Adsense

சிதறல்கள் -13


பதினைந்தாயிரத்தில் ஒரு வீடு கட்டி குடி போகலாமா ? கிண்டலாக சிரிக்காதீர்கள். நடைமுறையில் வருவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. 300 டாலர் வீடு என்ர ஒரு கனவை இந்தியாவில் பிறந்து பின் Tuck school of businessஇல் மேலாண்மைத் துறை பேராசிரியராக இருக்கும் விஜய் கோவிந்தராஜன். ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஒரு கனவாக அவர் முன் வைத்த இந்த திட்டம் பின்னர் படிப்படியாக நனவாகும் முயற்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது.

முதலில் ஒரு போட்டி அறிவித்து 15000 ரூபாய்க்குள் கட்டப்படும் வீட்டின் வடிவத்தை பலரையும் முன்மொழியச் செய்தனர். பின்னர் அதிலிருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து உள்ளர்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் களப் பணியில் ஈடுபடுவார்கள். இந்தியாவில், இக்களப்பணிக்கு முன்னோட்டமாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் திரட்டிய தகவல்கள் இந்த சுட்டியில் இருக்கின்றது. சமயம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். அதில் குடும்பம் முழுவதும் இரவானால் மது குடிப்பது சாதாரண விஷயம் என்று தெரிய வந்திருப்பது, மிகச் சாதாரண தகவலே. அதாவது, அதிகப் படிப்பறிவு இல்லாத, கழிப்பிட வசதி கூட இல்லாத, மிகக் குறைந்த குடும்ப வருமானமே கொண்ட குடும்பங்களின் வாழ்விடத் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்ற கேள்விக்கு பதிலாகத் தோன்றிய சிந்தனையைத் தான் விஜய் முன் வைத்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர், சி கே பிரஹலாத் முன்வைத்த, பொருளாதார தட்டில் கீழ் மட்டத்தில் இருக்கும் சமுகத்திற்கான தீர்வின் நீட்சியாகத் தான் நான் இந்த 300 டாலர் வீடு கனவைப் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த வரை எதிர்கால சந்தை என்பது இந்த  சமுகத்திற்கான தீர்வை உருவாக்குவதில் தான் இருக்கும். வீடு என்றில்லை, இந்த தட்டு மக்களுக்குத் தேவையான, உணவு, உடை மற்றும் அடிப்படை வசதிகளுள் ஒன்றாக மாறி வரும் தகவல் தொடர்புத் தேவைகள்,  விலை குறைந்த அதே சமயம் தரமான தீர்வுகளால் பூர்த்தி செய்யப்பட வேண்டியதற்கான சூழல் வெகு வேகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தட்டு மக்களுக்கான சேவை மற்றும் பண்டங்களை தயாரிப்பதற்கான மிகச் சிறந்த சூழல் இந்தியாவில் இருக்கிறது.

சமயம் கிடைக்கும் போது, 300 டாலர் வீடு திட்டத்தைப் பாருங்கள்.சரி, மின்சாரமே இல்லாமல் வெளிச்சம் தயாரிக்கும் முறையைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு. இந்த வீடியோவைப் பாருங்கள். இந்தத் தீர்வு, 300 டாலர் வீட்டிற்குத் தேவையான வெளிச்ச தேவைகளைத் தீர்க்கும் சஞ்சிவி.தொடர்புடைய வாசிப்பு:- சி கே பிரஹலாத் இறந்த போது அவருக்கு அஞ்சலியாக நான் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை.

-oOo-

சமிபத்தில் நான் பார்த்ததில் என்னை மிகவும் கவர்ந்த வலைதளம் ஒன்று இருக்கிறது. வெறும் 5 டாலருக்கு ஏதேனும் ஒரு சேவையை வழங்குவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த வலைத் தளத்தைப் பாருங்கள். ஐந்து டாலருக்கு கவிதை எழுதித் தருவதற்கு ஒருவர் தயார் (தமிழ் கூறும் நல்லுலகம் உஷார்). ஆனால், இந்த சேவைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, ஒருவர் ஐந்து டாலர் கொடுத்தால் உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாராம் (250 ரூபாய் செலவில், வெள்ளைக்காரன் பிரச்சாரம் செய்தால் மக்கள் வேண்டாம் என்று சொல்வார்களா என்ன ?) இன்னொருவர், ஐந்து டாலருக்கு கணக்கு வீட்டுப்பாடம் செய்து தருவாரம். என்னால் ஐந்து டாலருக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்துப் பார்த்தேன் - பரவாயில்லை மூன்று நான்கு விஷயங்கள் தேருகின்றன. என்ன என்று கேட்கிறீர்களா ? ஐந்து டாலர் தந்தால் சொல்கிறேன் :-)

No response to “சிதறல்கள் -13”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman