Adsense

புதிய வருடமும் ஆங்கில கவிதைகளும்


புதிய வருடம் பிறந்திருக்கிறது. புதிய வருடத்தில் நான் சந்தித்த பெரிய பிரச்சனைகளில் ஒன்று - இந்த வருடத்தில் நீங்கள் செய்திருக்கும் தீர்மாணம் என்ன என்ற கேள்வி. என்ன பதில் சொல்வது இதற்கு - எதையாவது சொல்லிவிடலாம் தான். ஆனால் கொஞ்ச நாள் கழித்து நண்பர்களை பார்க்கும் போது உரையாடலே இங்கிருந்து தான் ஆரம்பிக்கும் - ”என்ன, ஜிம்மெல்லாம் எப்படி போகுது? எடை குறைச்சாச்சா ?” - மத்திய பிரதேசத்தில் புதிதாக இன்னொரு டயர் வேறு தோன்றியிருந்தால் கன்னா பின்னாவென்று வழிய வேண்டியிருக்கும். பொதுவாகவே இது போன்ற கேள்விகளிலிருந்து தப்பிக்கவே முயற்சி செய்வேன் - எதிர் கெள்வி கேட்பதன் மூலம். இதற்கும் ஒரு கேள்வி வைத்திருக்கிறேன்.

”இந்த வருடத்தில் நான் புது வருட தீர்மாணம் எதும் செய்யப்போவதில்லை என்று சொல்லி எந்த தீர்மாணமும் செய்யாமலிருந்தால் உண்மையிலேயே புதிய தீர்மாணம் செய்தவனாகிறேன். ஆனால் தீர்மாணம் செய்வதில்லை என்ற என் தீர்மாணத்தைப் பொய்யக்கவோ புதிய தீர்மாணம் செய்தாக வேண்டும் - இப்போது சொல்லுங்கள் நான் புது வருடத்தில் தீர்மாணம் எதும் செய்திருக்கிறேனா இல்லையா ?”

- இதை நாம் ஒரு முரண்படு மெய்மை (Paradox) என்று சொல்லலாம்.  இது ஒரு logical paradox.  இது போல பல Paradoxகள் அறிவியலில், தத்துவத்தில், கணிதத்தில், இலக்கியத்தில் இருக்கின்றன. மிகவும் சுவாரஸ்யமானவை -  ஒரு விளையாட்டைப் போல நாமே உருவாக்கலாம். இந்த முரண்பாட்டு மெய்மைக்கு எந்த பெயரும் இல்லை - வேண்டுமானால் Newyear Resolution Paradox என்று சொல்லிக் கொள்ளலாம். இதே போல Birthday paradox என்று ஒன்று உண்டு - அது கணிதத்தில் வழங்கப்படும் paradox - சுவாரஸ்யமானது; பல தளங்களில் அதன் பயன்பாடு இருக்கிறது.

Birthday paradox என்ன சொல்கிறதென்றால் ஒரு 57 பேர் கொண்ட குழுவில் ஒரு பிறந்த நாள் கொண்ட இருவர் இருப்பதற்கு 99 % வாய்ப்பு இருக்கிறதென்று. அதையும் நிகழ்தகவு கோட்பாட்டின் படி ஏறக்குறைய நிறுபிக்கின்றனர். இந்த 99 சதவிகிதம் 100 சதவிகதமாக ஆவதற்கு 366 நபர் கொண்ட குழு தேவை (சாதாரண கணிதம்). உண்மையில் ஒரு 57 பேர் இருக்கும் ஒரு பள்ளி வகுப்பறையில் ஒரே பிறந்த நாள் கொண்ட இருவர் இருந்து எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள் ? 

இந்த கணித குழப்படிகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு நிகழ் காலத்துக்கு வருவோம். இந்த விடுமுறை காலத்தில் நான் படித்த முக்கியமான புத்தகம் "Busy Bee Book of Contemporary Indian English Poetry" (Busy Bee Book, ISBN 978-81-87619-12-0) - இந்திய கவிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ஒரு முறை பிரசாத்-ஐ கூடல்திணை மின்னிதழ் குறித்து உரையாடும் பொருட்டு சந்தித்த போது அவரிடமிருந்து நான் வாங்கி வந்த புத்தகம் இது. மொழிபெயர்ப்பு இல்லை - ஆங்கிலத்திலேயே எழுதப்பட்ட கவிதைகள். ஆங்கில கவிதைகளை படிக்க விரும்புபவர்களுக்கு துவக்கப் புள்ளியாக இந்த புத்தகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மிக சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த தொகுப்பு. அகராதியை வைத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை - எளிமையானவை. இதில் முக்கியமான விஷயம் இந்த தொகுதியில் எழுதியிருக்கும் அத்தனை பேரும் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் - அவர்களின் வாழ்க்கை அவர்கள் பார்த்த விதத்தில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். மொத்தம் 17 பேர். பி. ராஜா மற்றும் ரீட்டா நாத் கேசரி தொகுத்திருக்கிறார்கள். புத்தக கட்டமைப்புக்கு இந்த புத்தகத்தை எடுத்துக் காட்டாக சொல்லலாம். ஒவ்வொருவரையும் பற்றியும் முழு பயோடேட்டா, புகைப்படம், அவர்களின் இதர படைப்புகள் குறித்த தகவல்கள் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். இது வரை நீங்கள் அறியாத ஒரு படைப்பாளியை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்குத் தேவையான எல்லா தகவல்களும் இதில் இருக்கின்றன.

ஷீலா குஜ்ராலின் கவிதைகள் நமது தற்காலிக வாழ்வியலை விமர்சிப்பதாய் இருக்கின்றன - கொஞ்சம் தேசியவாத சிந்தனைகளோடு. "The sting of Modernity" ஒரு tongue in cheek கவிதை. இவருடைய கவிதைகளுக்கு நான் ரசிகனாகி விட்டேன். பல் தேவ் மிஸ்ரா வின் கவிதைகள் தீர்க்கமாக இருக்கின்றன. அவரது In the theatre of Silence என்ற கவிதை சொற்களால் அறியப்படும் மனிதனின் நிலையை அழகாக முன் வைக்கிறது. இவருடைய கவிதைகளில் வார்த்தைகளுக்கு எப்பொழுதுமே ஒரு பாத்திரம் இருக்கின்றது - அவை சில சமயம் உதவாக்கரையாக சித்தரிக்கப்படுகின்றன. எனக்குப் பிடித்த ஒரு கவிதை (இந்த கவிதையை மெற்கோள் காட்டுவதில் காப்பிரைட் சிக்கல் இருக்காது என்று நினைக்கிறேன்)
How long I have to...
How long I have to address myself
with the same lousy words
hackneyed phrases and hollow slogans
I have been painted on a scrap of paper
in black ink, in one dimension only
face resting on the knees
waiting for the next season
what grows before my eyes
of colossal dimensions, i could never define !
There is nothing divine about it.
It is man who rises great heights but
crumbles down like a muddy wall
flows like nectar from here to there
from person to person

இதில் ராஜாவின் கவிதைகள் சுவாரஸ்யம் - பாண்டிச்சேரிகாரர். பெண் என்ற வடிவத்தை எப்படியெல்லாம் சிலாகிக்கிறார் மனிதர். அதிலும் ஒரு கவிதை பெண்ணின் மார்பை மட்டும் 13 விதமாக வர்ணிக்கிறது (வழக்கமான தலையணை, தர்பூசணி எல்லாம் உண்டு) ! சிகரெட்டை ஆணின் முத்தத்துக்காக காத்திருக்கும் வெள்ளைக்கார பெண் என்கிறார். Cold Steel என்ற கவிதை தத்துவார்த்தமாக இருந்தது. இவரது theory of relativity என்ற கவிதையை பார்த்த போது பிரமிள் எழுதிய E=MC^{2} என்ற கவிதை ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் இரண்டுக்கும் துளியும் சம்மதமில்லை - ராஜா சொல்வது மூக்குக்கும் மூக்குத்திக்குமான தொடர்பை பற்றி.

இந்த புத்தகத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு கவிஞரின் கவிதையைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு உண்டு. அந்த குறிப்பு கவிதையை  அணுக மேலும் ஏதுவாக இருக்கின்றது. குறிப்பாக மாணஸ் பக்‌ஷியின் கவிதைகள் முதல் வாசிப்பில் நெருக்கமாகவில்லை. அந்த குறிப்புகளை வாசித்த பின்னர் மீண்டும் கவிதையை வாசித்தால் எளிதாக இருக்கிறது. 2001இல் ”விக்கிரமாதித்யனின் கவிதை ரசணை” என்ற பெயரில் ஒரு புத்தகம் தமிழில் வந்தது - மருதா பதிப்பகம். இருபது கவிஞர்களின் கவிதை உலகை அறிமுகப்படுத்திய புத்தகம் இது. கவிஞரையும் கவிதையையும் பற்றியும் பாடம் நடத்தும் பாணியில் அமைந்த இந்த புத்தகத்தை கவிதைகளின் மாணவனாக ஆரம்ப படிகளில் நின்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு இந்த புத்தகத்தை நான் சிபாரிசு செய்வேன்.

அதற்கு பிறகு சமகாலத்தில், கவிஞர்கள் பலரின் கவிதைகளையும் தொகுத்து தமிழ் சூழலில் கவிதைகள் குறித்த ஒரு முழுமையான தோற்றத்தை தேற்றிக் கொள்ளும் வகையில் ”சிற்றகல்” தவிர்த்து வேறு வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை (காலச்சுவடு கவிதைகள் போல ஒரே சிறு பத்திரிக்கையில் வந்த கவிதை தொகுப்புகளை நான் சொல்லவில்லை)

கவிதைகள் கிடக்கட்டும், இந்த புத்தாண்டில் உங்கள் தீர்மாணம் என்ன ?
_______________________

யுகமாயினி பிப்ரவரி இதழில் வெளியானது

No response to “புதிய வருடமும் ஆங்கில கவிதைகளும்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman