Adsense

விதுர நீதி - 2


விதுர நீதி – முன் வரலாறு
பாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனத்திலும் ஓராண்டு ஒருவரும் அறியாத முறையில் விராட நகரத்திலும் “அஞாதவாஸம்” செய்து அவர்களுடைய பிரதிக்ஞையை சரி வர நிறைவேற்றி விட்டனர். பிறகு பாண்டவர்களுக்காக துருபதன் தம் புரோஹிதரை திருதராஷ்டிரடிடம் அனுப்பி பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தை விரைவில் கொடுத்து விடும்படி கேட்டுக் கொண்டான். அதற்கு திருதராஷ்டிரன் நேர் முறையில் எவ்வித பதையும் உரைக்காமல், பாண்டவர்களுடைய பராக்கிரமத்தையும், ஸர்வச்க்தனான ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களுக்குச் செய்துவரும் உதவிகளாஇயும் கண்டு அஞ்சி எப்படியாவது போர் மூளாமல் இருக்க வேண்டுமென்பதற்காக ஸஞ்ஜயனை தர்மபுத்திரனிடம் தூதனாக அனுப்பினான். ஸஞ்ஜயனும் தருமரிடம் பல விஷயங்களைப் பேசிவிட்டு முடிவில் அவருடைய விருப்பத்தையும் அறிந்துக் கொண்டு ஹஸ்தினாபுரத்திற்கு வந்து திருதராஷ்டிரரிடம் அடியிற்கண்டவாறு சுருக்கமாகக் கூறலானார்.
“அரசே ! தரும புத்திரன் அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதையே விரும்புகிறான். எவ்விதக் குறையுமின்றி தர்மத்தை அனுஷ்டித்தே ராஜ்யத்தைக் கேட்கின்றான். அவன் மஹா புத்திமான். பல விஷயங்களைக் கற்றவன். ஒழுக்கமுள்ளவன். அப்படிப்பட்டவனை விரோதித்துக் கொண்டால் கௌரவர்கள் நிச்சயமாக அழிவார்கள். பரம் ஆப்தர்களான, விதுரன் முதலியோர்களை விரட்டி துஷ்டர்களான கர்ணன் முதலியவர்களுடன் நேசம் கொண்டிருப்பதால் தாங்கள் இத்தரணியை ஆளத் தகுதியற்றவர்கள் என்றே கருதுகிறேன். வெகு தூரம் ரதத்தில் ஏறி வந்ததால் நான் மிகவும் களைப்புற்று இருக்கிறேன். நாளைய தினம் காலையில் துர்யோதனன், கர்ணன் முதலிய தங்கள் சுற்றத்தார் அனைவரும் கேட்கும்படி ஸபையில் அஜாதசத்ருவின் (தருமரின்) வார்த்தைகளை விரிவாக எடுத்துரைக்கிறேன்” எனக்கூறி விடைபெற்றுச் சென்று விட்டார்.
இதைக் கேட்டதும் திருதராஷ்ரிரருடைய மனம் பதைத்தது. பற்பல எண்ணங்கள் தோன்றின. இரவில் வெகு நேரம் வரை தூக்கம் வரவில்லை. என்ன செய்வது என்ற்றியாமல் விதுரரை அழைத்து வரச் சொன்னார். அவரும் விரைந்தோடி வந்தார், அண்ணனுக்கு ஆறுதல் கூற. அவரைக் கண்டதும், திருதராஷ்டிரர், “விதுரா ! ஸஞ்ஜயன் தருமனிடமிருந்து திரும்பி வந்ததும் அவன் என்ன உரைத்தால் என்பதை விரிவாகக் கூறாமல் என்னைத் திட்டிவிட்டுச் சென்றிருக்கிறான். தருமன் என்ன சொன்னானோ ! தெரியவில்லை. என் மனம் துடிக்கிறது. உடல் நடுங்குகிறது. இவ்வளவு நேரம் ஆகியும் நித்திரை வரவில்லை. இச்சமயத்தில் எனக்கு ஆறுதலையளிக்கும் அரிய மொழிகளைச் சொல். நம் வம்சத்திலேயே நீதான் சிறந்த அறிவாளி” என கேட்டுக் கொண்டார்.

தூக்கம் வராததற்குக் காரணங்கள்

ஸ்லோகம் (1-3) விதுரர்: மிக்க பலமுள்ள எதிரியால், தாக்கப்பட்டவனுக்கும், சொத்தைப் பறிகொடுத்தவனுக்கும், காமவெறி கொண்டவனுக்கும், திருடனுக்கும் தூக்கம் வராது. முதல் மூன்று காரணங்களும் தங்களிடமிருக்க நியாயமில்லை. ஒருக்கால் பிறருடைய பொருளில் பேராசைக் கொண்டு மனம் வருந்துகிறீர்களா ? அல்லது கூடிய சீக்கிரம் ராஜ்யம் நம்மை விட்டுப் போய் விடுமே என்று நடுங்குகிறீர்களா ? துர்யோதனன், கர்ணன், சகுனி, துச்சாஸனன் முதலிய அறிவீனர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைத்த தாங்கள் எப்படி சுகமாக வாழ முடியும் ? அறிஞர்களிடமல்லவா அரசாங்கத்தை ஒப்படைக்க வேண்டும்.

அறிஞர்களின் லக்ஷணம்
ஸ்லோகம் (4-13) சாஸ்திரங்களைக் கற்று ஆதமஸ்வரூபத்தையும் அனாத்மஸ்ரூபத்தையும் நன்கு உணர்ந்திருப்பவனே அறிஞன் எனப்படுவான். அல்லது அவன் தனக்குள்ள அறிவும் ஆற்றலும் எவ்வளவு  என்பதை நன்கு உணர்ந்திருப்பான். தத்தம் சக்திக்கேற்றவாறே, காரியங்களை ஆரம்பிப்பான். முன் யோசனையின்றி ஆரம்பித்து விட்டு பாதியில் எக்காரியத்தையும் கைவிடான். விஷயங்களில் அதிகப்பற்று வைக்க மாட்டான். மிகப் பொறுமையுடனிருப்பான். தர்மம் நித்தியம், அதற்கு விரோதமாக எந்நாளும் நடக்கலாகாது என்ற உறுதியுடன் வாழ்க்கையை நடத்தி வருவான். சாஸ்திரங்கள் அனுமதித்த கரியங்களயே செய்வான். அவற்றால் தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்யான். பரலோகம், தெய்வம் இவற்றில் நம்பிக்கையுள்ளவனாக இருப்பான். அவன் செய்யும் காரியங்களையோ, ஆலோசனைகளையோ அவை முடிவடைவதற்கு முன் யாரும் அறிய முடியாது. சக்திக்கேற்றவாறு காரியங்களைச் செய்ய விரும்புவான். அவன் விரும்பியதைச் செய்தே தீருவான். எதையும் எக்காரணம் கொண்டும் அவமதிக்க மாட்டான்.
அவன், அறிய வேண்டியவைகளை விரைவில் அறிவான். இருந்தலும் பல அறிஞர்களிடமிருந்தும் பல தடவை அறிய வேண்டிய விஷயங்களைக் கேட்பான்.
பிறர் கேட்காதவரை தானாக அவர்களுக்கு எதையும் உரைக்க மாட்டான். அடைய முடியாததை விரும்ப மாட்டான். அழிந்துப் போனதை நினைத்து வருந்த மாட்டான். துன்பங்களில் மதி மயங்கி நிற்க மட்டான். உபயோகமற்ற காரியங்களை ஒரு பொழுதும் செய்யத் துணியமாட்டான். தன்னைப் பிறர் போற்றினால் களிப்படைய மாட்டான். தூற்றினால், வெறுப்பையும் அடைய மாட்டான். கங்கையின் மடுவில் உள்ள நீர் போல களங்கமற்றிருப்பான். நியாயமான விஷயத்தை தங்கு தடையின்றி எடுத்துரைக்கு சக்தி வாய்ந்தவனாயும், உலக நிகழ்ச்சிகளை நன்கு உணர்ந்தவனாயும், ஸமயோஜித புத்தியுள்ளவனாயும், பேசுந்தருணத்தில் அதற்குச் சான்றாக நூல்களை எடுத்துரைக்கும் திறமை வாய்ந்தவனாயுமிருப்பான். புத்திக்கேற்ற படிப்பையும், சாஸ்திரங்களையனுசரிக்கும் புத்தியையும் அவனிடம் காணலாம். பெரியோர்களிட்ம் மதிப்பு வைத்து அவர்களிட்ட கட்டளையைச் செய்வான் (இவ்விதம் இருப்பவர்களே அறிஞர்கள் (பண்டிதர்கள்) என்றும், இவர்களுடைய ஆட்சியிலேயே குடிகளுக்கு நன்மைகள் ஏற்படும் என்றும் விதுரர் கூறுகிறார்)

4 Responses to “விதுர நீதி - 2”

மிகவும் சிறப்பான பணியை செய்து வருகிறீர்கள்... நன்றி

“ஹிதபாஷினி” பழைய இதழ்களின் தொகுப்பு இப்போது கிடைக்கிறதா ? அந்த நூலாசியரின் புத்தகங்கள் அச்சில் உள்ள்தா ?

ஹிதபாஷினி இப்போது கிடைப்பதில்லை. ஹிதபாஷினி பதிப்புகளில் சில புத்தகங்கள் மட்டுமே எங்கள் குடும்பத்தில் இருக்கின்றன. அவற்றை முக்கியமான நிகழ்ச்சிகளின் போது பதிப்பித்து விநியோகிக்கிறோம். சில புத்தகங்கள் தெரிந்தவர்கள் மூலம் எங்கள் குடுப்பத்தை மீண்டும் வந்தடைகின்றன.

அவற்றை முக்கியமான நிகழ்ச்சிகளின் போது பதிப்பித்து விநியோகிக்கிறோம்"

அடுத்த முறை வினியோகிக்கும்போது எனக்கும் தகவல் தரவும்.. ஹி ஹி

Sriram said...

when you will print in next edition

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman