Adsense

விதுர நீதி - 1


1967 ஆம் வெளிவந்த ”விதுர நீதி - யக்ஷப்பிரச்னம் - பாரத சாவித்ரி” என்ற புத்தகத்தின் உள்ளடக்கத்தை தந்துள்ளேன். இதைத் தொடராக எழுதுவதன் மூலம் முழு புத்தகத்தையும் இணையத்தில் ஏற்றி விடலாம என்பது திட்டம். மஹாபாரதத்திலிருந்து ஸ்லோகங்களுக்கு தமிழ் உரை எழுதியவர் என் அப்பா வழி தாத்தா.

ஆசிரியர் பற்றி:
பிரஹமஸ்ரீ ஆர். முத்துகிருஷண சாஸ்திரி (1909 – 2008) அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார். தர்க்கம், மீமாம்ஸ சாஸ்திரம், ப்ரஸ்தானத்ரய பாஷயம், ஆகியவற்றில் சிறந்த தேர்ச்சி உடையவர். ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் அவர்களின் அறிவுரையின் படி, உத்யோகத்தை விட்டு விட்டு, ஹிந்து மதத்தின் இதிஹாஸ புராணங்களான ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் மற்றும் உபநிஷத்துக்களை தமிழ் நாட்டில் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரையிலும், வட இந்தியாவில் பெரு நகரங்களிலும் உபன்யாஸம் செய்து வந்தார். “ப்ரவசன ப்ரவீன”, “ஸ்ரோபன்யாஸ சதுர”, “உபய மீமாம்ஸ கேஸரி” “வேத வேதாந்த வித்வரத்னம்” “கீதாம்ருத வர்ஷீ” ஆகியவை அவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் சில. இதைத் தவிர மத்திய சர்க்காரால் சிறந்த சம்ஸ்கிருத மேதைகளுக்கு வழங்கப்படும் வருடாந்திர கௌரவம் 1982 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கபட்டது. ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஸ்ரீரங்கராமாநுஜ மஹாதேசிகன் ஸ்வாமிகளால் “ஸ்ருதி மீமாம்ஸ வல்லப” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
1947 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூரைத் தலைமையிடமாகக் கொண்டு, கடினமான, வேத வேதாந்த விஷயங்களை எளிய தமிழில், அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் வெளிக் கொண்டு வரும் “ஹிதபாஷினி” என்ற ஆன்மிக மாத இதழ் நடத்தி வந்தார். பல்வேறு ஆராய்சிகளையும் இதன் வாயிலாக வெளியிட்டு ஆஸ்திகர்களுக்குச் சிறந்த சேவையை அளித்து வந்தார். பின்னர், “ஹிதபாஷினி வெளியீடுகள்” என்ற பெயரில் பல சம்ஸ்கிருத, தமிழ் விரிவுரை நூல்கள வெளிட்டார். அவையாவன.
1) விதர நீதி – யக்ஷப்பிரச்னம் – பாரத ஸாவித்ரி 2) கேனோபநிஷத் 3) சதத்லோகீ 4) சிவானந்த லஹரி 5) ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி ஸ்தோத்ரம் 6) ஸ்துதி குஸுமமாலா 7)சாருசர்யா 8) அக்ஷர சகுணம் 11) ஸ்ரீ ருத்ரம் சமகம் ஏகாதசிநி ப்ரயோகம்.
நீங்கள் படித்துக் கொண்டிருப்பது 1967இல் வெளியான விதுர நீதி – யக்ஷப்பிரச்னம் – பாரத ஸாவித்ரி என்ற புத்தகம்.


விதுரநீதி – முன்னுரை
விதுரர் என்பவர் தர்ம தேவதையின் அவதாரம். அவர் திருதராஷ்ட்ரருக்கு எடுத்துரைத்தப் பல நீதிகள் இதில் அடங்கியுள்ளன. இவையெல்லாம், தர்மம், அர்த்தம், காமம் என்ற முதல் மூன்று புருஷார்த்தங்களையே பெரும்பாலும் பின்பற்றியவை. விதுரர், அவருக்கு முற்காலத்தில் உள்ள பல நீதி நூல்களின் ஸாராம்ஸங்களையெல்லாம் திரட்டி அவற்றை எல்லாம் ஒழுங்குப்படுத்திப் பல தலைப்புகளின் கீழ் மிதக் தெளிவாக இதில் விளக்கியுள்ளார். இவையெல்லாம் திருதராஷ்டிரரையும், துரியோதனன் முதலியவர்களையும் குறித்துக் கூறப்பட்டபோதிலும் உலக மக்கள் அனைவருக்கும் இவை பயன்படக்கூடியவைகளாக அமைந்திருக்கின்றன. விதுரருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதாவது ஒருவிதத்தில் திருதிராஷ்டிரருக்கு சம்பந்தமிருப்பினும் நேரிடையாக அவரைக் குறிப்பிடாமல் உரைக்கப்பட்டிருப்பது இதற்கு ஒரு தனிச் சிறப்பாகும். பெரியோர்களின் மனதிற்குப் பிடிக்காத விஷயங்களை எடுத்துரைக்க வேண்டுமானால் இந்த முறை தான் கையாளப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றார் போலும். இதில் அடங்கியுள்ள உயர்ந்த கருத்திக்களை, ஸ்த்ரீகள், புருஷர்கள், முக்கியமாக அரசியல்வாதிகள், அமைச்சர்கள், மற்றுமுள்ள நிர்வாகிகள் அனைவரும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் சரிவர அறிந்துக் கொண்டு அவற்றை வாழ்க்கையில் பின்பற்றி வந்தால், குடும்பத்தையோ அல்லது அரசாங்கத்தையோ மிகத் திறமையாக நடத்தி வரலாம் என்பதில் ஐயமில்லை.
இந்தப் பிரகரணத்தில் உள்ள எல்லா ஸ்லோகங்களையும் இங்கு பிரசுரம் செய்யவில்லையனாலும் முக்கியமாகவுள்ள ஸ்லோகம் எதையும் விட்டுவிடவில்லை என்றுக் கூறலாம்.

No response to “விதுர நீதி - 1”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman