Adsense

சிதறல்கள் 16


இப்போது ஃபேஸ்புக்கில் Joke for Intellectuals என்று ஒரு ஜோக் பட்டியல் வலம் வருகின்றது. நல்ல ஜோக்குகள் தான். ஆனால் இண்டலெக்ச்சுவல்களுக்கான ஜோக் என்று அதை வகைப்படுத்த முடியாது.

10வது படிக்கும் மாணவர்கள் பலருக்கும் அந்த ஜோக்கில் ஒரு பாதியாவது புரியும். ஒரு விதமான அகெடமிக் தன்மைக் கொண்டவை அவை. அவ்வளவு தான்.

இதே போலத் துறை சார்ந்த ஜோக்குகள் பல இருக்கின்றன. அந்தந்த துறையைச் சேர்ந்தவர்களால்/ அல்லது துறை ஆர்வலர்களால் அவற்றை ரசிக்க முடியும். சில ஜோக்குகளை உள்ளடக்கத்தை அப்படியே வைத்துக் கொண்டு துறையை மட்டும் வேறு வேறாக மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, கீழே இருக்கும் மிகவும் ஃபேமஸான ஒரு செஸ் ஜோக் (மிகவும் கவனமாக டைப்படித்தேன், எசகுபிசகாக ஓர் எழுத்து அதிகமானால், வாசகர்களின் எதிர்பார்ப்பு மாறி விடுமல்லவா)

காபாபிளாங்கா ஒரு முறை அவருக்கு ஏற்பட்ட வினோத அனுபவத்தை ஒரு நிருபரிடம் பின்வருமாறு சொன்னார்.

காபாபிளாங்கா ஒரு முறை ஓர் ஆட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த போது பலரும் அவரை சந்தித்துட் கையெழுத்துப் பெற்றுச் சென்றனர். அதே போல ஒருவர் அவரை நோக்கி வந்தார். காபாபிளாங்காவும், சரி கையெழுத்துக்காக வந்திருக்கிறார் என்று நினைத்துக் கையெழுத்துப் போட தயாரானார்.

வந்தவரோ வேறு ஒரு விஷயத்தைச் சொன்னார் “நான் செஸ் ஆட்டத்தின் புதிர்கள் அனைத்தையும் தீர்த்துவிட்டேன். 12 நகர்த்தலில் வெள்ளை வெற்றி பெற்று விடும் என்றார். 500 டாலர் பெட். விருப்பமிருந்தால் இப்போதே என் திறமையைச் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

வந்தவர் பார்க்கப் பைத்தியம் மாதிரி இருந்தாலும், 500 டாலராச்சே - சும்மா விடுவானேன் என்று காபாபிளாங்காவும் ஒத்துக் கொண்டார்.

முதல் ஆட்டம் - எதேதோ செய்து 12 நகர்த்தலில் வந்தவர் வென்று விட்டார். காபாபிளாங்காவிற்கு வருத்தமாகிவிட்டது, அடடே இந்த மனுஷனைக் குறைத்து எடைப் போட்டு விட்டோமே. சரி கவனமாக ஆடுவோம் என்று மிகவும் கவனமாக ஆடினார். ஆனால் அந்த ஆட்டமும் சோபிக்கவில்லை - சரியாக 12 நகர்த்தல்கள். காபாபிளாங்கா காலி.

மூன்றாம் முறை அதிக நேரம் எடுத்துக் கொண்டார். அசாதாரணமான பொசிஷன்களை உருவாக்கினார். எந்த பிரயோஜனமும். அதே 12 நகர்த்தல்கள் அதே முடிவு.

அவருக்கு விஷயம் தீவிரமானது என்று புரிந்துவிட்டது. அவசரமாக வெளியே சொன்று லஸ்கரை அழைத்து வந்து ஆடச் சொன்னார். அவருக்கும் அதே கதி. சரி நம்மையே தோற்கடித்தவராயிற்றே என்று அலெஹ்யெர்னை வரவழைத்து ஆடச் சொன்னார். அவருக்கும் அதே கதி.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நிருபருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை “பின்பு என்ன செய்தீர்கள்” என்றார்

காபாபிளாங்கா அலட்டிக் கொள்ளாமல் “வேறு என்ன செய்வது. மூவரும் சேர்ந்து அந்த நபரைக் கொன்று விட்டோம்” என்றார்.

~oOo~

மேலே சொன்ன ஜோக்கைக் கேட்டு நீங்கள் சிரித்தாலோ அல்லது புன் முறுவல் புரிந்தாலோ, உங்களுக்கு Right frontal lobe சரியாக இருக்கிறது என்று அர்த்தம். அது தான் மனிதர்களுக்குச் சிரித்தல், நகைச்சுவையை ரசித்தல் போன்ற விஷயங்களுக்கு ஆதாரம் என்கிறார்கள். நமக்கு Right frontal lobe  பற்றியெல்லாம் எதுவும் தெரியாததாலலால், அதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்.

பெரும்பாலும் மனிதர்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவராக இருக்கிறார்கள அல்லது குறைந்தபட்சம் ரசிக்கவே செய்கிறார்கள். எனக்கு நகைச்சுவை உணர்வு கிடையாது என்று யாரும் பொது வெளியில் ஒத்துக் கொண்டது கிடையாது என்பது என் அவதானிப்பு.

ஜோக் எழுதும் விதங்கள் குறித்துப் பல விதமான மாடல்கள் இருக்கின்றன. சில மாடல்களில் இறுதி வரை காத்திருக்க வேண்டும், காபாபிளாங்கா ஜோக் அந்த வகை.

சில ஜோக்குகள் அடுத்த வரியிலேயே ஜோக் வந்து அந்த ஜோக்கின் மேல் இன்னொரு ஜோக் வந்து விழும். பெரும்பாலும் கிரேசி மோஹனின் ஜோக்குகள் இந்த மாடல்களே.

சில ஜோக்குகள் உங்கள் நினைவுக் கற்றைகளில் இருக்கும் விஷயங்களை எடுத்து அதன் மீது நிறுவப்படுபவை. இது தனி நபர் அனுபவமாகவோ இல்லை பகிர்ந்து கொள்பவர்கள் இடையே இருக்கும் பொதுவான அம்சம் (நாடு, மொழி, படிப்பு, சூழ்நிலை) சார்ந்ததாகவோ இருக்கும்.

இவையின்றிச் சொல் அல்லது விவரணைத் தாண்டிய ஜோக்குகள். ஸ்லாப்ஸ்டிக் ஹ்யூமர், வசனமில்லா கார்ட்டுன்கள் எல்லாம் இந்த வகையில் வந்து விழும்.

முன்வரையருக்கப்பட்ட குணாதிசயம் சார்ந்த ஜோக்குகள் - பெரும்பாலும் நாம் படிக்கும் டாக்டர் ஜோக்குகள், மிஸ்டர் பீன், முன் ஜாக்கிரதை முத்தண்ணா எல்லாம் இந்த வகை. அவர்கள் எப்படி ஜோக் சூழ்நிலையில் நடந்து கொள்வார்கள் என்று தெரிந்தும் அதையும் தாண்டி சிரிப்பு வரவழிக்க வேண்டும். உருவாக்குவதற்கு மிகவும் கடினமான வகை என்று நான் கருதுகிறேன்.

மேலே போவதற்கு முன் சட்டென நியாபகம் வரும் மிஸ்டர் எக்ஸ் ஜோக் ஒன்று,

ஒரு முறை மிஸ்டர் எக்ஸின் நண்பர் பூங்காவில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது மிஸ்டர் எக்ஸ் ஒரு நாயுடன் செஸ் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அருகில் வந்து சற்று நேரம் பார்த பின், “மிகவும் புத்திசாலி நாய்” என்று பாராட்டினார்.

மிஸ்டர் எக்ஸிற்கு கோபம் வந்துவிட்டது. “என்ன புத்திசாலித்தனத்தைக் கண்டாய். 4-1 என்ற விகிதத்தில் நான் தான் முன்னிலையில் இருக்கறேன் தெரியுமா” என்றார்.

மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு...இப்படி பல்வகை மாடல்களிலும் எழுதப்படும் ஜோக் வகைகள் அனைத்திற்கும் சில அடிப்படை விதிகள் இருக்கின்றன. அப்போதே அவை சிரிப்பை வரவழைக்க முடியும்.
1. எதிர்பாராத ஆச்சரியத்தைத் தர வல்லதாக இருக்க வேண்டும்
2. கேட்பவருக்கு/ படிப்பவருக்குப் பரிச்சயமான சூழலில் இருப்பதாக இருக்க வேண்டும்
3. பன்ச் லைனில் முடிவது இருப்பது சாலச் சிறந்ததாம்

முடிப்பதற்கு முன் பல்லாண்டுகள் முன்பு ரீடர்ஸ் டைஜிஸ்டில் படித்த இன்னொரு ஜோக்

ஒரு முறை ஒரு ஸ்டெனோகிராஃபி ஆஃபிஸில் பணியிடம் காலியாயிருக்கும் அறிவிப்பு ஒன்றை வைத்தார்கள்.

தேவை ஒரு டைப்பிஸ்ட்
1. நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் டைப் செய்ய வேண்டும்
2. நிமிடத்திற்கு 200 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுத வேண்டும்
3. இரண்டு மொழிகள் தெரிந்து இருக்க வேண்டும்

பலர் வந்தார்கள் சென்றார்கள். யாராலும் முதல் இரண்டு தேவைகளையுமே பூர்த்திச் செய்ய முடியவில்லை. இப்படியாக ஒரு வாரம் சென்றது.

கடைசியாக ஒரு நாய் வந்தது.மனிதர்களால் முடியாததை ஒரு நாயால் எப்படி செய்ய முடியும் என்று முதலாளி நினைத்தார். இருந்தாலும் சரி, வாய்ப்பு தருவோமே என்று நினைத்து டைப் அடிக்கச் சொன்னார்.

நிமிடத்திற்கு 250 வார்த்தைகள் டைப் செய்தது.

முதலாளிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, சரி ஷார்ஹேண்ட் எழுது என்று சொல்லி டிக்டேட் செய்ய ஆரம்பித்தார்.

அவர் சொல்லி முடிப்பதறகும் அதை சுருக்கெழுத்தில் பதிவு செய்வதற்கும் சரியாக இருந்தது. முதலாளிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

இருந்தாலும் முதலாளிக்கு அந்த நாயை பணிக்கு வைத்துக் கொள்ள விருப்பமில்லை. கடைசி அஸ்திரத்தில் எப்படியும் விழுந்து விடும் என்று நினைத்து, சரி இரண்டு மொழிகள் அறிவாயா என்று கேட்டார்

“மியாவ்...” என்றது.

No response to “சிதறல்கள் 16”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman