Adsense

கிரிக்கெட் பெட்டிங் - 2


முந்தையப் பதிவில் இருக்கும் கட்டுரைக்கான prelude போன்று அமைந்த கட்டுரை. இந்தப் பகுதி வெளியகவில்லை

_oOo_

கிரிக்கெட்டில் ஊறித்திளைத்த பால்ய காலங்களில் உலக கோப்பை போட்டிகள் வந்தாலே கொண்டாட்டம் தான். மைதானத்தில் விளையாடும் நண்பர்கள் ஒவ்வொருவரும், ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு ஒரு அணியின் மேல் பந்தயம் கட்டுவோம். பந்தயம் கட்டிய அணி கோப்பை ஜெயித்தால், பந்தயத்தில் இருக்கும் மொத்த பணமும் ஜெயித்தவனுக்குத் தான் (அதிக பட்சம் பத்து இருபது ரூபாய் கிடைக்கும்). ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஒரே அணிக்கு கட்டினால், பந்தயப் பணம் பிரியும். இறுதிப் போட்டி நடப்பதற்கு முன் காரசாரமாக விவாதம் நடக்கும். பந்தயத்தில் தோற்றவன் அன்றைக்கு மைதானத்திற்கே வரமாட்டான். பிள்ளையாருக்கு சூடம் ஏற்றுவது முதல், 16 அடிப்பிரக்ஷணம் வரை பல விதமான வேண்டல்கள் நிறைவேற்றப்படும். 

10 ரூபாய் புரளும் சிறுவர்களின் விளையாட்டுப் பந்தயத்திற்கே இந்த ரகளை என்றால், பல ஆயிரம் கோடிகள் புரளும் சர்வதேசப் போட்டிகள் பற்றி கேட்கவா வேண்டும். அப்படிப் பட்ட ஒரு கூத்து தான் இன்றைய கிரிக்கெட் சூழலில் மறுக்க முடியாத அம்சமாக மாறி இருக்கிறது. விளையாட்டில் பெட்டிங் என்பது தனியான ஒரு சேவை துறையாகவே மாறி விட்டது. பல தேசங்களில் பெட்டிங் சட்டரீதியாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சட்ட திட்டங்கள் தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது. அமெரிக்காவில் நடக்கும் நேஷனல் ஃபுட்பால் லீக் என்னும், அமெரிக்க ஃபுட்பால் போட்டிகளில் பெட்டிங் அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக, இங்கிலாந்தில் வார இறுதியில் நடக்கும் கால்பந்து போட்டிகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட பெட்டிங் நடக்கும். அவை சட்டத்திற்குட்பட்டவை. அவைத் தவிர, சட்டத்திற்குப் புறம்பான பெட்டிங்குகளும் உண்டு.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்தியாவில் பெட்டிங் சட்டரீதியாக்கப் பட வேண்டும் என்பது ஐ சி சியின் நிலைப்பாடு. ஆனால் இன்று வரை, இந்தியாவில் பெட்டிங் சட்டத்திற்குப் புறம்பானது தான். உலகெங்கிலும் நடக்கும் சட்ட விரோத பெட்டிங் செயல்களில், ஆசியாவில் நடக்கும் பெட்டிங் சந்தை மட்டும் 500 பில்லியன் டாலர்கள் என்பது இண்டர்போலின் மதிப்பீடு. அதிலும் இந்தியாவின் பெட்டிங் சந்தை 60 பில்லியன் டாலர் என்பது KPMGயின் மதிப்பீடு. பொதுவாக, விளையாட்டில், பந்தயம் ஒரு புக்கி (புக் மேக்கர்) வழியாக செயல்படுத்தப்படும். அந்த நபரே பெட்டிங்கிற்குத் தேவையான அனைத்து பந்தயங்களையும் குறித்துக் கொண்டு, வெற்றி பெற்றவருக்கு கொடுத்தப் பந்தயப் பணம் போக மீதம் இருக்கும் லாபத்தை எடுத்துக் கொள்வார். பெட் கட்டுபவர் பண்டர் என்றழைக்கப்படுவார். ஆனால், இன்றைய சூழலில் கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தில் புக்கி என்பவர், சட்ட விரோதமாக ஆட்டக்காரர்களை, ஒரு தரப்பின் முடிவும் ஏற்படும் வகையில் மாற்றும் பணியை செய்பவராக மாறி விட்டார்.

கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டத்தில், ஆட்டத்தின் முடிவின் மீது பந்தயம் கட்டப்படுவது ஒரு வகை. அதைத் தவிர ஆட்டத்தின் போது ஒரு குறிப்பிட்ட ஒரு நிகழ்வு நிகழும் என்று பெட் கட்டுவது இன்னொரு வகை (ஸ்ப்ரெட் பெட்டிங்) – டாஸில் இந்தியா ஜெயிக்கும், ஒரு ஓவரில் 13 ஓட்டங்கள் எடுக்கப்படும், 42வது ஓவரில் மூன்றாவது பந்து வைட் பாலாக அமையும் போன்றவைகளை உதாரணமாகச் சொல்லலாம். சமிபத்திய ஊழல் குற்றச்சாட்டு இரண்டாவது வகை. இவைத் தவிர பல வகையான பெட்டிங்கள் உண்டு.

மேலே சொன்னதில், பெட் கட்டுபவருக்கு வெற்றி பெற்றால் பணம் கிடைக்கும் என்று தெரிந்தாலும், புக்கிக்கு எப்படி லாபம் வருகிறது ? அதைத் தெரிந்துக் கொள்வதற்கு பெட்டிங் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றிய அடிப்படையை புரிந்துக் கொள்வோம். நம் உதாரணங்களில், கிரிக்கெட்டில் நடக்கும் பெட்டிங்கை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் (மற்ற விளையாட்டுகளிலும் பெட்டிங் அதிகமாக நடக்கிறது). பெட்டிங் என்பது நிகழ்தகவின் அடிப்படையில் நடத்தப்படுவதால், எங்கெல்லாம் நிகழ்வுகள் உண்டோ அங்கெல்லாம் பெட்டிங் என்னும் காண்செப்ட் செல்லுபடியாகும்.

பெட்டிங்க்கில் Odds (சாதக பாதக விகிதம்) என்ற ஒரு அம்சம் இருக்கிறது. ஒரு நிகழ்வு நடக்கும் என்பதையோ அல்லது நடக்காது என்பதையோ குறிப்பது தான் Odds. ஓவ்வொரு நிகழ்விற்கும் இது நிர்ணயிக்கப்படும். கிரிக்கெட்டில், வெற்றி, தோல்வி ஏற்படலாம், டை ஆகலாம், மேட்ச் நிறுத்தப்படலாம், ஒத்திவைக்கப்படலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வு – இவை அனைத்திற்கும் பெட்கள் ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணத்திற்கு, இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் நடக்கும் போட்டியில், இந்தியா வெல்வதற்கான சாதக விகிதம் அதிகமாக இருக்கும். இந்த விகிதத்தை புக்கிகள் தான் நியமிப்பார்கள். ஆடுகளத்தின் தன்மை, ஆடும் அணிகளின் பலம்/ பலவீனம், ஆட்டக்காரர்கள், தட்பவெட்பம் போன்ற பல காரணிகள் இதை நியமிக்கப் பயன்படும் – அதை எல்லாம் விட முக்கியமான காரணி, புக்கிகளின் லாபம். எந்த விதமான முடிவு வந்தாலும் தமக்கு லாபம் வரும்படியே புக்கிகள் பெட்களை ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் கட்டும் பெட்டிற்கு, சாதக பாதக விகிதத்தின் அடிப்படையில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

புக்கிகள் போட்டிக்கு முன்பு ஒவ்வொரு நிகழ்வுக்கும், சாதக பாதக விகிதத்தை அறிவிப்பார்கள். தங்களுக்குள் எந்த விதமான பிணக்கும் வந்து விடாமல் இருக்க, ஒருவருக்கு ஒருவர் முரணான விகிதங்களை நியமிக்க மாட்டார்கள். மேலும் தன் லாபத்தை நிர்ணயித்தப் பின்னரே சாதக பாதக விகிதங்கள் நிர்ணயிப்பார்கள். உதாரணத்திற்கு 1200 ரூபாய் புழங்கும் ஒரு பந்தயத்தில், புக்கி 20% லாபம் பெற நினைக்கிறார். ஆதலால் எந்த முடிவு வந்தாலும் தன் கையை விட்டு 1000 ரூபாய்க்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வார். பந்தயம் கட்டுபவர்களில் 65% பேர் இந்தியா ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டியிருக்கலாம். ஆனால் புக்கி அந்த சாதக பாதக விகிதத்தை அப்படியே வெளியே சொல்லாமல், தன் லாப கணக்குப்படி மாற்றி, அதற்கு ஏற்றார்போல நிகழ்வுக்கான பந்தயப் பணத்தை ஏற்றுக் கொள்வார். கீழே இருக்கும் டேபிளைப் பாருங்கள்.

Amount on Table
1200
Margin
20%
Give Away Money
1000


Column1
True Odd
Bookie Odd
Maximum Stake Accepted by Bookie
Win
65%
55%
550
Loss
25%
25%
250
Tie
5%
20%
200
Abandon
5%
20%
200

 
இந்த டேபிளின் படி ஆயிரம் ரூபாய் கையை விட்டு கொடுக்க வேண்டிய பந்தயத்தில், புக்கி 1200 வரை பந்தயப் பணம் வாங்கிக் கொள்வார் - அதிலும் 550 ரூபாய்க்கு மேல், இந்தியா ஜெயிக்கும் என்று யாரும் பந்தயம் கட்ட புக்கி ஒத்துக் கொள்ள மாட்டார், அதுவும் நிச்சயம் இந்தியா ஜெயிக்கும் என்று தெரிந்த ஒரு ஆட்டத்தில். இதனால் அவர் தனக்கு ஏற்பட இருக்கும் இழப்பை குறைத்துக் கொள்வார். மேற்சொன்ன டேபிளின் படி இந்தியா ஜெயிக்கும் அன்று 550 ரூபாய் பெட் கட்டி ஜெயித்தால் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மேலே சொன்னது மிகவும் எளிமையான விளக்கம், இந்த வகைக்கு overround என்று பெயர் சாதக பாதக விகிதங்களை 100% சதவிகிதத்திற்கு மேல் அதிகப்படுத்தி, புக்கிகள் லாபம் பெறும் முறை. Underround என்றும் ஒரு வகை உண்டு. இதைத் தவிர, ஆட்டத்தின் போது சாதக பாதக விகிதம் மாறும், புதிய பெட்கள் ஏற்றுக் கொள்ளப்படும், அதற்கு ஏற்றார் போல லாபக் கணக்கு மாறும். இப்படிப் பல குழப்படிகள் இந்த பெட்டிங்கில் உண்டு. அதையெல்லாம் புக்கிகளுக்கே விட்டு விட்டு ஊழலைக் கணக்கில் கொள்வோம். 

இந்த பெட்டிங் அப்படியே நடந்தால் பிரச்சனையில்லை (பெட்டிங் சட்டரீதியாக ஆக்கப்பட்ட இடங்களில்) – ஆனால் ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் மீது பல கோடிகள் பெட் கட்டப்படும் போது, அந்த நிகழ்வு நிகழ்ந்தே ஆக வேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்து அந்த நிகழ்வை நடத்தும் போது தான் ஊழல் உள்ளே நுழைகிறது. இந்த ஊழல்கள் சூதாட்ட அரங்கிற்கு திரை மறைவில் நடப்பவை – இவற்றுக்கும் மேலே சொன்ன கணக்கு முறைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

No response to “கிரிக்கெட் பெட்டிங் - 2”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman