Adsense

கூகிளும் சைனாவும்


இந்த புது வருடத்தின் தகவல் தொழில் நுட்பத்துறையின் முக்கிய நிகழ்வு “கூகிள் சைனா” சண்டை.

இந்த பிரச்சணைக்கு சில கோணங்கள் இருக்கின்றன. இன்றைய அனலிஸ்டுகள் முதல் துறை வல்லுனர்கள் வரை பல்வேறு காரணங்களை (நேரடி மற்றும் மறைமுக) இந்த பிரச்சணைக்கு சொல்கின்றனர்.

பைடுவுடன் போட்டி போட்டு கூகிளால் சைனாவில் ஜெயிக்க முடியாது என்று கூகிளுக்கு தெரிந்ததால் தான் இந்த பிரச்சனையை கூகிள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவ்வகை காரணங்களில் முக்கியமான ஒன்று. கொஞ்சம் ஒத்துக் கொள்ள முடியவில்லை. பிங்-இற்கு அமெரிக்காவில் என்ன மார்க்கெட் ஷேர் இருக்கிறதோ அதை விட அதிக ஷேர் சைனாவில் கூகிளுக்கு இருக்கிறது (ஏறக்குறைய 35 % - பைடு தான் சைனாவில் தேடுதல் துறையில் முன்னோடி) . அதைவிட முக்கியமான விஷயம் கடந்த சில காலாண்டுகளில் நன்றாக முன்னேறிக் கொண்டிருக்கிறது கூகிள். ஆகையால் தோல்வி பயத்தால் கூகிள் வெளியேற முயற்சி செய்கிறது என்பது, தகவல்களின் அடிப்படையில் நிறுபிக்கக்கூடிய சங்கதியாக தெரியவில்லை. வளர்ச்சி பாதையில் இருக்கும் இந்த சமயத்தில் சைனாவை விட்டு கூகிள் வெளியேறும் திட்டம் கூகிளுக்கு பெரிய இழப்பாக இருக்கக்கூடும்.

சைனா ஒரு மிகப்பெரிய சந்தை. அந்த சந்தையில் இரண்டாவது இடத்தில் இருப்பது கூட கூகிளின் கஜானாவிற்கு மிகவும் முக்கியம். இந்த முடிவு தேடுதல் துறையில் மட்டும் தானா அல்லது இன்னொறு முக்கியமான துறையான செல்போன் துறையிலுமா என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கிறது. ஒருவேளை ஆண்ட்ராய்ட் போன்கள் சைனாவில் விற்க அதிக வரி செலுத்த வேண்டும் என்பது போன்ற entry barrier-களை சைனா அரசு எதிர்காலத்தில் உருவாக்கக்கூடும். இந்தியாவைப் போல செல்போன்களுக்கான சந்தையும் மிகப்பெரியதாக இருக்கும் இந்த தேசத்தில் புதிதாக செல்போன்கள் செக்டாரிலும் காலடி பதித்திருக்கும் கூகிள் சைனாவை விட்டு வெளியேறுவது என்ற முடிவு நிச்சயம் அவசரத்தில் எடுக்கக்கூடியது அல்ல.

சரி, எதற்காக இந்த தலைப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். சைனாவில் யாரேனும் தேடுதல் துறையில் சேவை வழங்க வேண்டுமென்றால் அவர்கள் சைனா அரசு சொல்லும் சில வலைதளங்களை தேடல் முடிவாக காட்டக்கூடாது, சில குறி சொற்களுக்கு ஒழுங்கான விடை அளிக்கக்கூடாது - இப்படி சில கட்டுபாடுகள் இருக்கின்றன. இது அனைத்திற்கு ஒத்துக் கொண்டு தான் கூகிள் இந்த துறையில் சைனாவில் காலடி பதித்தது. இந்த நிலையில், சென்ற வாரத்தில் கூகிள் தனது official blog-இல் ”சைனாவுக்கான புதிய அணுகுமுறை” என்ற தலைப்பில் இந்த பிரச்சனைக்கான பிண்ணனியை விவரித்தது. சைனாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களின் கூகிள் ஐடிகள் hack செய்யப்படுவதற்கான முயற்சி நடந்திருக்கிறது. கூகிள் hack செய்யப்பட்டது என்று ஒத்துக் கொள்ளவில்லை. முயற்சி நடந்திருக்கின்றது என்றும் hackers-ஆல் பயனர்களின் email account பற்றிய தகவல்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது என்றும் மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்தை யாரும் நெருங்க முடியவில்லை என்று கூகிள் தெரிவித்திருக்கிறது. இது மட்டுமின்றி கூகிளின் சிஸ்டங்களையும் நெருங்க முன்னேறிய சைபர் தாக்குதல் ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது என்று கூகிள் தெரிவித்திருக்கிறது.

இதில் என்ன காமெடி என்றால் இது போன்ற ஒரு தாக்குதல் கூகிளுக்கு மட்டுமல்ல, யாஹூ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களுக்கும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த தாக்குதல் பற்றி கூகிளைத் தவிர யாரும் மூச்சு விட வில்லை. இது போல ஒரு விஷயம் நடந்திருக்கிறது - ஜாக்கிரதை என்று அறிவுறுத்த யாஹூவை கூகிள் தொடர்பு கொண்ட போது தாங்களும் தாக்கப்பட்டோம் என்று யாஹூ சொல்லியிருக்கிறது. ஆனால் வெளியே சொல்லவில்லை - இது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான் ! யாஹூவுக்கு எந்த அளவுக்கு சேதாரம் என்ற தகவல் நமக்குத் தெரியவில்லை. செக்யூரிட்டியை compromise செய்து கொண்டு எப்படி தொடர்ந்து சேவை வழங்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் கூகிளின் நிலையுடன் தாம் ஒத்துப்போவதாக யாஹூ தெரிவித்திருக்கிறது - தானே முன்னின்று எதிர்ப்பை காட்டவில்லை. யாஹூவைப் பொறுத்தவரை அவர்கள் சைனாவில் அலிபாபா என்ற நிறுவனத்தின் வழியாகத் தான் இயங்குகிறார்கள் (40 % stake in Alibaba). யாஹூவின் மின்னஞ்சல் முதலான சேவைகள் எல்லாம் Alibaba வழியாகத் தான் வழங்கப்படுகின்றன.

இது சைனா அரசின் அதிகார போக்கின் அடையாளம் மட்டுமன்றி மனித உரிமையை எந்த அளவுக்கு சைனா அரசு மதிக்கிறது என்பதின் வெளிப்பாடு என்பது கூகிளின் குற்றச்சாட்டு - இந்த தாக்குதல் சைனா அரசாலே நேரடியாக நடத்தப்பட்டிருக்கலாம் அல்லது சைனாவின் ஆதரவோடு சில வெளி அமைப்புகள் கூட நிகழ்த்தியிருக்கலாம். அந்த தகவல் குறித்த முடிவான நிலை தெரியவில்லை.

வெளிப்படையாக பேசி, சைனா என்ற மிகப்பெரிய மார்க்கெட்டை யாரும் இழக்க விரும்பவில்லை. இந்த மார்க்கெட்டில் கீழ் நிலையில் இருந்தால் கூட அதன் வால்யூம் துருக்கி போன்ற ஒரு தேசத்தில் முதண்மையாக இருக்கும் வால்யூமைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும். ஆகையால் கட்டுபாடுகளை ஏற்றுக் கொண்டு பிசினஸை தொடர்ந்து கொண்டிருக்கின்றன அமெரிக்க நிறுவனங்கள்.

இந்த சூழ்நிலையில் என்னுடைய யூகம் (yes just guessing) கூகிள் நிச்சயம் சைனாவை விட்டு முழுமையாக வெளியேறாது. தேடுதல் பொறியில் வடிகட்டியை எடுத்திவிடப்போகிறேன் என்று மிரட்டினாலும் கூகிளால் சைனாவை மற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பணிய வைத்து விட முடியாது.

சைனா அரசை எதிர்க்க கூகிள் என்ற நிறுவனத்தால் முடியாது. ஒரு வேளை, அமெரிக்க இணைய நிறுவனங்கள் அணைத்தும் சேர்ந்து சைனா எங்களுக்கு தேவையில்லை என்று முடிவு செய்து சண்டை போட்டால் சைனா அரசு இரண்டு படிகள் இறங்கி வரும். அப்பொழுதும் சரணடையாது - தேவையுமில்லை. ஏனென்றால், ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான தொழில் நுட்பங்களை ஓரளவுக்காவது சைனா உருவி இருக்கும். மைக்ரோசாஃப்ட்டும் யாஹூவும் சைனாவை காலி செய்யும் எண்ணமே இல்லை என்று ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டன. அந்த நிலையில் இவர்கள் இருவரும் கூகிள் பின்னால் ஒளிந்து கொண்டு தேடுதல் துறையில் வடிகட்டாமல் இருக்க negotiate செய்வார்களே அன்றி நேரடியாக களத்தில் குதிக்க மாட்டார்கள்.

இந்த சிக்கல் அமெரிக்க நிறுவனக்களுக்கு சாதகமாக மாற அமெரிக்க அரசு தலையிட்டு சைனாவுடன் bilateral trade agreement எதாவது ஏற்படுத்திக் கொள்ளலாம் - ஏனென்றால் சைனாவின் உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் அமெரிக்க நிறுவனங்கள். ஆனால் இந்த கணிப்பெல்லாம் நடைமுறையில் வர பெரு முயற்சி வேண்டும். அமெரிக்க அரசை தன் பக்கம் இழுக்க கூகிள் லாபி செய்ய வேண்டியிருக்கும். கூகிள் என்ற ஒரு நிறுவனத்திற்காக அமெரிக்க அரசு வரிந்து கட்டிக் கொண்டு ஓடி வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.

இந்த சிக்கல் இந்தியாவிற்கு ஒரு மிக சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்திய அரசு கூகிளை மேலும் அதிக முதலீட்டிற்கு கவர இது ஒரு சரியான வாய்ப்பு - இந்த தகவல் கட்டமைப்பை வலுப்படுத்தவும், Rural computing மற்றும் Egovernance-ஐ வலுப்படுத்தவும் கூகிளின் தொழில் நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் - இவற்றை இன்னும் அதிகமாக negotiate செய்ய இந்த அரசுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அரசு இந்த சிக்கல் ஒரு முடிவுக்கு வர காத்திருக்கலாம்.

இது குறித்து பேச இன்னும் ஒரு விஷயம் இருக்கின்றது
1) மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ போல அமைதியாக கூகிள் இருந்தால் என்ன நஷ்டம்?

இது குறித்து முடிந்தால் பிறகு எழுதுகிறேன்.

No response to “கூகிளும் சைனாவும்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman