Adsense

சிதறல்கள் - 14


ஜெயமோஹனின் இந்தக் கட்டுரை சமிப காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகளில் என்னை மிகவும் பாதித்த ஒன்று.

காரணம் ஒன்றே ஒன்று தான். ஜகத்குருவாக பல்வேறு ஸ்மார்த்தர்களால் பூஜிக்கப்படும் மஹா பெரியவாளை அந்தப் பீடத்தில் வைத்து வணங்க முடியாது என்று என் தந்தையிடம் எந்த காரணங்களுக்காக தர்க்கம் செய்து அவரது கோபத்துக்கு ஆளானேனோ, அதே காரணங்களைக் காண்கிறேன்.

அவரது எழுத்துகளில் இருக்கும் மஹா பெரியவாள் பற்றிய குறைகளை, நான் என்னுடைய பதின்பருவத்துக் குரலாகக் காண்கிறேன். அந்தக் குறைகளையும் தாண்டி எப்படி அவரை அணுகுவது என்று ஜெயமோஹன் காட்டியிருப்பதில் ஜெயமொஹன் மற்ற எந்த எழுத்தாளரிடமிருந்தும் வேறுபடுகிறார். ”சாதாரண மொட்டைப் பாட்டி வந்தால் தரிசனம் தராத பெரியவா எதற்காக இந்திரா காந்தியை மட்டும் பார்க்க ஒத்துக்கறார்” என்று என் அப்பாவிடம் நான் கேட்ட கேள்வி இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது.


இத்தனைக்கும், நான் மஹானாக போற்றும் ஒரே துறவி அவர் தான். என்னுடைய பர்ஸில் இருக்கும் ஒரே புகைப்படமும் அவருடையது தான். ஆனால், அவர் முன்னெடுத்துச் சென்ற அந்த ஆசாரங்களும் அவர் அதிமுக்கியம் என்று வலியுருத்திய நேமங்களும் விழுதுகளை ஆணி வேறுடன் ஒன்று சேர்க்கும் முயற்சி என்று சத்தியமாக அந்த வயதில் பிடிபடவில்லை.

பிற்காலத்தில், மதத்தின் பெயரால் சனாதன தர்மத்தின் மீது நடத்தப்படும் தாகுதல்களைப் பார்க்கும் போதும், அதை எதிர்க்கும் ஞானமில்லாத சனாதன தர்மவாதிகளைப் பார்க்கும் போது தான் மஹா பெரியவாள் முன்னிட்ட அம்மஹான்கள் போதித்த பல விஷயங்களின் சாரம் பிடிபடத் துவங்கியது. அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுருத்தியது ஒன்றையே தான். அவர்கள் நாம் விரும்பாவிடிலும், நமது மரபின் சாவியை நம் கையில் திணிக்கவே செய்தார்கள்.

மிக முக்கியமாக, பிராமண குடும்பங்களில் அதுவே நிகழ்கின்றன. அர்த்தம் புரியாவிடிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும், காரணம் தெரியாவிட்டாலும் சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்று தோற்று விக்கப்படும் நிர்பந்தங்கள் இந்த சாவி திணிக்கும் பணியே. பழமையை ஒரு தூணாக தாங்கியிருக்கும் போது, அப்பழமையின் ஆணி வேரான, சம காலத்தில் அதர்மமாகக் கருதப்படும் அந்த காலத்தையை தர்மங்கள் (வர்ணங்கள்) எப்படி புறம் தள்ள முடியும். ஆகவே, ஆணி வேரோடு சேர்த்து அப்பொருந்தா தர்மங்களும் திணிக்கப்படுகின்றன. அவையே மஹா பெரியவாள் போன்ற கர்ம யோகிகளின் செயல்களுக்கான விளக்கமாக அமைய முடியும்.

இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத விஷயங்களாக வர்ணங்களையும், அதன் பாதுகாவலனாக பிராமணர்களை சித்தரிக்கும் போக்கு வெகு காலமாக சமுகத்தில் இருந்து வருகிறது. பிராமணர்கள் மனு ஸ்ம்ருதியை ஆதாரமாகக் கொண்டு இப்போது வாழ்வதில்லை. இன்றைய பிராமணர்கள், பெரும்பாலும் சவுகரியத்திற்கான வாழ்கையையும், விட முடியாத பந்தமாக சில சம்பிரதாயங்களையும் கைக் கொண்டுள்ளனர். அவ்வளவே.

அப்படி நசிந்த தர்மத்தைக் காக்கவும், மீதமிருக்கும் அடையாளத்தைக் காப்பாற்றும் கர்மயோகிகளாகத் தான் நாம் மஹா பெரியவாள் முதலியோரை அணுக வேண்டும்.உண்மையில் வயது ஆக ஆகத்தான் அந்த மஹான் எனக்குப் பிடிபட்டார். புரிதல் தோன்றும் போது தர்க்கங்களுக்கான காரணங்கள் மறைந்து விடுதல் இயல்பு தானே. கேள்விகளோடு கழியாத இளமையும், கேள்விகளோடு கழியும் முதுமையும் என்னளவில் மிக மிக துரதிருஷ்டவசமானது.

ஜெயமோஹனின் கட்டுரை இந்த வெளியை விளக்கும் அற்புதமான பணியைச் செய்திருக்கிறது. அவரது கட்டுரையை மஹா பெரியவாள் பற்றிய ஆராதனை என்று தவறாக கருதிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை இருப்பதால், மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஜெயமோஹனின் கட்டுரை மஹா பெரியவாளை அணுகுவதற்கு ஒரு சாதனம் - அவ்வளவே. அதிலிருந்து முற்றிலுமாக வேறுபடுவது உங்கள் உரிமை. 

அப்படியான மிகப்பழமையான வேர்பற்று இருக்கும் வரையில் தான் நமது புராதன செல்வங்கள் நமது அடுத்த சந்ததிகளுக்குக் கடத்திச் செல்லப்படும். தீண்டாமை குறித்த, வர்ண பேதங்கள் குறித்த சித்தாந்தங்கள் தாண்டி பிரமணியம் நிறைய நவினப்பட்டு விட்டது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக, இன்றும் அவை முன்னிருத்தப்படுகின்றன. ஒருவகையில் பிராமணியத்தின் இந்த மாற்றம் காலத்துக் கேற்றதும் கூட. அதே சமயம், சஹ மனிதனுக்குத் தீங்கு தராத புராதன விஷயங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் முன்னெடுத்துச் செல்லப் படவேண்டியது மிக மிக அவசியம், அவை எவ்வளவு அர்த்தமற்றவைகளாகத் தோன்றினாலும். யார் கண்டது, உங்களின் அடுத்த சந்ததி அவற்றிற்கான காரணத்தைக் கண்டடைவார்கள். அவர்கள் கண்டடைவதற்காகவேணும் நீங்கள் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டாமா ?

2 Responses to “சிதறல்கள் - 14”

Sridevi said...

இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாத விஷயங்களாக வர்ணங்களையும், அதன் பாதுகாவலனாக பிராமணர்களை சித்தரிக்கும் போக்கு வெகு காலமாக சமுகத்தில் இருந்து வருகிறது. பிராமணர்கள் மனு ஸ்ம்ருதியை ஆதாரமாகக் கொண்டு இப்போது வாழ்வதில்லை. இன்றைய பிராமணர்கள், பெரும்பாலும் சவுகரியத்திற்கான வாழ்கையையும், விட முடியாத பந்தமாக சில சம்பிரதாயங்களையும் கைக் கொண்டுள்ளனர். அவ்வளவே - This is very true ! Excellent Writing !

Bindhu!! said...

This post has trigerred life to some of the questions that were in the back of mind.

Still finding answers...!!!

Very intriguing post - yours and the link!

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman