“ஷிவா, கேன் ஐ கால் யூ பேக்” என்று கேட்டு விட்டு சில வினாடிகள் கழித்து ஃபோனை வைத்தேன்.
“ஃபோன்ல யாரு சார், பரமசிவனா” என்று கேட்டு விட்டு இடி இடி என மனோகர் சிரித்தார். ஒரு வேளை அதிகாலை வேலையில் நெற்றியில் விபூதி பட்டையோடு சலூனுக்கு வருபவனிடம் இப்படி விட்டடிக்கலாம் என்று யாருக்குமே இயற்கையாகவே தோன்றும் போலும். ஆனால் மனோகருக்குத்தோன்றியது தான் கொஞ்சம் ஆச்சரியம்.
மனோகர் வீரையன் போலில்லை. வீரயனுக்கு என் ஜாதகத்தில் எந்த கட்டத்தில் எந்த கிரஹம் என்பது வரை அத்துப்படி. அவ்வப்போது அந்த கடை வழியாக கடக்கும் அக்காவிடம், ”தம்பிக்கு முடி வெட்டி ஒரு மாசத்துக்கு மேல ஆவுதுன்னு அம்மாகிட்ட சொல்றியாமா” என்று சர்விஸ் ரிமைண்டர் கொடுக்கும் அளவிற்கு இதமானவர். அப்போதே அவருக்கு எழுபது இருக்கும். கை நடுக்கம் கிடையாது. குடும்பம் மனைவி எல்லாம் உண்டா என்று தெரியாது. அவர் இறந்து போன பின் அவர் மகன் என்று ஒருவன் கொஞ்ச நாள் கடை போட்டிருந்தான் - இரண்டு மாதங்களுக்குப்பின் அவனும் இல்லை.
ஒரு லொட லொட மிஷின் - ஏர் உழுவது போல தலையில் உழுவார். கிளிக் கிளிக் என்று சத்தம் போட்டபடியே முடியை சாப்பிடும் அந்த மெஷின் சமயத்தில் மயிர்காலையும் மிகச்சில சமயம் மட்டும் சதையையும் சாப்பிடும். ஒரு பெரிய ட்யூப் ஒன்றை தொங்க விட்டிருப்பார். அதில் தான் கத்தியை தேய்ப்பார். முகச்சவரம் முடிந்து அவர் தாடையில் தேய்க்கும் படிகாரக்கல் எப்படி அவ்வளவு வழவழவென்று இருக்கிறது என்று நான் கேட்கப்போய் அதற்கு அவர் தந்த விளக்கம் எனக்கு சில வருடங்களுக்குப் பின் தான் புரிந்தது. விழுந்து விழுந்து சிரித்தேன்.
மனிதரிடம் ஒரே ஒரு குறை - மெல்லீசான மஞ்சள் நிற தாவணியையே முழு ஆடையாக அணிந்திருக்கும் அந்த மெக்டவல் பெண்ணின் போஸ்டரை மட்டும் பார்க்க விடமாட்டார். எப்போதும் அந்த போஸ்டர் மேல் ஒரு வெள்ளை கோடித் துணியை தொங்க விட்டிருப்பார். அந்த துணியை அவர் எடுத்து யாருக்கும் போர்த்தி நான் அறியேன். எனக்கு என்றில்லை அந்த தெருவிலிருக்கும் பல விடலைக்கும் பெண்ணின் உடம்பு அந்த படத்தின் மூலமாகத் தான் அறிமுகமாகியிருக்கும்.
சிரிக்க சிரிக்க பேசுவார். ஏதாவது பழமொழி சொல்லிக் கொண்டே இருப்பார். கஷ்டப்பட்டு பிராமண பாஷை பேசுவார். முடி வெட்டிக் கொண்டு போய் நான் ஏன் தலை குளிக்கத் தேவையில்லை என்று சொல்வார். அடுத்த அரைமணி நேரத்தில் சாம்பிராணி போட்ட தலையுடன் அவர் கடையை கடந்து கோயிலுக்கு போகும் போது சிரிப்பார். பெரிய வெள்ளை மீசைக்கு நடுவே சோழி சோழியாக பற்கள் தெரியும்.
மனோகருக்கும் சிரிப்பு அழகு. மனிதர்கள் எல்லோருமே சிரிக்கும் போது அழகாக இருப்பதாக எனக்குத் தோன்றும். அவருக்கும் அம்பதுக்கு குறைவில்லை. இந்த காலத்திற்கு ஏற்ப டை அடித்து பெர்ஃப்யூம் போட்டிருக்கிறார். ஸ்டெர்லைஸ் செய்த கத்திரிக்கோலால் முடியை கிளவுஸ் போட்டுக் கொண்டு வெட்டுகிறார். கடையில் மெக்டவல் பெண் இல்லை - டிசைனர் கண்ணாடி தான் இருக்கிறது. எப்போதாவது சிரிக்கிறார். அப்படி அவர் சிரித்த தருணத்தில் தான் பரமசிவனை வம்புக்கிழுத்தார்.
சில சமயத்தில் சலூன் வாசலில் பெரிய ஸ்டூல் போட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படித்துக் கொண்டிருப்பார். சில பல தப்புகளோடு புரியும் படியாகவே ஆங்கிலம் பேசுவார். குழந்தைகள் முடி வெட்டிக் கொள்ள வந்தால் 5 ஸ்டாரும் பலூனும் கொடுப்பார். சென்ற முறை போன போது தொட்டி செய்து அதில் பந்துகளைக் கொட்டி ப்ளே ஏரியா தயார் செய்யப்போவதாக ஒரு மார்வாடி மாமியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். கத்தி போடுவதற்கு முன் ”நைஃப் அலர்ஜி இருக்கா சார்” என்று கேட்பார்.
ஒரு சமயம் அப்பாவிற்கு வீட்டில் வந்து தலை முடி வெட்டி சவரம் செய்ய வேண்டும் என்று போனில் சொல்லும் போது “நான் தான் சார், உங்க சலூனுக்கு வருவேனே. பிளாக் சாண்ட்ரோ” என்று அடையாளத்துக்குச் சொல்லப்போக பிளாக் சாண்ட்ரோ என் அடையாளமாகிவிட்டது. அம்மா கூட இப்போது மனோகரை கூப்பிடும் போது “நான் தான்பா பிளாக் சாண்ட்ரோவோட அம்மா பேசறேன். சாருக்கு முடி வெட்டனும். கொஞ்சம் ஆத்துக்கு வர்றியா” என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசம்.
“ஏண்டா தலை முடி வெட்டறத தவிர வேறெதுவும் பேசினதே இல்லைங்கற, அவன் பேர் மட்டும் உனக்கு எப்படி தெரியும்” என்று அம்மா ஒரு நாள் தன் சந்தேகத்தை கேட்டே விட்டாள்.
“யாருக்குத் தெரியும், ஒரு நாள் யாரோ ஒருத்தன் கிட்ட போன்ல டேய் மனோகரு, டேய் மனோகரு-ன்னு கொஞ்சிண்டிருந்தார். அன்னிலேர்ந்து அதையே அவர் பேரா வைச்சிட்டேன்”
One response to “பிளாக் சாண்ட்ரோவும் வீரையனும்”
உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்
Post a Comment
Trackbacks
Leave a trackback