Adsense

பெய்யென பெய்யும் மழை


சமிபத்தில் சினாக்காரர்கள் தட்பவெட்ப மாறுதலை ஏற்படுத்தும் ஆராய்சியின் அடுத்த கட்டமாக இந்த வருடம் கிடைக்க வேண்டிய அளவைக் காட்டிலும் அதிகமாக பெய்ஜிங்கில் பனி (மழை) பொழிய வைத்திருக்கிறார்கள். சில்வர் அயோடைட் என்ற ரசாயணத்தை மேகங்களில் தூவுவதன் மூலம் வீழ்படிவு ஏற்படுத்தி மழையை கொண்டு வந்திருக்கின்றனர். எதிர்காலத்தில் தோன்றக்கூடிய தண்ணீர் பஞ்சத்திற்கு இது போன்ற ஆராய்ச்சி முயற்சிகள் பெருமளவு உதவியாக இருக்கக்கூடும்.

கொஞசம் கொஞ்சமாக இயற்கையை கட்டுப்படுத்த மனிதன் அறிவியலின் வாயிலாக தெரிந்து கொள்வது சிலருக்கு கவலையளித்தாலும் அப்படி கட்டுப்படுத்த முயல்வது இயல்பே என்று தோன்றுகிறது. இயற்கையின் சூக்‌ஷ்மங்களை தெரிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனுக்கும் கிடைத்தேயிருக்க வேண்டிய சக்தி தான். இயற்கை நாம் அறிந்து கொள்ள முடியாதபடி மறைத்து வைக்க வேண்டிய விஷயங்களை வெளிப்படுத்துவதே இல்லை. பெரும்பாலும் அதிகமாக சோதித்து விட்டு போனால் போகிறது தெரிந்து கொள் என்று கொடுத்து விடுகிறது. ஹிந்து தொன்மங்களிலும் உலகின் பல தொன்மங்களிலும் இது போல இயற்கையை கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதர்கள் (அல்லது தேவதூதர்கள் அல்லது அவதாரங்கள்) பற்றிய குறிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை வெற்று கற்பனைகள் என்று புறம் தள்ளலாம் - மிகவும் எளிதாக. எய்ன்ஸ்டினைக் கேட்டால் “கற்பனையே அறிவைவிட மிகவும் சக்திவாய்ந்தது” என்பார். காரணம் இல்லாமல் இல்லை. அறிவு நம்மை சுற்றி இருப்பதை நாம் உணரும் படி செய்கிறது - கற்பனை எதிர்காலத்தை பற்றிய சாத்தியத்தை உண்டாக்குகிறது. அறிவு நமது அனுபவங்களின் வாயிலாகவும், பிறரின் அனுபவங்கள வாயிலாகவும் நாம் சேகரித்து வைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் உருவாக்கிக் கொள்வது. கற்க முடியும் (learn) கற்றதை மறக்கவும் (unlearn) முடியும். Unimagine என்பதே ஒரு போலியான சொல். ஒர் விஷயத்தை unimaginable என்று சொல்லும் போதே அதைப் பற்றி கொஞ்சமாவது கற்பனை செய்து விட்டீர்கள் என்று தானே அர்த்தம் அதாவது அதைப் பற்றிய ஒரு கோட்டோவியமாவது மனதில் தோன்றி விடும். அது தான் மனதின் சக்தி.

சரி, ஒரு எளிய புதிர்: பல்வீந்தர் சிங் ஒரு நாள் யாருமற்ற தன் வீட்டில் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் வீட்டிற்கு திருடர்கள் நுழைந்து அவன் கண் எதிரிலேயே பீரோவைத் திறந்து அவனுக்கு சொந்தமான நகைகளை கொள்ளை அடித்தனர். அதை பார்த்தபடியே இருந்த பல்வீந்தர் அவர்களை தடுக்கவோ "திருடன், திருடன்” என்று கத்தியோ கூப்பாடு போடவில்லை. மாறாக அவர்கள் செய்வதையே வேடிக்கை பார்த்தபடி இருந்தான். திருடர்களும் தங்கள் வேலையை முடித்து விட்டு தங்களை தொந்தரவு செய்யாத பல்வீந்தரையும் எதுவும் செய்யாமல் சென்று விட்டனர். தன் சொத்து கொள்ளை போகும் அந்த தருணத்திலும் பல்வீந்தர் ஏன் திருடர்களை தடுக்கவில்லை ? விடை இறுதியில்.

சில சமயங்களில் எனக்கு தொன்மங்களில் மனித இனத்துக்கு தேவையான குறிப்புகள் எல்லாமே இருக்கின்றனவோ என்று தோன்றும். அதை யாரும் ஆராய்ச்சி செய்து எடுக்க வழிதான் இல்லை. இந்த மழை ஆராய்ச்சியையே எடுத்துக் கொள்ளுங்கள் - ஒரு வேளை மழைவேண்டி வருண பகவானுக்கு அந்த கால ரிஷிகள் செய்த யாகமென்பது இது போல ஒரு cloud seeding technique தானோ. ஹோமம் வளர்த்து அவர்கள் அக்னியில் ஆஹுதியாக அளித்த பொருட்களால் மேலெழும்பிய புகையில் இருந்ததெல்லாம் வீழ்படிவை அதிகரிக்கும் ரசாயணங்களோ ? இருக்கலாம் - இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இருக்கலாம் என்ற கோணத்தில் யோசித்தால் அறிவியல் புனைவு எழுதத் தோன்றுகிறது. Multiple universe, தோன்றி-மறைந்து-பின் மீண்டும் தோன்றும் தன்மை கொண்டது பிரபஞ்சம் என்று பிரபஞ்சத்தைப் பற்றியும் யோசித்த ஒரு சமுதாயத்திற்கு இயற்கையை மிகக் கொஞ்சமாகவாவது மாற்றும் ஆற்றல் இருந்திருக்கும் என்பதை நம்ப சவுகரியமாயிருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை எடுத்து பத்திரப்படுத்தும் பத்தாம் பசலித்தனத்துக்கும் stem cell ஆராய்ச்சிக்கும் இருக்கும் விட்ட குறை தொட்ட குறை ஒற்றுமை speculate செய்யவே தோன்றுகிறது. மறுபிறவி குறித்த குறிப்புகளும் மனிதன் இறப்பதில்லை அவன் பேரண்டத்துடன் கலந்து விடுகிறான் என்ற தத்துவங்கள் நிச்சயம் அறிவியல் ரீதியாகவும் உணரக்கூடியவையே. Lineage-இல் ஏழெட்டு அடுக்குகள் முன்பு இருக்கும் ஒரு தாத்தாவின் குணாதிசயம் கொண்ட ஒரு பேரன் தோன்றுவது என்பது கற்பனை அல்ல அறிவு. சுஜாதா கூட இது குறித்து கற்றதும் பெற்றதுமில் எழுதி இருந்தார் - Bill Bryson எழுதிய "A short history of nearly everything" என்ற புத்தகத்தை குறிப்பிட்டு எழுதும் போது. முடிந்தால் இரண்டையும் வாசித்துப் பாருங்கள்.

ஆனால் தொன்மங்களிலேயே அந்த அறிவு குறிப்பிடப்பட்டிருந்தால் மனிதன இந்நேரம் இயற்கையை தன் கைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அறிவு எல்லாம் இப்போது எங்கே போனது - தெரியவில்லை. ஒரு வேளை எல்லா சமுகங்களுக்கும் நிகழ்வது போல போரில் கரைந்திருக்கலாம. பாரத தேசத்தில் நடந்த மிகப்பெரிய போர் என்று கருதப்படும் குருக்ஷேத்திர யுத்தத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட கொஞ்சம் மலைப்பு இருக்கிறது. ஏறக்குறைய 18 அக்ஷௌணிகள் (40 லட்சம் வீரர்கள்) - 18 நாள் மட்டுமே நீடித்த யுத்தம் - சூரியன் தோன்றியதிலிருந்து அஸ்தமனம் வரை (அஸ்வதத்தாமன் இரவில் கொன்றதை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால்) அதிகபட்சமாக ஒரு நாளில் 12 மணி நேரம் யுத்தம். மணக்கணக்கு போட்டு பார்த்தால் கூட்டழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் (weapons of mass destruction) பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவை புரியும். ஆறு ஆண்டுகள் நீடித்த இரண்டாம் உலகப்போரின் மொத்த மரணம் கிட்டத்தட்ட 6 -8 கோடி (இதில் போர் முனையில் இறந்தவர்கள் 2.5 கோடி) என்று நினைக்கும் போது மகாபாரதபோரில் பயன்படுத்தப்படிருக்க வேண்டிய ஆயுதங்களைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் இவையனைத்தையும் நம்மிடையே இருக்கும் எந்த விதவிதமான ஆதாரங்களாலும் நிருபிக்க முடியாது - அதிகமாகப் போனால் குருக்ஷேத்திரம் நடந்த இடத்தை நம்மால் அம்புகுறி இட்டு காட்ட முடியும். பொதுவாக பூமி வெப்பமடைதலும் குளிர்வதும் ஒரு சுழற்சியில் நடப்பவை - இவ்வளவு சேதத்தை ஏற்படுத்திய ஆயுதங்களைப் பயன்படுத்தியதால் நிச்சயம் பூமி வெப்பமடைந்திருக்கும் - சுழற்சியில் கி மு 3000 -2000 ஆண்டு வரை பூமியில் வெப்ப நிலை எப்படி மாறுபட்டிருக்கும் என்று ஆராய்ந்தால் ஏதேனும் பொறி தட்டலாம். அப்படியே செய்தாலும் கூட நம்மால் எதையும் இறுதியாகக் கூற முடியாது - நமது பொது புத்தியைக் கொண்டு ஒரு தோராயமான முடிவுக்கு வரலாம் அவ்வளவே.

அறிவியலையும் ஆன்மிகத்தையும் பக்கத்தில் வைத்துப் பார்த்தால் சில விஷயங்களுக்கு விடை கிடைப்பது போல தோன்றுகிறது. அறிவியலும் ஆன்மிகமும் ஒரே உணமையை நோக்கிய இரண்டு மார்க்கங்கள். அவை இறுதியில் இட்டுச்செல்லக்கூடிய இடம் ஒன்றே. சுவாமி ராமா (Living with Himalayan Masters) பரமஹம்ஸ யோகானந்தா (Autobiography of a yogi) பதிவு செய்யும் சில அனுபவங்களில் அவர்கள் சொல்வதெல்லாம் அறிவியல் இன்னும் உயிரின் பல பரிமாணங்களைப் படிக்க வில்லை என்ப்துவே. மூளையை விட்டு மனிதன் வெளியே வந்தால் தான் மனிதனால் அவனது நிலையைக் காட்டிலும் அடுத்த நிலைக்கு பயணிக்க முடியும. அறிவியல் தவறு என்று நான் சொல்லவில்லை வளர்ச்சி மெதுவாக இருக்கிறது என்று தான் சொல்கிறேன். உள்ளுணர்வால் உந்தப்பட்ட வளர்ச்சி இன்னும் துரிதகதியிலானது. மாரிச்சன் மானாக மாறிய கதையை நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோம் - அறிவியல் இப்போது தான் transmutation பக்கம் வந்திருக்கிறது. ஆகாயத்தில் மறைந்து மறைந்து இந்திரஜித் சண்டை போட்டான் என்ற தொன்மத்திற்கு அறிவியலின் பதில் Teleportation.

நான் மேலே சொன்னதெல்லாம் ஒரு சிந்திக்கும் பயிற்சியாக எடுத்துக் கொள்ளலாம், ஒரு விளையாட்டைப் போல. யோசித்துப் பாருங்கள், யாரேனும் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் முற்றிலும் அறிவியல் ஜார்கன்கள் கொண்டே ஒரு அரைப் பக்கத்தில் சுருக்கமாக எழுதினால் எப்படி இருக்கும்.
உதாரணம்:
ராமனும் சீதையும் காட்டுக்கு சென்றார்கள். அப்போது மாரீசன் தன்னை ஒரு மானாக transmutate செய்து கொண்டு சீதையின் கவனத்தை கவர்ந்தான். மானைத் தேடி ராமன் செல்ல, ராமனைத் தேடி லக்ஷ்மணன் செல்ல, அந்த சமயத்தில் ராவணன் சீதையை தனது auto pilot mode-இல் பறக்கும் super sonic shuttle-இல் தூக்கி சென்றான். இப்படியே தொடர்ந்தீர்களானால் கற்பனையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க இன்னும் அறிவியல் எவ்வளவு ஓட வேண்டும் என்பது புரியும்.

கட்டுரையின் நடுவே கேட்ட புதிருக்கு விடை: பல்வீந்தர் சிங் ஒரு 3 மாத குழந்தை. பல்வீந்தர் சிங் என்ற பெயரைக் கேட்டவுடன் உங்கள் மனதில் உங்களையும் அறியாமல் டர்பன் கட்டிய குண்டான சர்தார்ஜியின் பிம்பம் தோன்றவில்லை என்று நீங்கள் சொன்னால் இந்த உலகம் இன்னும் உங்கள் மனதை கன்னி கழியாமல் வைத்திருக்கிறது என்று அர்த்தம்.

நன்றி: யுகமாயினி ஜனவரி 2010

No response to “பெய்யென பெய்யும் மழை”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman