Adsense

சிதறல்கள் 1


பெரும்பாலும் ஒழுங்கற்றதாகவும் சிதறல்களாகவும் தான் என் எண்ணங்கள் எனக்குத் தோன்றுகின்றன. அவை ஒரு எழுத்து வடிவம் பிடிப்பதற்கு எனக்குப் பல மணி நேரம் பிடிக்கிறது. முன்பெல்லாம் இந்த மணி நேர கணக்கு சில நாட்களுக்கான கணக்காக இருந்ததுண்டு. இப்போது பரவாயில்லை. எனது இயல்பான சிந்தனைப் போக்கே அப்படித்தான் இருக்கின்றது. ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என மனதில் வந்து போகின்றன.

பின்பு, மனம் மிகவும் அமைதியாய் போன ஒரு சமயத்தில் தான் கவனித்தேன். அந்த சிதறல்களில் சில எண்ணங்கள் மிகவும் தொடர்புடையவையாக இருக்கின்றன. ட்விட்டர் நிச்சயம் வசதியாக இல்லை. இந்த சிதறல்களை அப்படியே இங்கு எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன்.

மனதை எப்படி ஒருமுகப்படுத்துவது என்று யாரேனும் அறிவுரை தந்தால் மனதை எப்படி சிதற விடுவது என்று பதில் வகுப்பெடுப்பேன் என்ற எச்சரிக்கையோடு, மேலே...

oO-0-Oo

http://usehipster.com/ என்று ஒரு வலை தளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அந்த முகவரியைத் தட்டினால் அது jobs.usehispster.com என்ற முகவரிக்குத் தான் எடுத்துச் செல்லும். அதில் உங்கள் நண்பர் யாரையாவது வேலைக்கு சிபாரிசு செய்யவோ அல்லது நீங்கள் வேலைக்கு சேர்வதற்கு விண்ணப்பம் செய்யவோ படிவங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வேறு எதுவும் அந்த நிறுவனத்தைப் பற்றியோ அல்லது அந்த  வலைதளத்தைப் பற்றியோ இருக்காது.

உலகத்தில் இருக்கும் தகவல்களை ஒன்றிணைக்கும் வலைதளம் என்று அதன் ஒரு வரி அறிமுகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு வரி அறிமுகமே இவர்கள் ரேஞ்சுக்கு ரொம்ப அதிகம். இதை விட பெரிய காமெடி, இந்த வலைதளம் ஆரம்பித்த விதம். எந்த விதமான தகவலும் கிடையாது. இதை ஆரம்பித்தவர்களில் ஒருவரான Ludlow, ஒரு forumஇல்  இந்த மாதிரி ஒரு செய்தியைத் தந்தார். இவர்கள் ஆரம்பித்த முதல் இரண்டு நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் இதில் பதிந்து கொண்டிருக்கிறார்களாம். சமுக உளவியல் ஆய்வாளர்களுக்கு இதில் மிகப்பெரிய செய்தி இருக்கிறது.

hipster என்றில்லை, தகவல்களை ஒருங்கிணைக்கப் போகும் தளங்கள், இணையத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லப்போகின்றன. Real time data (நிகழ்கால தகவல்கள்) - இவற்றின் மதிப்பு மிக அதிகமாக இருக்கப்போகின்றன. கேட்கும் போது, துல்லியமான, பயனுள்ள, சமகால தகவல்கள் வழங்கப்போகும் செயலிகள் தான் அடுத்த ராஜாக்கள். இதன் அடிப்படையிலேயே Groupon IPO எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக படுகிறது.

oO-0-Oo 

சமிபத்தில் மீள்வாசிப்பில், லயிக்க வைத்த இரண்டு கவிதைகள்.
தேவதச்சனின் கவிதை 1:

சாவாமையின் வரைபடம் கிடைத்துவிட்டது
மேஜையில் விரித்து கையூன்றிப் பார்க்கிறேன்
அருகில்
இரும்பின் பாடலை
பாடிக் கொண்டிருக்கும்
சாவியை
உலோகக்கால மனிதன்
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறான்.
மூடியிருக்கும் தம்ளரில்
பிரளயத் தண்ணீர்
திறந்து வைத்திருக்கிறது, தன்
கடுமையை,
வரைபடத்தின் கோடுகள்
ஊர்ந்து கொண்டும்
ஓடிக் கொண்டுமிருக்கின்றன
எப்படித்தான்
பயணத்தைத் தொடங்குவது
எரிச்சலில்
படத்தைத் தூக்கி
எறிகிறேன்.
தாள்
வெளியிலும்
கோடுகள், என்
தலையிலும் விழுந்து கொண்டிருக்கின்றன.

தேவதச்சன் கவிதை 2:

அவரவர் கைமணலைத் துழாவிக் கொண்டிருந்தோம்
எவரெவர் கை மணலோ இவை என்றேன்
ஆம் எவரெவர் கைமணலோ இவை என்றான்
பிறகு
மணலறக் கைகழுவிவிட்டு
எங்கோ சென்றோம்

--

எவரெவர் கைமணலிலோ அவரவர் பெயரை செதுக்கத் தான் ஆளாய் பறக்கிறோம்.

oO-0-Oo 

கூகிளின் +1 பட்டன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.  உங்கள் வலைதளத்திலோ, பதிவிலோ சேர்க்க விரும்பினால், இந்த சுட்டி உயயோகமாக இருக்கலாம்.
 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman