Adsense

புத்தக வாடகை சேவை



நான் ஒரு புதிய சேவையை துவக்கியுள்ளேன் அது பற்றிய அறிமுகப் பதிவு இது. முதல் மற்றும் முக்கியமான விஷயம் - இது லாப நோக்கில் நடத்தப்படும் வியாபாரமல்ல.

என்னுடைய சிறிய நூலகத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே. இது போல இன்னும் நிறைய பேர் தங்கள் நூலகங்களைப் பகிர்ந்து கொண்டால் இந்த உலகத்தில் சிறந்த நூல்களை தடையற்று கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. 

இதே போல இன்னும் பலரும் தங்கள் நூலகங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் - அப்படி செய்தால் ஒரு மிகப்பெரிய புத்தக வலையை ஏற்படுத்தலாம். அந்த வலையில் மிகவும் தரமான புத்தகங்கள் எளிமையாக கிடைக்கும். 

அவரவர் ரசனைக்கேற்ப first hand review-உடன் நூல்கள் கிடைக்கும். ஒரு மிகப்பெரிய virtual book club உருவாகும். கொஞ்சம் அதிகப்படியான கற்பனை தான் :-)


இதை செய்ய வேண்டும் என்று ஆசையாக வெளிப்படுத்தாமல் முதல் கல்லை நானே நகர்த்த விரும்பினேன். அதன் விளைவு தான் இந்த சேவை.




என்ன மாதிரியான புத்தகங்கள்

இந்த சேவையில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் என்னுடைய சிறிய நூலகத்தில் இருப்பவை. என்னுடைய ஆன்மிக புத்தகங்களையும், நான் படித்து கிழித்த (Ayn Ran நாவல்கள் பக்கம் பக்கமாக இருக்கின்றன) நாவல்களையும், நான் தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் அதையும் செய்யலாம்.

இந்த புத்தகங்கள் என் ரசணை சார்ந்தவை - அதனால் உங்களுக்குத் தேவையான எல்லா புத்தகங்களும் இங்கே கிடைக்கும் என்ற உத்திரவாதத்தை நான் தர முடியாது. ஆனால் என் ரசணை விரிய விரிய அது உங்களுக்கும் கிடைக்கும்.


Modus Operandi என்ன
இதற்கும் பிற வாடகை நூல் நிலையங்களுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் - நீங்கள் முன்பணம் (Advance Deposit) எதுவும் தர தேவையில்லை. வாடகை மட்டும் தந்தால் போதும். அதுவும் மிகவும் குறைந்த வாடகை. இதற்கு கீழ் வேறெங்கும் கிடைக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

யாராவது ஏமாற்றி விட்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள் ? என் அனுபவத்தில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஒழுங்காக புத்தகத்தை திருப்பி தந்து விடுகின்றனர்.  மிக நல்ல புத்தகங்களில் சிலவற்றை கடனாக கொடுத்து திரும்பி கிடைக்காமல் ஏமாந்த அனுபவமும் எனக்கு உண்டு. Holy blood holy grail அந்த வகையில் ஒன்று.

மீதி இருக்கும் ஒரு பங்கின் மீது கவனம் செலுத்தி இரண்டு பங்கு மக்களை அவமானப்படுத்துவானேன் ?

வாடகையும் குறைவாக இருக்க காரணம் - இது லாப நோக்கில் செய்யப்படுவது அல்ல. நிறைய பேருக்கு நிறைய புத்தகம் எளிதாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  அதற்கான சாத்தியக்கூறுகளும் நிச்சயம் இருக்கவே செய்கின்றன என நான் நம்புவதால் இந்த சோதனை முயற்சி.


புத்தகம் இருக்கிறதா இல்லையா என்பது போன்ற தகவல்களை நீங்கள் இணையத்திலேயே பார்த்துக் கொள்ளலாம். என்னை மின்னஞ்சலிலோ, ட்விட்டரிலோ தொடர்பு கொள்ளலாம். நான் சென்னையில் இருப்பதால் இந்த சேவை தற்போது சென்னையில் மட்டுமே - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது :-)


புத்தகத்தை பரிமாறிக்கொள்ள நாம் நேரில் தான் சந்திக்க வேண்டும் (இல்லாவிட்டால் சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் ஆகிவிடும்). தவிர்க்க முடியாத காலத்தில் போஸ்டலிலோ கூரியரிலோ அனுப்பலாம். தப்பில்லை.

சென்னை அடையாறு, பெசண்ட் நகர் பகுதிகளில் இருப்பவர்களுக்கு வார இறுதியில் door delivery என்னால் செய்ய முடியும். பிற பகுதி மக்கள் என்னைத் தேடி தான் வர வேண்டும் - இல்லையேல் ஒரு பொது இடம் :-) வேறு வழியில்லை.

இந்த சேவையில் உங்களுக்கு புத்தகத்தை கொடுக்கவோ மறுக்கவோ எனக்கு முழு உரிமையும் உண்டு - புத்தகங்களை நல்ல முறையில் திருப்பித் தரும் கடமை உங்களுக்கு. அப்படி செய்யாவிட்டால் இரண்டாவது முறை என்னிடம் புத்தகத்தை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் :-)

பார்ப்போம் - இதை எவ்வளவு தூரம் செய்ய முடிகிறதென்று. இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி.

கூகிளும் சைனாவும்


இந்த புது வருடத்தின் தகவல் தொழில் நுட்பத்துறையின் முக்கிய நிகழ்வு “கூகிள் சைனா” சண்டை.

இந்த பிரச்சணைக்கு சில கோணங்கள் இருக்கின்றன. இன்றைய அனலிஸ்டுகள் முதல் துறை வல்லுனர்கள் வரை பல்வேறு காரணங்களை (நேரடி மற்றும் மறைமுக) இந்த பிரச்சணைக்கு சொல்கின்றனர்.

பைடுவுடன் போட்டி போட்டு கூகிளால் சைனாவில் ஜெயிக்க முடியாது என்று கூகிளுக்கு தெரிந்ததால் தான் இந்த பிரச்சனையை கூகிள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவ்வகை காரணங்களில் முக்கியமான ஒன்று. கொஞ்சம் ஒத்துக் கொள்ள முடியவில்லை. பிங்-இற்கு அமெரிக்காவில் என்ன மார்க்கெட் ஷேர் இருக்கிறதோ அதை விட அதிக ஷேர் சைனாவில் கூகிளுக்கு இருக்கிறது (ஏறக்குறைய 35 % - பைடு தான் சைனாவில் தேடுதல் துறையில் முன்னோடி) . அதைவிட முக்கியமான விஷயம் கடந்த சில காலாண்டுகளில் நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறது கூகிள். ஆகையால் தோல்வி பயத்தால் கூகிள் வெளியேற முயற்சி செய்கிறது என்பது, தகவல்களின் அடிப்படையில் நிறுபிக்கக்கூடிய சங்கதியாக தெரியவில்லை. வளர்ச்சி பாதையில் இருக்கும் இந்த சமயத்தில் சைனாவை விட்டு கூகிள் வெளியேறும் திட்டம் கூகிளுக்கு பெரிய இழப்பாக இருக்கக்கூடும்.

சைனா ஒரு மிகப்பெரிய சந்தை. அந்த சந்தையில் இரண்டாவது இடத்தில் இருப்பது கூட கூகிளின் கஜானாவிற்கு மிகவும் முக்கியம். இந்த முடிவு தேடுதல் துறையில் மட்டும் தானா அல்லது இன்னொறு முக்கியமான துறையான செல்போன் துறையிலுமா என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கிறது. ஒருவேளை ஆண்ட்ராய்ட் போன்கள் சைனாவில் விற்க அதிக வரி செலுத்த வேண்டும் என்பது போன்ற entry barrier-களை சைனா அரசு எதிர்காலத்தில் உருவாக்கக்கூடும். இந்தியாவைப் போல செல்போன்களுக்கான சந்தையும் மிகப்பெரியதாக இருக்கும் இந்த தேசத்தில் புதிதாக செல்போன்கள் செக்டாரிலும் காலடி பதித்திருக்கும் கூகிள் சைனாவை விட்டு வெளியேறுவது என்ற முடிவு நிச்சயம் அவசரத்தில் எடுக்கக்கூடியது அல்ல.

சரி, எதற்காக இந்த தலைப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். சைனாவில் யாரேனும் தேடுதல் துறையில் சேவை வழங்க வேண்டுமென்றால் அவர்கள் சைனா அரசு சொல்லும் சில வலைதளங்களை தேடல் முடிவாக காட்டக்கூடாது, சில குறி சொற்களுக்கு ஒழுங்கான விடை அளிக்கக்கூடாது - இப்படி சில கட்டுபாடுகள் இருக்கின்றன. இது அனைத்திற்கு ஒத்துக் கொண்டு தான் கூகிள் இந்த துறையில் சைனாவில் காலடி பதித்தது. இந்த நிலையில், சென்ற வாரத்தில் கூகிள் தனது official blog-இல் ”சைனாவுக்கான புதிய அணுகுமுறை” என்ற தலைப்பில் இந்த பிரச்சனைக்கான பிண்ணனியை விவரித்தது. சைனாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களின் கூகிள் ஐடிகள் hack செய்யப்படுவதற்கான முயற்சி நடந்திருக்கிறது. கூகிள் hack செய்யப்பட்டது என்று ஒத்துக் கொள்ளவில்லை. முயற்சி நடந்திருக்கின்றது என்றும் hackers-ஆல் பயனர்களின் email account பற்றிய தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது என்றும் மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்தை யாரும் நெருங்க முடியவில்லை என்று கூகிள் தெரிவித்திருக்கிறது. இது மட்டுமின்றி கூகிளின் சிஸ்டங்களையும் நெருங்க முன்னேறிய சைபர் தாக்குதல் ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது என்று கூகிள் தெரிவித்திருக்கிறது.

இதில் என்ன காமெடி என்றால் இது போன்ற ஒரு தாக்குதல் கூகிளுக்கு மட்டுமல்ல, யாஹூ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த தாக்குதல் பற்றி கூகிளைத் தவிர யாரும் மூச்சு விட வில்லை. இது போல ஒரு விஷயம் நடந்திருக்கிறது - ஜாக்கிரதை என்று அறிவுறுத்த யாஹூவை கூகிள் தொடர்பு கொண்ட போது தாங்களும் தாக்கப்பட்டோம் என்று யாஹூ சொல்லியிருக்கிறது. ஆனால் வெளியே சொல்லவில்லை - இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான் ! யாஹூவுக்கு எந்த அளவுக்கு சேதாரம் என்ற தகவல் நமக்குத் தெரியவில்லை. செக்யூரிட்டியை compromise செய்து கொண்டு எப்படி தொடர்ந்து சேவை வழங்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் கூகிளின் நிலையுடன் தாம் ஒத்துப்போவதாக யாஹூ தெரிவித்திருக்கிறது - தானே முன்னின்று எதிர்ப்பை காட்டவில்லை. யாஹூவைப் பொறுத்தவரை அவர்கள் சைனாவில் அலிபாபா என்ற நிறுவனத்தின் வழியாகத் தான் இயங்குகிறார்கள் (40 % stake in Alibaba). யாஹூவின் மின்னஞ்சல் முதலான சேவைகள் எல்லாம் Alibaba வழியாகத் தான் வழங்கப்படுகின்றன.

இது சைனா அரசின் அதிகார போக்கின் அடையாளம் மட்டுமன்றி மனித உரிமையை எந்த அளவுக்கு சைனா அரசு மதிக்கிறது என்பதின் வெளிப்பாடு என்பது கூகிளின் குற்றச்சாட்டு - இந்த தாக்குதல் சைனா அரசாலே நேரடியாக நடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சைனாவின் ஆதரவோடு சில வெளி அமைப்புகள் கூட நிகழ்த்தியிருக்கலாம். அந்த தகவல் குறித்த முடிவான நிலை தெரியவில்லை.

வெளிப்படையாக பேசி, சைனா என்ற மிகப்பெரிய மார்க்கெட்டை யாரும் இழக்க விரும்பவில்லை. இந்த மார்க்கெட்டில் கீழ் நிலையில் இருந்தால் கூட அதன் வால்யூம் துருக்கி போன்ற ஒரு தேசத்தில் முதண்மையாக இருக்கும் வால்யூமைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும். ஆகையால் கட்டுபாடுகளை ஏற்றுக் கொண்டு பிசினஸை தொடர்ந்து கொண்டிருக்கின்றன அமெரிக்க நிறுவனங்கள்.

இந்த சூழ்நிலையில் என்னுடைய யூகம் (yes just guessing) கூகிள் நிச்சயம் சைனாவை விட்டு முழுமையாக வெளியேறாது. தேடுதல் பொறியில் வடிகட்டியை எடுத்திவிடப்போகிறேன் என்று மிரட்டினாலும் கூகிளால் சைனாவை மற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பணிய வைத்து விட முடியாது.

சைனா அரசை எதிர்க்க கூகிள் என்ற நிறுவனத்தால் முடியாது. ஒரு வேளை, அமெரிக்க இணைய நிறுவனங்கள் அணைத்தும் சேர்ந்து சைனா எங்களுக்கு தேவையில்லை என்று முடிவு செய்து சண்டை போட்டால் சைனா அரசு இரண்டு படிகள் இறங்கி வரும். அப்பொழுதும் சரணடையாது - தேவையுமில்லை. ஏனென்றால், ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான தொழில் நுட்பங்களை ஓரளவுக்காவது சைனா உருவி இருக்கும். மைக்ரோசாஃப்ட்டும் யாஹூவும் சைனாவை காலி செய்யும் எண்ணமே இல்லை என்று ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டன. அந்த நிலையில் இவர்கள் இருவரும் கூகிள் பின்னால் ஒளிந்து கொண்டு தேடுதல் துறையில் வடிகட்டாமல் இருக்க negotiate செய்வார்களே அன்றி நேரடியாக களத்தில் குதிக்க மாட்டார்கள்.

இந்த சிக்கல் அமெரிக்க நிறுவனக்களுக்கு சாதகமாக மாற அமெரிக்க அரசு தலையிட்டு சைனாவுடன் bilateral trade agreement எதாவது ஏற்படுத்திக் கொள்ளலாம் - ஏனென்றால் சைனாவின் உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் அமெரிக்க நிறுவனங்கள். ஆனால் இந்த கணிப்பெல்லாம் நடைமுறையில் வர பெரு முயற்சி வேண்டும். அமெரிக்க அரசை தன் பக்கம் இழுக்க கூகிள் லாபி செய்ய வேண்டியிருக்கும். கூகிள் என்ற ஒரு நிறுவனத்திற்காக அமெரிக்க அரசு வரிந்து கட்டிக் கொண்டு ஓடி வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்த சிக்கல் இந்தியாவிற்கு ஒரு மிக சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்திய அரசு கூகிளை மேலும் அதிக முதலீட்டிற்கு கவர இது ஒரு சரியான வாய்ப்பு - இந்த தகவல் கட்டமைப்பை வலுப்படுத்தவும், Rural computing மற்றும் Egovernance-ஐ வலுப்படுத்தவும் கூகிளின் தொழில் நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் - இவற்றை இன்னும் அதிகமாக negotiate செய்ய இந்த அரசுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அரசு இந்த சிக்கல் ஒரு முடிவுக்கு வர காத்திருக்கலாம்.

இது குறித்து பேச இன்னும் ஒரு விஷயம் இருக்கின்றது
1) மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ போல அமைதியாக கூகிள் இருந்தால் என்ன நஷ்டம்?

இது குறித்து முடிந்தால் பிறகு எழுதுகிறேன்.

பெய்யென பெய்யும் மழை


சமிபத்தில் சினாக்காரர்கள் தட்பவெட்ப மாறுதலை ஏற்படுத்தும் ஆராய்சியின் அடுத்த கட்டமாக இந்த வருடம் கிடைக்க வேண்டிய அளவைக் காட்டிலும் அதிகமாக பெய்ஜிங்கில் பனி (மழை) பொழிய வைத்திருக்கிறார்கள். சில்வர் அயோடைட் என்ற ரசாயணத்தை மேகங்களில் தூவுவதன் மூலம் வீழ்படிவு ஏற்படுத்தி மழையை கொண்டு வந்திருக்கின்றனர். எதிர்காலத்தில் தோன்றக்கூடிய தண்ணீர் பஞ்சத்திற்கு இது போன்ற ஆராய்ச்சி முயற்சிகள் பெருமளவு உதவியாக இருக்கக்கூடும்.

கொஞசம் கொஞ்சமாக இயற்கையை கட்டுப்படுத்த மனிதன் அறிவியலின் வாயிலாக தெரிந்து கொள்வது சிலருக்கு கவலையளித்தாலும் அப்படி கட்டுப்படுத்த முயல்வது இயல்பே என்று தோன்றுகிறது. இயற்கையின் சூக்‌ஷ்மங்களை தெரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கும் கிடைத்தேயிருக்க வேண்டிய சக்தி தான். இயற்கை நாம் அறிந்து கொள்ள முடியாதபடி மறைத்து வைக்க வேண்டிய விஷயங்களை வெளிப்படுத்துவதே இல்லை. பெரும்பாலும் அதிகமாக சோதித்து விட்டு போனால் போகிறது தெரிந்து கொள் என்று கொடுத்து விடுகிறது. ஹிந்து தொன்மங்களிலும் உலகின் பல தொன்மங்களிலும் இது போல இயற்கையை கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதர்கள் (அல்லது தேவதூதர்கள் அல்லது அவதாரங்கள்) பற்றிய குறிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை வெற்று கற்பனைகள் என்று புறம் தள்ளலாம் - மிகவும் எளிதாக. எய்ன்ஸ்டினைக் கேட்டால் “கற்பனையே அறிவைவிட மிகவும் சக்திவாய்ந்தது” என்பார். காரணம் இல்லாமல் இல்லை. அறிவு நம்மை சுற்றி இருப்பதை நாம் உணரும் படி செய்கிறது - கற்பனை எதிர்காலத்தை பற்றிய சாத்தியத்தை உண்டாக்குகிறது. அறிவு நமது அனுபவங்களின் வாயிலாகவும், பிறரின் அனுபவங்கள வாயிலாகவும் நாம் சேகரித்து வைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் உருவாக்கிக் கொள்வது. கற்க முடியும் (learn) கற்றதை மறக்கவும் (unlearn) முடியும். Unimagine என்பதே ஒரு போலியான சொல். ஒர் விஷயத்தை unimaginable என்று சொல்லும் போதே அதைப் பற்றி கொஞ்சமாவது கற்பனை செய்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம் அதாவது அதைப் பற்றிய ஒரு கோட்டோவியமாவது மனதில் தோன்றி விடும். அது தான் மனதின் சக்தி.

சரி, ஒரு எளிய புதிர்: பல்வீந்தர் சிங் ஒரு நாள் யாருமற்ற தன் வீட்டில் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் வீட்டிற்கு திருடர்கள் நுழைந்து அவன் கண் எதிரிலேயே பீரோவைத் திறந்து அவனுக்கு சொந்தமான நகைகளை கொள்ளை அடித்தனர். அதை பார்த்தபடியே இருந்த பல்வீந்தர் அவர்களை தடுக்கவோ "திருடன், திருடன்” என்று கத்தியோ கூப்பாடு போடவில்லை. மாறாக அவர்கள் செய்வதையே வேடிக்கை பார்த்தபடி இருந்தான். திருடர்களும் தங்கள் வேலையை முடித்து விட்டு தங்களை தொந்தரவு செய்யாத பல்வீந்தரையும் எதுவும் செய்யாமல் சென்று விட்டனர். தன் சொத்து கொள்ளை போகும் அந்த தருணத்திலும் பல்வீந்தர் ஏன் திருடர்களை தடுக்கவில்லை ? விடை இறுதியில்.

சில சமயங்களில் எனக்கு தொன்மங்களில் மனித இனத்துக்கு தேவையான குறிப்புகள் எல்லாமே இருக்கின்றனவோ என்று தோன்றும். அதை யாரும் ஆராய்ச்சி செய்து எடுக்க வழிதான் இல்லை. இந்த மழை ஆராய்ச்சியையே எடுத்துக் கொள்ளுங்கள் - ஒரு வேளை மழைவேண்டி வருண பகவானுக்கு அந்த கால ரிஷிகள் செய்த யாகமென்பது இது போல ஒரு cloud seeding technique தானோ. ஹோமம் வளர்த்து அவர்கள் அக்னியில் ஆஹுதியாக அளித்த பொருட்களால் மேலெழும்பிய புகையில் இருந்ததெல்லாம் வீழ்படிவை அதிகரிக்கும் ரசாயணங்களோ ? இருக்கலாம் - இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இருக்கலாம் என்ற கோணத்தில் யோசித்தால் அறிவியல் புனைவு எழுதத் தோன்றுகிறது. Multiple universe, தோன்றி-மறைந்து-பின் மீண்டும் தோன்றும் தன்மை கொண்டது பிரபஞ்சம் என்று பிரபஞ்சத்தைப் பற்றியும் யோசித்த ஒரு சமுதாயத்திற்கு இயற்கையை மிகக் கொஞ்சமாகவாவது மாற்றும் ஆற்றல் இருந்திருக்கும் என்பதை நம்ப சவுகரியமாயிருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை எடுத்து பத்திரப்படுத்தும் பத்தாம் பசலித்தனத்துக்கும் stem cell ஆராய்ச்சிக்கும் இருக்கும் விட்ட குறை தொட்ட குறை ஒற்றுமை speculate செய்யவே தோன்றுகிறது. மறுபிறவி குறித்த குறிப்புகளும் மனிதன் இறப்பதில்லை அவன் பேரண்டத்துடன் கலந்து விடுகிறான் என்ற தத்துவங்கள் நிச்சயம் அறிவியல் ரீதியாகவும் உணரக்கூடியவையே. Lineage-இல் ஏழெட்டு அடுக்குகள் முன்பு இருக்கும் ஒரு தாத்தாவின் குணாதிசயம் கொண்ட ஒரு பேரன் தோன்றுவது என்பது கற்பனை அல்ல அறிவு. சுஜாதா கூட இது குறித்து கற்றதும் பெற்றதுமில் எழுதி இருந்தார் - Bill Bryson எழுதிய "A short history of nearly everything" என்ற புத்தகத்தை குறிப்பிட்டு எழுதும் போது. முடிந்தால் இரண்டையும் வாசித்துப் பாருங்கள்.

ஆனால் தொன்மங்களிலேயே அந்த அறிவு குறிப்பிடப்பட்டிருந்தால் மனிதன இந்நேரம் இயற்கையை தன் கைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அறிவு எல்லாம் இப்போது எங்கே போனது - தெரியவில்லை. ஒரு வேளை எல்லா சமுகங்களுக்கும் நிகழ்வது போல போரில் கரைந்திருக்கலாம. பாரத தேசத்தில் நடந்த மிகப்பெரிய போர் என்று கருதப்படும் குருக்ஷேத்திர யுத்தத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட கொஞ்சம் மலைப்பு இருக்கிறது. ஏறக்குறைய 18 அக்ஷௌணிகள் (40 லட்சம் வீரர்கள்) - 18 நாள் மட்டுமே நீடித்த யுத்தம் - சூரியன் தோன்றியதிலிருந்து அஸ்தமனம் வரை (அஸ்வதத்தாமன் இரவில் கொன்றதை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால்) அதிகபட்சமாக ஒரு நாளில் 12 மணி நேரம் யுத்தம். மணக்கணக்கு போட்டு பார்த்தால் கூட்டழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் (weapons of mass destruction) பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவை புரியும். ஆறு ஆண்டுகள் நீடித்த இரண்டாம் உலகப்போரின் மொத்த மரணம் கிட்டத்தட்ட 6 -8 கோடி (இதில் போர் முனையில் இறந்தவர்கள் 2.5 கோடி) என்று நினைக்கும் போது மகாபாரதபோரில் பயன்படுத்தப்படிருக்க வேண்டிய ஆயுதங்களைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் இவையனைத்தையும் நம்மிடையே இருக்கும் எந்த விதவிதமான ஆதாரங்களாலும் நிருபிக்க முடியாது - அதிகமாகப் போனால் குருக்ஷேத்திரம் நடந்த இடத்தை நம்மால் அம்புகுறி இட்டு காட்ட முடியும். பொதுவாக பூமி வெப்பமடைதலும் குளிர்வதும் ஒரு சுழற்சியில் நடப்பவை - இவ்வளவு சேதத்தை ஏற்படுத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் நிச்சயம் பூமி வெப்பமடைந்திருக்கும் - சுழற்சியில் கி மு 3000 -2000 ஆண்டு வரை பூமியில் வெப்ப நிலை எப்படி மாறுபட்டிருக்கும் என்று ஆராய்ந்தால் ஏதேனும் பொறி தட்டலாம். அப்படியே செய்தாலும் கூட நம்மால் எதையும் இறுதியாகக் கூற முடியாது - நமது பொது புத்தியைக் கொண்டு ஒரு தோராயமான முடிவுக்கு வரலாம் அவ்வளவே.

அறிவியலையும் ஆன்மிகத்தையும் பக்கத்தில் வைத்துப் பார்த்தால் சில விஷயங்களுக்கு விடை கிடைப்பது போல தோன்றுகிறது. அறிவியலும் ஆன்மிகமும் ஒரே உணமையை நோக்கிய இரண்டு மார்க்கங்கள். அவை இறுதியில் இட்டுச்செல்லக்கூடிய இடம் ஒன்றே. சுவாமி ராமா (Living with Himalayan Masters) பரமஹம்ஸ யோகானந்தா (Autobiography of a yogi) பதிவு செய்யும் சில அனுபவங்களில் அவர்கள் சொல்வதெல்லாம் அறிவியல் இன்னும் உயிரின் பல பரிமாணங்களைப் படிக்க வில்லை என்ப்துவே. மூளையை விட்டு மனிதன் வெளியே வந்தால் தான் மனிதனால் அவனது நிலையைக் காட்டிலும் அடுத்த நிலைக்கு பயணிக்க முடியும. அறிவியல் தவறு என்று நான் சொல்லவில்லை வளர்ச்சி மெதுவாக இருக்கிறது என்று தான் சொல்கிறேன். உள்ளுணர்வால் உந்தப்பட்ட வளர்ச்சி இன்னும் துரிதகதியிலானது. மாரிச்சன் மானாக மாறிய கதையை நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோம் - அறிவியல் இப்போது தான் transmutation பக்கம் வந்திருக்கிறது. ஆகாயத்தில் மறைந்து மறைந்து இந்திரஜித் சண்டை போட்டான் என்ற தொன்மத்திற்கு அறிவியலின் பதில் Teleportation.

நான் மேலே சொன்னதெல்லாம் ஒரு சிந்திக்கும் பயிற்சியாக எடுத்துக் கொள்ளலாம், ஒரு விளையாட்டைப் போல. யோசித்துப் பாருங்கள், யாரேனும் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் முற்றிலும் அறிவியல் ஜார்கன்கள் கொண்டே ஒரு அரைப் பக்கத்தில் சுருக்கமாக எழுதினால் எப்படி இருக்கும்.
உதாரணம்:
ராமனும் சீதையும் காட்டுக்கு சென்றார்கள். அப்போது மாரீசன் தன்னை ஒரு மானாக transmutate செய்து கொண்டு சீதையின் கவனத்தை கவர்ந்தான். மானைத் தேடி ராமன் செல்ல, ராமனைத் தேடி லக்ஷ்மணன் செல்ல, அந்த சமயத்தில் ராவணன் சீதையை தனது auto pilot mode-இல் பறக்கும் super sonic shuttle-இல் தூக்கி சென்றான். இப்படியே தொடர்ந்தீர்களானால் கற்பனையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க இன்னும் அறிவியல் எவ்வளவு ஓட வேண்டும் என்பது புரியும்.

கட்டுரையின் நடுவே கேட்ட புதிருக்கு விடை: பல்வீந்தர் சிங் ஒரு 3 மாத குழந்தை. பல்வீந்தர் சிங் என்ற பெயரைக் கேட்டவுடன் உங்கள் மனதில் உங்களையும் அறியாமல் டர்பன் கட்டிய குண்டான சர்தார்ஜியின் பிம்பம் தோன்றவில்லை என்று நீங்கள் சொன்னால் இந்த உலகம் இன்னும் உங்கள் மனதை கன்னி கழியாமல் வைத்திருக்கிறது என்று அர்த்தம்.

நன்றி: யுகமாயினி ஜனவரி 2010

33வது சென்னை புத்தக கண்காட்சி





கடந்த வெள்ளிக்கிழமை சென்னை புத்தக கண்காட்சி சென்று வந்தேன் - வருடா வருடம் சென்று வருவது தான். இந்த முறை ஏனோ அவ்வளவு ஸ்லாக்கியமாக இல்லாது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை கூட்டமே இல்லை. காலார நடக்க முடிந்தது - கூட்டம் இல்லாததால் நடைபாதை அகலானது போன்ற தோற்றம் ஏற்பட்டதா இல்லை உண்மையிலேயே நடை பாதையை அகலமாக்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நடக்க முடிகிறது என்பது முக்கியம்.

நுழையும் போதே என்னை காமெடியன் ஆக்கிவிட்டர்கள். நுழைவு சீட்டு விற்க புதிய தலைமுறை ஆதரவுடன் 4-5 கவுண்டர்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கவுண்டரிலும் சென்று டிக்கெட் கேட்க அவர்கள் பக்கத்து கவுண்டர் என்று கை காட்டியபடியே இருந்தார்கள். “அரசே”, “வேந்தே”, “மன்னா” என்று தாவும் திருவிளையாடல் தருமி போல சென்ற எனக்கு முத்துராமன் முகஜாடையில் இல்லாத ஒருவர் நான்காம் கவுண்டரில் போனால் போகிறது என்று டிக்கெட் கொடுத்தார்.

சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் புத்தகம் அல்லாத மற்ற துறைகள் சார்ந்த ஸ்டால்களும் காணப்படுகின்றன - இல்லை, அந்த ஜூஸ் ஸ்டாலை சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே ஜோதிடம் பார்க்க ஒருவர் கடை வைத்திருந்தார் - அவருக்குப் போட்டியாக இன்னொரு குழு கிளம்பியிருக்கிறது என்பது புது தகவல். சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டாலில் புத்தகங்களை DNA helical structure போல அடுக்கியிருக்கிறார்கள் - பார்க்க அழகாக இருக்கிறது. தினமும் இதை அடுக்க அவர்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதையெல்லாம் விட ஆச்சர்யம் பொங்கல் அன்று சூரிய கிரகணம் வருவதைக்கூட ஸ்டாலகப் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். சூரிய கிரகண கண்ணாடி 20 ரூபாய். HDFC personal loan கொடுக்க தனியாக கடை போட்டிருக்கிறார்கள் - கூட்டம் சேருமிடம் பார்த்து கடனை விற்கலாம் என்று நினைத்தார்களா, இல்லை புத்தகம் விற்கும் விலைக்கு கடன் வாங்கினால் தான் புத்தகம் வாங்கமுடியும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

உண்மையில், புத்தக விலைகள் எல்லாம் கொஞ்சம் too much. எந்த புத்தகத்தை எடுத்தாலும் யானை விலை குதிரை விலை சொல்கிறார்கள். இந்த விலை வைத்து விற்றால் கூடிய சீக்கிரம் Kindle-க்கு நல்ல மார்க்கெட் தமிழ் நாட்டில் உருவாகிவிடும். நிறைய Old wine in new bottle தான். பழைய நூல்களை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள் - குறிப்பாக பழைய சரித்திர நாவல்களை எல்லாம் மீண்டும் புதிப்பித்து அசுர விலை சொல்கிறார்கள். காலச்சுவடு அரங்கில் பழைய இதழ்களை (2004ஆம் ஆண்டு) இலவசமாக விநியோகித்தார்கள் - பழைய பேப்பர்காரணுக்கு போட அவர்களுக்கு நேரமில்லை போலும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் offer-உம் உண்டு. சுஜாதா புது வடிவமைப்பில் பெற்று பல ஸ்டால்களிலும் காணப்படுகிறார்.

உயிர்மையில் ஜெயமோகன், சாரு இணையத்தில் எழுதிய கட்டுரையெல்லாம் நூலாக தொகுத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். கிழக்கு 2 ரூபாய் மதிப்புள்ள catalogue-ஐ 100% தள்ளுபடியில் கொடுத்தார்கள். ஞானியின் ஸ்டாலில் வழக்கம் போல பாரதி காலண்டரை 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். பிரபாகரனும், ஈழமும் பரவலாக விற்கப்படுகின்றன. கண்காட்சியில் அதிக இடங்களில் பிரதானமாக காணப்படும் புத்தகம் “மாவீரர்”.

பாரதிய வித்யா பவன் இந்த முறை ஸ்டால் போடவில்லை. ISKCON ஸ்டாலுக்கு சென்றேன் - அங்கே “காளிங்க நர்த்தனம்” போஸ்டர் விலை கேட்டேன். இந்தி தெரியுமா என்று தமிழில் கேட்டவரிடம் - தெரியும் என்றேன். அதுவரை தமிழில் பேசிக் கொண்டிருந்தவர் ஹிந்தியில் பாஷன் செய்ய ஆரம்பித்து விட்டார். கொஞ்ச நேரம் ஹை ஹை என்று குதிரை ஓட்டிவிட்டு போஸ்டரை வாங்காமல் வந்து விட்டேன். கோபிநாத்-இன் “இந்த புத்தகத்தை வாங்காதிங்க” 50,000 பிரதிகளை தாண்டியிருக்கிறது என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். சொல் பேச்சு கேளாமை என்பது தமிழர்களின் பிறவி குணம். நான் அப்படியில்லை, கோபிநாத்-இன் அறிவுரையை ஏற்றுக் கொண்டேன். saffron கலரில் டர்பன் கட்டியபடி இருந்த ஒரு ஸ்டாலில் ராஜஸ்தானியர்களின் கல்யாணத்திற்குள் நுழைந்த effect-ஐ கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் யாரென்று தெரியவில்லை.

வேறு ஏதோ ஒரு ஸ்டாலில் குழந்தைகளுக்கு நவின முறையில் சொல்லிக் கொடுக்கும் மல்டி மீடியா சாதனங்களை ஒரு பெண்மணி டெமோ செய்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர் செல்போனை நோண்டிய படியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். நிறைய மல்டி மீடியா ஸ்டால்கள் கண்ணில் பட்டன. Professional கூரியர் ஸ்டாலில் ஒருவர் மேஜையை மட்டும் போட்டு ஓரமாய் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார். என் தாத்தா காலம் வரை அவர் ஆதரவளித்து வந்த “வைதிக ஸ்ரீ” இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறார்கள. ஒரு ஸ்டாலில் பெரிய குண்டு புஸ்தகம் ஒன்று, யாரோ வெள்ளைகாரரால் எழுதப்பட்டது - “சோம பானம்” தயாரிப்பது எப்படி என்று பண்டைய hindu scripture-இல் சொல்லியிருக்கும் வழிமுறையை அக்கு வேறு ஆணிவேறாக விளக்கியிருந்தார்கள். குறித்துக் கொள்ள மறந்து விட்டேன். கடைசியாக “திருச்சி புக் ஹவுஸ்”-இல் ஹரண் பிரசன்னாவை பார்த்தேன். பொதுவாகவே காலியாக இருந்த கண்காட்சியில் உண்மையாகவே பிஸியாக பில்லிங்கில் உட்கார்ந்திருந்தார். ஒரு Hi மட்டும் பறிமாறிக் கொண்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வந்து விட்டேன்.

செல்வதற்கு முன்பே 750 ரூபாய்க்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று முடிவு செய்து விட்டு தான் கிளம்பினேன். புத்தகங்களின் விலையைப் பார்க்கும் போது படிப்பது என்பது costly habit ஆக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக தோன்றியது. 750 ரூபாய்க்கு ஒரு நல்ல புத்தகமும் மிளகாய் பஜ்ஜியும் தேறினால் அதிகம் என்ற தெளிவு எனக்கு முதல் வரிசை ஸ்டால்களை தாண்டிய உடனே வந்து விட்டது. வாங்கியே ஆகவேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்துவது உண்மையிலேயே முதல் வரிசை ஸ்டால்களை கடக்கும் வரை கஷ்டமாக இருந்தது. வைராக்கியமாக எதுவும் வாங்கவில்லை. கடைசி வரை பார்த்துவிட்டு இதைத் தவிர வேறெதுவும் பெட்டராக தேறவில்லை என்றால் மீண்டும் விசிட் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அந்த சபலம் மூன்றாம் வரிசை வருவதற்குள் ஓரளவு கட்டுபட்டது. கடைசி வரிசைகளில் நடக்கும் போது அந்த சபலத்தை நான் முற்றிலுமாக வென்றிருந்தேன்.

பின் வரும் புத்தகங்களை நான் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன் - ஆனால் என் பட்ஜெட் எகிற கூடாது என்று நான் உறுதியாக இருந்ததால் வாங்கவில்லை.
1) 600 தமிழ் பழமொழிகளும் அதற்கு இணையான ஆங்கில பழமொழிகளும்
2) தமிழ் நாடு பயணக்கட்டுரை - ஏ கே செட்டியார் (1900களின் ஆரம்ப வருடங்களில் எழுதிய கட்டுரைகள்)
3) ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள்
4) தெய்வத்தின் குரல் (அணைத்து பாகங்களும்)
5) ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்

கடைசியாக இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கினேன்.
1) ருக், யஜுர், சாம அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும் - வடுவூர் நாராயணன் - நர்மதா பதிப்பகம் - விலை 650 (தள்ளுபடி போக 585)
2) Race for the world - Lowell Bryan, et al - Harvard Business School press - விலை $30. தள்ளுபடியில் கண்காட்சிக்காக் ரூபாய் 100 !!!

இதில் வேதங்களைப் பற்றிய புத்தகத்தை படிக்கத் துவங்கிவிட்டேன் - அற்புதமாக இருக்கிறது. BE படிக்கும் போது Electrical Engineering-க்கு B L Theraja வின் ஒரு புத்தகம் ஒன்று உண்டு, அதை விட இந்த புத்தகம் ஒரு சுத்து பெரிசு. Race for the world - இல் சில நல்ல கேஸ் ஸ்டடிகள் இருக்கின்றன. இன்னும் முழு வீச்சில் படிக்க ஆரம்பிக்க வில்லை. இவ்வளவும் செய்து விட்டு திரும்பி வந்து அந்த முக்கியமான ஸ்டாலை அடைந்தேன் - ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-இன் கேண்டின். இவர்கள் வைத்திருக்கும் விலைக்கு புத்தகங்களின் விலையே தேவலாம் என்று தோன்றியது. இரண்டு போண்டா 30 ருபாய்க்கு விற்றால் இவர்கள் நியாயமாக திருப்பதி லட்டு சைசில் தான் போண்டா போட வேண்டும்.

நீங்கள் செல்வதாக இருந்தால் நன்றாக சாப்பிட்டு விட்டு செல்லவும்.
 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman