சிதறல்கள் 9 இல் கேட்கப்பட்டிருந்த புதிருக்கு சரியான பதில் எழுதி அகிலா கலக்கி விட்டார். வாழ்த்துகள்.
-oOo-
ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்து பல நாட்கள் ஆகியும் அவர் பற்றி எழும் அலைகள் குறையவில்லை. சமிபத்தில் படித்ததில் மிகவும் பிடித்த கட்டுரை ஃபோர்ப்ஸில் வெளியான இந்தக் கட்டுரை. சமயம் கிடைக்கும் போது பொறுமையாக படியுங்கள்.
சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஐசக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸின் சரிதை தான் இந்தக் கட்டுரைக்குக் காரணம். அதில், ஆப்பிளின் முக்கியமான விளம்பர பிரச்சாரமான To the Crazy Ones என்ற விளம்பரத்தை ஜாப்ஸே உருவாக்கினார் என்ற தொணியில் எழுதப்பட்டிருக்கிறது போலிருக்கிறது (நான் இன்னும் அந்த புத்தகத்தைப் படிக்கவில்லை). இந்தக் கட்டுரையை எழுதியவர், அந்த விளம்பரத்திற்கான மூல ஸ்கிரிப்டை உண்மையிலேயே எழுதிய ராப் சில்டனன். அந்த விளம்பரமும், ஆப்பிளின் ஆதார விளம்பர வாக்கியமான Think Differentஉம் எப்படி உருவானது என்பது பற்றி 7 பக்கங்களில் விளக்கியுள்ளார் (நாளை யாராவது ஜாப்ஸ் தான் அந்த வாக்கியத்தை உருவாக்கினார் என்று புத்தகம் எழுதிவிட்டால் என்ன செய்வது) செம சுவாரஸ்யமாக இருக்கிறது. கட்டாயம் படியுங்கள்.
-oOo-
இந்து மதத்தின் புராணங்களில் காலத்தைப் பற்றிய தீர்கமான பல விஷயங்கள் இருக்கின்றன. விஷ்ணு புராணத்தின் படி காலத்தின் பகுப்புகளாவது இவை
1) நிமேஷம் 2) காஷ்டா 3) கலா 4) முகூர்த்தம் 5) பகல்/ இரவு 6) பக்ஷம் 7) மாஸம் 8) அயனம் 9) வருஷம்
1 நிமேஷம் - கண்ணிமைக்கும் பொழுது
1 க்ஷணம் = 3 நிமேஷம்
1 காஷ்டா = 10 நிமேஷம்
1 கலா = 35 காஷ்டா
1 முகூர்த்தம் = 20 கலா
1 நாள் (இரவு/ பகல்) = 30 முகூர்த்தம் (~ 24 hours in timescale that we currently adopt)
1 மாஸம் = 30 நாள்
1 அயனம் = 6 மாஸம்
1 வருஷம் = 2 அயனம்
இதோடு மட்டும் நிற்கவில்லை. 1 நிமேஷத்திற்கு கீழேயும் கணக்கிடப்பட்டிருக்கிறது - பாகவதத்தில் இந்த தகவல்கள் இருக்கின்றன.
1 நிமேஷம் = 3 லவ
1 லவ = 3 வேதா
1 வேதா = 100 த்ருதி
1 த்ருதி = 1/1687.5 of a second (currently adopted practice)
தேவ வருஷங்கள்
மேலே சொன்னவை அணைத்தும் மனிதனின் காலத்தை கணக்கிடும் முறைகள் - இவற்றையும் தாண்டி தேவ காலம் இன்னும் ஆச்சரியமானது
மனிதனின் 1 வருஷம் = தேவர்களுக்கு ஒரு நாள் (உத்திராயணம் பகல்; தஷிணாயனம் இரவு)
360 தேவ நாட்கள் (அல்லது 360 மனித வருஷம்) = 1 தேவ வருஷம்
12,000 தேவ வருஷங்கள் ஒரு சதுர்யுகம் எனப்படும். ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகங்களைக் கொண்டது, அவை
க்ருதயுகம்:
17,28,000 மனித வருடங்கள் அல்லது 4800 தேவ வருஷங்கள் (4000 யுக வருஷங்கள்,
400 சந்தியா வருஷங்கள், 400 சந்தியான்ஸா வருஷங்கள்)
த்ரேதாயுகம்:
12,96,000 மனித வருடங்கள் அல்லது 3600 தேவ வருஷங்கள் (3000 யுக வருஷங்கள்,
300 சந்தியா வருஷங்கள், 300 சந்தியான்ஸா வருஷங்கள்)
த்வாபரயுகம்:
8,64,000 மனித வருடங்கள் அல்லது 2400 தேவ வருஷங்கள் (2000 யுக வருஷங்கள்,
200 சந்தியா வருஷங்கள், 200 சந்தியான்ஸா வருஷங்கள்)
கலியுகம்: 4,32,000
மனித வருடங்கள் அல்லது 1200 தேவ வருஷங்கள் (1000 யுக வருஷங்கள், 100
சந்தியா வருஷங்கள், 100 சந்தியான்ஸா வருஷங்கள்)
சந்தியா வருஷங்கள், சந்தியான்ஸா வருஷங்கள் என்பவை முறையே ஒரு யுகத்தின் முடிவிலும் துவக்கத்திலும் இருக்கும் இடைப்பட்ட காலங்கள்.
பிரம்ம வருஷங்கள்
தேவ வருஷங்களைத் தாண்டி பிரம்மாவின் வருஷங்கள் உண்டு அவை தேவ வருஷங்களைக் காட்டிலும் பெரியவை.
1000
சதுர்யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு நாள் பகல். அதாவது 4.32
பில்லியன் ஆண்டுகள் பிரம்மாவின் ஒரு பகல். இது போல இரவு ஒரு 4.32 பில்லியன்
ஆண்டுகள். இவற்றை ”கல்பா” என்று கூறுவார்கள். பிரம்மாவின் ஒரு நாளில்
இரண்டு ”கல்பா”. இபோது நடக்கும் கல்பா ஸ்வேதவராஹ கல்பா. இது போல
பிரம்மாவின் ஆயுள் 100 வருடங்கள் வரை போகும். அதன் பிறகு பிரம்மா மீண்டும் தோன்றுவார். இப்போது நாம் இருப்பது பிரம்மாவின் 51 ஆம் ஆண்டில் பிரம்மாவின்
ஒரு பகலில் 14 “மன்வந்தரங்கள்” உண்டு. ”மன்வந்தரம்” என்பது ஒரு மனு தோன்றி
மறையும் காலம். இந்த மன்வந்தரத்தை ”வைவஸ்வத மன்வந்தரம்” என்று அறிகிறோம்.
ஆக ஒரு மன்வந்தரத்தின் காலத்தில் 71 சதுர்யுகங்கள் உண்டு. இப்போது நடந்து
கொண்டிருப்பது 28வது சதுர்யுகம் - அதிலும் கலியுகம் நடந்து
கொண்டிருக்கிறது. கலியுகம் துவங்கி 2011ஆம் ஆண்டுடன் 5113 வருடங்கள்
ஆகின்றன.
ஆக பிரம்மாவைப் பொருத்தவரை நீங்கள் அவரது 51அம்
வருடத்தில், முதல் நாளில் 28வது சதுர்யுகத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறீர்கள் - இன்னும் அவரது பகல் முடியவே 972 சதுர்யுகங்கள்
போகவேண்டும். அதாவது இந்த பிரபஞ்சத்தை பிரம்மா படைத்து 155 ட்ரில்லியன்
ஆண்டுகள் ஆகிவிட்டன.
தலை லேசாக சுற்றுகிறது, இல்லையா. இதையும் காட்டிலும் பல ஆச்சரியங்கள் நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும், அநாதியான வேதத்திலும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.




No response to “சிதறல்கள் 10”
Post a Comment
Trackbacks
Leave a trackback