Adsense

சிதறல்கள் - 8


இந்த வாரம் சென்னையில் நடந்த இரண்டு விஷயங்கள் பற்றி பேசாதவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.முதலாவது - நூலகத்தை, குழந்தைகள் நலனுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையாக  மாற்ற ஜெயலலிதா அறிவித்திருப்பது. வழக்கம் போலவே அறிவு ஜீவிகள் கொதித்துவிட்டனர். வாழைப்பழத்தை விளக்கெண்னெயில் தடவி ஒரு கூட்டறிக்கையை மூத்த எழுத்தாளர்களும், பத்திரிக்கையளர்களும் வெளியிட்டிருக்கிறார்கள். நூலகத்தை முற்றிலுமாக அழித்து விடுவது போன்ற ஒரு பிம்பமும் பரப்பப்படுகிறது. அவர்களின் கோபம் எனக்கு சர்வ நிச்சயமாகப் புரியவில்லை. சில பதிப்பளர்களின் தார்மீக கோபம் அவர்கள் தொழில் சார்ந்ததாக இருக்கிறது - நியாயம் தான். இந்த நூலகம் இல்லாவிட்டால் தமிழகத்தின் அறிவு இயக்கமே முற்றிலும் அழிந்து விடுவது போலவும், மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று குறைந்து விட்டது போலவும் பதட்டமான கருத்தை முன்வைக்கின்றனர். இது, பதட்டத்தை விளைவிப்பதன் மூலம், மக்களின் சிந்திக்கும் போக்கை அவர்களிடமிருந்து பறித்து, அவர்களைத் தன் குறிக்கோளுக்கு இசைவாக கோஷம் போடச் செய்ய, அரசியல்வாதிகள் பயன்படுத்தும் மலிவான உத்தி இது. இடது கையால புறந்தள்ள வேண்டிய கருத்துகள் அவை.

நான் இந்த மருத்துவமனை திட்டத்தை வரவேற்கிறேன். தமிழகத்தின் தற்போதைய அவசரத் தேவை என்று நான் கருதுவது, தரமான நியாயமான விலையிக் கிடைக்கும் மருத்துவ சேவை. சர்வ நிச்சயமாக, தனியார்களின் சுரண்டல் அதிகம் நடக்கும் துறைகளில் ஒன்றாக மருத்துவத் துறை மாறிவிட்டதை யாவரும் மறுக்க முடியாது. அதிலும் குழந்தைகளுக்குத் தேவையான பிரத்யேக மருத்துவ சேவை வழங்குவதில் இப்போது இருக்கும் இரண்டு மருத்துவமனைகள் அப்பலோவும், Child Trust Hospital-உம் தான். இந்நிலையில் அரசு மருத்துவத்துறையில் முழு முணைப்புடன் இறங்குவது நீண்ட காலத் தீர்வாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அரசால், குறைந்த செலவில், அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் வகையில் முன்னேறிய மருத்துவ வசதிகள் வழங்கும் நிலை எட்டப்படுமானால் அதுவே உன்னதமான நிலையாக இருக்கும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அறிவித்திருக்கும் இரண்டு மருத்துவமனை திட்டத்தையும் நான் ஆதரிக்கவே செய்கிறேன். அரசும் இயங்கும் ஒரு துறையில் தனியார்கள் முன்னோடிகளாக, மக்கள் விரும்பும் சேவை வழங்கும் நிறுவனங்களாகவும் இருப்பின், அது அரசின் மக்கள் சார்பற்ற போக்கையே காட்டுகிறது. இந்த நிலையைத் தான் நாம் இதுவரை மருத்துவத்துறையில் பார்த்து வருகிறோம். நடுத்தர தட்டு குடும்பங்கள், தங்கள் மருத்துவத் தேவைகளுக்காக அரசு மருத்துவமனையை அணுகும் நிலை இன்று வரை ஏற்படாதது துரதிருஷ்டம் என்று எடுத்துக் கொள்ள முடியாது - இது நாள் வரை அரசு மக்கள் நலனில் காட்டாத அக்கறை என்றே கொள்ள வேண்டும். இன்று வரை தமிழ்நாடு போன்ற அற்புதமான பஸ் சேவை உள்ள மாநிலத்தை இந்தியாவில் காட்ட முடியுமா ?  மக்களுக்கான அடிப்படை சேவைகளான, உணவு விநியோகம், கல்வி, சுகாதாரம் (மருத்துவ வசதி) ஆகியவை என்றுமே அரசின் கையிலிருந்து முற்றிலும் தனியார் வசம் சென்று விடக்கூடாது. ஆனால், நாம் இன்று தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருப்பது என்ன ? தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் தான் அதிக தரத்தை வழங்கவல்லவை என்ற பிம்பம் தான் மக்களிடம் இருக்கின்றது - அது உண்மையும் கூட. இந்நிலையில், அரசு இந்தத் துறைகளில் அதிக முணைப்போடு செயல்படுவதை தவறு என்று சொல்வதன் அர்த்தம் புரியவில்லை.

நிற்க, நான் ஜெயலலிதா அரசு மக்கள் நலனுக்காக பாடுபடும் அரசு என்று பட்டம் கொடுக்க விரும்பவில்லை - அது என் நோக்கமும் இல்லை. நான் முன்வைப்பது ஒன்று தான் - எந்த காலத்திலும் தரமான மருத்துவ சேவைகள் வழங்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதே. இந்த திட்டத்தை, ஜெயலலிதா கருணாநிதி மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியால் கொண்டு வந்தாரா இல்லை என்பது என் பிரச்சணையில்லை. என்னுடைய தேவைக்கான திட்டமாக அது இருக்கிறதா இல்லையா என்பதே என் கவலையாக இருக்கும். அந்த விதத்தில், அனைவரும் எளிதாக வந்து போகும் வகையில், பல ஆயிரக்கணக்கான சதுர அடி பரப்பளவில் நகரின் மையத்தில் இருக்கும் ஒரு இடத்தில் மருத்துவமனையைக் கொண்டு வருவதையே நான் ஆதரிக்கிறேன்.

ஆனால், ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டிய இரண்டு முக்கியமான கேள்வி தொக்கி நிற்கின்றன.
1) மருத்துவமனை திட்டங்களாக வரிசைப்படுத்தும் நீங்கள், ஏன் அடிப்படை சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் குப்பைகள் நீக்குவதில் அக்கறை காட்டவில்லை. மாநகராட்சி மேயர் தேர்தல் முடிந்த பின்னரும், சென்னை மிகப்பெரிய குப்பைத் தொட்டியாகத்தானே காட்சியளிக்கிறது ?
2) மருத்துவமனைகளுக்கான உள்கட்டமைபு வசதி கொண்ட இடங்களைப் பற்றி பேசும் உங்கள் அரசு ஏன் மருத்துவ சேவைகள் பற்றி வாய் திறக்கவில்லை - அதற்கான வழிமுறைகளை இந்த அரசு ஆராயுமா ? அல்லது விமர்சகர்கள் மற்றும் சினிக்குகளின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் வெறும் இடமாற்றத்தோடு உங்கள் மக்கள் நல நாடகத்தை நிறுத்திக் கொள்ளப்போகிறீர்களா ?

ஜெயலலிதாவின் ஐந்தண்டுகால இறுதியில், அரசு மயமான சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவமனைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டால் - அது அவரது  அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். காமராஜர், குழந்தைகள் கல்விக்காக நினைவில் கொள்ளப்படுவது போல, ஜெயலலிதா மக்கள் சுகாதாரத்திற்காக நினைவில் கொள்ளப்படுவார்.


இரண்டாவது விஷயம் - தி நகர் கடைகளுக்கு போடப்பட்ட பூட்டு. மிகவும் சந்தோஷமான விஷயம். ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்த எந்த விதமான விசனமும் இல்லாமல், லாப நோக்கோடு மட்டுமே கடை நடத்தி வந்த முதலாளிகளுக்கும் அவர்களுக்குத் துணை போன அரசு ஊழியர்களுக்கும் சரியான குட்டு வைத்திருக்கிறது நீதிமன்றம். ஆனால் இத்தோடு நிற்காமல், இடைக்கால தளர்வு தராமல் இந்த வழக்கிற்கு ஒரு முடிவு இந்த முறையாவது வர வேண்டும் - பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த கதை நீண்டு கொண்டிருக்கின்றது. இந்த முறையும் இதற்கு முடிவுக்கு வராவிட்டால் சட்டத்தின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக அற்றுப் போய்விடும்.

No response to “சிதறல்கள் - 8”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman