Adsense

சிதறல்கள் 17


சென்ற வெள்ளிக்கிழமைக்கு ஒரு சிறப்பு இருந்தது. அதை “பை தினம்” என்று கொண்டாடினார்கள். கட்டப்பை, மஞ்சள் பை இல்லை....ஒரு வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்தால் வரும் மாறிலிக்கு சொல்வார்களே அந்த “பை”. ஏன் சென்ற வெள்ளிக்கிழமை என்றால், சென்ற வெள்ளிக்கிழமை வந்த தேதி 14 மார்ச், அதை எழுதினால் 3.14 என்று எழுதலாம் என்று சொல்கிறார்கள்.

எனக்கு என்னமோ ஒவ்வொரு ஜூலை 22 ஆம் தேதியைத் தான் அப்படிக் கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அமெரிக்கர்கள் கொண்டாட முடியாது.

இந்த “பை” ஐ ஏன் சிலாகிக்கக்கூடாது என்று சிலர் anit-pi campaign எல்லாம் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோவைப் பாருங்கள்.


இந்த அம்மணியின் மற்ற விடியோக்களும் நன்றாக இருக்கின்றன.  பாருங்கள்.

இந்த பை இன் எண் மதிப்பைக் கண்டறிய பல்வேறு விதமான முறைகள் இருக்கின்றன. நான் பள்ளியில் படித்த போது, புத்தகங்கள் இது ஆர்க்கிமெடிஸின் கண்டுபிடிப்பு என்றே எனக்குச் சொல்லிக் கொடுத்தன.

ஆனால், அவருக்கு முன்பே இந்தியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் இந்த எண் மதிப்பு தெரியும் என்பது ஓரளவிற்குப் பரவலாக ஒத்துக்கொள்ளப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டும் விட்டது.

ஆனால் எந்தக் காலத்தில் தெரியும், யார் மூத்த குடி என்பன போன்ற விவாதங்கள் தோன்றும் போதெல்லாம் பல சூத்திரங்களின் ஆதாரமும் வேதத்தில் கொண்டு நிறுத்தப்படுகின்றன. இந்தியர்களின், குறிப்பாக சனாதனிகளின் கூற்றுப்படி அனாதியானதும், மேற்கத்திய இந்தாலஜிஸ்ட்களின் கணக்குப்படி 4000-6000 ஆண்டுகள் பழமையானதுமாகக் கருதப்படும் வேதங்களின் காலம் பற்றிய மாற்றுக் கருத்துகள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால் அது குறித்த விவாதத்தை சற்று ஒதுக்கி வைப்போம்.

கடபயாதி எண் முறை என்று ஒன்று உண்டு. சம்ஸ்க்ருதத்தில் வழங்கப்படும் எண் முறைகளில் அது ஒரு முறை. பூத சங்க்யா, ஆர்யபட்டியா எண்முறை,  போன்றவை பிற எண் முறைகள். பூத சங்க்யா இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப் பட்டாலும் கடபயாதி முறை பெரும்பாலும், கேரளாவிலேயே பயன்படுத்தப் பட்டது. 

இந்த எண் முறைகள் இந்திய அறிவியலுக்கும், இந்திய கணிதத்திற்கும் அடிப்படை. பாஸ்கராச்சார்யாவின் புத்தகங்களிலும், ஸ்ரீதராச்சார்யாவின் புத்தகங்களிலும் பூத சங்க்யாவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆர்யபட்டா அவரே உருவாக்கிய எண் முறையான ஆர்யபட்டியா எண் முறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இவற்றைத் தவிர அடிப்படையான எண் முறையாக இருப்பது நாம் பரவலாக உபயோகப்படுத்தும் ஏகம்(1), த்வே(2), த்ரீனீ(3), சத்வாரி(4), பஞ்ச(5), ஷட்(6), சப்த(7), அஷ்ட(8), நவ(9), தச(10)....என நீளும் எண் முறை.


கடபயாதி முறையானது, எழுத்துகளுக்கு எண் அடிப்படையைத் தந்து அதன் மூலம் பல சிக்கலான எண்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி வாக்கியம் அமைக்கும் முறை. ஜோதிஷத்திலும், வான சாஸ்திரத்திலும் பெரிதும் பயன்பாடு உடைய முறையாக அறியப்படுகிறது.

விக்கிப்பீடியாவில் இந்த எண் முறையின் அட்டவணை இருக்கிறது. மேலும் இந்த முறையின் விதிகள் இணையம் முழுவது பரவிக்கிடக்கிறது. உங்கள் விருப்பம் போல் அவற்றைப் படித்து தெரிந்துக் கொள்ளலாம். Katapayadi System என்று தேடுங்கள்.

கீழே இருக்கும் ஸ்லோகத்தை கடபயாதி எண் முறைப்படி decipher செய்தால் உங்களுக்குக் கிடைப்பது பையின் மதிப்பு !

गोपीभाग्य मधुव्रातः श्रुंगशोदधि संधिगः
खलजीवितखाताव गलहाला रसंधरः


~oOo~


ஆரிகமி என்ற ஒரு கலையைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். காகிதங்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களை உருவாக்கும் கலை.

இந்தக் கலை frugal scienceஇல் புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. மனு பிரகாஷ் என்ற ஓர் இந்தியர். ஸ்டான்ஃபோர்டில் துணைப் பேராசிரியர்.
 
நுண்கிருமிகளால் தோன்றும் நோய்களைக் கண்டறியத் தேவையான மைக்ரோஸ்கோப்பின் பயன் முன்னேறிக் கொண்ட்ருக்கும் பல்வேறு நாட்டிலிருக்கும் மக்களுக்கும் சென்று சேராமலிருப்பதை இவர் அறிந்து அவற்றைத் தீர்க்கும் வழி முறைகளை ஆராய்கிறார்.

மைக்ரோஸ்கோப்பின் பயன் பரவலாக அனைத்து மக்களுக்கும் சேராமல் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கண்டறிகிறார் - அதனை இயக்கும் அடிப்படை திறமை இல்லாமை மற்றும் மைக்ரோஸ்கோப் வாங்கும் வசதியின்மை.
 
 இவை இரண்டையும் போக்கும் வகையில் இவர் உருவாக்கியிருப்பது தான் ஃபோல்ட்ஸ்கோப் (Foldscope). வெறும் காகிதம் கொண்டு இவர் மைக்ரோஸ்கோப்பிற்கான கட்டுமானத்தை உருவாக்கிவிட்டார். அதில் லெண்ஸ் சொருகி நீங்கள் உங்களுக்கான பணியைத் தொடரலாம். பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மைக்ரோஸ்கோப்பிற்கு மாற்றாக இவர் உருவாக்கியிருக்கும் ஃபோல்ட்ஸ்கோப்பின் மதிப்பு வெறும் 50 cent தான். இன்றைய மதிப்பில் 30 ரூபாய் :-)


இது தொடர்பான வீடியோவைப் பாருங்கள்.
No response to “சிதறல்கள் 17”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman