்களைத் தாண்டிச் செல்லுதலே நலம். வர்ணனைகளை தன் அனுபவத்தினாலும் அறிவாலும் விரித்துக் கூறும் போது சில சமயத்தில் சர்ச்சைக்குரிய விவாதப் பொருட்கள் தன்னிச்சையாகத் தோன்றிவிடுவதுண்டு. அப்பொருட்களிலேயே நின்று விவாதன் செய்து ஸ்தாபிக்க வேண்டியது எதுவுமே இல்லை. ஒரு உண்மையான வாசகன் அப்புள்ளியை எளிதில் கடந்து விடுவான்.

விவரணைகளில் அடங்கியிருக்கும் தகவல்களை நாம் தாண்டிச் செல்லும் போது நமக்குக் கிடைப்பது மிகப்பெரிய பொக்கிஷமான மஹாகாவியம்.  இக்காவியத்தை நான் அதன் தத்துவ அலசல்களுக்காகவும், ரசம் மிகுந்த பாத்திரப்படைப்பிற்காகவும், கருப்பொருளுக்காகவும் எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன். 

பி கு: முதல் இரண்டு நூல்களை மட்டுமே வாசித்திருக்கிறேன். மூன்றாவது இன்று துவங்குகிறது.

No response to “வெண்முரசு வாசிப்பனுபவம்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman