Adsense

33வது சென்னை புத்தக கண்காட்சி

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை புத்தக கண்காட்சி சென்று வந்தேன் - வருடா வருடம் சென்று வருவது தான். இந்த முறை ஏனோ அவ்வளவு ஸ்லாக்கியமாக இல்லாது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. வெள்ளிக்கிழமை கூட்டமே இல்லை. காலார நடக்க முடிந்தது - கூட்டம் இல்லாததால் நடைபாதை அகலானது போன்ற தோற்றம் ஏற்பட்டதா இல்லை உண்மையிலேயே நடை பாதையை அகலமாக்கியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நடக்க முடிகிறது என்பது முக்கியம்.

நுழையும் போதே என்னை காமெடியன் ஆக்கிவிட்டர்கள். நுழைவு சீட்டு விற்க புதிய தலைமுறை ஆதரவுடன் 4-5 கவுண்டர்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கவுண்டரிலும் சென்று டிக்கெட் கேட்க அவர்கள் பக்கத்து கவுண்டர் என்று கை காட்டியபடியே இருந்தார்கள். “அரசே”, “வேந்தே”, “மன்னா” என்று தாவும் திருவிளையாடல் தருமி போல சென்ற எனக்கு முத்துராமன் முகஜாடையில் இல்லாத ஒருவர் நான்காம் கவுண்டரில் போனால் போகிறது என்று டிக்கெட் கொடுத்தார்.

சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் புத்தகம் அல்லாத மற்ற துறைகள் சார்ந்த ஸ்டால்களும் காணப்படுகின்றன - இல்லை, அந்த ஜூஸ் ஸ்டாலை சொல்லவில்லை. ஆரம்பத்திலேயே ஜோதிடம் பார்க்க ஒருவர் கடை வைத்திருந்தார் - அவருக்குப் போட்டியாக இன்னொரு குழு கிளம்பியிருக்கிறது என்பது புது தகவல். சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டாலில் புத்தகங்களை DNA helical structure போல அடுக்கியிருக்கிறார்கள் - பார்க்க அழகாக இருக்கிறது. தினமும் இதை அடுக்க அவர்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதையெல்லாம் விட ஆச்சர்யம் பொங்கல் அன்று சூரிய கிரகணம் வருவதைக்கூட ஸ்டாலகப் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். சூரிய கிரகண கண்ணாடி 20 ரூபாய். HDFC personal loan கொடுக்க தனியாக கடை போட்டிருக்கிறார்கள் - கூட்டம் சேருமிடம் பார்த்து கடனை விற்கலாம் என்று நினைத்தார்களா, இல்லை புத்தகம் விற்கும் விலைக்கு கடன் வாங்கினால் தான் புத்தகம் வாங்கமுடியும் என்று சொல்லாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.

உண்மையில், புத்தக விலைகள் எல்லாம் கொஞ்சம் too much. எந்த புத்தகத்தை எடுத்தாலும் யானை விலை குதிரை விலை சொல்கிறார்கள். இந்த விலை வைத்து விற்றால் கூடிய சீக்கிரம் Kindle-க்கு நல்ல மார்க்கெட் தமிழ் நாட்டில் உருவாகிவிடும். நிறைய Old wine in new bottle தான். பழைய நூல்களை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள் - குறிப்பாக பழைய சரித்திர நாவல்களை எல்லாம் மீண்டும் புதிப்பித்து அசுர விலை சொல்கிறார்கள். காலச்சுவடு அரங்கில் பழைய இதழ்களை (2004ஆம் ஆண்டு) இலவசமாக விநியோகித்தார்கள் - பழைய பேப்பர்காரணுக்கு போட அவர்களுக்கு நேரமில்லை போலும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் offer-உம் உண்டு. சுஜாதா புது வடிவமைப்பில் பெற்று பல ஸ்டால்களிலும் காணப்படுகிறார்.

உயிர்மையில் ஜெயமோகன், சாரு இணையத்தில் எழுதிய கட்டுரையெல்லாம் நூலாக தொகுத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். கிழக்கு 2 ரூபாய் மதிப்புள்ள catalogue-ஐ 100% தள்ளுபடியில் கொடுத்தார்கள். ஞானியின் ஸ்டாலில் வழக்கம் போல பாரதி காலண்டரை 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். பிரபாகரனும், ஈழமும் பரவலாக விற்கப்படுகின்றன. கண்காட்சியில் அதிக இடங்களில் பிரதானமாக காணப்படும் புத்தகம் “மாவீரர்”.

பாரதிய வித்யா பவன் இந்த முறை ஸ்டால் போடவில்லை. ISKCON ஸ்டாலுக்கு சென்றேன் - அங்கே “காளிங்க நர்த்தனம்” போஸ்டர் விலை கேட்டேன். இந்தி தெரியுமா என்று தமிழில் கேட்டவரிடம் - தெரியும் என்றேன். அதுவரை தமிழில் பேசிக் கொண்டிருந்தவர் ஹிந்தியில் பாஷன் செய்ய ஆரம்பித்து விட்டார். கொஞ்ச நேரம் ஹை ஹை என்று குதிரை ஓட்டிவிட்டு போஸ்டரை வாங்காமல் வந்து விட்டேன். கோபிநாத்-இன் “இந்த புத்தகத்தை வாங்காதிங்க” 50,000 பிரதிகளை தாண்டியிருக்கிறது என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். சொல் பேச்சு கேளாமை என்பது தமிழர்களின் பிறவி குணம். நான் அப்படியில்லை, கோபிநாத்-இன் அறிவுரையை ஏற்றுக் கொண்டேன். saffron கலரில் டர்பன் கட்டியபடி இருந்த ஒரு ஸ்டாலில் ராஜஸ்தானியர்களின் கல்யாணத்திற்குள் நுழைந்த effect-ஐ கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் யாரென்று தெரியவில்லை.

வேறு ஏதோ ஒரு ஸ்டாலில் குழந்தைகளுக்கு நவின முறையில் சொல்லிக் கொடுக்கும் மல்டி மீடியா சாதனங்களை ஒரு பெண்மணி டெமோ செய்து கொண்டிருந்தார். இரண்டு மூன்று பேர் செல்போனை நோண்டிய படியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். நிறைய மல்டி மீடியா ஸ்டால்கள் கண்ணில் பட்டன. Professional கூரியர் ஸ்டாலில் ஒருவர் மேஜையை மட்டும் போட்டு ஓரமாய் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார். என் தாத்தா காலம் வரை அவர் ஆதரவளித்து வந்த “வைதிக ஸ்ரீ” இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறார்கள. ஒரு ஸ்டாலில் பெரிய குண்டு புஸ்தகம் ஒன்று, யாரோ வெள்ளைகாரரால் எழுதப்பட்டது - “சோம பானம்” தயாரிப்பது எப்படி என்று பண்டைய hindu scripture-இல் சொல்லியிருக்கும் வழிமுறையை அக்கு வேறு ஆணிவேறாக விளக்கியிருந்தார்கள். குறித்துக் கொள்ள மறந்து விட்டேன். கடைசியாக “திருச்சி புக் ஹவுஸ்”-இல் ஹரண் பிரசன்னாவை பார்த்தேன். பொதுவாகவே காலியாக இருந்த கண்காட்சியில் உண்மையாகவே பிஸியாக பில்லிங்கில் உட்கார்ந்திருந்தார். ஒரு Hi மட்டும் பறிமாறிக் கொண்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வந்து விட்டேன்.

செல்வதற்கு முன்பே 750 ரூபாய்க்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று முடிவு செய்து விட்டு தான் கிளம்பினேன். புத்தகங்களின் விலையைப் பார்க்கும் போது படிப்பது என்பது costly habit ஆக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக தோன்றியது. 750 ரூபாய்க்கு ஒரு நல்ல புத்தகமும் மிளகாய் பஜ்ஜியும் தேறினால் அதிகம் என்ற தெளிவு எனக்கு முதல் வரிசை ஸ்டால்களை தாண்டிய உடனே வந்து விட்டது. வாங்கியே ஆகவேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்துவது உண்மையிலேயே முதல் வரிசை ஸ்டால்களை கடக்கும் வரை கஷ்டமாக இருந்தது. வைராக்கியமாக எதுவும் வாங்கவில்லை. கடைசி வரை பார்த்துவிட்டு இதைத் தவிர வேறெதுவும் பெட்டராக தேறவில்லை என்றால் மீண்டும் விசிட் செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அந்த சபலம் மூன்றாம் வரிசை வருவதற்குள் ஓரளவு கட்டுபட்டது. கடைசி வரிசைகளில் நடக்கும் போது அந்த சபலத்தை நான் முற்றிலுமாக வென்றிருந்தேன்.

பின் வரும் புத்தகங்களை நான் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன் - ஆனால் என் பட்ஜெட் எகிற கூடாது என்று நான் உறுதியாக இருந்ததால் வாங்கவில்லை.
1) 600 தமிழ் பழமொழிகளும் அதற்கு இணையான ஆங்கில பழமொழிகளும்
2) தமிழ் நாடு பயணக்கட்டுரை - ஏ கே செட்டியார் (1900களின் ஆரம்ப வருடங்களில் எழுதிய கட்டுரைகள்)
3) ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள்
4) தெய்வத்தின் குரல் (அணைத்து பாகங்களும்)
5) ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்

கடைசியாக இரண்டு புத்தகங்கள் மட்டும் வாங்கினேன்.
1) ருக், யஜுர், சாம அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும் - வடுவூர் நாராயணன் - நர்மதா பதிப்பகம் - விலை 650 (தள்ளுபடி போக 585)
2) Race for the world - Lowell Bryan, et al - Harvard Business School press - விலை $30. தள்ளுபடியில் கண்காட்சிக்காக் ரூபாய் 100 !!!

இதில் வேதங்களைப் பற்றிய புத்தகத்தை படிக்கத் துவங்கிவிட்டேன் - அற்புதமாக இருக்கிறது. BE படிக்கும் போது Electrical Engineering-க்கு B L Theraja வின் ஒரு புத்தகம் ஒன்று உண்டு, அதை விட இந்த புத்தகம் ஒரு சுத்து பெரிசு. Race for the world - இல் சில நல்ல கேஸ் ஸ்டடிகள் இருக்கின்றன. இன்னும் முழு வீச்சில் படிக்க ஆரம்பிக்க வில்லை. இவ்வளவும் செய்து விட்டு திரும்பி வந்து அந்த முக்கியமான ஸ்டாலை அடைந்தேன் - ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-இன் கேண்டின். இவர்கள் வைத்திருக்கும் விலைக்கு புத்தகங்களின் விலையே தேவலாம் என்று தோன்றியது. இரண்டு போண்டா 30 ருபாய்க்கு விற்றால் இவர்கள் நியாயமாக திருப்பதி லட்டு சைசில் தான் போண்டா போட வேண்டும்.

நீங்கள் செல்வதாக இருந்தால் நன்றாக சாப்பிட்டு விட்டு செல்லவும்.

4 Responses to “33வது சென்னை புத்தக கண்காட்சி”

butterfly Surya said...

அருமையான அலசல்.

//கடைசியாக “திருச்சி புக் ஹவுஸ்”-இல் ஹரண் பிரசன்னாவை பார்த்தேன்.//

கிழக்குப் பதிப்பகம் ஆளு அங்க என்ன பன்றாரு?

?!!!@#%* said...

ந‌ன்றி, அருமையான‌ உருப்ப‌டியான த‌க‌வ‌ல்க‌ள்,

தெய்வத்தின் குரல் புத்த‌க‌ம் ஏதேனும் த‌ள்ளுப‌டி இல்லையா?
என்ன‌ விலை,த‌ற்பொழுது? வான‌தி தானா?

ச‌ஹ்ரித‌ய‌ன்

@ஜெயக்குமார்
சரியா தெரியலை - அவரிடம் தான் கேட்க வேண்டும்

@?!!!@#%
வானதி தான் - ஒவ்வொறு பாகமும் 200க்கு மேல். வழக்கமான 10% கழிவு உண்டு

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman