Adsense

ஆயிரத்தில் ஒருவன் - கற்பனையைக் கொண்டு ஒரு ரசவாத ஆராய்ச்சி


ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து நான் திரையரங்குக்குச் சென்றேன் - கடைசியாக சென்றது இந்த படத்தைப் பார்க்க.

ஆயிரத்தில் ஒருவனை அக்கு வேறு ஆணி வேறாக பார்த்து அனைத்து விதமான ஊடகங்களும் பிரித்து மேய்ந்து விட்ட நிலையில் தான் இந்த படம் பார்க்கச் சென்றேன் - இந்த படம் நான் பார்க்க வேண்டும் என்றும் நான் இது குறித்து எழுத வேண்டும் என்றும் வற்புறுத்திய சம்பத்துக்கு நன்றி. சம்பத், இந்த பதிவு உங்களுக்காக :-)

இந்த படத்துக்கு செல்வராகவனின்  முயற்சியும் உழைப்பும் மிகவும் அதிகம். கற்பனையை ரசவாதம் மூலம் திரைப்படம் என்ற வடிவத்திற்கு மாற்றி இருக்கிறார், செல்வராகவன். அவிழ்த்து விட்ட குதிரையைப் போல தாறு மாறாக பறக்கிறது. தனக்குத் தெரிந்த உலகத்தைச் சார்ந்த மனிதர்களைக் கொண்டு நமக்கு அறிமுகமாகாத ஒரு உலகத்தை படைக்க முயன்றிருக்கிறார். விளைவு ரத்தத்தோடும் குறுரத்தோடும் கற்பனையை தோய்த்து “சாப்பிடு” என்று இரண்டு ரொட்டித் துண்டை வீசியிருக்கிறார். 

என்னால் இந்த படத்தை நிராகரிக்க முடியவில்லை - இது தமிழுக்கு புதிது. இது போன்ற களம் தமிழ் சினிமாவில் வந்ததில்லை, இதில் இருப்பது போன்ற காட்சிகள் வந்ததில்லை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த படம் - இந்த சுவாரஸ்யம் முற்றிலும் காட்சியமைப்பால் வந்ததே. கதையைக் கூட ஒரு விதமாக சில காட்சிகள் போனதும் பிடிபட்டுவிடுகிறது (இந்த திரைப்படத்தை எப்படியும் பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருந்ததால், எந்த விமர்சனமும் படிக்கவில்லை). கடைசி வரை காட்சிகளை அமைத்த விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

ஏதோ தன்னை சுற்றியிருப்பவர்கள் மேல் கடும் சினம் கொண்டு அமைத்த காட்சி போல இருக்கிறது ஒவ்வொரு பிரேமும் - மகா தீவிரமாக/ உக்கிரமாக இருக்கிறது. எத்தனை படத்தில் ஒரு பெண் தன் மார்ப்பை கசக்கும் காட்சியை பார்த்திருப்பீர்கள் ? இந்த படத்தில் வெட்டப்பட்ட தலைகளை போல வேறு எந்த படத்திலும் வெட்டப்பட்டிருக்காது. காட்சிக்குக் காட்சி இருண்மையும், அழுகுரலும், அலரலும் நிறைந்திருக்கிறது. இந்த காட்சியமைப்பே படத்தின் பலம் - இந்த கதையை நகர்த்திச் செல்லுதலும் இது தான்.

திரைப்படத்தை ஒரு அனுபவமாக மாற்றியது இந்த காட்சிகளே என்று சொல்லலாம்.ஆனால் அந்த அனுபவம் முழுமையானதாக இருக்க வேண்டும் உங்களை கட்டிப் போடுவதாக இருக்க வேண்டும். யோசிக்க செய்ய வைத்துவிட்டால் அந்த அனுபவமே உங்களுக்கு கசப்பானதாக மாறிவிடும். பல ஆங்கிலப்படங்களின் சாயல்கள் தெரிந்தாலும் அவற்றை எல்லாம் புறம் தள்ளி விடலாம். ஏதோ எடுக்க வேண்டும் என்று அது போல எடுக்காமல், கதையோடு ஒன்றச் செய்தவரை சரி.
ஆனால் காட்சிகளில் நம்பகத்தன்மை ? அதைப் பற்றி நம்மால் எந்த தமிழ் திரைப்படத்திலும் பேசமுடியாது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சில பல இடங்களில் காட்சியமைப்பின் பிரம்மாண்டத்தை குலைக்கிறது. இது வரை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எந்த தமிழ் படத்திற்கும் கை கொடுத்து நான் பார்க்கவில்லை. எல்லா திரைப்படத்திலும் அரைவேக்காட்டு கிராஃபிக்ஸ் தான் நமக்கு கிடைக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் அதற்கு விதி விலக்கல்ல. மிருக வதை தடுப்புச் சட்டம் ஒரு நல்ல திரைப்படம் உருவாகாமால் எவ்வளவு தூரம் தடை செய்ய முடியும் என்பதற்கு ”ஆஒ” சிறந்த சாட்சி.

உணர்ச்சிகள் அற்ற ஒரு திரைப்படம் இது -  விடுதலைக்காக மட்டுமே ஏங்கும் அரசன், லட்சியத்தை மட்டுமே வேண்டும் பெண், தந்தையை மட்டுமே தேடும் ஆராய்ச்சியாளர், பணம் மட்டுமே சம்பாதிக்க வந்த கூலி தொழிலாளி - இப்படி மட்டுமேக்கள் படத்தை மிகவும் மெக்கானிக்கலாக ஆக்குகின்றன. இந்த உணர்ச்சியற்ற தன்மை inspiring characters கொண்டு செய்யப்படவேண்டிய ஒரு fantasy படத்தில் இருப்பது இந்த திரைப்படத்தை fantasy என்ற genre-இல் இருந்து விலக்குகிறது. ஆங்கிலப்படங்களுடன் நான் இந்த படத்தை தொழில் நுட்பத்திற்காக compare செய்ய விரும்பவில்லை. ஆனால் இப்படிபட்ட ஒரு உருவாக்கத்திற்காகவாவது செய்ய்து தான் தீர வேண்டும். உணர்ச்சிகளின் வறட்சி திட்டமிட்டு செல்வராகவன் செய்ததா இல்லை அது தானாக நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. 

இவ்வளவு ஏன் பிற்பாதியில், நான் சோழர்கள் பக்கம் சாய்வதா அல்லது பாண்டியர்கள் பக்கம் சாய்வதா என்று கூட பிடிபடவில்லை. யாருக்கும் எந்த பின்புலமும் செவ்வனே காட்டப்படவில்லை. படத்தின் கதாபாத்திரங்களுக்காக நீங்கள் ஏங்க வேண்டும் - சரித்திர நாயகர்களை முன் வைக்கும் போது  காட்டப்படவேண்டிய முக்கியமான அம்சம் அது. அலெக்சாண்டர் சாகும் போது மனது இரங்கும். மேக்ஸிமஸ் (கிளாடியேட்டர்) களத்தில் புலியை எதிர்த்து நிற்கும் போது மனது பதறும். இந்த படத்தில் இரங்கவும் இல்லை பதறவும் இல்லை. வேடிக்கை மட்டுமே பார்க்க தோன்றுகிறது - இப்படி வேடிக்கை பார்க்கும் போது தான் சலிப்பு வருகிறது; உண்மை புரிகிறது. செல்வராகவனையும் ஆயிரத்தில் ஒருவனையும் உச்சத்தை அடையவிடாமல் தடுத்தது எது என்று. தொழில் நுடபகோளாறோ காட்சியமைப்பில் கோளாறோ இல்லை - பலமில்லாத திரைக்கதை.

செல்வராகவன் ஒரு fulltoss பந்தில் மிகவும் technically correct defense ஆடிவிட்டார் என்று தோன்றுகிறது. பவுண்டரிக்கு அப்பால் அனுப்ப வேண்டிய கதைக்களம். அது. சோழர்கள் பாண்டியர்கள் என்ற அடையாளம் எதற்கு ? அவர்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மூத்த குடி என்று சொல்லியிருந்தால் சோழர்களின் வரலாறும் பாண்டியர்களின் வரலாறும் கண் முன்னே வந்து படம் பார்க்கும் போது “இது சரியில்லையே” என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்காமலாவது இருக்கும். தமிழீழ subtext கொண்டு வரவேண்டும், “புலி” அடையாளம் வரவேண்டும் என்பதற்காக சோழர்கள் என்று வலிந்து செய்தீர்களா, செல்வராகவன் ? 

படத்தில் மிகவும் முக்கியமான பல நிகழ்வுகள் வசனமேதுமில்லாமல், பின்னனி இசையை மட்டுமே கொண்டு நிகழ்கின்றன - கணக்கு வைத்துக் கொள்ளவில்லை, ஆனால் குறைந்தது 40 நிமிடமாவது வசனம் ஏதுமற்ற காட்சிகள் இருக்கும். எவ்வளவு பெரிய விஷயம் - பின்னனி இசை? காட்சியோடு கட்டிப்போடவில்லை. பின்னனியில் ஒலிக்கின்றது அவ்வளவே. 

தான் காக்கப்போகிறவன் என்பது கூலிக்கே தெரியவில்லை - அவனை விதியே இரண்டு முறை காப்பாற்றுகிறது (ரீமா சென் சுடும் போதும், நெருப்புக்குழியில் தள்ள முற்படும் போதும்); ஆனால் அந்த விதியின் பங்கை வைத்து நாடகம் எல்லாம் நடத்தவில்லை இயக்குனர் - மிகவும் subtle ஆக சொல்கிறார். உணர்ச்சிகள் ஏதுமில்லாத, ஹீரோயிசம் எதுவுமில்லாத  சாதாரண திரைப்படம் போல ஆகிவிட்டது. நாடகமும், ஹீரோயிசமும் இல்லாமல் ஃபேண்டசி எங்கிருந்து வரும். வெறும் அழுகுரலால் பேண்டசிகள் உருவாவதில்லையே - இந்த திரைப்படத்தில் யார் தான் protogonist ? இரண்டாம் பகுதியை பார்க்கும் போது படம் நிகழ்வதே பார்த்திபனுக்கும், ரீமாவுக்கும் நடுவில் தான். மற்றவர்கள் எல்லாரும் உப்புக்குச் சப்பாணி. இதில் சோழவம்சத்தை காக்கப் போகும் அந்த கூலியை ஒதுக்கியது நெருடுகிறது. அவர் கடைசி வரை தந்து பணி இன்னதென்று தெரிந்து செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என்று புரியவில்லை.

ரீமா சென்னின் கதாபாத்திரம் என்னை குழப்படித்து விட்டது - சோழர்களின் பூசாரியின் மந்திரத்தை சிதைத்து அவரையே தூக்கியடிக்கும் மாயம் தெரிந்த ஒரு மாயக்காரியாலா சோழர்கள் செய்து வைத்த ஏழு பறிகளை கடக்க முடியாது - அப்படிபட்ட மாயக்காரி, எதற்காக சோழர்களை சண்டைப் போட்டு கொல்ல வேண்டும். அரசனை தணிமையிலிருக்கும் போது மாயத்தால் வீழ்த்தியிருக்க முடியாதா ? அந்த கடைசி சண்டைக் காட்சி - கோமாளித்தனம். எதற்காக மிகவும் முன்னேறிய ஆயுதங்களை கையாளத் தெரிந்த அந்த ஏழு அரச பரம்பரையினரும் ராஜாக்களைப் போல வேடமனிந்துக் கொண்டு கத்தியை வைத்துக் கொண்டு நிற்கின்றனர் ?

இந்த படம் செல்வராகவனின் கோபத்தை வெளிப்படுத்துவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது - அதீத  ஜோடனைகள்/ போலி தத்துவார்த்தம்; தசாவதாரம் என்ற நல்ல திரைக்கதையை கமல் 10 வேஷங்களை ஏற்று நடித்து திரைப்பட அனுபவத்தை குறைத்தது போல அற்புதமான கதைகளனை அனுபவமில்லாத குழுவை வைத்துக் கொண்டு அணுகி மிகவும் சாதாரண திரைப்பட அனுபவமாக மாற்றி விட்டார் இயக்குனர். இயக்குனருக்கு மிகச் சிறந்த டீம் அமையாதது குறித்து வருந்துகிறேன். ஒரு நல்ல இசையமைப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும்,  கிடைத்திருந்தால் ஆயிரத்தில் ஒருவன் நிச்சயம் ஆயிரத்தில் ஒரு படமாக வந்திருக்கும்.

இதே போல இன்னும் நிறைய படங்கள் வரவேண்டும், இன்னும் நிறைவாக. எத்தனை குறைப்பாடு இருந்தாலும் இந்த படம் ஒரு நம்பிக்கையை அளிக்கிறது, ஆறு சண்டை  ஏழு பாட்டு, இரண்டு செண்டிமெண்ட் மூன்று ஹீரோயின் என்று வைத்துக் கொண்டு பார்முலா பைத்தியகாரத்தனங்கள் வருவது எதிர்காலத்தில் குறையலாம். ஆயிரத்தில் ஒருவனை முன்னோடியாகக் கொண்டு இன்னும் நிறைய பேர் புதிய களத்தை நோக்கி புறப்படலாம். இன்னும் சிறந்த திரைப்படங்கள் தோன்றலாம். அந்த ஒரே விஷயத்திற்காக இந்த படத்தின் அபத்தங்களை மன்னித்து விடலாம். இப்படி ஒரு துவக்கத்தை ஏற்படுத்திய புள்ளி என்ற நிலைக்காகவே தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆயிரத்தில் ஒருவன் இன்னும் இருபது ஆண்டுகள் நினைவில் வைத்துக் கொள்ளப்படும்.

இந்த படத்தைப் பாராட்டலாம் - திட்டலாம் - ஆனால் நிராகரிக்க முடியாது. It is better to be criticized than ignored என்று சொல்வார்கள். அப்படி தான் இந்த படத்திற்கு வரும் விமர்சனங்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், செல்வராகவன்.

One response to “ஆயிரத்தில் ஒருவன் - கற்பனையைக் கொண்டு ஒரு ரசவாத ஆராய்ச்சி”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman