Adsense

சிதறல்கள் - 3


கதவுகள் இல்லாத வீடுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? இந்தியாவில் இது போன்ற வீடுகளைக் கொண்ட சிறு கிராமம் ஒன்று இன்றும் இருக்கின்றதுகர்நாடகத்தில் கடக் என்ற மாவட்டத்தில் தாவல் மாலிக் என்ற ஒரு சிறு கிராமம். அதில் இன்றும் வீடுகளுக்கு கதவுகள் கிடையாது. அதே போன்ற இன்னொரு ஊர், பஜாஜ் டி டி எஸ் ஐ விளம்பரம் அறிமுகப்படுத்திய ஊர். சிங்க்னாபூர் (மஹாராஷ்ட்ரா). 
திருடுபவர்களை கடவுள் தண்டிப்பார் என்ற ஆன்மிக அஸ்திவாரத்தில் கட்டமைக்கப்பட்ட அடையாளங்கள் அவை. சனிஸ்வரன் சிங்க்னாபூரைக் காப்பாற்றுவதைப் போல, தாவல் மாலிக்கை, அதே பேர் கொண்ட சூஃபி , அவரது தர்காவிலிருந்து பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சரி, சனீஸ்வரனைப் போல ஏன் கேதுஸ்வரன், ராகுஸ்வரன் இல்லை ? சனீஸ்வரனே இல்லை என்பது தான் சரி. அவர் சனைச்சரன். ஹேமில்டன் பாலம் அம்பட்டன் பாலம் ஆனது போல சனைச்சரன் மெதுவாக நகர்ந்து சனீஸ்வரன் ஆகிவிட்டார்

ஆரம்பித்த விஷயத்திற்கு வருவோம். கதவுகள் ! இவற்றை மட்டுமே ஓவியத்தின் கருப்பொருளாகக் கொண்டு ஒருத்தர் படம் வரைந்து கொண்டு இருக்கிறார். சந்தான கிருஷ்ணன் என்று பெயர். கும்பகோணம். இப்போது வசிப்பது சென்னையில். அக்ரஹாரத்து வீடுகளில் இருக்கும், புராதன மதிப்பை ஓவியத்தில் கொண்டு வருகிறார். பெரும்பாலும் ஒரு பக்கம் மூடியிருக்கும் கதவுகள். திறந்திருக்கும் பகுதியிலிருந்து வீட்டின் உள் பகுதியைக் காட்டுகிறார். அதன் வழியாக நாம் நமது பழைய நினைவுகளுக்குள் நுழைகிறோம்.

இன்றும் எனக்கு பசுமையாக நினைவிலிருப்பது திருவாணைக்காவல் வடக்குத் தெருவில் எங்கள் தாத்தா இருந்த வீடு. உயரமான சீலிங். ஒரே சமயத்தில் ஒரு வரிசையில் 30-40 பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய அளவு நீளமான கூடம். நீளமான வராண்டா, கூடம், புழக்கடை, கொல்லைபுற வாயில், கொல்லைப்புறம் என்று அடுக்குகளைக் கொண்ட வீடு. வாசலிலிருந்துப் பார்த்தால் கொல்லைப்புறத்தில் நிற்கும் மனிதர்கள் சின்னதாகத் தெரிவார்கள். அவ்வளவு நீளமான வீடு

அந்த வீட்டிலிருந்து துவங்கி எனது எட்டு வயது முதலான நினைவுகள் ஒரு முறை அசைப்போட்டுக் கொண்டிருந்த போது பாழாய்ப் போன மொபைல் அடித்தது. சரி, சந்தானகிருஷ்ணனின் படைப்புகளை ஆன்லைனில் (http://www.doorpaintings.com/) பாருங்கள்

எனக்கு சந்தானகிருஷ்ணனின் படைப்புகள், மிக  முக்கியமானவை ! ஒரு கலைப்படைப்பு எவ்வளவு தூரம் உங்களை தன்வயப்படுத்த முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். ஓவியமோ, கவிதையோ பார்ப்பவர்களை/ படிப்பவர்களின் உணர்வு நிலையை உயர்த்தும் போதே அது படைக்கப்பட்டதன் நோக்கத்தைப் அடைந்து விடுகிறது.

_ooOoo_

desispark.com ன்று ஒரு வலைதளம். லோகத்தில் சம்சாரிகளை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்மேட்ரிமோனி வகையறா. இதில் டேட்டிங்கும் உண்டு. வித்தியாசம் என்னவென்றால், ஜோடிகளைத் தேர்வு செய்து கொள்வதற்கெல்லாம் இவர்கள் பணம் வாங்கப்போவதில்லையாம். திருமண சந்தையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்து சந்தையைக் கைப்பற்றுவது தான் இதன் நோக்கம் என்று சொல்கிறார்கள்.

எனது அனுமானத்தின் படி இது தேறாது இந்த வலைதளம் ஒரு டேட்டிங் தளமாக வேண்டுமானால் கொஞ்ச தூரம் செல்லலாம். மேட்ரிமோனியைப் பொருத்தவரை இவர்கள் அந்த சந்தையை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். Credibility என்ற ஒரு அம்சம் இருக்கிறது. அது மேட்ரிமோனி சந்தையில் மிகவும் முக்கியம். சில நூறு ரூபாய்கள் சேமிக்க இந்தியா போன்ற ஒரு தேசத்தில் தீவிரமாக துணை தேடுபவவர்கள்  இது போன்ற ஒரு தளத்திற்கு வரமாட்டார்கள். 
 

_ooOoo_

சென்னை, இன்னுமொரு வெயில் காலத்தை வெற்றிகரகமாக கடந்து விட்டு மெள்ள வசந்தத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. சில இடங்களில் சிவப்பு சிவப்பாக butea frondosa பூத்து இருக்கிறது. இந்த பூவுக்குப் தமிழில் பூவரசம்பூ என்று ஆறேழு வருடங்களுக்கு முன்பு தான் தெரியும். பின்னர் அது பூவரசம்பூ இல்லை இன்று நேற்று தெரிந்துக் கொண்டேன். அதற்கு தமிழில் பலாச பூ என்று பாட்டனியை மேஜர் சம்ஜெக்டாக எடுத்துப் படித்த தேவிபாலா சொன்னார். ஆங்கில வழிக் கல்வியில் படிப்பதில் இருக்கும் பிரச்சனை இது. சில விஷயங்களில் இயல்பாகப் பயன்படுத்தப்படும் பெயர்கள் தெரியாது.

எங்களுக்கு ஒரு zoology மேடம் இருந்தார். அவர் விலங்குகளின் zoological பெயர்களை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக விளையாட்டாக பல கதைகள் சொல்வார் - அத்தனையும் அபத்தமாக இருக்கும். நாங்கள் அதை வகுப்பு முடிந்தவுடன் சொல்லி சொல்லி சிரிப்போம். விளைவு இப்போதும் அந்த விலங்குகளின் பெயர் அத்துப்படி.

- நாகப்பாம்புன்னா நாக ராஜன், அதான் அதோட பேர் நாஜா நாஜான்னு வைச்சுருக்காங்க (Indian Cobraவுக்கு zoological name Naja Naja)
- பூனை அடிபட்டா எப்படி கத்தும் Felis, Felisனு கத்தும் - சரியா கேட்டுப்பாருங்க அப்படித் தான் கத்தும் (பூனையின் zoological பெயர் felis catus)
- மயில் தோகை விரிச்சு ஆடும் போது பார்த்திருக்கியா. பேய் மாதிரி இருக்கும். பேயோன்னு எல்லாரும் பயப்படறதால தான் அதுக்கு Pavo cristatusனு பேர்

இப்படி பல கதைகள் சொல்வார் - எங்களுக்கும் பொழுது போனது. அவரது நோக்கமும் நிறைவேறியது. அவர் நோக்கம் எங்களுக்கு புத்திசாலித்தனமான கதைகள் சொல்வதல்ல. இல்லையெனில் இன்னும் அவை என் நினைவில் இருக்காது.

இன்னொரு கதை இருக்கிறது. கழுதை + குதிரை ஹோல் ஸ்கொயர் இசிகொல்டு கழுதை ஸ்கொயர் + குதிரை ஸ்கொயர் + 2 கழுதை குதிரை என்று கணக்கு படித்த கதை. பிறகு சொல்கிறேன்.

பிகு: இந்த பதிவு 18 ஜூன் அன்று மாற்றப்பட்டது. நன்றி தேவிபாலா.

2 Responses to “சிதறல்கள் - 3”

Vijay Ananth S said...

Hi chandru, I met GVM madam four months back in Raja rajan clinic,South main street...She is looking so tired & also she is not able to speak few words also...I was rewinding my own about her energetic talking ability in school days...anyway we all will pass through time finally...She is teaching in her own way,and pronouncing words in her own style...some of those moments still i am remembering...the few are
Risoboda, chorcodiana,seliopora, seliata,Sactoria...She is really great...

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman