Adsense

சிதறல்கள் - 9


பைத்தியக்காரத்தனமான மாதமிது. வீடு மாற்றி, பால்கார்டு முதல் ரேஷன் கார்டு வரை மாற்றுவதற்குள், தலையில் பாக்கி இருக்கும் சொச்ச முடியும் கொட்டிவிடும் போலிருக்கிறது. இன்னும் பாதி வேலை முடியவில்லை. இண்டர்நெட் கனெக்ஷன் மட்டும் இன்று வந்து விட்டது.இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் ஒரு சிறிய பத்தி எழுத முக்கியமான காரணம் - கபில்சிபல். இணையத்தைக் கண்காணிக்க மனிதர்களை பயன்படுத்தும் படி கேட்டுக் கொண்டதிலிருந்து, இணையத் தகவல்களை நீக்கும் படி பன்னாட்டு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது வரை அவர் செய்த எல்லாவற்றையும் வர்ணிக்கத் தேவை ஒரே வார்த்தை - கோமாளித்தனம். உண்மையிலேயே அவர் சொன்னபடி பிறர் மனதைப் புண்படுத்தும் வகையிலான, மதக்கலவரங்களைத் தூண்டும் படியான செய்திகளை மட்டும் தான் அரசாங்கம் நீக்கச் சொல்கிறது என்பதை நம்புவது கஷ்டமாக இருக்கிறது. வேண்டுமானால், கூகிள் வெளியிட்டுள்ள  transparancy reportஐ நீங்கள் எடுத்துப் பாருங்கள். அதில் அரசாங்கத்தை விமர்சித்து வந்த கருத்துகளை நீக்கச் சொல்லி கூகிளுக்கு வந்த கோரிக்கைகளை இந்த டேபிள் காட்டுகிறது. அதில் அதிகமாக வந்திருப்பவை இந்தியாவிலிருந்து தான்.


மேலே காட்டப்பட்ட எண்ணிக்கை, வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியா அரசுக்கு எதிரான கருத்துகள் வெளிவருவதை விரும்பவில்லை என்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றது. சீனாவின் தகவல்களை கூகிள் வெளியிடவில்லை. அப்படிப்பட்டத் தகவல்களை பொதுவில் வைக்க சீன அரசு அனுமதிக்கவில்லை. நாம் இன்னும் எட்ட வேண்டியது அந்த நிலையைத் தான்.

இந்த அரசாங்கத்துக்கு ஊழலைக் கட்டுப்படுத்தத் தெரியாது, விலைவாசியைக் குறைக்கத் தெரியாது, வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் அமுல்படுத்தத் தெரியது. முதலீடு செய்வதற்கு ஏதுவான சூழ்நிலை இந்தியாவில் இல்லை என்று மைக்ரோசாஃப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சொல்லத்தக்க வகையில் தான் இந்த அரசாங்கம் இந்தியாவை வழிநடத்துகிறது. இப்படிப்பட்ட நிலையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துகள் எப்படி வராமல் இருக்கக்கூடும் ? அப்படி வரும் கருத்துக்கள் வெளிவருவதை தடை செய்வது ஃபாசிச அரசாங்கமாகவே இருக்க முடியுமேத் தவிர, ஜனநாயக அரசாக எப்படி இருக்க முடியும் ?


இப்படி விமர்சிப்பவர்களின் வாயை மூடும் வகையில் இந்த அரசாங்கம் ஏதாவது சாதனை செய்திருக்கிறது என்றால் - அந்த விஷயத்தில் ஒரு பெரிய பூஜ்யம். மன்மோகன் சிங் “மௌன”மோகன் சிங்காக மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. அரசாங்கத்தின் வாயாக செயல்படுபவர்கள் எல்லாம் திக் விஜய் சிங், கபில் சிபல், மணிஷ் திவாரி போன்ற இரண்டாம் நிலை தலைவர்கள் தான். இந்த அரசாங்கம் இந்தியாவின் துரதிருஷ்டம்.

-oOo-

பல சின்னச் சின்ன துக்கடா செய்திகள், நான் படிக்கும் புத்தகங்களில் என் கருத்தைக் கவர்கின்றன. அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது எழுதுகிறேன். இனி வரும் சிதறல்களில் அப்படிப்பட்ட் துக்கடா எதாவது ஒன்றாவது எழுதப் பார்க்கிறேன். இப்போது அந்த புத்தகங்களை எடுக்க ஏழு மலைகளை (சாமான் மூட்டை) நான் கடக்க வேண்டும்.

-oOo-

ஒரு சிறிய கிரிக்கெட் புதிர்...

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்து சார்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை விளையாடிய இவர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். முதல் டெஸ்ட் போட்டியிலேயே முதல் இன்னிங்க்ஸில் அம்பதுக்கும் மேற்பட்ட ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்க்ஸில் ஆட்டமிழக்காமல் 150 ஓட்டங்களையும் எடுத்த இவர் பெயரில் கிரிக்கெட் போட்டிக்கான புகழ் பெற்ற கோப்பை பிற்காலத்தில் நிறுவப்பட்டது. இவர் யார் ?

உங்கள் விடையை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். சரியான விடையை அடுத்த சிதறல்களில் எழுதுகிறேன்.

2 Responses to “சிதறல்கள் - 9”

Agila said...

Ranjith singh?
"இவர் பெயரில் கிரிக்கெட் போட்டிக்கான புகழ் பெற்ற கோப்பை பிற்காலத்தில் நிறுவப்பட்டது"
This gave away the answer. :-D

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman