Adsense

12ஆம் வகுப்புக்குப் பின்...


12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன - எப்போதும் போல இந்த முறையும் தேர்வு முடிவுகள் வந்த நாளன்று அனைத்து ஊடகங்களும் மாணவர்களை முடிந்த வரை கவர் செய்திருக்கின்றன. பொதுவாகவே ஊடகங்களை அதன் செயல்பாடுகளுக்காக விமர்சிப்பவர்கள் கூட பொது தேர்வு முடிவின் போது அவர்கள் சாதனையாளர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாராட்டவே செய்வார்கள். நானும் அப்படித்தான்.

இந்த முறை சில கேள்விகள் எனக்கு மாணவர்கள் சமுகம் சார்ந்து எழுந்துள்ளன. ஒவ்வொரு முறையும் மாநில முதல் மதிப்பெண் பெறும் மாணவனோ/ மாணவியோ 10 வருடங்கள் கழித்து என்னவாகிறார்கள் ? பெரிய ஆராய்ச்சியாளராகவோ தொழில் முனைபவராகவோ ஆகிறார்களா ? சமுகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் உருவாக்கங்கள் எதையாவது தோற்றுவிக்கிறார்களா ? என்ன தான் செய்கிறார்கள் அவர்கள் ?
தெரியவில்லை!

அவர்கள் யாவரும் 10 வருடங்களுக்குப் பிறகு ஊடகங்களின் கவனத்தில் வராமலிருப்பதற்கு காரணம் எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் நிச்சயம் சோடை போயிருக்க மாட்டார்கள். வெளியே தெரியாத வண்ணம் ஏதோ ஒரு மிகப்பெரிய சாதனையின் ஒரு சிறு அங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியோ, மின்னனு தொலை தொடர்பு குறித்துப்படித்தோ GRE எழுதி விட்டு ஒரு அமெரிக்க பல்கலைகழகத்தில் படித்து, PHD பண்ணி, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு நிரல் எழுதி, ப்ராசஸ் வடிவமைத்து,  ஆராய்ச்சி துறையிலோ அல்லது நிர்வாகத்திலோ பெரிய மேலாளராக ஆகிவிட்டிருப்பார்கள். அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் ஏதோ ஒரு ஸ்டேட்டிற்கு வரி கட்டிக்கொண்டிருப்பார்கள். பொரும்பாலோனோர் அப்படித் தான் இருக்கவேண்டும்.

மருத்துவம் படித்தவர்கள் மேல் படிப்பெல்லாம் படித்து, 10 ஆண்டுகளுக்குப் பின் சமுகத்தின் ஓட்டத்தில் புதிதாக கலந்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்ன தான் ஆகிறார்கள் ? ஒரு 20-30 வருடங்கள் கழித்து சமுகத்திற்கான மிகப்பெரிய பங்களிப்பு அந்த முதல் மதிப்பெண் சமுகத்திலிருந்து வருகிறதா ?  அப்படி இது வரை வந்த முக்கியமான பஙகளிப்பு தான் என்ன ?

மாணவர்களை ஊக்குவிக்கும் செயல்/ கஷ்டப்பட்டால் பலன் கிடைக்கும் என்பதை போதிக்கும் செயல் என்ற கோஷங்களை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொஞ்சம் சினிக்கலாக யோசித்தால், இவை பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் வியாபாரத்திற்காக தோற்றுவிக்கும் மாயம் என்றே தோன்றுகிறது. நாளையே அரசு முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் என்ற அங்கிகாரம் கிடையாது என்ற அறிவிப்பு வெளியிடட்டும் - எவ்வளவு பள்ளி நிர்வாகங்கள் அந்த யோசனைக்கு உடன் படும் ? 

பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் ஏன் ஆராய்ச்சி ப்ராஜெக்ட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது ? 10வது முடித்தவுடன் 11வது மற்றும் 12வது வகுப்பு படிக்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட 30 ஆராய்ச்சித் தலைப்புகளில் இரண்டு தலைப்புகளில், ஆராய்ச்சி மேற்கொண்டு, தீர்வுகளுக்கான வரைபடங்களை உருவாக்கச் சொல்லி, அவற்றை முதற்கட்டமாக பரிசிலித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லி அவர்களின் ஆராய்ச்சி நோக்கின் அடிப்படையில் ஏன் பொறியியல் மற்றும் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

இரண்டு விஷயங்கள் நிச்சயமாக மாறும்
1) அப்பா அம்மாவின் கட்டாயத்திற்காக சேர்ந்தேன் - அரியர் மீது அரியர் வைத்தேன் என்ற புலம்பல்கள் நிற்கும்
2) இரண்டாவது விஷயம் - காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற நிலை கொஞ்சமேனும் மாறும்.

ஆனால், இந்த நிலை வர தற்போதைய கல்வி வியாரிகள் மனது வைக்க மாட்டார்கள் - அவர்களது வியாபாரம் பெருமளவு அடிபடும்.

அரசு இது போன்ற ஒரு திட்டத்தை உருவாக்குவதால், மதிப்பெண் சார்ந்த அழுத்தம் குறையும். மேலும், மாணவர்களிடையே தீர்வுகள் நோக்கி சிந்திக்க வேண்டிய அறிவும் வளரும். இன்றைய சமுகத்திற்குத் தேவை தீர்வுகள். கணினி மயமாக்கம் முதல், சாலைகள் பழுதின்றி குறைந்த செலவில் இடும் பணித்திட்டம் வரை தீர்வுகள் தேவை - அவை நோக்கி நம் மாணவ சக்தியை செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், புத்தக புழுக்களை உருவாக்கி விட்டு அவர்களை கொண்டாடிக் கொண்டும், அப்படி புழுவாக இல்லாதவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டிக்கொண்டும் தான் நாம் இருப்போம்.

இந்த ஆண்டு 8 பேர் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களாம். கொடுமை.

No response to “12ஆம் வகுப்புக்குப் பின்...”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman