Adsense

கிரிக்கெட் பெட்டிங் - 1


ஆழம் இதழில் வெளியான கட்டுரை - இந்த கட்டுரைக்கு 2 பகுதிகள் உள்ளன. முதல் பகுதி இந்தப் பதிவில். இந்தப் பகுதி தான் ஆழம் இதழில் வெளியானது.

_oOo_


கிரிக்கெட்டில் ஊழல் என்பது இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே நடக்கும் ஒரு கூத்து. ஆனால், சிறு சிறு சம்பவங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துக் கொண்டிருந்த ஊழல், என்பது இன்று இருக்கும் நிலைக்கு பெருகியதற்குக் காரணம் தொலைக்காட்சிகளின் வரவு தான். சென்ற நூற்றாண்டின் கடைசி இரண்டு பத்தாண்டுகளில் தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் பல மடங்கு அதிகரிக்கத்துவங்கினர் - இந்தியாவில் தொலைகாட்சி இல்லாத வீடுகள் இல்லை என்னும் அளவிற்கு தொலைக்காட்சி ஒரு சாமான்ய பண்டமாக மாறிக் கொண்டிருந்த காலம் அது. கிரிக்கெட்டும் விளையாட்டு என்ற கோணத்திலிருந்து மாறி வியாபாரமாக பார்க்கப்பட்ட சூழல். இந்த காலகட்டத்தில் தான் குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த பல புக்கிகள், கிரிக்கெட்டின் பக்கம் தலை சாய்க்கத் துவங்கினர். பம்பாய் பெட்டிங்கின் தலைமையகமாக மாறியது.

திரை மறைவில் நடந்துக் கொண்டிருந்த மேட்ச் பிக்ஸிங் 1990களில் மலியத்துவங்கியது. அஜய் சர்மா தான் இந்தியாவின் மேட்ச் பிக்ஸிங் கதைகளுக்கு ஆரம்பகால கதாநாயகன். மனோஜ் பிரபாகர், அரவிந்தா டி சில்வா, ரனதுங்கே, மாட்டின் க்ரோ, அசாருதீன், ஜடேஜா போன்றோரை புக்கிகளுக்கு அறிமுகப்படுத்தியவர். பின்னர், இரண்டாம் அத்தியாத்திலிருந்து மனோஜ் பிரபாகர் இந்த கதைகளின் நாயகன் அந்தஸ்தைப் பெறுகிறார். இவரே, சலிம் மாலிக், மார்க் வா, அலெக் ஸ்டூவார்ட் போன்ற பலரை புக்கிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அசார், ஹேன்ஸி க்ரோனியேவை அறிமுகப்படுத்தினார் .

ஆரம்பத்தில் ஐ சி சி, இந்தப் பிரச்சனையை ஒரு தனி மனித ஒழுக்கம் சார்ந்த பிரச்சனையாகத் தான் பார்த்தது. சரியாக 2000 மற்றும் 2001 ஆண்டு தான் மேட்ச் பிக்ஸிங் விவகாரம் பெரிதாக வெடிக்கத் துவங்கியது. பாகிஸ்தான், நீதிபதி குய்யாம் தலைமையில் விசாரணை நடத்தி, சலிம் மாலிக்கிற்கு ஆயுள் காலத் தடை விதித்தது – பின்னர் இந்தியாவில் சிபிஐ விசாரணை நடத்தி அசாருதீன் மற்றும் ஜடேஜாவுக்கு தடை விதித்தது. தென்னாப்பிரிக்காவின் ஹேன்ஸி குரோனியே குற்றத்தை ஒப்புக் கொண்டார். கிங் கமிஷன், இவர் குற்றத்தை ஒத்துக் கொண்டவுடன், அவ்வளவு தான் என்று கேஸை மூடிவிட்டது. யாருமே, பிரச்சனையின் அடி ஆழம் வரை செல்லவில்லை.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு தான், ஐ சி சி இந்த பிரச்சனையின் முக்கியமான அம்சங்களை ஆராய்ந்து முன் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்தது. அதன் பயனாக Anti Corruption and Security Unit என்னும் அமைப்பை ஐசிசி அமைத்தது. இந்த அமைப்பின் பணி, கிரிக்கெட்டில் ஊழல் தோன்றாமல் தடுப்பதும், வீரர்களுக்கு ஊழல் குறித்த சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆலோசனை வழங்குவதும், ஊழலைத் தடுக்கும் விதிகளை இயற்றுவதும், ஊழல் விவகாரங்களுக்குத் தண்டனை வழங்குதலுமே ஆகும். தண்டனை என்றால், சட்ட ரீதியான தண்டனை வழங்கும் அதிகாரம் இந்த குழுவுக்கு கிடையாது. அதிக பட்சம் ஆதாரங்களை சேகரிக்க முடியும். அந்த ஆதாரங்களைக் கொண்டே, இடைக்கால நீக்கம் மற்றும் விளையாடத் தடை போன்ற உத்தரவுகளை ஐ சி சி பிறப்பிக்கிறது. சட்ட ரீதியான தண்டனையை அந்தந்த தேசத்தின் சட்ட திட்டங்களிடமும், நீதிமன்றத்திடமும் விட்டு விட்டது. தெஹல்கா மற்றும் நியூஸ் ஆஃப் த வேர்ல்ட், நடத்தியது போல திரைமறைவு புலணாய்வில் ஈடுபடும் எண்ணம் இருகிறது என்று ஐசிசி ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் வெடித்த போது சொன்னது. இன்று வரை மேலே செயல்படவில்லை.

உண்மையில், ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழல் விவகாரம் வெளிச்சத்திற்கு வரக் காரணம் ஐ சி சி அல்ல. நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் என்னும் பிரிட்டன் பத்திரிக்கை. (இந்த பத்திரிக்கை தான் சமிபத்தில் மூடப்பட்டது). ஐ சி சி, கிரிக்கெட் விளையாடும் தேசங்களிலிருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து ஊழலை தடுக்கும் செயல்களில் ஈடுபடுகிறதே தவிர, குற்றத்தை புலணாய்வு செய்து வெளிக்கொண்டு வரும் செயல்களில் ஈடுபடுவதில்லை. அந்த அளவில் பார்க்கும் போது, ஐ சி சி செய்வது மிதமான ஊழல் கட்டுப்பாடு பணிகள் என்றே சொல்லலாம். ஐ சி சியால் அதன் வசம் இருக்கும் வாரியங்களை இன்னும் அதிகமாகக் கட்டுப்படுத்த முடியும். அந்த செயல்களில் மெதுவாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

சமிபத்திய ஊழல் விவகாரம் நடப்பதற்கு முன்னர் மேட்ச் பிக்ஸிங் என்ற சொல்லே வழக்கத்தில் இருந்தது. கிரிக்கெட்டைப் பொருத்தவரை, இதுவரை மேட்ச் பிக்ஸிங் என்பதற்கு, சட்ட ரீதியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. மேட்ச் பிக்ஸிங்கிற்கான விளக்கம் முதலில் தோன்றியது, 2000 ஆம் ஆண்டு சி பி ஐ சமர்ப்பித்த ஆய்வறிக்கையிலேயே. அந்த விளக்கத்தின் படி, லஞ்சம் வாங்கிக் கொண்டு சரியாக ஆடாமல் இருப்பது, தான் விளையாடும் ஆட்டத்தில் பெட்டிங்கில் ஈடுபடுவது, பெட்டிங்கில் ஈடுபடுபவர்களுக்கு ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் கொடுப்பது, பிட்ச் தயாரிப்பவர்களுக்குப் பணம் கொடுத்து ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வகையில் பிட்ச் தயாரிக்கச் சொல்வது, புக்கிகளோடு தொடர்பு கொள்வது அனைத்துமே மேட்ச் பிக்ஸிங் என்ற அம்சத்தில் அடங்கும். ஆனால், ஆட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே ஏற்கனவே தீர்மாணிக்கப்பட்டிருப்பதால், இதை ஸ்பாட் பிக்ஸிங் என்று குறிப்பிடுகிறோம்.

சரி, சமிபத்தில் முடிவு அறிவிக்கப்பட்ட ஊழல் விவகாரம் எப்படி வெளியில் வந்ததெனப் பார்ப்போம்.  2010ஆம் வருடம், லார்ட்ஸில் நடைப்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தானிய வீரர்கள், ஆமிர் மற்று ஆசிஃப் இருவரும், ஏற்கனவே தீர்மாணிக்கப்பட்ட நேரங்களில், மூன்று நோ பால்களைப் போட்டார்கள். இதை ஒருங்கிணைத்தவர் இங்கிலாந்து குடியுரிமைப் பெற்ற பாகிஸ்தானியரான மசார் மஜீத். இவர் பிரிட்டனில் வெளியாகும் நியூஸ் ஆஃப் த வேர்ல்ட் என்ற பத்திரிக்கையின் செய்தியாளருடன், இந்த ஏற்பாட்டைப் பற்றி பேசுவதை ரகசியமாக படம் பிடித்து அந்த பத்திரிக்கை வெளியிட்டது. அதன் பின்னர், இங்கிலாந்தில் இது கிரிமினல் குற்றமாக பதிவு செய்யப்பட்டது இதில் ஈடுபட்ட பாகிஸ்தானிய வீரர்கள் மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

சட்ட விரோதமாக சூதாட்டத்தில் புரட்டப்படும் பணம், தீவிரவாதம், போதை மருந்து கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்காக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இதுவே நிழலுலக தாதாக்கள் கிரிக்கெட்டில் தலையிடுவதற்கும் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அவர்கள் தலையீடு எந்த அளவிற்கு இருந்திருக்கிறதென்றால், சமிபத்திய ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற ஆமிர், குற்றத்தை ஒப்புக்கொண்டு சாட்சியாக மாறக்கூடாது என்று அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்களில் இளையவரான ஆமிர், தான் இந்த குற்றத்தில் பங்கெடுக்காவிடில், தந்து கரியர் அழிக்கப்படும் என்று மிரட்டப்பட்டதாக கூறினார். இதை சுட்டிக் காட்டிய, இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி குக் இவ்வாறு கூறினார்.
”The reality of those threats and the strength of the underworld influences who control unlawful betting abroad is shown by the supporting evidence in the bundle of documents, including materials from the Anti Corruption and Security Unit of the ICC”
இந்தியாவில், சட்டரீதியாக Prevention of Corruption Act மற்றும் Public Gambling Act போன்றவை இருந்தாலும், அவற்றில் சில ஓட்டைகள் இருக்கின்றன. இதன் காரணாகவே, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று 2000 ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு சமர்பிக்கப்பட்ட சிபிஐயின் ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.
This report was discussed in detail with the Solicitor General of India, Shri Harish Salve, who has scanned the evidence and is in broad agreement that no criminal charges under cheating or under the Gambling Act can be filed against anyone because of the nebulous position of law in this regard, as well as the improbability of investigating agency being able to obtain sufficient legal evidence.
இந்த நிலை இன்றும் மாறவில்லை. கிரிக்கெட் தன் அழகியலைத் தொலைத்து, மிகப்பெரிய நிழல் வணிகத்தின் மையமாக மாறிவிட்டது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பு ஐசிசியிடமே இருக்கிறது.

No response to “கிரிக்கெட் பெட்டிங் - 1”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman