Adsense

சிதறல்கள் - 2


இப்போது நடக்கும் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை ஒரு பைசாவுக்கு மதிக்க முடியாது. ஆனால் கமெண்ட்ரி கேட்க ஜாலியாகத் தான் இருக்கிறது. ஆல் இந்தியா ரேடியோவின் எஃப் எம் கோல்ட் 102.3இல் இந்தியா ஆடும் எல்லா கிரிக்கெட் போட்டிகளுக்கும் கமெண்ட்ரி சொல்வார்கள் (ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மாறி மாறி வரும்). இந்த முறை ஒரு சின்ன மாறுதல் முதல் ஆட்டத்தில் கவாஸ்கர் கொஞ்ச நேரம், லண்டனிலிருந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டுப் பேசினார். பின்னர் அடுத்த ஆட்டங்களில் லெப்டிணெண்ட் கர்னல் கபில் தேவ் பேசுகிறார். அவரை அடிக்கடி லெப்டிணெண்ட் கர்னல் என்று அழைக்கும் போது கேட்க ஜாலியாக இருக்கிறது.

கபில் தேவ், கொஞ்சம் எமோஷனல் பேர்வழி. ராணுவ உடை அணிவது எவ்வளவு பெருமைக்குரியது என்பதை கொஞ்சம் எமோஷனலாகவே இன்று சொன்னார். பொதுவாக, நான் கவனித்தவரை அவர், டிவி கமெண்டேட்டர்கள் செய்யும் கோமாளித்தனங்கள் இல்லாமல் சப்ஜெக்ட்டைப் பற்றி மட்டும் (அல்லது அதிகமாக) பேசுகிறார். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லவில்லை. என்ன, அவ்வப்போது மலரும் நினைவுகளுக்குச் சென்று விடுகிறார். அவரது மலரும் நினைவுகளின் போது எனக்கு ஒரு மலரும் நினைவு வந்தது. ஒரு ஜோக், நாங்கள் ஸ்கூல் படிக்கும் போது, கிரிக்கெட் ஆடும் போது அடிக்கும் ஜோக்.

83 வேர்ல்ட் கப் ஜெயிச்சதுக்கப்புறம், இந்தியா டீம், வெஸ்ட் இண்டீஸ் டீம் அப்புறம் இங்ஜிலாந்து டீம் எல்லோரும் அமாவாசை இருட்டில் போய்க்கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு பாலம் வந்ததாம். அந்த கும்மிருட்டில் அந்த பாலத்தை கடக்க முடியாமல் மற்ற இரண்டு டீமும் திரும்பிப் போய்விட்டார்களாம். இந்தியா டீம் மட்டும் அந்த பாலத்தைக் கடந்து அக்கரைக்கு வந்தார்களாம் - எப்படி ? விடை இந்த பதிவின் இறுதியில் சொல்கிறேன்.

சில விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்தது. அவர்கள் விளையாடும் காலத்தில் ஃபீல்டிங்க் செய்வதற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்களாம். நமது வேளை பேட்டிங் மற்றும் பௌலிங் என்று சொல்வார்களாம். ஃபீல்டிங் ப்ராக்டீஸ் என்ற விஷயமே கிடையாதாம். முதன் முதலில் ஃபீல்டிங்கின் முக்கியத்துவத்தை டீமுக்கு எடுத்துச் சொன்னவர் கவாஸ்கர் தானாம்.

அதன் பின்னர், ஃபீல்டிங் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர் அமர்நாத் தானாம். அவர் தான் அணியில் பலருக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறார். ஆனால், இன்றளவும் என் நினைவில் இருப்பது கபில் தேவின் கேட்ச் தான் - அமர்நாத்தின் கேட்ச் இல்லை. ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் மீது ஈர்ப்பு ஏற்பட்டதற்கு காரணம் கபில்தேவ் தான்.

எனக்குச் சின்ன வயதிலிருந்தே கபில்தேவ் என்ற வீரர் மீது தனிப்பட்ட மரியாதை. அப்படிக்கூட சொல்ல முடியாது - ஒரு ஐகான் பிம்பம். என் அறையில் கபில்தேவ் ஒற்றைக் காலைத் தூக்கி ஹுக் அடிக்கும்  போஸ்டர் ரொம்ப நாளைக்கு ஒட்டி இருந்தேன். கபில்தேவ் ஆடிய ஆட்டங்களின் கட்டிங்க் நிறைய இருக்கும். கபில்தேவ் இருந்தும் இந்தியா தோற்றுப் போனதை நினைத்து அழுதிருக்கிறேன். அதன் பின் கபில்தேவின் மீது இருந்த கடவுள் பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. நான் குழந்தை தனத்தை வேகமாக இழந்துக் கொண்டிருந்தேன்.


ஸ்போர்ட்ஸ்டாரின் நடுபக்கம் என்று நினைக்கிறேன் அதில் பெரிய கிரிக்கெட் பந்தின் மீது கபில் சாய்ந்திருப்பது போன்ற ஒரு போஸ்டர் இருக்கும் அதை நான் பொக்கிஷமாக வைத்திருந்தேன். எங்கு போனது என்றே தெரியவில்லை. சமிபத்தில் ஒரு கத்தை பொங்கல் வாழ்த்து இடைத்தது - இவை எல்லாம் நான் ஆறாம் வகுப்புக்கு முன்னால் எனக்கு வந்தவை. அதில் 70% கபில்தேவ் படங்கள் தான். 

இப்போதும் பலவருடங்கள் கழித்து கிரிக்கெட் ஆட்டத்தை தலைவருக்காக கேட்கிறேன்.

சரி, இப்போது விடை: இந்தியா டீமிடம் தான் அரியாணா ”அரிக்கேன்” இருக்கிறதே. அதை வைத்துக் கொண்டு தான் அப்பாலத்தை அவர்கள் கடந்தார்கள்.
இந்த விடையைப் படித்தபின்னர் இந்த பின் வரும் வகைகளுள் ஏதேனும் ஒன்றில் தான் நீங்கள் இருப்பீர்கள்.
1) புரியாதவர்கள்: புரியவில்லை என்றால் விடுங்கள். ஒன்றும் குடிமுழுகி போய்விடாது
2) மொக்கை என்று திட்டுபவர்கள்: பின்னே, ஸ்கூல் பசங்க ஜோக் வேற எப்படி இருக்கும் ?
3) சிரிப்பவர்கள்: ஹி ஹி, நீங்க இன்னும் வளரனும் :-)

One response to “சிதறல்கள் - 2”

Sridevi said...

என்னதான் காலேஜ் வேலை என்றாலும் பள்ளி ஞாபகங்கள் தான் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன. மிகவும் ரசிக்கத்தக்க வலைப்பதிவு .

Devi

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman