சுஜாதாவின் இந்த வரிகள் இந்தியன் எக்ஸ்பிரஸில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த போது தமிழ் உலகம் வலைபூ என்கிற பிளாக்-இற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள துவங்கியிருந்தது. இந்த விமர்சனம் சுஜாதாவிற்கு இணையத்தில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தியை தெரிவிக்க காரணமாயிருந்தது. இந்த கருத்து சரியா தவறா என்ற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும், பலரும் பிளாகைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தை இந்த கருத்து ஏற்படுத்தியது உண்மை. பிளாக் ஒரு பெரிய பனிக்கட்டியின் நுணி என்று தான் சொல்ல வேண்டும். நிகழ்காலத்திலும் இனி வரும் காலத்திலும் பிளாகிங் தனி நபர் வாழ்கையிலும், வர்த்தக நிறுவனங்களின் மார்கெட்டிங் ஸ்ட்ராடஜியிலும் பெரும் பங்கு வகிக்கப் போகிறது.
வலைப்பூக்கள் என்று தமிழில் அழைக்கப்படும் weblogs (சுருக்கமாக blogs) இன்றைய தகவல் சார்ந்த யுகத்தில் யாராலும் புறக்கணிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது. எந்த ஒரு தனிபரும் வலைப்பூவை துவங்க முடியும் அதுவும் இலவசமாக. அந்த வலைப்பூக்கள் வாயிலாக உங்கள் கருத்துகளை சொல்லலாம், துறை சார்ந்த ஆக்கங்களை பரிமாறிக் கொள்ளலாம்.
சரி இந்த பிளாக் என்பது என்ன ? நாம் நேரத்தை செலவு செய்து எழுதும் அளவுக்கோ அதைப் படிக்கும் அளவிற்கோ அது என்ன அவ்வளவு முக்கியமானதா ?
காந்தியைப் பற்றி மார்டின் லூதர் கிங் சொன்னதாக ஒரு மேற்கோள் உண்டு "We may ignore Gandhi at our own risk". இந்த மேற்கோள் பிளாகிங்-க்கும் பொருந்தும். இன்றைய சூழலில் தனி நபரின் ஆற்றலுக்கு கட்டற்ற சுதந்தரத்தை இணையம் வழங்கி இருக்கிறதென்றால் அந்த சுதந்தரத்தின் நிகழ்கால உச்சம் தான் இந்த பிளாகிங், போட்காஸ்டிங் முதலிய தொழில் நுட்பங்கள். பிளாகிங்கை சார்ந்த இணையத்தையும் அங்கு நிகழும் நிகழ்வுகளையும் சேர்த்து Blogosphere என்று அழைக்கிறார்கள்.
Blogging Platforms என்றழைக்கப்படும் வலைப்பூக்கான சேவையை பல வலைதளங்கள் இன்றைக்கு இணையத்தில் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் 1999 ஆம் ஆண்டு பைரா லேப்ஸ் தனி நபர்களும் வலைபூக்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் சிறு பொறிகளைக் கொண்ட ஒரு வலைபூ இயங்குதளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த பைரா லேப்ஸ் நிறுவனத்தை பின்னர் கூகிள் வாங்கிவிட்டது.
மிகவும் எளிமையாக இந்த பிளாகிங்கைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அன்றாட குறிப்பு என்று சொல்லலாம். இது துவங்கப்படும் போது அவ்வகையிலேயே உபயோகிக்கப்பட்டது (online journal). நீங்கள் உங்களின் தனி நபர் பிளாகில் உங்கள் வாழ்வைக் கூட ஆவணப்படுத்த முடியும். அது மட்டுமன்றி உங்கள் தனி ஆளுமைக்கேற்ப துறை சாந்த விவரங்களையும் பதிய முடியும். நீங்கள் சங்கீததில் ஆர்வமுடையவராக இருப்பவரானால் நீங்கள் உங்கள் இசையை உங்கள் கணினியில் பாடி அதை எல்லோரும் பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் ஒரு ஆடியோ பார்மெட்டில் மாற்றி உங்கள் பிளாகில் வலையோற்றிக் கொள்ளுங்கள்.
இதை தான் வலை தளங்கள் செய்கின்றனவே வலைபூக்கள் எதற்காக என்று கேட்டால் அதற்கான விளக்கம் சற்றே நுட்பமானது.
வலைதளம் என்பது நீங்கள் உங்களைப் பற்றிய அணைத்து விவரங்களையும் தொகுத்து வைக்கும் ஒரு ஆவணக்கூடம் என்று சொல்லலாம். தற்போதைய பிளாகிங் கலாசாரத்துக்கு முன் யாஹுவைப் போன்ற சில நிறுவனங்கள் இலவசமாக இணையத்தில் ஒரு இடம் (static webpages) ஏற்படுத்திக்கொள்ளும் சேவையை மக்களுக்கு அளித்து வந்தது. (இதில் முன்னனியில் இருந்தது geocities - ஆனால் இந்த geocities-க்கு சில நாட்களுக்கு முன் யாஹீ மூடு விழா நடத்தி விட்டது ). இந்த வலைதளங்கள் மூலம் நீங்கள் உங்களுக்குத் தேவையான html பக்கங்களை எழுதி அவற்றை வலையேற்றுவீர்கள். அவற்றை இலவசமாகவோ அல்லது சொந்தமாக காசு கொடுத்து உங்களுக்கென ஒரு முகவரியை இணையத்தில் பதிவு செய்து கொண்டோ செய்ய முடியும். இந்த static websites பெரும்பாலும் காட்சிப் பொருள் தானே அன்றி அந்த ஆக்கங்கள் மீது விவாதிக்கும் வகையையோ உரையாடல்களை தோற்றுவிக்கும் விதமாகவோ இல்லை. அப்படிபட்ட அம்சங்களைக் கொண்ட வகையில் இணைய தளத்தை வடிவமைக்க programming தேவைப்பட்டது. இவற்றை உருவாக்கவும், பராமரிக்கவும் நீங்கள் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.
பிளாகிங் என்பதும் ஏறக்குறைய இதே போன்ற அம்சங்களைத் தரக்கூடிய ஒரு மேடை தான். ஆனால், பிளாகில் நீங்கள் தேதி வாரியாக உங்கள் பதிவுகளை வகைப்படுத்துவீர்கள், வெப் டிசைனர், ஹோஸ்டிங் ப்ரொவைடர் என்று யாருக்கும் காசு செலவு செய்யாமலேயே. இப்போது இருக்கும் பிளாகிங் வெப்சைட்டுகள் templateகளை தந்து விடுகின்றன. அதனால் உங்களுக்குத் தேவையான வடிவத்தில் உங்கள் வலைபக்கங்களை நீங்கள் நிறுவிக் கொள்ளலாம். அதையும் விட சிறப்பம்சம் என்னவென்றால், இணையத்தின் வழியாக வழங்கப்படும் மற்ற சேவைகளை (webservices) உங்கள் வலைபதிவுடன் இணைத்துக் கொள்ளலாம். அதனால் உங்கள் வலைபதிவென்பது வெறும் static website ஆக மட்டும் இராது. மற்றும் உங்கள் வலைபதிவில் இடுகைகளை இடுவதும் ஒரு மின்னஞ்சலை தட்டி விடுவதைப் போல மிகவும் எளிதானது. இதை விட மிக முக்கியமான வேறுபாடு பிளாகில் நீங்கள் பண்முனை தொடர்பு ஏற்படுத்த முடியும். கொஞ்சம் ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டுமென்றால், “இணையக் குழு பாதி இணைய தளம் பாதி கலந்து செய்த கலவை தான் பிளாக்".
உங்கள் வலைபூவிற்கு வருகை தரும் யாரும் உங்கள் கருத்தின் மீதோ, உங்கள் ஆக்கத்தின் மீதோ தங்கள் கருத்தை மறுமொழியாக அளிக்க முடியும். உங்கள் வலைபதிவை மேற்கோள் காட்டி தங்கள் கருத்தை தங்கள் வலைபூவில் பதிந்து ஒரு விவாதத்தை தோற்றுவிக்க முடியும். அனைத்தும் இலவசமாக
1) www.blogger.com
2) www.wordpress.org
3) www.typepad.com
4) www.drupal.com
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏறக்குறைய எல்லா இலக்கியவாதிகளும் வலையேறத்துவங்கிவிட்டனர். சுஜாதா கடைசி வரை வலை பதியவில்லை. தமிழில் மட்டும் ஏறக்குறைய 4000க்கும் மேற்பட்ட வலைபதிவுகள் இருக்கின்றன. இலக்கியம், தலித்தியம், பெண்ணியம், பார்ப்பணியம் முதல் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம் எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்விக்கான விடைவரை தமிழ் கூறும் நல்லுலகம் அனேகமாக எல்லாவற்றையும் வலைபதிவுகளில் விவாதிக்கத் துவங்கி விட்டது. இந்த வலைபதிவுகள் தோற்றுவித்திருக்கும் சாத்தியக்கூறுகள் அனேகமென்று நான் சொல்வேன்.
சில வருடங்களுக்கு முன்பு வரை வார இதழ்களோ மாத இதழ்களோ இணையத்தை சட்டை செய்யாமலே தான் இயங்கி வந்தன. ஆனால் இனிமேல் அப்படி இயங்க முடியாது - இன்றைய தேதியில் இணையத்தில் வெளியான தகவல்களை அச்சுப்பத்திரிக்கையின் சில பக்கங்களில் நாம் பார்க்கத் துவங்கிவிட்டோம். உலகம் இணையம் சார்ந்ததாக மாறிக் கொண்டிருப்பதின் மிக முக்கியமான அறிகுறி இது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தன் வடிவத்தையும் தோற்றத்தையும் மாற்றாமல் இப்போதிருக்கும் அச்சிதழ்களால் செயலாற்ற முடியும் என்றே தோன்றுகிறது. அதற்கு பின்பும் அப்படியே இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி. முற்றிலுமாக அழிந்து விடாது - ஆனால் அதன் பிறகு வரும் ஒவ்வொரு இரண்டாண்டிலும் குறிப்பிடத்தக்க வடிவ மாறுதலுக்கு உட்படும் என்பது என் கணிப்பு.
எந்த விதமான வடிவ மாறுதல் நிகழக்கூடும் ? உள்ளடக்கம் என்பது மிகவும் பொதுவான கருத்துக்களை தாங்கியதாக இருக்க முடியாது. ஏனென்றால் அப்படி பட்ட சாதாரண கருத்து இணையத்தில் கொட்டிக்கிடக்கும் - இலவசமாக. இன்றைய நிலையில் இன்னும் பல நகரங்களிலும் கிராமங்களிலும் இணையம் என்பது வீட்டில் சாதரண நிலையாக மாறாத காரணாத்தாலும், கணிப்பொறியில் படிக்க பழகிப்போன ஒரு தலைமுறை தோன்றாததுமே பல அச்சிதழ்கள் இன்னும் வார மாத இதழ்களாக பவனி வர பெரிய காரணம். 1990க்குப் பின் பிறந்த குழந்தைகள் (பெரும் பாலும் இணையத்துக்கு பரிச்சயமானவர்கள்) சம்பாதிக்கும் நி்லைக்கு வர இன்னும் சில ஆண்டுகளே இருக்கின்றன. அந்த குழந்தைகள் தான் என்னைப் பொருத்தவரை மாற்றுக் காரணிகள் !
இந்த தலைமுறை இப்போதிருக்கும் தலைமுறையைக் காட்டிலும் பெருமளவு இணையத்தை வாரியணைப்பார்கள். இணையத்தில் மட்டுமே ஒரு வெகுஜனப்பத்திரிக்கையை நடத்தும் சாத்தியக்கூறை தமிழ்நாட்டில் தோற்றுவிக்கக் கூடியவர்கள் இவர்கள் தான். ஐந்தாண்டுகளுக்குப் பின் வாசகர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, இணையத்தில் படித்துப் பழகிய ஒரு தலைமுறை வளர வளர அந்த வாசகர்களைத் தன் பக்கம் வைத்துக் கொள்ள கொஞ்சம் துறை சார்ந்த நுணுக்கத்தோடு (specialized) உள்ளடக்கத்தை தயார் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தற்போதைய வெகுஜன பத்திரிக்கைகள் தள்ளப்படுவார்கள். இணையத்தின் பாதிப்பு லே அவுட்டில் இப்போது தெரிந்தாலும், உள்ளடக்கத்தைப் பொறுத்த மட்டில் நமது தமிழ் இதழ்கள் இன்னும் பழைய கள்ளையே உற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (4 சிறுகதை, 2 தொடர்கதை, சில கவிதைகள், சில நகைச்சுவை துணுக்குகள், ஒரு தலையங்கம், சில கட்டுரைகள், நிறைய விளம்பரங்கள்). இந்த நிலை மாறும் - சாதரணமாக ஏதோ ஒரு நிருபரால் ஒரு கட்டுரையை ஏனோ தானோவென்று எழுதிவிட முடியாது. கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் தேவைப்படுவார். நீங்கள் நினைத்தால் இன்றே உங்களால் ஒரு முழுமையான இதழை இலவசமாக இணையத்தில் தொடங்கி நடத்த முடியும். அதற்கான அஸ்திவாரத்தை பிளாகால் முழுமையாக அமைத்து தர முடியும். உள்ளடகத்தை மட்டும் நீங்கள் தயார் செய்தால் போதும்.
உள்ளடக்கம் சார்ந்த மற்றொரு மிக முக்கியமான சிக்கலையும் இதழ்கள் வருங்காலத்தில் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து என்ற ஒரு வடிவத்தையும் தாண்டி வீடியோ ஆடியோ என மனிதன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தளங்கள் தோன்றி விட்ட இந்த காலத்தில் அதன் தாக்கம் இதழ்களின் மீது விழ காரணமில்லாமல் இல்லை. 1000 எழுத்துகள் கொண்ட ஒரு பத்தியை எழுதுவதைக் காட்டிலும் அவ்வாறு எழுதப்பட்ட ஒரு பத்தியின் தாக்கத்தைக் காட்டிலும் பல் மடங்கு தாக்கத்தை வாசகனுக்குத் தரவல்ல வகையில் வீடியோவையும் ஆடியோவையும் குறைந்த செலவில் content format ஆக கொடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் போது இப்போதைய அச்சு இதழ்கள் முற்றிலுமாக வடிவிழக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படலாம். ஒரு வேளை டிஜிட்டல் புத்தகமாக (இண்டர்நெட் மட்டுமென்றில்லை - இதற்கென தனியே gadget தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை) இதழ்கள் எதிர்காலத்தில் வரலாம். ஒருவேளை அந்த gadget IP TV ஆகக்கூட இருக்கலாம். ஆனந்த விகடனும், குமுதமும் IPTV வழியாக உங்கள் இல்லம் நோக்கி வர சந்தா கேட்கலாம்.
நிகழ் காலத்துக்கு வருவோம். இன்றைய தேதியில் மொத்தம் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் உலகின் பல்வேறு மொழிகளிலும் இருக்கின்றன. இவ்வளவு இருந்தால் மனிதன் எந்த வலைபதிவை படிப்பது எதை விடுப்பது. அதற்குமுன் இவ்வளவு பேர் தங்கள் வலைபதிவுகளை புதுப்பித்திருக்கிறார்கள் என்பது எப்படி தெரியும்? அதற்கும் விடை இருக்கிறது - திரட்டிகள்.
ஆம், உலகம் முழுவதும் பரவி இருக்கும் வலைபூக்களிலிருந்து தகவல்களை திரட்டும் மென்பொருள் மற்றும் வலை சேவைகளுக்கு திரட்டிகள் என்று பெயர். இந்த திரட்டிகள் இணைக்கப்பட்ட அணைத்து வலைபூக்களையும் மேய்ந்து புதிதாக்கப்பட்டிருக்கும் வலைபதிவுகளை தேதி வாரியாக பிரித்து வலைதளங்களில் சேமித்து வைத்திருக்கும். இந்த திரட்டி தளங்களில் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்வதன் மூலமோ அல்லது இந்த தளங்களை மேய்வதின் மூலமோ புதிதாக்கப்பட்டிருக்கும் வலைப்பூக்களை அறியமுடியும். இது மட்டுமேயன்றி எந்த தளத்திலும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை RSS என்னும் தொழில்நுட்பம் மூலமாக தகவல்கள் உங்களை தேடி வரும்படி செய்ய முடியும். இன்றளவில் தமிழில் இருக்கும் வலைபூக்களில் இருக்கும் தகவல்களை சேமிக்க பல திரட்டிகள் இருக்கின்றன. இதைத் தவிர தகவல்களை சேமிக்கும் வலைபதிவுகளும் இருக்கின்றன.
வலைபதிவின் வீரியத்தை இந்த உலகம் உணர உணர வலைப்பதிவு என்பது தகவல்களை தேக்கி வைக்கும்/ விவாதிக்கும்/ ஒருங்கிணைக்கும் ஒரு சாதனமாக மட்டுமே பயன்படாமல் பல்வேறு தளங்களிலும் விரிவடைந்து விட்டது.
நேரடியாக பயனர்களை சென்றடையும் சேவைகளையும்/ பண்டங்களையும் விற்கும் நிறுவனங்களும், பிற நிறுவனங்களுக்கு தன் சேவையையும் பண்டத்தையும் விற்கும் நிறுவனங்களும் பிளாக்கை ஒரு மார்க்கெட்டிங் சாதனமாகவும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். Salesforce என்று ஒரு நிறுவனம். நீங்கள் வாடிக்கையாளர்களை கவர்வது முதல் அவர்கள் வாடிக்கையாளரான பின்பு அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அன்றாடம் அலசுவது மற்றும் விஸ்தரிப்பது தொடர்பான உங்களின் அனைத்து தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்கும் இணையம் வழியாகவே தீர்வு தரும் அந்த நிறுவனம். இவர்கள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கான பயிற்சி முதல் புதிய வெர்ஷன் வரும் போது அதற்கான முன்னோட்டம் வரை பிளாகின் வழியாகவே பகிர்ந்து கொள்கின்றனர். உலகின் பெரிய நிறுவனங்கள் பலவும் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக வலைபதிவு சேவையை ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றனர்.
பிளாகிங்கை மார்க்கெடிங் சாதனமாக பயன்படுத்துவதால் நன்மைகள் மட்டுமே கிடைப்பதில்லை. எதிர்பார்க்காத சில விளைவுகளும் ஏற்படலாம். குறிப்பாக சேவையையோ, பண்டத்தையோ பற்றிய திறந்த வெளிப்படையான கருத்தை பயனர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த சாதனமாக இருந்தாலும், மகிழ்ச்சியடையாத ஒரு வாடிக்கையாளர் திட்டி தீர்க்கும் ஒரு தளமாக அது பயன்படக்கூடும். ஆனால் அதைப்பற்றியும் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இந்த துறையின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான ஆய்வுகோணத்தை முன் வைக்கிறார்கள். வலைபதிவுகளைப் படித்து விட்டு பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரு மனோபாவம் இருக்கிறது - ஒரு பொருளை பாராட்டி மட்டுமே கருத்துகள் வராமல் அதன் பிரச்சனை குறித்தும் கருத்துகள் வந்து அவை உங்கள் வலைபதிவுகளில் வெளியானால் அந்த வலைபதிவு குறித்தும் பொருள் குறித்தும் நம்பகதன்மை வாடிக்கையாளர்களிடம் அதிகரிக்கிறது என்பதே அது. ஆனால் 90% சாதகமான கருத்துகளும் 10% பாதகமான கருத்துகளும் வந்தாலே இந்த நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
பிளாகிங் இன்றைய சூழ்நிலையில் இன்னும் சுருங்கி மைக்ரோ பிளாகிங் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. அதாவது மிகவும் சிறிய துணுக்குகளை நீங்கள் ஒரு வலைதளத்தில் போட்டு வைத்து உங்கள் நன்பரை அந்த பயனர் கணக்கோடு இணைத்து கொண்டால் போதும் - எந்த விதமான தகவலையும் அவரோடு பகிர்ந்து கொள்ளலாம். Twitter என்ற வலைதளம் சமகாலத்தில் மிகப்பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. சமிபத்தில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலின் போது இந்த மைக்ரோ பிளாகிங் மூலமாக தகவல்கள் துரிதமாகப் பயன்பட்டது. இதிலிருக்கும் பெரும் வசதி என்னவென்றால் செல்போனிலிருந்து கூட குறுஞ்செய்தி அனுப்பதன் மூலம் உங்கள் twitter பயனக்கணக்கில் செய்திகளை பதிய முடியும். அதே போல செய்திகளை குறுஞ்செய்தியாக பெறவும் முடியும்.
தகவல் பரிமாற்றம் என்பது மிகவும் துரிதப்பட்டு போன இந்த காலத்தில், இணையத்தின் மூலமாகவே நிகழ்வுகளை நேரடியாக பதியத்துவங்கிவிட்டனர். இதற்கு live bloggging என்று பெயர். கிரிக்கெட் போட்டி முதல் ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும் காதுகுத்து விழா வரை எல்லாவற்றையும் நேரடி வர்ணனை செய்யலாம்.அதாவது சாதாரணமாக ஒவ்வொரு செய்தியாக தட்டச்சுவதில்லை. இப்போது இருக்கும் சேவைகளின் மூலம் நேரடிவர்ணனை, நேரடி ஓட்டெடுப்பு, தொடர்புள்ள சுட்டியை இணைப்பது, தொடர்புள்ள வீடியோவை இணைப்பது என்று சகலமும் இலவசமாக செய்ய முடியும். இடைஇடையே யாரெனும் கேள்விகேட்டால் அதற்கு பதில் சொல்லவும் முடியும். உதாரணத்திற்கு, உங்கள் மகளுக்கு ஊரில் காது குத்தும் சடங்கை வரி விடாமல் ஆன்லைனில் சாட் விண்டோவில் தட்டச்சுவது போல தட்டச்ச இணைமுகங்கள் (interfaces) வந்துவிட்டன.
இந்த இணைமுகங்களை உங்கள் பிளாகில் இணைத்தால் போது. நீங்கள் தட்டச்சிக் கொண்டே இருக்கும் போது டிஜுட்டல் காமெராவில் எடுத்த போட்டோக்களை USB drive வழியாக கணிப்பொறியில் ஏற்றி இணையத்திலும் ஏற்றி விடலாம். தேவைப்பட்டால்,ஹேண்டி கேம்-இல் எடுத்த வீடியோவை, மெமரி ரீடர் உங்கள் லேப்டாப்பில் இருந்தால் நேரிடையாக ஏற்றி விடலாம். மிகச்சாதரண உபகரணங்கள் வாயிலாகவே நேரடி ஒளிபரப்பு செய்து விடலாம். நடுவே உச்சா போக வேண்டுமென்றால் வெய்டீஸும் சொல்லி விட்டுப் போகலாம். www.coveritlive.com என்ற வலைதளம் இந்த சேவையை இலவசமாக தருகிறார்கள்.
இன்றைய நிலையில் வலைபதிவுகள் எழுதுவதாலே பல ஆயிரம் சம்பாதிக்க முடியும். ஆச்சரியாமாக இருக்கிறதா? அமித் அகர்வால் என்ற இந்தியர் இதற்கான அருமையான உதாரணம். அமித் IIT-இல் தன் தொழில்நுட்ப கல்வியை முடித்து விட்டு சில பன்நாட்டு கம்பெனிகளில் வேலை செய்து வந்தவர். இவர் தான் இந்தியாவின் முதல் தொழில் முறை பிளாகர். அதாவது அவருக்கு பிளாக் எழுதுவது தான் முழு நேர வேலை. அப்படி எதைப் பற்றி எழுதுகிறார் - கணிப்பொறியில் தற்கால தொழில் நுட்பம், சாஃப்ட்வேர்கள் பற்றிய விமர்சனம், குறிப்புகள், செயல் முறை விளக்கங்கள் என்று தொடர்ச்சியாக எழுதுகிறார். ஆனால் இப்படி எழுதுவதால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும் ? விளம்பரங்கள் வாயிலாக !
வலைதளத்தில் வைக்கப்படும் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெற முடியும். கூகிள் நிறுவனத்தின் adsense தொழில் நுட்பம் இதற்கு உதவுகிறது. ஒவ்வொரு முறையும் வாசகர்கள் யாரேனும் அந்த விளம்பரத்தினை கிளிக் செய்தால் போதும் - வலைதள உரிமையாளர் கணக்கில் கமிஷன் வந்து விடும். இந்த விளம்பரங்கள் யாவும் உள்ளடக்கத்திற்கு தொடர்புள்ள விளம்பரமாகவும் உங்கள் வாசகர்களுக்கு சம்பந்தமிருக்கும் விளம்பரமாகவும் தான் இருக்கும். இந்த சேவையும் இணையத்தில் இலவசம் தான்.
எதிர்காலம் என்பது இன்றைக்கு இருக்கும் தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் மீது கட்டப்படும் மிகப்பெரிய மின்னனு யுகமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யார் கண்டது பாப்பநாயக்கன்பட்டியிலிருக்கும் குமரேச நாடார் பலசரக்குக் கடை இன்னும் ஐந்து வருடங்களில் ஆன்லைனில் கிரடிட்கார்ட் மூலம் ஆர்டர் செய்ய வைத்து, டோர் டெலிவரி செய்து "குநாபக"-இன் நட்சத்திர வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு பிளாக் நடத்தி மார்க்கெட்டிங் செய்யலாம்.



