Adsense

மணி பஞ்சர் கடை


செல்வம் முடிதிருத்தகத்தில் முடி திருத்தும் பணியில் ஈடுபடும் எல்லோரையும் செல்வம் என்று எப்படி நினைக்கலாமோ அதேபோல மணி பஞ்சர் கடையில் பஞ்சர் ஒட்டும் 76 வயது காரருக்கு மணி என்ற பெயர் தான் இருக்கும் என்று அனுமானிக்கலாம்.

”சார், காத்து புடிக்கனும்”
”சாப்ட வாணாம், போய்ட்டு அப்றம் வா”
முதன் முதலில் அவரிடம் சைக்கிளில் காத்து பிடிக்க சென்ற போது அடித்து துரத்தாத குறையாக விரட்டி விட்டார்.

இரண்டாவது முறை சென்ற போது, இன்னும் கொஞ்சம் பவ்யம் கூட்டினேன்.

”சார், காத்து புடிக்க முடியுமா”
“காத்து புடிக்க முடியலைனா, பம்பு எதுக்கு வைச்சிருக்கேன்”
என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பவ்யமாக நின்று கொண்டு சரியாக 3 ரூபாய் சில்லறையாக கொடுத்து விட்டு நகர்ந்து விட்டேன்.

ஒரு முறை இரண்டு முறை அல்ல, எப்போது போனாலும் சிடுசிடுப்பு அவரிடம் குடியிருக்கும் - எந்த வேளை சென்றாலும். அவர் யாரிடமாவது சிரித்து பேசுவாறா என்று யோசித்ததுண்டு.

சில சமயம் 2-3 மணியளவில், கட்டம் கட்டி கடை வாசலில், ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் போது கை கொட்டி கொக்கறிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இரவு மணி 7 30க்கு ஒரு முறை போன போது கொஞ்சமே பேசினார்.
” என்ன, கடை அடைக்கற நேரத்தில் வந்திருக்க. ஒனக்கா ராப்பூரம் கடை தொறந்து வெச்சிருப்பேனா. அவனவன் 9 டு 5 தான் வேலை செய்யறான். எப்படி வாலறான் தெரியுமா. 60 வருஷமா இதே தேவ்டியா பொயப்பு - நாய் மாரி வேலை செஞ்சும் சொந்தமா எதுவும் கெட்யாது - தோ சந்துரு, மெஷின் போட்டு காத்து புடிக்கறான். ரெண்டு கடை போட்டுட்டான்”

அப்போது தான் கொஞ்சமே பிடிபட்டார், மனிதர். பெரிய சேமிப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. காக்கி அரைடிராயரும், மஞ்சள் நிற பனியனும் தவிர வேறு எதுவும் அணிந்து பார்த்ததில்லை. எல்லோரும் மோட்டார் போட்டு எளிதாக காத்து பிடிக்கும் போது, தான் மட்டும் இன்னும் பம்ப் வைத்து காத்து பிடிக்கிறோம் என்ற கையாலாகதத்தனம். இப்படிப்பட்ட ஆளுமையிடம் உலகத்தின் மீதும் அதன் மனிதர்கள் மீதான வெறுப்பைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

சமுக ஓட்டத்தில் விரைவாக நீந்த முடியாதவர்கள், சாமர்த்தியம் இல்லதவர்கள், திறன் குறைந்தவர்கள் இப்படி தேங்கி விடுவது துரதிருஷ்டவசமானது தான். அவர்களது வயதோதிகம் இன்னும் மோசம். இந்தியா மட்டுமல்ல. உலகளாவிய பிரச்சனை. பகவத் கீதையில் ஆரம்பித்து, எய்ன் ராண்ட் வழியாக ஆயிரம் மேற்கோள்கள் காட்டலாம். ஆனால் இந்த பிரச்சனையை அவை எதுவும் தீர்க்காது.

இது போன்ற சிறு/ குறு தொழில்கள் செய்வர்களுக்கான காப்பீடு/ ஓய்வூதியம் போன்ற விஷயங்கள் மூலம் ஏதேனும் சிறிய அளவில் தீர்வு ஏற்படலாம். ஆனால் அவை குறித்து அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது/ இருக்கும் என்று சரியாக தெரியவில்லை.

இப்போதைக்கு, என்னால் செய்ய முடிந்த ஒரே உதவி, அவரிடமே  தொடர்ந்து காத்து பிடிப்பது.

No response to “மணி பஞ்சர் கடை”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman