Adsense

ஆருத்ரா தரிசனம்


போன தடவை ஆருத்ரா தரிசனம் வந்த போது அப்பா இருந்தார். ஜனவரி 1ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் வந்தது. கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்து பின் களி சாப்பிட்டு விட்டு புத்தக கண்காட்சி போனேன்.

ஒரு நாள் தள்ளியோ முன்போ பிறந்திருந்தால் ஸ்ரீராம் என பெயரிடப்பட்டிருக்க வேண்டியவன்.  சந்திரசேகரன் ஆனதற்கு இந்த ஆருத்ரா தரிசனமே காரணம். என் பெயரை சேகரன் என்று எழுதுவது கூட தப்பு. ஷேகரன் என்று தான் எழுத வேண்டும். சந்திரஷேகரன் என்றால் சந்திரனை சூடியவன் என்று பொருள். ஷேகர: என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு சிகரம், உச்சி, கொண்டை போன்ற பொருள்கள் உண்டு. சிறு வயது பழக்கம் காரணமாக நானே என்னை சந்திரசேகரன் என்று தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். (பிறைசூடன் என்று ஒரு பாடலாசிரியர் இருக்கிறார் - அவர் இயற்பெயர் சந்திரசேகரனா என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் நினைத்ததுண்டு)


பொற்பாதம் எடுத்து ஆடும் நடராஜர் உத்சவராக வலம் வருவதைப் பார்க்காமல் பள்ளி கல்லூரி நாட்களில் ஆருத்ரா தரிசனம் கழிந்ததில்லை. பின்னர், ஆஃபீஸ் செல்ல ஆரம்பித்தவுடன் ஆருத்ரா தரிசனம் வந்தால்  நான் எழும் முன்பே என் பெயருக்கு அர்ச்சனை (கோயிலில்) நடந்து விடும். எழுந்து ஆஃபீஸ் கிளம்பும் முன் தயாராக இருக்கும் பிரசாதம் மட்டும் இட்டுக்கொண்டு கிளம்பிவிடுவேன்.

ஏழு தான் குழம்பும் நெய் சொட்டும் களியாயுமாக ஊரே என்னைக் கொண்டாடுவதாகக் கொண்ட சிறு வயது மயக்கங்கள் என் நினைவிலிருக்கின்றன. ஆயிரம் சந்திரசேகரன்கள் இருந்தாலும் அந்த பெயர் வைத்துக் கொள்ள எனக்கு மட்டுமே தகுதி உண்டு என்று நினைத்த குழந்தைத் தனங்கள் நிறைந்த பொழுதுகள் அவை. ஊரில் இருக்கும் போது காலையில் கொங்கனேஸ்வரனுக்கும் மாலை பிரஹதீஸ்வரனுக்கு அர்ச்சனை நிச்சயம்.

ஒரு முறை கிரிக்கெட் விளையாட மதுரை செல்ல வேண்டியிருந்த போது, ஆருத்ரா தரிசனம் வந்தது. அப்போது மதுரையில் இருக்கும் ஒரு சிவன் கோயிலுக்கு என்னை ஆருத்ரா தரிசனத்திற்கு கூட்டிச் செல்வதாக இருந்தால் மட்டுமே மகனை விளையாட அனுப்புவேன் என அம்மா ஏறக்குறைய சத்யாகிரகமே செய்தாள். எந்த கோயிலுக்குப் போனோம் (போனோமா) என்று எனக்கு சரியாக நினைவிலில்லை.


சில சமயம் ஒரே வருடத்தில் இரண்டு ஆருத்ரா தரிசனம் வரும் (இந்த வருஷத்தைப் போல). இங்க்லீஷ் பிறந்த நாளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத குடும்பத்தில் பிறந்ததால் சிறு வயதில் ஒரே வருஷத்தில் ஒருவன் எப்படி இரண்டு முறை பிறப்பான் என்ற குழப்பமெல்லாம் எனக்கு ஏற்பட்டதுண்டு.


கொஞ்சம் விபரம் தெரிந்த பின் என் சார்ந்த விஷயங்கள் மறைந்து சைவ பண்டிகையாக மட்டுமே தோன்றத் துவங்கிவிட்டது.  பிறந்தது முதல் என் பெயரில் அர்ச்சனை செய்யப்படாமல் கழிந்த முதல் ஆருத்ரா தரிசனம் இன்று.

2 Responses to “ஆருத்ரா தரிசனம்”

Bindhu!! said...

Happy B'day!

"ஆயிரம் சந்திரசேகரன்கள் இருந்தாலும் அந்த பெயர் வைத்துக் கொள்ள எனக்கு மட்டுமே தகுதி உண்டு என்று நினைத்த குழந்தைத் தனங்கள் நிறைந்த பொழுதுகள் அவை"
:D

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman