Adsense

ஆடுகளம் - விவரிப்பின் அழகில் மறைந்து போகும் ஆட்டம்


முன்பை விட இப்போதெல்லாம் தமிழ் சினிமா பார்ப்பது மிகவும் குறைந்து போய்விட்டது. இப்போது வரும் கதாநாயகிகள் யாரென்று தெரியவில்லை என்ற உண்மையைச் சொன்னால், வயதாகி விட்டதை கண்டுபிடித்து விடுகிறார்கள் :) அவசரமாக தமிழ் சினிமா பற்றிய ஒரு பதிவு எழுதிவிடுதாக கைகளை மடித்துக் கொண்டு செயலில் இறங்கி விட்டேன்.

அமெரிக்காவிலிருந்து வந்த நண்பன் புண்ணியத்தில் சமிபத்தில் பார்த்த ஒரே படம் ஆடுகளம். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லை. தியேட்டருக்குப் போகும் முன் “ஹையய்யோ” பாட்டு தான் ஒரே விலாசமாக இருந்தது. இந்த பாட்டை லூப்பில் போட்டு கேட்டுக் கொண்டு இருக்கின்றேன், இன்னமும்.

இன்னுமொரு மதுரைப் படம் - அக்குளை சொறிந்து கொண்டு வரும் பரட்டைத் தலையர்கள் எண்ணெய் வடிவும் முகத்தோடு வந்து சண்டித் தணம் செய்து விட்டு அரிவாள் வீசுவார்கள் என்று எதிர்பார்த்து தான் திரைப்படத்திற்குச் சென்றேன். சுவாரஸ்யமான ஆச்சர்யம் காத்திருந்தது.

சேவல் சண்டையை மையமாக வைத்து விரிக்கப்படுகிறது ஒரு களம். அந்த களத்தில் ஆடுவது சேவல்களல்ல, ஆடுபவை மனித மனங்களின் விகாரங்கள். மனிதர்களின் கௌரவத்தின் பிரதிநிதியாக, அனுபவத்தின் பிம்பமாக, வாழ்வின் அர்த்தமாக, கனவுகளின் வடிவமாக பல பரிமாணங்களில் களத்தில் இறக்கபடுகின்றன சேவல்கள். விசித்திரமான போட்டி. வெற்றியும் தோல்வியும் ஆட்டக்காரர்களுக்கள்ள, ஆட்டத்தை இயக்குபவர்களுக்கு. உருட்டி விடப்பட்ட உயிருள்ள பகடைக் காய்கள், அந்த சேவல்கள். வெற்றியில் கொக்கரிப்பதும், தோல்வியில் புழுங்குவதும் பகடையை உருட்டுபவர்களே, சேவல்களல்ல.

முதல் பாதி முழுவதும் கள விவரிப்பு தான். அந்த விவரிப்பின் ஊடாக படத்தின் மைய ஓட்டமாக நிகழும் ஆட்டத்தைக் காட்ட விரும்பியிருக்கிறார் இயக்குனர். திரைப்படத்தின் முக்கியமான பகுதி இடைவேளைக்கு பின்பான, இரண்டாவது பகுதி தான். ஆனால், துரதிருஷ்டவசமாக முதல் பாதியில் இருக்கும் கள விவரிப்பில் இரண்டாம் பாதியின் அழகு மறைந்து போகிறது.

இரண்டாம் பாதியை அணுக மிகவும் உதவியாக இருப்பது, முதல் பாதியில் வழங்கப்படும் இந்த கள விவரிப்பு தான் என்பது மறுக்க முடியாத உண்மை. சேவல் சண்டைகளின் தன்மைகளை விவரித்தபின், மனிதர்கள் ஆடும் ஆட்டத்தை காட்டியிருப்பது கனத்தை அதிகரிக்கிறது. முதல் பாதியின் விவரிப்பு இல்லாவிடில், இது இன்னுமொரு குரோதத்தைப் பற்றிய கதையாக மாறியிருக்கும். இரண்டாவது பகுதி, சேவல்களைத் தாண்டி செல்லாவிடில் இந்த திரைப்படம் இன்னுமொரு விளையாட்டைப் பற்றிய திரைப்படமாகி நீர்த்துப் போயிருக்கும். இரண்டையும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்க வைத்தது தான், இயக்குனரின் முதிர்ச்சி. ஒரு தேர்ந்த கதை சொல்லி, சொல்ல வேண்டிய விஷயங்களை விட புரிய வேண்டிய விஷயங்களிலே கவனம் செலுத்துவான். இந்த திரைப்படத்திலும் அதுவே நடந்திருக்கிறது.

முதல் பாதியில் களத்தை இயக்கியவர்கள், இரண்டாம் பாதியில் சேவல்களாக மாறிப்போகின்றனர். மனிதர்களாலான அந்த புதிய களத்தை இயக்குபவர், பேட்டைக்காரன். ஒரு கட்டத்தில் இயக்குபவனும் சேவலாகிப் போகிறான் (தோற்ற சேவலுக்கு நேருவதையே தனக்கும் தண்டனையாக கொடுத்துக் கொள்கிறான் - கழுத்தை அறுத்துக் கொண்டு இறக்கிறான்). அந்த கட்டம், இயக்கப்பட்ட சேவல் ஆட்டத்தின் சூட்சுமத்தைப் புரிந்துக் கொண்டு இயக்கியவனின் மீது பாயும் தருணம். இயக்குபவன்/ சேவல் என்ற வரையறைகள் அறுந்து, சேவல்களால் ஆன களத்திற்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம்.

இக்குறியீடுகளாலும், படிமங்களாலும்  நிறைந்திருக்கிறது இப்படம்.ஆனால் கவனச்சிதறல்களும் அதிகம். ஐரின் கதாப்பாத்திரம் இந்த படத்திற்கு எதற்கு ? பேட்டைக்காரனின் இளம் மனைவி எதற்கு? ஏறக்குறைய 20-30 நிமிடங்கள் இக்கவன சிதறல்களில் கழிந்து விடுகிறது. அதனாலோ என்னவோ, நிறைவாகத் தோன்ற வேண்டிய சில தருணங்கள் சொல்லப்படாமலே விட்டுவிட்டது போல தோன்றுகிறது. உதாரணத்திற்கு பேட்டைக்காரன் இறந்தபின்னர், கொலைப்பழியுடன் கருப்பு -ஐரின் ஜோடி ஊரைவிட்டுப் போகும் சம்பவம் சினிமாத்தனமான முடிவு. ஒரே வார்த்தையில் காயப்பட்டு பேட்டைக்காரனின் மனைவி ரோஷத்தோடு சென்று விடுகிறாள் - பேட்டைக்காரன் அதன் பிறகு எதுவுமே செய்யவில்லை. பேட்டைக்காரனின் வன்மம், மிகவும் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது - அவ்வளவு உக்கிரமான வன்மம் கொண்டவனுக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் இருந்திருக்க வேண்டும். இந்த படத்தின் protagonist என்றால் அது பேட்டைக்காரன் தான். மிகவும் நிறைவாக செதுக்கப்பட்ட பாத்திரம் அது. ஆனால் போதுமான அளவு, காட்சிகள் ஒதுக்கப்படாத கதாபாத்திரமும் அது தான்.

மற்ற படங்களிலிருந்து இந்த படம் வித்தியாசப்படுவதற்கு காரணம் என்று நான் நினைப்பது இரண்டு விஷயங்கள்
1) இரண்டு திரைக் கருக்களை எடுத்துக் கொண்டு அவற்றை பின்னிய விதம். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி இரண்டுமே ஒரு தனி திரைப்படமாக எடுக்கக்கூடிய அளவு சரக்குடையவை. ஆனால் அவை பின்னப்பட்டிருப்பதால், பார்வையாளன், திரைப்படம் இயங்கும் வெளியை மிகவும் அற்புதமாக உணர்ந்து கொள்ள முடிகிறது
2) யாரும் தொடாத சேவல் சண்டையை இந்த அளவிற்கு நுணுக்கமான தகவல்களோடு அறிமுகப்படுத்தியிருப்பது.

மிகவும் எதார்த்தமான, வெள்ளந்தியான கதாபாத்திரம் தணுஷுக்கு. மிக மிக இயல்பாக இருக்கிறார் மனிதர். கவிஞர் ஜெயபாலன் மிரட்டுகிறார். நிச்சயம் வேறு யாரும் இந்த அளவிற்கு இக்கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்க முடியாதென்று நான் நம்புகிறேன். காட்சிகள் செல்லச் செல்ல தணுஷும், ஜெயபாலனையும் தவிர வேறு யாரையும் அந்தந்த கதாபாத்திரங்களில் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இருவருக்கும் ஏதேனும் விருது கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.  அந்த கரகர குரல் கனகச்சிதம்.

எப்போதும் சொல்வதையே தான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது - Almost there, yet so far.

No response to “ஆடுகளம் - விவரிப்பின் அழகில் மறைந்து போகும் ஆட்டம்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman