Adsense

சிதறல்கள் - 7


பதிவு எழுதி 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது - வேலை மாற்றம் கொஞ்சம் அதிகமாக நேரத்தை சாப்பிட்டாலும், நடுவில் கணிப்பொறி வேறு வேலை செய்யாமல் சதி செய்துவிட்டது. கடைசியாக அந்த பழைய கணிப்பொறியை பரண் மேல் ஏற்றிவிட்டு புதிதாக வாங்கினேன்.நடுவில் நிறைய எழுத வேண்டிய விஷயங்கள் வந்தும், எதைப் பற்றியும் எழுத முடியவில்லை. இந்த சிதறல்கள் தொடர் எனக்கு முக்கியமாகப் படுகிறது. என்னுடைய கருத்துக்களை நானே பார்த்துக் கொள்ளும் ஒரு பெட்டகமாக இது மாறிப் போகிறது.

இன்றுடன் ஒரு வருடக்கணக்கு முடிந்தது - அப்பாவின் ஆப்திகம் இன்று முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் ஒரு மரணம், ஒரு ஜனனம். வாழ்க்கையைப் பற்றிய என் பார்வை கொஞ்சம் அதிகமாகவே இந்த ஒரு வருடத்தில் (கடந்த இரு வருடங்களில் என்பது மிகச்சரியாக இருக்கும்) மாறித்தான் போய் இருக்கிறது. அப்பா இல்லமல் ஒரு வருடம் கடத்தியிருக்கிறோம் என்ற நினைப்பே மிகவும் அச்சரியமாக இருக்கிறது.

குழந்தை வந்ததால் கொஞ்சம் ஆசுவாசம் வந்தது. அம்மா பழைய படி வாயைப் பொத்தி சிரிக்கிறாள். என் மகனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றுவதெல்லாம் ஒன்று தான் - இவனுக்குத் தருவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது என்ற கேள்வி. நிச்சயமாக அவன் வளரும் சூழலுக்கு ஈடாக என்னால் ஓட முடியுமா என்று தெரியவில்லை. அவனுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் குறைவின்றி செய்து கொடுக்க முடியுமா என்ற கவலை இருக்கிறது - ஆனால், இவையெல்லாவற்றையும் விட அவனுக்கு எப்படிப்பட்ட அப்பாவாக நான் இருக்கப் போகிறேன் என்ற பிம்பம் பற்றிய சிந்தனை அதிகமாக பரவுகிறது.

என் அப்பா, எங்கள் அனைவரின் மனதிலும் விட்டுச் சென்ற பிம்பத்தை நான் என் மகனிடம் விட்டுச் சென்றாலே அது என் வாழ் நாள் சாதனையாகக் கருதுவேன். அப்பா பெரிய புத்திசாலி இல்லை - ஆனால் மிக நல்லவர்.  லக்ஷம் லக்ஷமாக சம்பாதிக்கத் தெரியாது - ஆனால் யாருக்கும் பணியாமல் வாழத்தெரியும். முன் கோபி. நிறைய அப்பாவி. காரியம் ஆவதற்காக கூழைக்கும்பிடு போடத் தெரியாது. எந்த விஷயத்திலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான். மூன்று மணி நேரம் தினமும் பாராயணம் செய்வார் - வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும். பிரேம்சந்த் பாஷையில் பேச்சாரா பலா ஆத்மி. அப்பா வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரி தான் இருந்தார். வயது ஆக ஆக அவர் கோபம் கொஞ்சம் குறைந்தது. அவ்வளவே.

அவர் தீவிர இந்துத்வ ஆசாமி. சிறு வயதில் ஆர் எஸ் எஸ் இல் கூட சேர்ந்திருக்கிறார். சில சமயம் நெஞ்சுக்கு நேரே கையை வைத்துக் கொண்டு ”நமஸ்தே சதா வத்ஸலே...” என்று பாடிக் காட்டுவார். கொஞ்சம் மிதவாதியாக வாழ நினைக்கும் எனக்கும் அவருக்கும் கருத்து மோதல்கள் எக்கச்சக்கம். அனைத்து அரசியல் பார்வைகளும் கொஞ்சமேனும் மாறுபடும். இந்த வாதங்கள் சாப்பிடும் போது தான் வரும். அவர் உச்சக்கட்டத்திற்கே சில சமயம் சென்றுவிடுவார். தட்டு பறக்கும் பயத்தில் அம்மா எங்களை சேர்த்து வைத்து சாப்பாடு போடுவதைக் கூட தவிர்த்தாள்.

அப்பா பெரிய ஊமைக்குசும்பன் - யாரிடம் பேசினாலும் ஐந்தாவது நிமிடத்தில் அவருக்கு ஒரு பட்டப்பெயர் வைத்து விடுவார் - உருளைகிழங்கு, கொட்டைபாக்கு, கீச்சுமூச்சு - இப்படித்தான் இருக்கும் அவர் வைக்கும் பெயர்கள். எங்கள் குடும்பத்தில் அந்த ஆசாமி, பிற்பாடு அந்த பெயரிலேயே அழைக்கப்படுவார். “பாவம்டா கொட்டைபாக்குக்கு கேன்சராம்” என்று சீரியஸாக பேசும் இடங்களில் கூட சொல்லும் வகையில் அந்த பெயர்கள் அவருடைய இன்னொரு பெயராகக் கூட மாறி விடும். உண்மையில், கொட்டைப்பாக்கு மாமாவின் உண்மையான பெயர் எனக்கு இன்று வரை தெரியாது. அவர் எப்போதுமே கொட்டைப்பாக்கு தான்.

அவர் ஒரு டிபிக்கல் 60களின் இளைஞன் - ஜெமினி ரசிகன். தமிழ் சினிமாவில் 75 இறுதி வரை வந்த எந்த படத்தைப் பற்றிய தகவலும் அவர் விரல் நுணியில் இருக்கும். நான் அம்மா, அப்பா மூவரும் இரவு விடிய விடிய பழைய பாடல்கள் கேட்போம். எந்த படம், எப்போது ரிலிஸானது, யார் நடிகர் நடிகைகள், அந்த பாட்டை எழுதியது யார், அது ரிலிஸாகும் போது என்ன கிசு கிசு, தஞ்சாவூரில் எந்த தியேட்டரில் ரிலிஸானது என்பது வரை எல்லாவற்றையும் சொல்வார். கடைசியாக அவரை ஆஸ்பத்ரியிலிருந்து கொண்டு வரும் போது அவரது ஆல்டைம் ஃபேவரைட்டான “உன்னைக் கண்டு நான் ஆட” ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது.

நான் மாவட்ட அளவில் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த பின்னரே அவருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் வந்து கற்றுக்கொண்டார். அம்மாவும் அப்படியே. கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலத்தில், “வைட் பாலில் கீப்பர் கேட்ச் பிடித்தால் அவுட்டா” என்று தூக்கி வாரிப்போட வைக்கும் கேள்விகளைக் கேட்பார். பிறகு அந்த கிரிக்கெட்டை அவர் விடவேயில்லை. ரஞ்சி டிராஃபி போட்டிகளாஇ தொடரும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்தியா உலகக்கோப்பை ஜெயித்த போது நானும் அம்மாவும் மட்டும் கை தட்டிக் கொண்டிருந்தோம். அவர் வழக்கமாக அமரும் நாற்காலி காலியாக இருந்தது.

உங்கள் பக்கம் நியாயம் இருந்தால், நீங்கள் எதிரியே ஆனாலும் உங்களை ஆதரிப்பார். தப்பு என்றால் தப்பு தான். எந்த விஷயத்தையும் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுவார், எந்த விஷயமும் அவருக்கு மறக்காது - இந்த விஷயமே அவர் உயிருக்கும் ஆபத்தாக அமைந்து விட்டது.  சில கசப்பான அனுபவங்களை மறக்க அவர் கற்றுக் கொண்டிருக்கலாம். ஒருவேளை அப்படி நினைவுகளைத் தூக்கிப் போட்டுவிட்டு வாழும் வாழ்க்கை தேவையில்லை என்று நினைத்தாரோ என்னவோ.

வாழ்க்கையில் ஒரு மனிதன் யாரிடம் வேண்டுமானாலும் நன்றாக நடித்து விட முடியும். நல்லவன் பட்டமும் வாங்கி விடலாம். ஆனால், 24 மணி நேரமும் கூடவே இருக்கும் குடும்பத்தை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஒரு குடும்பம் ஒருவனை நல்லவன் என்று ஆத்மார்த்தமாக  எந்தவிதமான மனச்சங்கடங்களும் இல்லாமல் சொன்னலே அந்த வாழ்க்கை மேன்மையானது தான். நான் இறக்கும் போது நான் நல்லவன் என்று என் குடும்பம் சொல்லும் படியான வாழ்க்கையை வாழ்ந்தாலே எனக்குப் போதும். எனக்கு என் அப்பாவின் மீது இருக்கும் பெருமையும், கர்வமும் என் மீது என் பையனுக்கு வரும் படி நான் வாழ்ந்தால் - அதுவே எனக்குப் பெரிய வாழ்க்கை.

2 Responses to “சிதறல்கள் - 7”

Bindhu!! said...

heart felt post.

"அம்மா பழைய படி வாயைப் பொத்தி சிரிக்கிறாள். "

"என் அப்பா, எங்கள் அனைவரின் மனதிலும் விட்டுச் சென்ற பிம்பத்தை நான் என் மகனிடம் விட்டுச் சென்றாலே அது என் வாழ் நாள் சாதனையாகக் கருதுவேன். "

"சில கசப்பான அனுபவங்களை மறக்க அவர் கற்றுக் கொண்டிருக்கலாம். "

"ஒரு குடும்பம் ஒருவனை நல்லவன் என்று ஆத்மார்த்தமாக எந்தவிதமான மனச்சங்கடங்களும் இல்லாமல் சொன்னலே அந்த வாழ்க்கை மேன்மையானது தான். "

மிகவும் ரசித்தேன்!

Vijay Ananth S said...

Excellant feeling... சேரன், தங்கர் பச்சன் கதை கேட்ட மாதிரி இருந்தது... I admire each and every words of you... I think this lines are not written by your pen, its by your Heart blood only...வாழ்கை என்பது இதையும் /எதையும் கடந்து போகும்

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman