Adsense

ஐ டி துறை குறித்து...


 சென்ற வாரம் வெகு நாட்களுக்குப்பின் சந்தித்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஆன் சைட் ட்ரிப்போ ? அதெல்லாம் இல்லை, ஏதோ ஒரு கச்சடா ப்ராஜெக்டில் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறார் மனிதர். வீடுண்டு ஆஃபிஸுண்டு என்று வாழ்ந்து (!?) இருக்கிறார். பாவம் நொந்து போயிருந்தார்.

வழக்கமானது தான்.

ஐ டி துறை எவ்வளவு மோசமானது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். பல் வேறு விதமான நிர்வாகக் கோளாறுகளுக்கு ஆட்பட்டிருக்கிறார் என்பது அவர் பேச்சில் தெளிவாகத் தெரிந்தது. இப்போது அவர் அதி தீவிரமாக வேறு ஒரு தொழில் புரிவது பற்றி ஆராய்ந்து வருகிறார். கைவசம் ஒரு தொழில் சிக்கி விட்டது என்றும் தெரிந்தது.

ஆனால் ஐ டி துறை சார்ந்த மிகப்பெரிய தோற்ற மயக்கங்களுள் ஒன்று இத்துறை, மனிதர்களைக் கசக்கிப் பிழிந்து வெளியே தள்ளும் மிகப்பெரிய இயந்திரம் என்பது. ஐ டி துறை போன்ற மோசமான துறை வேறு இல்லை என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களையும் கார்ப்பரேட் எதிர்ப்பாளர்கள் தோற்றுவித்திருக்கிறார்கள்.

அவை சார்ந்த சில கருத்துகளைப் பகிரும் முன்...

மிகச்சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்து, இரண்டு தலைமுறைகள் தாண்டியும் அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை எத்தனையோ குடும்பங்களுக்கு வழங்கிய துறை ஐ டி துறை என்பதை நினைவில் கொள்க

வசதி படைத்தவர்களுக்கானவை என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பல்வேறு விதமான வாழ்கையின் சுகங்களையும் கீழ்-மத்திய வர்கத்தினரும் நுகரும் படி சமுகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய காரணிகளுள் ஐ டி துறைக்குப் பெரும் பங்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்க.

ஐ டி துறையின் செயல்பாடுகளைக் கலாசார ரீதியாக, கொள்கை ரீதியாக எதிர்பவர்களிடம் பேச எதுவுமே இல்லை. அதே சமயம், அந்தத் துறையில் நுழைந்து பின்னர் வருந்துபவர்களிடமும், துறைக்குத் தவறான எதிர்பார்ப்புகளுடன் நுழைபவர்களிடமும் கொஞ்சம் பேச வேண்டும்.

அவர்களிடம் பேச வேண்டிய விஷயம் என்று கோர்வையாக யோசிக்க முயற்சி செய்தால், இந்தத் துறையின் மீது மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை நாம் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு பிம்பங்களின் அடிப்படையிலானது

பெற்றோர்களின் எதிர்பார்ப்பு - நாலு வருடம் படித்தால் போதும், கேம்பஸ் வேலை, அமெரிக்கா ஐரோப்பா பயணம் என்று வாழ்கையில் அனைத்தும் சாஸ்வதம் ஆகிவிடும் என்ற எண்ணம் இருக்கிறது
பொறியியல் கல்லூரி மாணவர்கள் - மிக முக்கியமானவர்கள் - இந்தத் துறை அவர்களுடைய பல்வேறு தொழிற்கனவுகளையும் முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகின்றனர். இன்னொரு சாரார் அவர்கள் பெற்றோர் வழியே, மிகப் பெரிய வசதிகளை அள்ளித் தரும் கற்பகத்தருவாகப் பார்க்கின்றனர்

பொதுவாக ஐ டி துறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம்

1. சேவை வழங்கும் நிறுவனங்கள் - இவை ஏதோ ஒரு வங்கிக்கோ, மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கோ, அல்லது வேறு ஏதோ ஒரு துறை நிறுவனத்திற்கோ மென் பொருள் தயாரித்தல், அவற்றைப் பராமரித்தல், பழுது கண்டறிதல்/ நீக்குதல் போன்ற சேவைகளை வழங்குதல், அந்த நிறுவனங்களுக்கு ஐ டி கட்டுமான சேவை வழங்குதல், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை வழங்குதல், இஞ்சினியரிங் சேவைகள் வழங்குதல், என ஏதோ ஒரு வகையில் சேவைகளை வழங்குகிறார்கள். இன்றைக்கு இந்தியாவிலிருக்கும் பெரிய நிறுவனங்களான டி ஸி எஸ், இன்ஃபோஸிஸ், விப்ரோ, எஹ்ச் சி எல் போன்ற நிறுவனங்கள் இவ்வகையைச் சார்ந்தவையே (அல்லது இந்நிறுவனங்களின் வருமானத்தின் பெரும் பகுதி சேவையிலிருந்து வருகிறது என்று கொள்க)

2. மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் - இவை பெரும்பாலும் ஏதோ ஒரு  துறை சார்ந்த மென் பொருளை தயாரிக்கிறார்கள் - அந்த மென்பொருளை அந்தத் துறைகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்

3. கேப்டிவ் நிறுவனங்கள் - அதாவது இவை ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கான ஐ டி தேவைகளைத் தீர்க்கும் இலக்கோடு அமைக்கப்பட்ட நிறுவனங்கள். வெளிநாட்டில் இருக்கும் ஒரு வங்கியோ, உற்பத்தி நிறுவனமோ இந்தியாவில் இருக்கும் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு உருவாக்கிய நிறுவனங்கள் அவை. இந்நிறுவனங்கள் தங்கள் தாய் நிறுவனத்திற்காக மட்டுமே செயல் படும்.

மேற்சொன்ன வகையில் எந்த நிறுவனத்திற்கும் 4 வருட இஞ்சினியரிங் படித்த ஒரு இளைஞனின் திறமை பயன்படும். ஆனால் இம்மேற்சொன்ன நிறுவன வகைகளில் எது மன நிம்மதியை அளிக்கும் என்ற முடிவு தனி மனிதர் சார்ந்தது.

நீங்கள் புதிய மென்பொருள் உருவாகத்தில் உங்கள் காலத்தைச் செலவு செய்ய விரும்பினாலோ, புதிய தொழிலாக்கத்தில் உங்கள் காலத்தைச் செலவு செய்ய விரும்பினாலோ, தயவு செய்து சேவை நிறுவனங்களைத் தவிர்த்து விடுங்கள். அது உங்களுக்கான இடமல்ல. நீங்கள் ஏற்கனவே செயல் பட்டுக் கொண்டிருக்கும் மென்பொருள் உருவாக்க நிறுவனங்களை இலக்காகக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கான இடத்தை அளிக்கவல்ல புதிய உருவாக்கங்களை நீங்களே தோற்றுவையுங்கள். ஐ ஐ டியிலிருந்து 2013-14 ஆண்டுத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்று பார்த்தாலே உங்களுக்கு ஓரளவு நிலைமை புரியும்

சுட்டி - http://placement.iitm.ac.in/downloads/Place_Stats_2013-14.pdf

ஐ டி சேவை துறைக்கான பட்டயப் படிப்பு பற்றிச் சரியான அணுகுமுறை பொறியியல் படிப்பில் இல்லை என்பது என் கருத்து. உண்மையில் சேவை நிறுவங்களுக்கு இன்றைய சூழ்நிலையில் BE பட்டயப்படிப்பில் இருக்கும் பல விஷய்ங்கள் தேவையேயில்லை. MCA, BCA போன்ற படிப்புகள் ஐ டி சேவை துறைக்கான தேவைகளின் அருகில் வருகின்றன. பொறியியல் பட்டயம் அளிக்கும் பல்கலைகழகத்தின் பாடதிட்டத்தை எடுத்துப் பார்த்தால், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எத்தனை பாடங்கள் ஒரு மாணவனின் முதல் இரண்டு வருடங்களில் பயன்படும் என்பது கேள்விக் குறி. முதல் இரண்டு வருடங்களில் பயன்படாவிட்டால், பிறகு அது பற்றிய நினைவு இருப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.

ஆராய்ச்சிப் படிப்பிறகான அடித்தளம் அமைத்துக் கொடுக்கக்கூடிய பல விஷயங்களை பாடத்திட்டத்தை கொண்ட BE பட்டயப் படிப்பை ஏன் பல நிறுவனங்கள் பணிக்கான அடிப்படை தகுதியாக வைத்திருக்கின்றன என என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.

அதில் நகை முரண் என்னவென்றால், நான் 18 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பொறியியல் பாடதிட்டத்திலிருந்து பெரியதாக எதுவும் மாறிவிடவில்லை. ஆனால் ஐ டி தொழில் துறை இரண்டு ரிசஷன்களைப் பார்த்து விட்டு எவ்வளவோ மாறி விட்டது.

ஐ டி சேவை துறை என்பது கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்திருக்கிறது. புதிய மில்லினியத்தின் துவக்கத்தில், வருடம் ஒரு ப்ரமோஷன், 2 வருடத்தில் ஆன் சைட், 5 வருடத்தில் ப்ராஜெக்ட் மானேஜர், விரும்பும் டெக்னாலஜியில் வேலை பார்க்கும் சவுகரியம் என்று இருந்த எந்த விஷயமும் இன்றைக்கு நிச்சயம் கிடையாது.

இனிமேல் இப்படி இருக்கப்போவதும் இல்லை. ஐ டி சேவை துறைக்குத் தேவை, கையில் இருக்கும் வேலையை எப்படித் திறமையாகச் செயல்படுத்துவது என்ற புரிதலும் அதை இன்னும் செம்மையாக (குறைந்த காலத்தில் குறைந்த செலவில்) செய்து முடிக்கத் தேவையான அனுபவ அறிவுமேயாகும்.

செய்த வேலையையே பல ஆண்டுகள் செய்வது வல்லுனர் ஆவதற்கான தேவைகள் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு முன்னர், மேலை நாடுகளில் மட்டுமே 20 வருட அனுபவம் கொண்ட ப்ரொக்ராமர்களைப் பார்க்க முடியும். ஏனேனில் இந்தியாவில் ஆறாவது வருடத்தில் நீங்கள் மேலாளர் ஆகி இருப்பீர்கள். அவ்வளவு வேகமாக நாம் வளர்ந்து கொண்டிருந்தோம்.

இப்போது நிலை தலை கீழ். 10-12 ஆண்டுகள் அனுபவமுள்ள ப்ரொக்ராமர்கள் பலரை நான் தினமும் சந்திக்கிறேன். அந்த நிலை இன்னும் ஸ்திரப்படும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அந்த வேலையில் hands-on ஆக இருப்பது மிக மிக அவசியம். மாறிக் கொண்டே இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றபடி உங்களை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளுதல் அவசியம்.

இந்தத் தேவைக்கு ஏற்றபடி நீங்கள் உங்களைத் தயார் படுத்திக் கொள்ளாவிடில் உங்களுக்கு ஐ டி சேவை துறையில் ஏமாற்றமே மிஞ்சும். இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளாமையே பெரும் பாலும் மனச்சோர்வுக்கும் அழுத்தத்திற்கும் மூல காரணமாக அமைகின்றது.

மிக முக்கியமாக மாணவர்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான். நீங்கள் சினிமாவில் பார்க்கும் ஐ டி துறையும் நிஜமும் வேறு. அழகான பெண்களும், நுணி நாக்கு ஆங்கிலமும் மட்டுமே ஐ டி துறை இல்லை. அதற்குப் பின்னர்க் கடுமையான பணிச்சுமையும், மிகக் கடுமையான ஆளுமைக்கான சவால்களும் நிறைந்தது இந்தத் துறை. அதை மனதில் கொள்ளுங்கள். அடுத்தச் சுக்கர்பெர்க் ஆகும் கனவோடு இந்தச் சேவை நிறுவனத்திற்குள் நுழையாதீர்கள். அவர்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வேறு திறமையை.


ஒரு வேளை நீங்கள் இந்தத் துறைக்குள் நுழைந்த பின்னர் இந்த துறையின் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாவிட்டால், எதுவும் குடி முழுகிப் போய்விடாது. அயிரம் வழிகள் இருக்கின்றன - நேர்மையாக வாழ, பிழைக்க. மனச்சிதைவுக்கு மட்டும் இடம் கொடுக்காதீர்கள்.

கல்லூரியில் சேரும் முன்னரும், பணியைத் தேர்ந்தெடுக்கும் முன்னரும் பல மணி நேரம் ஆராய்ந்து, தெரிந்தவர்களிடம் பேசி சரியான முடிவை எடுங்கள்.

No response to “ ஐ டி துறை குறித்து...”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman