Adsense

புத்தக கண்காட்சி


வாழ்க்கையில் சில விஷயங்கள் இருக்கின்றன. இருப்பை நிலைநாட்ட செய்ய வேண்டியவை. வாழ்கிறோம் என்றால் மூச்சு விடுவது, சுச்சா/ கக்கா போவது போல சில அத்யாவசியமான செயல்கள் செய்தே ஆக வேண்டும். அதே போல தமிழில் வலைப்பதிவு வைத்திருந்தால், கட்டாயம் புத்தக கண்காட்சியின் போது அதைப் பற்றி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும். வருடம் தோறும் வேறு என்ன எழுதினீர்கள் என்பது அவ்வளவு அவசியம் இல்லை.

அந்த வலைபதிவு தர்மத்தை நிலை நாட்ட வேண்டியது சாமானிய மானிடனான எனது கடமை என்பதை நான் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிவேன்.

நேற்று நானும் சம்பத்தும் புத்தக கண்காட்சியை காணச் சென்றோம். முழுமையாக அனைத்து ஸ்டால்களையும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கடைகள் இருக்கின்றன. பெயர் பலகையை மட்டும் படித்து விட்டு முழுக்க ஒரு நடை நடந்தாலே ஒரு நாளின் உடற்பயிற்சியை முடித்து விடலாம். ஒவ்வொரு ஸ்டாலிலும் நின்று கொஞ்ச நேரம் புத்தகங்களை மேய்ந்தால் கட்டாயம் ஒரே அமர்வில் (நடையில் ?) அனைத்துக் கடைகளையும் காண இயலா.

குறிப்பிட்டு சொல்லும்படியான சில விஷயங்கள் மட்டுமே எனக்கு இருக்கின்றன.

 • இந்த கண்காட்சியின் ஏற்பாடு நிறைவாகவே இருக்கிறது. ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேல் நான் புத்தக கண்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவ்வகையில் இந்த தரம் முன்னேற்றமாகவே இருக்கிறது.
 • ஒரே பதிப்பகத்தின் புத்தகங்கள் அனேக கடைகளிலும் கிடைக்கின்றன. அதனாலோ என்னவோ, உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை நீங்கள் கொஞ்சம் தேட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இல்லாவிடில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
 • இணையத்தில் இலவசமாக கிடைக்கும் பல்வேறு தகவல்களும் புத்தகங்களாக வந்திருக்கின்றன - எதற்காக ? யார் வாங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
 • என அவதானிப்பில், 2001, 2002இல் கண்காட்சி இலக்கிய விஷயங்கள் பிரதானமாக இருக்கும் - நான் அக்கண்காட்சிகளுக்கு சென்றதன் நோக்கமே நான் அதுவரை அறிந்திறாத, படித்திறாத எழுத்தாளர்களை படிக்கும் ஆர்வத்திலேயே. அதற்கேற்றபடி நிறைய விஷயங்கள் கிடைத்தன. அந்த புத்தகங்கள் சர்வ நிச்சயமாக எனது வெளியை விஸ்தரிக்க உதவின
 •  ஆனால் சமிப காலங்களில், அரங்குகளை ஆக்கிரமிப்பவை பெறும்பாலும் தகவல் களஞ்சியங்களே - சரிதைகள், ஏதோ ஒரு துறையில் எழுதப்பட்ட ஆரம்ப நிலை ஆராய்ச்சி நூல்கள், மொழி பெயர்ப்புகள் - இவையே பிரதானப்படுகிறது
  • உண்மையிலேயே, புதிய படைப்புகள் வருவதில்லையா ? அல்லது புணைவுகளுக்கும் படைப்புகளுக்குமான சந்தை சுருங்கி விட்டதா ?
 • மேலே சொன்ன படியே இந்த முறையும் புத்தக கண்காட்சியும் இருந்தது. ஆயாசமாக இருந்தது. பல கடைகளை வெளியே இருந்து பார்த்தபடியே கிளம்பி விட்டேன்.
 • முன்பு ஏதேனும் கடையை தவறவிட்டால், அந்த கடையை மீண்டும் பார்க்கும் பொருட்டே இரண்டாவது முறை செல்வேன். இந்த முறை இரண்டு வரிசைகளை நான் பார்க்கவேயில்லை - குறையொன்றுமில்லை.
 • சில கவிஞர்கள் தனியே ஸ்டால் போட்டிருக்கின்றனர்.
 • நான் முத்து காமிக்ஸ், கிழக்கில் மொழிபெயர்ப்பாய் வெளிவந்திருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் முன்ஷிராம் மனோகர்லாலுக்கு மட்டுமே மொய் எழுதுவதாய் தீர்மாணித்திருந்தேன்.ஆனால் சில புத்தகங்கள் பார்த்த உடனே ஆர்வம் ஏற்படுத்தி வாங்கி விட்டேன்
 • நான் வாங்கிய புத்தகங்கள்
  • The Aryans : Myth and archeology
  • 2G: ஸ்பெக்ட்ரம் ஊழல்
  • காலமேகப் புலவர் தனிப்பாடல்கள்
  • தமிழ் மொழி வரலாறு
  • தொல்காப்பிய ஆராய்ச்சி
  • கண்ணதாசனின் வனவாசம் மற்றும் மணவாசம் - இரண்டும்
  • பின் வருவனதான் நான் இந்த வருடம் வாங்கியவற்றில் மிகச் சிறந்தவை
   • லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் - 39 புத்தகம் அடங்கிய செட் - உண்மையில், சம்பத் கொடுத்த தகவலின் படி இந்த காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கவே கண்காட்சிக்குச் சென்றேன்
   • செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் பதிப்பித்து வெளியிட்ட புத்தகங்கள்
    • கம்ப்யூட்டர் காண்போம் - சுஜாதா
    • தம்பி சீனிவாசன் எழுதிய சிறுவர் கதைகள்
    • புதிய சைக்கிள் - சிறுவர் கதை மலர் (வாண்டு மாமா கதைகளுக்காக)
 • மற்றபடி, வழக்கம் போல் கிழக்கில் பிரசன்னாவை சந்தித்தேன். முதல் முறையாக மருதனையும் பார்த்து அறிமுகம் செய்து கொண்டேன் - மென்மையாக பேசுகிறார்
 • நானும் சம்பத்தும் அஜயன் பாலவை சந்தித்தோம் - உலக சினிமாவைப் பற்றியும் அவரது சமிபகால முயற்சியைப் பற்றியும் பேசினார். சமுகத்தை பிரதிபலிப்பதே நல்ல சினிமா என்ற கருத்தை இரண்டு மூன்று முறை வலியுருத்தினார். நேரம் கிடைத்திருந்தால் இது குறித்து அவரிடம் இன்னும் கொஞ்சம் விவாதித்திருக்கலாம். பாகம் மூன்று எழுதிக் கொண்டிருக்கிறாராம். வாழ்த்துகள். சம்பத் திரைப்படத் துறையில் தீவிரமாக இயங்கும் அவர் நன்பருக்குப் பரிசளிக்க அஜயன் பாலாவின் இரண்டு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டார் (அவற்றில் எழுத்தாளரது ஆட்டோகிராஃபுடன்)
மிகவும் வணிகமயமாகிவிட்ட ஒரு  சந்தைக்குச் சென்று வந்த உணர்வே எஞ்சுகிறது. சுற்றுலா பொருட்காட்சிக்கும் இந்த புத்தக கண்காட்சிக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிகவும் வேகமாக குறைந்துக் கொண்டே வருகிறது. சர்வ நிச்சயமாக இந்த சூழல் ஆரோக்கியமானதாக எனக்குத் தோன்றவில்லை. புத்தகங்களை வெறும் வியாபாரப் பண்டமாக மட்டுமே பார்க்க சங்கடப்படுபவர்களுக்கு புத்தக கண்காட்சி பெரும் உற்சாகத்தை அளிக்கப் போவதில்லை.

No response to “புத்தக கண்காட்சி”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman