Adsense

IT Industry 2009 Review


ஏதோ பீடை வருஷம் கழிவதைப்போல இந்த 2009ஆம் ஆண்டு கழிவதை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார மந்தநிலை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருப்பதால் தான் இந்த எதிர்பார்ப்பு. செப் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரையிலான காலங்கள் கிடுக்கிப்பிடியாகத்தான இருந்தன - உலகில் உள்ள அணைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும் அது வரை இல்லாத புதிய திட்டத்தை வரைய வேண்டிய நிர்பந்தம் இருந்தது.

மிகப்பெரிய பொருளாதார பின்னடைவு

Source:NASSCOMகடந்த பத்தாண்டின் துவக்கத்தில் இந்திய IT சந்தையின் ஏற்றுமதி 2010-இன் இறுதியில் $50 பில்லியனை தாண்டும் என்று NASSCOM மதிப்பிட்டு சொன்னது.இடது கை பக்கம் நீங்கள் பார்ப்பது NASSCOM data. கடந்த 20 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் (இன்னும் நாம் முழுமையாக வெளியே வரவில்லை) பொருளாதார பின்னடைவின் காரணமாக இந்த இலக்கை நாம் முழுமையாக அடையவில்லை. தற்போதைய மதிப்பீட்டின் படி 2010ஆம் ஆண்டில் 3வது அல்லது 4வது காலாண்டில் இந்த இலக்கை நாம் அடைய முடியும் என்று NASSCOM நம்பிக்கை தெரிவிக்கிறது.


2001 ஆம் ஆண்டு தோன்றிய பொருளாதார பின்னடைவைக் காட்டிலும் இந்த பின்னடைவு மிகவும் அதிகமான சேதங்களை ஏற்படுத்தி விட்டது. ஒரு நாட்டின் வளர்ச்சி குறியீட்டையே பெரும்பாலும் தகவல்தொழில் நுட்பத்துறை சார்ந்திருக்கிறது (இந்தியாவில் பெரும்பாலும் ஏற்றுமதி என்பதால், இந்த துறை நமது GDP-ஐ influence செய்கிறது). மெக்கின்ஸியின் ஆய்வுப்படி இந்த வீழ்ச்சியானது கடந்த பத்தாண்டுகளின் சராசரியை விட கீழே வீழ்ந்திருக்கின்றது. பத்தாண்டுகளில் சராசரியாக GDP-இல் 3.3% தகவல் தொழில் நுட்பத்தில் செலவழிக்கப்பட்டிருக்கிறது; ஆனால் 2009இல் இந்த நிலை 3.1% ஆக இருக்கிறது. இதற்கு காரணம் சமிப ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பத்தில் (வன்பொருள்/ மென்பொருள்/ சேவைகள்) முதலீடுகள் அதிகரித்து அதன் உச்சதில் இருந்தது. இந்த நிலையிலிருந்து தான் இந்த பின்னடைவு கீழே தள்ளி இருக்கிறது.

இந்த பின்னடைவு வாழ்க்கையை பற்றிய சில அடிப்படை பார்வைகளையே மாற்றிப் போட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

சத்ய(ம்) சோதனை
பொருளாதாரம் தான் நம்மை ஆட்டுவிக்கிறது என்று பார்த்தால் சத்யம் குழப்படி இந்திய சேவை நிறுவனங்களின் முகத்தில் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது. இருந்தும் அந்த கரும்புள்ளியை திருஷ்டிப் பொட்டாக மாற்றி மிக லேசான சேதாரத்துடன் நாம் தப்பினோம். ஏற்கனவே 2009 எப்படி போகப்போகிறது என்ற கவலையுடன் வருடத்தை ஆரம்பித்தவர்களுக்கு இதையும் வைத்துக்கொள்ளுங்கள் என்று ராமலிங்க ராஜு ஒரு வெடி குண்டை பரிசாக கொடுத்தார். சில காலம் மீடியாக்களுக்கு தலைப்பு செய்தி தேடி கண்டுபிடுக்கும் வேலையையும் மிச்சம் பிடித்தார். லாபக்கணக்கை கற்பனையாக பல ஆண்டுகள் அதிகரித்து முதலீட்டாளார்களுக்கு அவர் விரித்த ஒரு மாயவலையில் அவரே கடைசியில் வீழ்ந்தது ஆச்சரியமில்லை, பரிதாபம். இதனால் அவர்கள் கணக்கை தணிக்கை செய்து வந்த PWC மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளானது. இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் Corporate Governance ஒரு பூதக்கண்ணாடிக்கு கீழே கொண்டு வரப்பட்டது. பல ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது - சத்யத்திற்கு business கொடுத்த பல நூறு கஸ்டமர்களின் தொழில் கவலைக்குள்ளானது. NASSCOM மற்றும் அரசின் முனைப்பின் அவசர கதியில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. துரித கதியில் சத்யத்தை மீட்டதும், சத்யத்தை வாங்க இன்னொரு கம்பெனியை தேர்ந்தெடுக்கவும் அரசு மற்றும் NASSCOM மேற்கொண்ட முயற்சிகள் ஒரு case study-ஆக MBA மாணவர்கள் படிக்க வேண்டிய விஷயம். இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய ஒரு பதிவு இந்த சுட்டியில்.

தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் பொருளாதார பின்னடைவை எப்படி எதிர்கொண்டன ?
புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறைந்ததோடு மட்டும் இல்லாமல் ஏற்கனவே ஏற்ற பணிகளுக்கான ஒப்பந்தங்களிலும் price negotiation செய்ய வேண்டிய கட்டாயமும் அனேகமாக அணைத்து நிறுவங்களுக்கும் ஏற்பட்டன. இதனால் topline அதிகமாக்க முடியாத பட்சத்தில் தொடர்ந்து லாபகரமாக இயங்க ஒரே வழி தங்கள் நடைமுறை செலவுகளை குறைத்து bottomline-ஐ அதிகரிப்பது தான். பெரும்பாலும் அணைத்து இந்திய நிறுவனங்களும் இந்த திட்டத்தையே கையாண்டன.

இந்த பொருளாதார பின்னடைவால் பெரிதும் பாதிக்கப்பட்டவை சிறிய மற்றும் இடைநிலையில் இருக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தான். பெரிய நிறுவனங்கள் இந்த நிலையை தங்கள் கையிருப்பை வைத்து சமாளித்தாலும் - அவர்களாலும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கம்மியாக்காமல் இருக்க முடியவில்லை. Bench Strength எனப்படும் ப்ராஜெக்ட்டில் அமர்த்தப்படாத (வருமானம் ஈட்டாத) தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்தனர். தடாலடியாக வேலை பறிக்கப்பட்ட IT/ ITES தொழிலாளிகள் இணைந்து ஒரு Union துவங்கக்கூட முயன்றார்கள். என் அறிவுக்கு எட்டியவரை இவர்கள் அமைக்க முயன்ற Union எந்த விதமான முடிவான இலக்கையும் எட்டவில்லை. ஓரளாவுக்கு நீர்த்துபோய் விட்டது என்பது தான் உண்மை.

இவற்றையும் தவிர பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபட்டன. கம்ப்யூட்டரை வீட்டிற்கு போகும் போது அணைத்து விட்டு செல்லுங்கள் என்று கையில் ஸ்கேல் வைத்து மிரட்டாத குறையாக மானேஜர்கள் கோரிக்கை வைத்தனர். ஆண்டு இறுதியில் வழங்கப்படும் போனஸ் நிறுத்தப்பட்டது, Performance Review என்பது வருடத்திற்கு நான்கு முறையோ இரண்டு முறையோ நடத்தப்படும் நிறுவனங்களில் கூட வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தினார்கள் - அப்படி நடத்தப்பட்ட நிறுவனங்களிலும் சம்பள உயர்வு/ பதவி உயர்வு போன்றவை கண்ணில் விளக்கெணை ஊற்றிக் கொண்டு, ஒரு மைக்ரோஸ்கோப் வழியாக ஒருவருடைய பணியை ஆராய்ந்த பின்னர் ஒற்றைப்படை இலக்க சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு தரப்பட்டது; நான்கு ட்யூப்லைட் போடப்பட்டிருந்த வ்ராண்டாவில் ஒரே ஒரு ட்யூப் லைட் மட்டும் எரிந்தது; இன்ஃபோசிஸ் ஒவ்வொரு ஊழியரையும் $10 சேமிக்க சொன்னது. ஒரு எஞ்சினியரை பணியில் அமர்த்த வேண்டிய இடத்தில் ஒரு ட்ரெய்னியை வைத்து வேலையை முடித்தார்கள் - Lateral hiring எனப்படும் அனுபவமிக்கவர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது அனேகமாக இல்லை என்றே சொல்லலாம்; ஆஃபிஸுக்கு pick up serviceக்காக அனுப்படும் பஸ்களுக்காக கட்டணம் அதிகரிக்கப்பட்டது; ஆஃபிஸில் வழங்கப்படும் காஃபி, டீ மற்றும் சிற்றுண்டிகள் நிறுத்தப்பட்டன.

இப்படியெல்லாம் செய்து ஓரளவுக்கு இந்திய கம்பெனிகள் நிலைமையை சமாளித்தன என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலை இந்திய கம்பெனிகள் என்றில்லை உலகெங்கிலும் இருக்கும் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளிSource:Mckinsey Quarterlyலும் இருந்தது. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் இந்த பொருளாதார பின்னடைவு என்ற சுழலின் மத்தியில் இருந்ததால் அவர்களுக்கு இந்த பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்தது. இந்தியாவைக் காட்டிலும் அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் சதவிகதம் மிக அதிகமாக இருந்தது. இருப்பினும் இந்த நிலை மெல்ல செப் 2009 வாக்கில் மாறத்துவங்கியது. தகவல் தொழில் நுட்பத்துறை சார்ந்து இருக்கும் மற்ற தொழில் துறைகள் இந்த பொருளாதார தேக்கத்திலிருந்து மெல்ல விடுபடுவதாக கருத்து தெரிவித்தனர். மெக்கின்ஸி எடுத்த ஒரு சர்வேயின் முடிவில் அவர்கள் கண்டது செப் 2009 வாக்கில் பெரும்பாலான கம்பெனிகள் கொஞ்சம் கொஞ்சமாக லாபம் ஈட்டும் போக்கிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதே.


மெல்ல விலகும் கிரகணம்
பொருளாதார சேதாரத்திலிருந்து மெல்ல விடுபட்டாலும் தேவை (demand) 2010-ஆம் ஆண்டு எந்த துறையிலும் மிகஅதிகமாக இருக்கப்போவதில்லை. IDC -இன் கணிப்பு படி அதிகமாகப் போனால் சேவைக்கான தேவை 2-4 % அதிகமாகலாம். இந்த சதவிகிதம் மெல்ல அதிகமாகி அடுத்த பத்தாண்டுகளின் மத்தியிலோ அல்லது இரண்டாம் பாதியின் இறுதியிலோ இன்னொரு உச்சத்தை அடைய சாத்தியங்கள் இருக்கின்றன. இந்த ஒன்றரை ஆண்டுகளில் குறுகிய சந்தை மெல்ல விரிவடையும் போது இந்த சந்தை முன்னேற்றத்தை முன்னின்று எடுத்துச் செல்லக்கூடியவை BRIC நாடுகளே. முக்கியமான காரணம் இந்த சந்தைகளில் விரிவடையும் போக்கு நிறைய - குறிப்பாக இந்தியா போன்ற மாபெரும் பயனாளர் சந்தை இருக்கும் தேசங்களில் கணிப்பொறி மயமாதல் இன்னும் உச்சத்தை அடையவில்லை. இவை வேகமடையும் போது, அரசின் நேரடி பங்கேற்பு இதில் வரும் போது, சந்தை விரிவாக்கத்திற்கு அவை பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

இவற்றை மனதில் வைத்தே பல பெரிய தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களும் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக இப்போதே முதலீடு செய்து விட்டன. 2009 அவர்கள் செய்த முக்கியமான முதலீட்டில் ஒன்றான M&Aக்களை நான் தொகுத்துள்ளேன். அவை உங்கள் பார்வைக்காக கீழேமேலே குறிப்பிடப்பட்டுள்ள M&Aக்களில் நீங்கள் கவனித்தீர்களானால், இரண்டு விஷயம்
1) BPO துறையில் அதிகமான M&A நடைபெற்றிருக்கின்றன
2) சேவை நிறுவனங்களை product கம்பெனிகள் வாங்கியிருக்கின்றன

2009 ஆம் வருடம் நடந்த M&Aக்க 2008-இல் நடந்ததைக் காட்டிலும் குறைவே. இந்த பொருளாதார பின்னடைவில் BPO நிறுவனங்கள் சற்று கம்மியாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை. நிறுவனங்களின் அடிப்படையான செயல்களை செய்து கொடுக்கும் பணியை இந்த நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதால் இவர்களின் சேவை ஒரு விதத்தில் இன்றியமையாததாகி விட்டது. இதில் பெரிய நிறுவனக்கள் ஆசியாவில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு மேற்கொண்டவையே. Macro economic factors தடுமாறும் இலங்கையில் கூட ஒரு கம்பெனியை Axon வாங்கியிருப்பதைக் காணலாம்.

இரண்டாவது வகை M&Aக்கள் தான் மிகவும் சுவாரஸ்யமானவை. Dell, Perot-ஐ வாங்கியதும், Xerox ACSஐ வாங்கியதும், Oracle Sun-ஐ வாங்கியதும் தான் 2009-இன் மிகவும் முக்கியமான M&A என்று வகைப்படுத்த வேண்டும். ஏனென்றால் இவை அட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவை. இப்போதைக்கு டெல்-ஐப் பொருத்தவரை வன்பொருளையே முக்கிய வியாபாரப்பொருளாக கொண்டதால் அதிக வாய்ப்பு கொண்ட சேவை துறையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இதை விட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. மேலும், IBMக்கு சரியான போட்டியாக உருவாகவும் Dell சர்வீஸஸ் துறையில் முத்திரை பதிக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே நஷடத்திலும் கடனிலும் ஓடிக்கொண்டிருந்த Sun-ஐ ஆரக்கிள் வாங்கியது செர்வருக்காகவும், தொழில் நுட்பத்திற்காகவும். Cloud computing துறையில் ஆரக்கிள் ஒரு இடத்தைப் பிடிக்க இந்த வர்த்தகம் பெரிது உதவும். இதையும் விட உடனடி பலன் MySQL என்ற தனது திறந்தமூல போட்டியாளரை ஆரக்கிள் இந்த Move-இன் மூலம் தன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டது.

ரிஸஷனுக்குப்பின் IT துறையில் முதண்மைபடுத்தப்படப் போகும் தொழில் நுட்பங்கள்
பொதுவாக IT துறையை அதிகமாக பயன்படுத்திக்கொள்ளும் தொழில்களான தயாரிப்புத்துறை, வங்கித்துறை மற்றும் நிதி சேவை துறை, போன்ற துறைகளின் தேவை தான் தகவல் தொழில்நுட்பத்துறையின் திசையை நிர்ணயம் செய்வதாய் அமையும். இருப்பினும் அடுத்த பத்தாண்டுகளில் இந்த போக்கு மெல்ல பொதுத்துறை மற்றும் மருத்துவத்துறை பக்கம் திரும்ப ஆரம்பிக்கும்.

2010-ஆம் ஆண்டு, உலகளாவிய நிறுவனங்களின் அதிமுக்கிய தேவை செலவை கட்டுப்படுத்துதலும், இன்னொரு பாய்ச்சலுக்கு தங்களை தயார் செய்து கொள்ளுதலே ஆகும். இந்த இரண்டு இலக்கை அடையவேSource:Mckinsey Quarterly IT தங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிரே உள்ள படத்தில் உள்ளது மெக்கின்ஸி நிறுவனம் நடத்திய சர்வேயில் தங்கள் முக்கிய இலக்கு என்று பன்னாட்டு நிறுவனங்கள் சொன்னதாக கண்டடையப்பட்டவை. அந்த வரிசையில் 2010 முதலான அடுத்த பத்தாண்டுகளில் இந்த துறைகள் அதிகமான முதலீடு செய்யக்கூடிய ஏரியாக்கள் என்று பின்வருவனவற்றை நாம் வகைப்படுத்த முடியும்.

செலவை கட்டுப்படுத்துதல் என்ற இலக்கில் ஏற்கனவே இருக்கும் கட்டுமான செலவுகளை கட்டுப்படுத்தவே அனைத்து நிறுவனங்களும் விரும்பும் - ஏனென்றால் ஒரு நிறுSource:VMWareவனத்தின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த செலவுகளில் கட்டுமான செலவுகள் பெரும்பங்கு வகிக்கின்றது. அவர்கள் செலவை கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பங்களில் ஒன்று தான் Virtualizaton. தங்களது டேட்டா செண்டர்களை தற்போது இருக்கும் பரப்பை தாண்டி ஒரு virtualized environment-க்கு நகர்த்தவே விரும்புவார்கள். Server virtualization செய்வதால் அவர்களுக்கு செர்வர் செலவு, அதை ஹோஸ்ட் செய்யும் செலவு மற்றும் ஒரு டேட்டா செண்டரை பராமரிக்கும் செலவும் குறையும். Virtualization-ஐப் பொருத்த வரை பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் திட்டத்தின் முன் வரைவையாவது தயாரித்து வைத்து இருக்கின்றார்கள். சில நிறுவனங்கள் desktop virtualization-ஐயும் தங்கள் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். Application virtualization மற்ற இரண்டு வகையைப் போல அதிக தீவிரத்துடன் இன்றைய தேதியில் பார்க்கப்படவில்லை - அதற்கு பதிலாக Application portfolio rationalization என்ற நிலைபெற்ற ராஜபாட்டையிலேயே நிறுவனங்கள் பயணிக்கின்றன. பல சேவை நிறுவனங்கள் Virtualization-ஐ ஆதாரமாகக் கொண்டு ஒரு வணிக மாடலை ஏற்கனவே தயாரித்து விட்டனர் - இதற்காக அவர்கள் VMWare போன்ற நிறுவனங்களுடன் பரஸ்பர ஒப்பந்தத்திக்லும் ஈடுபட்டுள்ளனர். இந்த துறை நிச்சயம் 2010-இன் hit topic.

செலவை கட்டுப்படுத்த இன்னொரு வழிமுறை Cloud computing. செலவை கட்டுப்படுத்தும் வழி என்பதையும் தாண்டி பன்னாட்டு நிறுவனங்களின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு உதவக்கூடியது என்பதால் cloud computing-இன் பக்கம் பல நிறுவனங்களின் கவனமும் திரும்பியிருக்கிறது. பல தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களும் cloud platform-ஐ தழுவ விரும்பினாலும் இப்போதைக்கு இது முழு வீச்சில் இல்லை - ஆனால் நிச்சயம் வேகம் பிடிக்கும். இது ஒருவேளை அடுத்த பத்தாண்டிகளின் முதல் பாதியில் வலுவடையத்துவங்கி அடுத்த பத்தாண்டுகளின் மத்தியில் ஒரு standard-ஆக மாறக்கூடும். இன்றைய நிலையில் சில security தொடர்பான கேள்விகளும் அச்சங்களும் கேள்விகளும் இதன் தழுவலை துரிதமாகாமல் தடுக்கின்றன. சேவை நிறுவனங்கள் private cloud நிர்மாணிக்க முயன்று 2011 - 2012 வாக்கில் முழு வீச்சில் வெற்றியடையலாம். ஆனாலும் enterprise solutions அனைத்தையும் cloud platform-இல் கொண்டு வர எத்தனை காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை. CRM தொடர்பான சொல்யூஷன்கள் மேகத்தில் ஏறிவிட்டாலும் மற்ற enterprise சொல்யூஷன்களும் மேகத்தில் ஏற சில காலம் பிடிக்கும். இது தொடர்பாக SAP என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.
மேலே சொன்னதைக் தவிர குறுகிய கால முதலீடாக சில புதிய செயலிகளை உருவாக்கும் முயற்சியில் பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபடும். இதனால் புதிய application development ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உண்டு.

Green IT (பசுமை தகவல் தொழில்நுட்பம்): இன்றும் இன்னும் எதிர்காலத்திலும் அதிகம் முக்கியத்துவம் பெறப்போகும் ஏரியா என்று இதை சொல்லலாம். சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், மின்னனு கழிவுகளை கவனமாக மறுசுழற்சி செய்தல், Carbon emission - ஐ கட்டுப்படுத்துதல் (அவற்றை முறையாக கவனித்தல் மட்டும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை நிர்ணயம் செய்தல்), கட்டமைப்பை குறைந்த ஆற்றலில் நிறைவாக செயலாற்ற செய்யும் வழிமுறைகளை உருவாக்குதல் போன்ற குறிக்கோள்கள் இதற்கு உண்டு. இவற்றை செயல்படுத்த பன்முனை செயல்திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த செயல்திட்டங்கள் ஒவ்வொரு துறைக்கும் வேறுபடும். அதனால் துறை வாரியான solutions-உம் தோற்று விக்கப்படுகின்றன. பேப்பரை உபயோகிப்பதை குறைப்பது முதல், Green house gases emission-ஐ கட்டுப்படுத்த உதவுதல், logistics தேவைக்காக வாகன உபயோகத்தை கட்டுப்படுதல், என பல்வேறு முனைகளிலும் தகவல் தொழில்நுட்பமும் தொலை தொடர்புதுறையும் சுற்றுசூழலை பாதுகாக்க பங்காற்ற முடியும். 2020-ஆண்டு வாக்கில் இந்த செயல்திட்டங்கள் மூலம் குறிப்பிட்ட அளவு பயனை எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு Virtualization-ஐ தவிர, சில சேவை நிறுவனங்கள் carbon emission-ஐ மானிட்டர் செய்யும் செயலிகளை தயாரிக்க துவங்கியிருக்கின்றன.


மேலே சொன்ன ஏரியாக்களைத் தாண்டி mobile content distribution, 4G என்று பல்வேறு சிறந்த மாற்றங்களையும் நாம் வரும் ஆண்டின் எதிர்பார்க்கல

2010 ஐயும் தாண்டி அடுத்த பத்தாண்டுகளுக்கு துறை வல்லுனர்கள் முன் வைக்கும் முன்கூற்றுகள் (அல்லது எதிர்பார்ப்புகள்) சில
  • அடுத்த பத்தாண்டுகளில் தகவல் தொழில் நுட்ப சேவைகளுக்கான உலகளாவிய சந்தை ஏறக்குறைய 1.5 ட்ரில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
  • இதில் இந்தியாவில் மட்டும் 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சேவைகளுக்கான சந்தை இருக்கும்.
  • பெரும்பாலான சேவைகளுக்கான புதிய தேவைகள் பொதுதுறையிலிருந்தும் healthcare-இல் இருந்தும் தான் தோன்றப்போகின்றது
  • Managed services model தான் எங்கும் வியாபித்திருக்கப்போகின்றது
  • இந்தியாவின் சந்தைபங்கு குறையலாம் (NASSCOM 10% என்று சொல்கின்றது வேறு சிலர் இந்தியா கவனமாக இல்லாவிட்டால் 40% வரை குறையலாம் என்று சொல்கிறார்கள்)
எப்படி இருந்தாலும் இந்த வருடத்தைக் காட்டிலும் வரும் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்திற்கு பிரகாசமானதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கடவுள் ஆசிர்வாதம் இருக்குமானால் முதல் காலாண்டின் முடிவிலோ, அரையாண்டின் இறுதியிலோ இது போன்ற ஒரு அலசலுடன் மீண்டும் சந்திக்கிறேன்.

No response to “IT Industry 2009 Review”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman