Adsense

இரண்டு கவிதைகள்


கடவுள் பேசினார்

அவ்வப்போது கடவுள் என்னோடு பேசுவார்
என் வாழ்வின் வலிக்கு பதிலேதும் சொன்னதில்லை

சில சமயம் புரிந்து கொள்ள முடியாத சிரிப்பு
சவாலுக்காக அவரால் முடியாத காரியத்தை
முயன்று பார்க்கச் சொன்னேன்
இயலாமை என்றால் என்னவென்று தான் தெரியட்டுமே
”இயலாதது என்று எதுவுமே இல்லையே” என்றார்
”இயலாததை கண்டுபிடிக்கத் தெரியாத நீயெல்லாம் என்ன கடவுள்” கோபம் வெடித்தது
“ஏமாற்றம், தோல்வி, அவமானம் என்றால் என்னவென்றாவது தெரியுமா”
“உணர்ச்சிகள் என்னை அடிமையாக்குவது இல்லை”
“நல்லவேளை உணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பார்பட்டவன் என்று சொல்லாமல் போனாயே”
“கருப்பில்லாமல் வெள்ளை ஏது”
“சரி தற்கொலை செய்து கொள்ளவாவது தெரியுமா”
“பிறப்பு இல்லாத எனக்கு இறப்பு ஏது”
“முயற்சி செய்தால் தவறில்லை - இன்னும் பத்து நிமிஷத்தில் செத்து போ”
“சரி - அப்படியே ஆவியாகிவிடட்டுமா”
“அதில் ஒன்றும் சுவாரஸ்யமில்லை - இறப்பின் வலியை நீ உணரமாட்டாய்”
“வலி என்பதே எனக்குக் கிடையாது”
“உனது மரணம் உனக்கே பயங்கரமாக இருக்க வேண்டும்”
“சரி - வெடித்துச் சிதறட்டுமா”
“பாதகமில்லை - சின்னா பின்னமாக சிதறவேண்டும்”
“சரி - ஆனால் நீயும் இறந்து விடுவாய்”
“கவலை இல்லை”
பேரிரைச்சலோடு சொன்னதை செய்த கடவுளிடம்
சில பில்லியன் வருடங்கள் கழித்து
இயலாததை செய்யச் சொல்லி கேட்க
போகும் ஒரு லெப்டான் சுற்றிக் கொண்டிருக்கிறது
யாதுமெற்ற ஒரு பிரபஞ்சத்தில்

மரணத்திலிருந்து துவங்கும் வாழ்க்கை

மரணித்த பின்னர் எழுதுதல்
சாத்தியம் இல்லை என்று பலரும் சொன்னதால்
எழுதி விடலாம் என்று துவங்கிவிட்டேன்
இன்னும் என் மரணத்திற்கு
சில காலம் இருக்கலாம்
இல்லை எழுதி முடிக்கும் முன்னரே...

காகிதத்தில் அழுந்தாத இந்த விரல்களால்
கொட்ட முடியவில்லை என் எழுத்தின் தீவிரத்தை
எடுத்துச் சொல்லாவிட்டால் புரியாத
உணர்வுகளுக்கு எப்படி அருபமாய்
இருக்க வாய்த்ததோ ?
தீவிரமாக பேச எதேனும் ஒன்று
இருக்கத்தான் செய்கிறது - இப்போதும்
கேட்பவர்களை என் எல்லைக்குள்
இழுப்பது தான் சாத்தியமில்லை.
எவ்வளவு உரக்க சொன்னாலும் கேட்கப்படாத
வார்த்தைகளற்ற வெளியில் திரியும்
என் வாதங்களுக்கு
மொழிக்கான தேவை அதிகமிருக்கிறது.
என்னோடு வாழும் சத்தியத்துடனே
முடிந்தும் விடும் என் நிலையும்,
என் பார்வையும், என் பக்கத்து நியாமும்.
இந்த ஒப்பாரியின் கூப்பாட்டில்
பிசகித்தான் போகின்றது கவனம்
வாழ்க்கையை எழுத்தாக்க வேண்டிய கட்டாயம்
கூடிக்கொண்டே போகின்றது ஒவ்வொரு க்‌ஷணமும்
என்னைப் பற்றிய தவறான
இரங்கல் அறிக்கை வாசிக்கப்படும் முன்னராவது
எழுதி முடித்துவிடவேண்டும்
என் வாழ்க்கையின் நோக்கத்தை

யுகமாயினி ஏப்ரல் 2010-இல் வெளிவந்தவை

One response to “இரண்டு கவிதைகள்”

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman