Adsense

இடியட் பாக்ஸின் அடிமைகள் (1/2)


ஸ்பெக்ட்ரம், பள்ளி கல்வி, மைக்ரோஃபினான்ஸின் எதிர்காலம், போன்று பேசுவதற்கு பல விஷயங்கள் இருந்தாலும், எனக்கு கொஞ்சம் அவசரமாக பேச வேண்டும் என்று தோன்றியது, சில நாட்கள் முன்பு டீவியில் பரபரப்புக்கு ஆளான இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி. இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி என் நன்பர்கள் மத்தியில் விவாதித்தேன். குறிப்பாக இரண்டு விதமான கருத்துகளை அனைவரும் மாறி மாறி சொன்னார்கள்
1) இது போன்ற நிகழ்ச்சிகள் கலாசாரத்திற்கு கேடு விளைவிக்கும். பிள்ளை குட்டிகளுடன் பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகள் மட்டுமே டீ வியில் காட்ட வேண்டும்
2) ரிமோட் கண்ட்ரோல் ஃப்ரிடம் என்பது ஒரு ஹம்பக். அதனால் உருப்படியான எந்த விஷயமும் நடப்பதில்லை

பொதுவான மற்றொரு கண்ணோட்டம் - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எந்த விதமான தரக்கட்டுபாடும் கிடையாது என்பது.

இவற்றைப் பற்றி பேசுவதற்கு முன் இரண்டு முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான பதிலைச் சுற்றியே நாம் இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு தனிநபர் கருத்தை தேற்றிக் கொண்டுவிடலாம் என்பது என் நம்பிக்கை.

1) அமெரிக்கா போன்ற முதலாளித்துத்துவ நாடுகளில் வளர்ந்துள்ளது போல் போர்னோகிராஃபி துறை இந்தியாவில் ஏன் வளரவில்லை
2) சீனா போல எதை நீங்கள் பார்க்க வேண்டும் எதைப் பார்க்க கூடாது என்று இணையத்தில் ஏன் கட்டுபாடுகள் இந்தியாவில் இல்லை

இந்த பதிலை நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள் - வெளியே சொல்ல வேண்டாம் உங்களுக்குள்ளே சாதக பாதகங்களை அலசிக்கொள்ளுங்கள். நாம் இந்த பிரச்சனை சார்ந்த சில அடிப்படை விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வேறெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது டீவி க்கான சென்சார் பற்றி நாம் அதிகம் கவலைப்படவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு வாரத்தில் ஏறக்குறைய 35 மணி நேரத்தை பதின்ம வயதிலிருக்கும் இந்திய குழந்தைகள் டீ வி பெட்டியின் முன் செலவழிக்கிறார்கள். 10 மணி நேரம் தூங்குகிறார்கள் என்று கணக்கில் கொண்டால் ஒரு நாளில் 5 மணி நேரம். அடப்பாவிகளா !

இப்படி அடுத்த தலைமுறை அடிமையாகிக் கொண்டிருக்க்கும் ஒரு ஊடகத்திற்கு கட்டுப்பாடு விதிப்பது தவறில்லை. இதைத் தான் இந்தியாவில் இரண்டு சட்டங்கள் செய்கின்றன - Cable Television Networks (Regulation) Act, 1995 (“Cable Act”) மற்றும் the Cable Television Networks Rules, 1994 (“Cable Rules”). தற்போதைய சூழலில் பொதுவான மக்களால் அநாகரிகம் என்று கருதப்படக்கூடிய செயல்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை (அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்தல், ஆபாசமான செய்கை போன்றவை) டீ வியில் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு தர சான்றிதழ் ஒன்றும் கிடையாது. சினிமாவுக்கு மட்டுமே CBFC (Central Board of Film Certification) தர சான்றிதழ் கொடுக்க வேண்டும். வேற்று நாட்டு படமாக இருந்தாலும் அது இந்தியாவில் தொலைக்காட்சியில் காட்டப்பட CBFC தர சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் (1994க்கு முன் ஸ்டார் மூவிஸில் After Dark பார்த்தவர்கள் இந்த சட்டத்தை சபிப்பர்). ”இந்த படம் இந்திய பார்வையாளர்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கிறது” என்று ஒரு கார்டு போடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

இந்த சட்டங்களின் அடிப்படையிலேயே அந்த இரண்டு நிகழ்ச்சிகளின் மீது கட்டுபாடு விதித்திருக்கிறது. மேலும் டீ வி நிகழ்ச்சிகளுக்கு தர சான்றிதழும், அவற்றின் உள்ளடகத்தை approve செய்யக்கூடிய தர கட்டுபாட்டு வாரியம் ஒன்றையும் தோற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. இது குறித்து போடப்பட்ட எந்த ஒரு வழக்கிலும் நீதிமன்ற உத்தரவு கட்டுபாட்டு வாரியத்தை தோன்றச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை முன் வைக்கவில்லை. இந்த விஷயத்தை ஒளிபரப்புத்துறைக்கே விட்டு விட கோர்ட் விரும்புகிறது.

நிகழ்ச்சிகளுக்கு இந்த நிலை என்றால், நிகழ்ச்சிகளின் அளவிற்கு டீ வியை ஆக்கிரமித்துக் கொள்ளும் விளம்பரங்களின் நிலை என்ன ? இதற்காக ASCI என்று ஒன்று இருக்கிறது Advertising Standards Council of India. இது அரசாங்கத்தால் நடத்தப்படும் அமைப்பன்று. லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. நிறுவனங்கள், ஊடகங்கள், விளம்பரதார்கள் போன்ற பல் வேறு அமைப்பளர்களும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பு விளம்பரங்களின் தரத்தை கட்டுப்படுத்துகின்றது. தவறான தகவல், குழப்பமான தகவல், பொய்யான வாக்குறுதிகள், சமுகத்திற்கு எதிரான மைய கருத்துக்களைக் கொண்ட விளம்பரங்கள் போன்றவற்ற தடை செய்கிறது, அல்லது திருத்தம் கொண்டு வரச் செய்கிறது இந்த அமைப்பு.
ஒரு ஆப்பிரிக்க காட்டில் வேரை பிழிந்து வரும் ஒரு சொட்டு நீருக்காக இரண்டு காட்டுவாசிகள் சண்டையிட்டுக் கொள்வதாக வரும் விளம்பரம்2 (LMN Juice) டீ வியில் இப்போதெல்லாம் வருவதில்லையே - கவனித்தீர்களா. இந்த அமைப்பின் கைங்கரியம் தான்.

ஏறக்குறைய நாம் கொஞ்சம் பாதுகாப்பான சூழலில் தான் இருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதில்லையா. ஆனாலும் எத்தனை முறை நீங்கள் முகம் சுளிக்காமல் அவசரமாக சானலை மாற்றாமல் டீ வி பார்க்கிறீர்கள் ? இது குறித்து மேலும் இன்னொரு நாள் பார்க்கலாம்.

No response to “இடியட் பாக்ஸின் அடிமைகள் (1/2)”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman