Adsense

சிதறல்கள் - 11


என்னுடைய கணிப்பொறியை தூசி தட்டிக் கொண்டிருந்த போது, பல வருடங்களுக்கு முன் நான் எழுதிய இரண்டு கவிதைகள் கண்ணில் பட்டன. இவற்றை எங்கும் பதிவு செய்ததாக நினைவில்லை (மரத்தடியில் எழுதியிருக்கலாம்)....எனவே இங்கு.சதா இரைந்து
கொண்டிருக்கும் நிசப்தம்
பூச்சிகளற்ற சுவரில்
இலக்கின்றி அலையும் பல்லி
என் தனிமையில்
சிதைவின்றி நீளும் அமைதி
அறையை மெல்ல
நிறைக்கத் துவங்கும் வெறுமை
தடதடவென நீ கதவிடித்ததும்
பருத்து வரும் நீர்க்குமிழி
வெடித்தது போலிருந்ததெனக்கு
இப்போது வராமலிருந்துக்கலாம்
நீ !

_@@_

திசைகாட்டியை ஒட்டி
நீளமாக நால் புறமும் பிரிந்து
சென்ற சாலையின் இரு மருங்கிலும்
தேவதாரு மரங்கள்.
மண்வாசனை கவியும் பூமியுடன்
மேகம் நனைத்துப் போட்ட நாகலிங்க
பூக்களால் அழகுற்றிருந்தது சாலை.
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
எண்ணிக்கை இடப்பட்ட தெண்ணை.
புதிதாய் தோன்றிய குட்டையில்
காகிதக் கப்பல்கள் - கவிழ்ந்திருந்தன
மாலுமிகளில்லாததால்.
எதோ ஒரு மூளையில்
வானவில் தோன்றியிருக்கக் கூடும்
பளிச்சென்றோ மங்கலாகவோ
நிர்மலமான வானில் இரவின்
வருகையை வழி நெடுக
கூவிக்கொண்டே பறந்திருந்தது ஊர்குருவி
ஜன்னலோர பயணம் முடிந்தும் சலனமற்ற
அமைதியில் லயித்திருந்தது மனம்
இறுதிவரை பக்கத்து இருக்கைக்காரன்
முகத்தை கவனிக்கவில்லை என்று
தோன்றும் வரை

_@@_

வொய் திஸ் கொலவெறி பாட்டைப் பற்றி மக்கள் கொஞ்சம் அதிகமாகத் தான் அலட்டிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதாவது, இதெல்லாம் ஒரு பாட்டா என கொதிப்பவர்களைப் பற்றிச் சொல்கிறேன். இன்றைய இளைஞனுக்காகப் பாடப்பட்ட பாட்டு. இந்தப் பாடல் அவர்களின் மனநிலையை சொல்லும் ஒரு சாம்பிள் அவ்வளவே. என் அவதானிப்பின் படி, இன்றைய இளைஞர்கள் ஒரே ஒரு ஆளுமையாக மட்டுமே இருப்பதில்லை. பல வடிவ மாறுதலுக்குத் தன்னை அவர்கள் உட்படுத்திக் கொள்கிறார்கள். இன்றைய இளைஞனிடம், ஒரு முழுமையான கேப்பிடலிஸ்டோ, கம்யூனிஸ்டோ, நாத்திகனோ, ஆத்திகனோ, நல்லவனோ, கெட்டவனோ, காணக்கிடைப்பதில்லை.  அவியலாக இருக்கிறார்கள். அவர்களின் மனதின் சிந்தனையோட்டமும் அப்படியே இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றபடி தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை. சர்வைவல் ஸ்ட்ராடஜி. 10 வருடத்துக்கு முந்தைய விஷயத்தைக் காட்டிலும் இன்றைய விஷயங்கள், மிகவும் மாறியிருக்கின்றன என்பது என் கருத்து.

80களில் இருந்த விஷயங்கள் 70களில் இருந்த விஷயத்தைக் காட்டிலும் முற்றிலுமாக மாறியிருக்காது. ஆனால் 90களுக்குப் பிறகு இந்த மாற்றம் அதிவேகமான பயணித்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய இளைஞர்கள், பல திசைகளிலிருந்து வரும் சிந்தனைகளை ஏற்று அதற்கு ஏற்றபடி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் திறந்தே இருக்கின்றன. நகர்புறத்து இளைஞன் மேற்சொன்ன சிந்தனை அமைப்பில் இருந்தாலும், சமுகத்தின் ஒரு பகுதி இந்த வேகத்தில் மாறாமல் தேங்கியிருக்கின்றனர். அந்த தேக்கம் சரியா தவறா என்பது விவாதப் பொருளே அல்ல. அது தான் இயற்கை - அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

என் கவலையெல்லாம், இப்படித் தேங்கிப் போனவர்கள், சமுக ஓட்டத்தோடு ஒன்ற இயலாமல், சமுகத்தின் மாற்று சக்தியாகவும் இல்லாமல், திரிசங்கு சொர்கத்தில் விடப்பட்டுவிடுவார்களோ என்பது தான். அவர்களுடைய நிலைப்பாடு சமுகத்தால் புரிந்துக் கொள்ளப்படுகிறதா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை - புரிந்து கொள்ளப்படுகிறது என்று நம்புகிறேன். அவர்களின் குரல்,  வறட்டு கூச்சலாக மட்டுமே பார்க்கப் படுமேயானால், அது சமுகத்திலிருந்து செவ்வியல் தன்மையை வேகமாக மறையச் செய்யும் செயலூக்கியாகிவிடும். ஒரு மாதிரியான ஹிப்பி அமைப்பை ஒத்த சூழல் சமுகத்திற்கு வந்துவிடும் (இன்றல்ல, இன்னும் 10 ஆண்டுகள் அதற்கான தீவிரமான சூழல் தோற்று விக்கப்படலாம்)  ஆனால் இன்றும் டிசம்பரில் சபாக்கள் நிறைவதைப் பார்க்கிறோம். பல்வேறு வகையான செவ்வியல் சார்ந்த விஷயங்கள் முன்னிலைப் படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இப்படியிருக்கும் இந்த சூழல் ஒரே ஒரு பாட்டால் குலைந்து விட்டது போன்ற பிம்பம் பலராலும் முன்வைக்கப் படுவது தனிமனித படைப்பு சுதந்திரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என்பது என் திண்ணமான கருத்து. ஒரு வேளை அப்படிப் பட்ட சூழல் தோன்றினாலும், இந்த பாடல் சமுகத்தின் அவமாக சித்தரிக்கப்படுவதை நான் ஆதரிக்க மாட்டேன்.

இந்தப் பாடலிலிருக்கும் முக்கிய அம்சம் - எளிமை. யார் வேண்டுமானாலும் பாடலாம். பாடுவதே பேசுவது போன்றிருக்கும் திறமை வாய்த்த என்போன்றவர்களே இந்தப் பாட்டைப் ”பாடலாம்” என்பது தான் இதன் தனிச் சிறப்பு. பாடல் வரிகள் நீங்கள் தினமும் பேசும் அதே ஆங்கில வார்த்தைகள். உலகப் பொது மொழியான ஆங்கிலத்தை பாடலின் மொழியாகத் தேர்ந்தெடுத்தது, சமுக ஊடகங்களை திறமையாக ஆராய்ந்து, பின் தேர்ந்தெடுத்த உத்தி என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். தணுஷ் சொல்வது போல் இந்தப் பாடல் நிச்சயம் 10 நிமிட விஷயம் இல்லை. இதற்குப் பின் பெயர் வெளியிடப்படாத ஒரு குழு நிச்சயம் இருக்கிறது.

இந்த வகைப் பாட்டிற்கு முன்னோடி என்று நான் கருதுவது “பேட்டை ராப்” பாட்டை - அந்த பாடல் ஒய் திஸ் கொலவெறிக்கு தாத்தா முறை ஆகிறது. அதே போல, நாக்க முக்க பாட்டு சரியான வைரல் மெட்டிரியல். ஆனால் அது நான் எதிர்பார்த்த அளவு இணையத்தில் பரவவில்லை.

எது எப்படியோ, இந்தப் பாட்டு கொலவெறியை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று விட்டது. ஹிந்தியிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் நீங்கள் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகள் பல இருக்கும் - ஆனால் வடக்கத்தியர்கள் சரளமாகப் பயன்படுத்தப்போகும் முதல் (?!) தமிழ் வார்த்தை கொலவெறி.

No response to “சிதறல்கள் - 11”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman