Adsense

Shutter Island


பாதி தூக்கம் கண்களை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு வெள்ளிக்கிழமை இரவில் தூங்குவதற்கு முன் டீவியில் என்ன படம் போடப்போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்த போது தான் தெரியவந்தது - Shutter Island இன்னும் 10 நிமிடத்தில் துவங்கப்போகிறதென்று. 10 நிமிடம் உட்காரலாம் என்று நினைத்த நான் பின்னர் தூங்கிய போது அதிகாலை 3 30 இருக்கும். படம் முடிந்த பின் படுத்திருக்கும் போதும் இந்த படத்தின் காட்சிகள் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தன - விழித்திருக்கும் போது தோன்றும் ஒரு கனவைப் போல.

மார்ட்டின் ஸ்கார்ஸேஸிக்காக இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன். டி காப்ரியோ தான் கதா நாயகன் என்பது கூட எனக்கு இந்த படம் துவங்கும் முன்பு வரை தெரியாது. இத்திரைப்படத்தைப் பற்றி துளி கூட தகவல்கள் தெரியாத நிலையில் இந்த படத்தைப்பார்த்தது தான் என்னைத் தூங்க விடாமல் செய்தது என்பதை பின்னர் உணர்ந்தேன்.

நான் இது வரை பார்த்த படங்களில் முதல் பத்து சிறந்த திரைப்படங்களுக்கான பட்டியல் தயாரித்தால், சர்வ நிச்சயமாகஇதற்கு ஒரு இடம் உண்டு.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் என்னுடன் உரையாடிக்கொண்டே இருந்தார். படம் முழுவதும் எனக்கும் அவருக்குமான உரையாடல் நீண்டது. மன நோய் காப்பகத்தில் இருந்து தப்பித்த ஒரு பெண்ணைத் தேடுவதற்காக வருகிறான் பார் என்று ஒரு மார்ஷலைக் காண்பித்தார். பின்னர் கடகடவென சில முடிச்சுகளைப் போட்டார்.

ஒரு கோட்டைப் போட்டு இதில் தான் பயணம் என்று சொல்லி என்னை கவனமாக பின் தொடரச் சொன்னார். அந்தப் பயணத்தில் மிகச்சில இடங்களில் லாஜிக் பிழைகள் இருப்பதாக நான் சொன்னேன். அவர் நான் சொன்ன எதையுமே காது கொடுத்துக் கேட்க வில்லை. மேலே கேள் என்று அதட்டிக் கொண்டே இருந்தார். நான் மிக கவனமாக கேட்டேன். உண்மையில் அவர் சொன்னதை அரைகுறை கவனத்தோடு பின் தொடர முடியாது.

அதனால், வாயை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று என்னிடம் அவ்வப்போது கேட்டார். சில இடங்களைத் தவிர மற்றெல்லாம் மிகச் சரி என்று சொன்னேன். கன ஜோர் என்று கை வேறு தட்டினேன். கதையின் முடிவை நெருங்கி விட்டோம் - இப்போது நீ இன்னும் கவனமாக இருக்க வேண்டுமென்றார். நான் ஆமாம் போட்டு பயபக்திக் காட்டினேன்.

அப்போது சொன்னார், ”நான் இது வரை சொன்னவற்றிற்கு தலைகீழானது தான் உண்மை”. இதைச் சொன்ன போது எனக்கு கோபம் வந்தது. என்ன உளறல், அப்படி இருக்கவே முடியாது. நீங்கள் சொன்ன கட்டமைப்பின் படி நீங்கள் சொன்னதெல்லாம் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று சொன்னேன். வேண்டுமானால் நாம் நடந்து வந்த பாதையை நீயே திரும்பிப் பார் என்றார். திரும்பிப் பார்த்தேன். நேரான பாதை என்று நான் வர்ணித்த பாதை மிகவும் அதிகமான வளைவு நெளிவுகளுடன் கூடியதாக சுருண்டு படுத்திருக்கும் ஒரு நீளமான கருநாகப் பாம்பைப் போல காட்சியளித்தது. என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.

எவ்வளவு பெரிய கண்கட்டி வித்தைக்கு நாம் ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்று நான் நினைத்தபடியே நிமிர்ந்தேன். கையில் ஒரு மந்திரக்கோலுடன் ஒரு மந்திரவாதி நின்று கொண்டிருந்தார். யார் நீங்கள் என்று கேட்டேன். நான் தான் உன்னிடம் இது வரை கதை சொல்லிக்கொண்டிருந்த இயக்குனர் என்றார்.

எனக்குத் தலை சுற்றியது. கையிலிருந்த கோலைக் கீழே போட்டு, அந்த பாம்பிடம் ஜாக்கிரதையாக இரு என்றார். ஒரு வேளை அது ஆடாக இருக்கூடிய சாத்தியம் முற்றிலும் நிராகரிக்ககூடிய்தில்லை என்பதால் புல்கட்டை அந்த கோலின் பக்கத்தில் வைத்தேன். எதற்கு வம்பு !

இத்திரைப்படம் என்னை கேலி பேசியதைப் போல் உணர்ந்தேன். ஒரு பார்வையாளனாக, ஒரு திரைப்படத்தை அணுகும் சராசரி மனப்போக்கு மற்றும் பொதுபுத்தி சார்ந்த அனுமானங்கள் அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு இந்த திரைப்படத்தை அணுக வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது.

திரைப்படத்தின் பலம் திரைக்கதை தான். இதைபோல அல்ல - இதில் ஒரு 20% அளவு புத்திசாலித்தனம் இருக்கும் திரைப்படம் தமிழில் வந்தால் கூட போதும். நமக்கு மிகச்சிறந்த பொழுது போக்காக அது அமையும்.


மிகச்சிறிய ஒரு டயலாக். Why are you so wet, Baby. இந்த டயலாக் இரண்டு முறை வருகிறது. இரண்டு முறையும் பேசப்படும் போது அது கதையில் போக்கை எப்படி பார்வையாளருக்கு உணர்த்துகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் இறுதியில் பென் கிங்க்ஸ்லி இந்த டயலாக்கை சொல்லும் போது, தூக்கி வாரிப் போடுகிறது. ஏனெனில்  உண்மை இந்த இடத்தில் தான் வெளிவரத்துவங்குகிறது.

இந்தப்படத்தை நான் இரண்டாவது முறையும் பார்த்தேன். இறுதியில் உண்மை தெரிந்த பின்னர் மீண்டும் ஒவ்வொரு காட்சியையும் பார்க்கும் போதும், இயக்குனர் சொன்னது சரி என்று தோன்றியது.

பென் கிங்க்ஸ்லீயைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது மேக்ஸ் சிடோ வருகிறார். இவரைப் பற்றி செவன்த் சீல் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற dark plotsகளுக்கு மார்ட்டின் ஸ்கார்சேசியை அடித்துக் கொள்ள ஆளில்லை என்பது என் திண்ணமான நம்பிக்கை.


கீழே இருக்கும் வீடியோவில் கையிலிருக்கும்  டோலொரெஸ் கையிலிருக்கும் மதுபானப்புட்டி திடிரெண்று மறைந்தது இயக்குனரின் தவறில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது தான் கதையின் ஆதார முடிச்சுகளுள் ஒன்று. முதல் முறை நான் பார்க்கும் போது இதையெல்லாம் தவறு என்று பைத்தியக்காரத்தனமாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.


இந்த படம் எந்த ஆஸ்கர் விருதும் வாங்கவில்லை. சென்ற வருடத்தின் போட்டி அந்த மாதிரி. சென்ற வருடம் ஆஸ்கர் வாங்கிய ஹர்ட் லாக்கர் கூட என்னை இந்த அளவு பாதிக்கவில்லை. அற்புதமான படம். இன்னும் நான் இன்ஸெப்ஷன் பார்க்க வில்லை.

இந்த படத்தின் காட்சி விவரிப்பிற்கோ, கதை போக்கையோ பற்றிச் சொல்வது போன்ற மகா பாவம் உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது. ஒரு வேளை நீங்கள் இதை இன்னும் பார்க்கவில்லையென்றால் இதை அவசியம் பார்க்க வேண்டும் என சிபாரிசு செய்கிறேன்.

No response to “Shutter Island”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman