Adsense

என் பெயர் சந்திரசேகரன்


"மே ஐ ஸ்பீக் டு மிஸ்டர் கிருஷ்ணன் ப்ளீஸ்"
"ம். ஹேங் ஆன் ப்ளீஸ்".
"அப்பா உனக்கு ஃபோன்", என்று சொல்லிவிட்டு ஃபோன் பக்கத்திலேயே காத்திருப்பேன் - "உனக்குதாண்டா" என்று ஃபோனை காதில் வைத்த மறு நிமிஷமே அப்பா கொடுப்பார் என்று தெரிந்து.

இன்று நேற்று அல்ல ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாகவே பழகிப்போன ஒரு கதை தான். சைவ வைஷ்ணவ சண்டை போட்டால் என்னுடைய பெயரை ஒரு கேஸாக எடுத்துக் கொண்டு பாத்தியா கிருஷ்ணனுக்கு தான் அதிக பாப்புலாரிட்டி என்று யாராவது சொல்லலாம். அந்த அளவுக்கு அதிகமான பேர் என்னை கிருஷ்ணனாக்கியிருக்கிறார்கள் - மயிலிறகு ஒன்று வைத்து புல்லாங்குழலை கையில் கொடுக்க வேண்டியது தான் பாக்கி.
சில வருஷங்களுக்கு முன் அறிமுகமான நண்பர் ஒருவருடனான சம்பாஷனை மிகவும் சுவாரஸ்யமானது
"நீங்க நாகரத்னம் கிருஷ்ணாவுக்கு எதாவது சொந்தமா ?"
"இல்லையே ஏன் கேக்கறீங்க"
"ரெண்டு பேரும் கிருஷ்ணாவாயிருக்கீங்களே"
"இல்லை சார், நான் சந்திரசேகரன் கிருஷ்ணன்"
"ஓ சாரி கிருஷ்ணன்"
"இல்லை சார் நான் சந்திரசேகரன்"
நேயர் விருப்பத்திற்காக ஒரு முறை கெசட் வரை போய்விட்டு வரலாம் என்று கூட யோசித்தேன். ஆனால் "கிருஷ்ணன் கிருஷ்ணன் கிருஷ்ணன் கிருஷ்ணன்-ன்னு ஒருத்தர் இருந்தார்" என்று எதிர்காலத்தில் என்னைப் பற்றி யாராவது கதை சொல்ல நேரிட்டால் கஷ்டப்படுவாரோ என்று விட்டு விட்டேன்.
யோசித்துப் பார்த்தால் இந்த குழப்பமெல்லாம் ஆரம்பித்தது 10வது படிக்கும் போது தான்.

ஒரு நாள் கரண்ட் போன ஒரு மத்தியானத்தில் நூறு பேர் படிக்கும் வகுப்பில் என்னை மட்டும் எழுப்பி நிற்க வைத்து கேட்கக் கூடாத அந்த கேள்வியை கிளாஸ் மாஸ்டர் கேட்டார் "சந்திரசேகர், வாட் இஸ் யுவர் நேம்".

கொல்லென்று சிரித்த கிளாஸில் ஏறக்குறைய ஜோக்கராக்கப்பட்ட நிலையில் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு வேளை நமது சிற்றறிவுக்கு எட்டாத எதாவது பொருள் இந்த கேள்வியில் இருக்குமோ என்று தோன்றியதால் மௌனமாக இருந்தேன் - பிறகு மெல்ல தயங்கி
"கே சந்..."
"நோ. உன் பேர் அதில்ல"
"சார்.."
"உன் பெயர் சந்திரசேகரன் கிருஷ்ணன் - அப்படி தான் உன் அப்பா ஸ்கூல் லெட்ஜரில் 6 வது வகுப்பில் நீ சேர்ந்த போது கொடுத்திருக்கார்", ஒரு வெற்றி பெருமிதம் அவரது முகத்தில் இருந்தது. பல நாள் இருட்டில் கிடந்த ஒரு ரகஸ்யத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்ட பெருமிதம்.
"ஓ கே சார்"
"உன்னோட போர்ட் எக்ஸாம் ஹால் டிக்கெட்ல அப்படி தான் உன் பேர் இருக்கும்"
"ஓ கே சார்"
"சிட் டவுன்"
"ஓ கே சார்"
அது வரை கே சந்திரசேகராக அமைதியாக போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையில் புயல் வீசத்துவங்கியது அப்போது தான். இந்த பெயர் குழப்பமிருந்தாலும் யாரும் பள்ளிகளிலும் கல்லூரியிலும் என்னை என் பெயர் சொல்லி கூப்பிட்டதேயில்லை ! ”கே சி” என்று இரண்டு எழுத்து அடைமொழி தான் எனக்கு (இன்று அலுவலகம் வரை). அதற்கான காரணமும் இருந்தது. ஒருவரில்லை இருவரில்லை நான்கு சந்திரசேகர்கள் நான் படித்த வகுப்பில் (இனிமேல் தமிழ் நாட்டில் யாரும் இந்த பெயரை வைக்கக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பதாயிருந்தால் அந்த கட்சிக்கு நான் வரும் எலக்ஷனில் ஓட்டு போட தயார் - 7000 வாங்காமலே). யாரை கூப்பிட்டால் யார் திரும்புவார்கள் என்று குழப்பம் இருந்ததால் இன்ஷியலையும் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து நான்கு பேருக்கும் புதுப் பெயர் வழங்கி விட்டார்கள். ஆனால் அந்த பேர் ஒரு குழுவுக்குறியாகவே மாறிவிட்டது தான் சோகம். என்னுடைய ’அலுமினி’களைத் தவிர யாருக்கும் அந்த இரண்டெழுத்து மந்திரம் தெரியாததால் கல்லூரி முடிந்த பிறகு மீண்டும் இந்த குழப்பம் ஆரம்பித்து விட்டது. இன்று வரை என்னை என் இரண்டெழுத்து மந்திரத்தால் கூப்பிடாதவர்கள் என்னை கிருஷ்ணன் என்றே அழைக்கிறார்கள். அவர்களுக்கு இந்த கட்டுரையை நான் காணிக்கையாக்குகிறேன்.

கடல் கடந்து கூட இந்த குழப்பம் தீரவில்லை. இங்கிலாந்தில் வங்கியில் கணக்கு துவங்கிய போது பாஸ்போர்ட்டில் இருப்பது போல உன் பேரை எழுதவும் என்று அக்கவுண்ட் துவங்கும் போது கொடுத்த பார்மில் சொன்னதால் "சந்திரசேகரன் கிருஷ்ணன்" என்று எழுதிக் கொடுத்தேன். நான்கு நாட்கள் கழித்து சி. கிருஷ்ணன் என்ற பெயருக்கு கிரடிட் கார்டையும் டெபிட் கார்டையும் அனுப்பியதோடல்லாமல் இவன் பெயர் கிருஷ்ணன் தான் என்று கடல் கடந்து ஸ்தாபித்த அந்த கடன்காரர்களை கொளுத்தும் வையிலில் தான் நினைக்க வேண்டும். இதன் விளைவாகவே என்னுடைய வீட்டு லீஸ் அக்ரிமெண்ட் முதல் லைப்ரரி மெம்பர்ஷிப் வரை எல்லவற்றிலும் அப்பா சர்வவியாபியாக இருந்தார். சரி, இனிமேல் யாருக்கும் கிருஷ்ணனை அறிமுகப்படுத்தப் போவதில்லை. எந்த வெள்ளைக்காரன் பேரைக்கேட்டாலும் என் பெயரை மட்டுமே சொல்லுவதென்ற தீர்மாணத்தை வீட்டில் யாருமில்லாத பொழுதில் ஒரு இங்கிலீஷ் சம்மரில் டைனிங் டேபிளில் தயிர் சாதம் சாட்சியாக நிறைவேற்றிக் கொண்டேன்.

கொஞ்ச நாளைக்கு புது இடத்தில் யாருமே என்னை யார் என்று கேட்கவில்ல. அப்போது தான் என் பக்கத்து சீட்டுக்கு வகையாக வந்து மாட்டினார் டெர்ரி என்கிற டெர்ரி ஹோம்ஸ் - புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டே ஆபிஸ் வருபவர். என் அப்பா வயதில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் கற்றுக் கொண்டு அந்த அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த மகானுபாவன் - சிகரெட்/ டீ குடித்து, எனக்கு இங்கிலாந்தின் அருமை பெருமைகளை சொல்லி முடித்தது போக மீதமிருக்கும் நேரத்தில் வேலை பார்ப்பார். ட்ரக் ஓட்டுனராக வாழ்க்கையத் துவங்கி பின் பல வேளைகள் செய்து ரிடையர் ஆகும் காலத்தில் சாஃப்ட்வேர் கற்றுக் கொண்டவர். முதல் நாளில் நிகோடின் கறை படிந்த பற்கள் தெரிய சிரித்து கை குலுக்கியபடியே என் பெயரைக் கேட்டார்.
"சந்திரசேகரன் - கால் மீ சந்திரா" - அப்பாவுக்கு முதல் முறையாக வாழ்க்கையில் கல்தா !
"அ வாட்"
"சந்த்ரா - ரைம்ஸ் வித் சாண்ட்ரா" - வெள்ளைக்காரனுக்கு அவனுக்கு புரியும் படியாகத் தான் பேச வேண்டும்.
"ஐ நோ"- ஒரே வரியில் புரிந்து கொண்டார். எனக்கு கொஞ்சம் பெருமையாகவே இருந்தது.
அன்று முதல் சாண்ட்ரா என்றே கூப்பிடத்துவங்கி விட்டவருக்கு என் பெயரின் முதல் சிலபலை கொஞ்சம் அழுத்தி சொல்லும் படி கேட்கப் போய் - கேன்சரில் இறந்த அவர் முதல் மனைவி பெயர் சாண்ட்ரா என்று கூறி சிவாஜி கண்ணாம்பா காம்பினேஷன் காட்சியை என் கண் முன் நிறுத்தினார்.

வாழ்க்கையில் பெயர் குழப்பம் மட்டும் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடாது. பெண்கள் விஷயத்தில் இந்த சிக்கல் வர வாய்ப்பே இல்லை - பிரசன்னா, ரமணி என்று பெயர் வைத்துக் கொள்ளாதவரை. ஆண் ஜென்மம் தான் பாவம். குழப்பத்தை விளக்கி விளக்கி தளர்ந்து போன என்னை இந்த பெயர் விஷயத்தில் வாழ்க்கை ஒரு வகையான பரமார்த்தி நிலைக்கே கொண்டு சென்று விட்டது - யார் என்னை எப்படி கூப்பிட்டாலும் அவர்களுக்கு விளக்க முற்படாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டேன். ஆனால் இப்போது சிக்கல் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு மத்தியான வெயிலில் டி நகரில் நடந்து கொண்டிருந்த என்னை மூச்சிரைக்க வந்து தோளில் தட்டினார் நாற்பதில் புதிதாக நுழைந்த அந்த நன்பர்
"என்ன சார் எவ்வளோ நேரமா உங்க பின்னாடி ஓடி வரேன் - நீங்க திரும்பவேயில்லையே"
"ஓ சாரி சார் கவனிக்கவில்லை - கூப்பிட்டிருக்கலாமே"
"கூப்பிட்டேனே - சந்திரசேகரன், சந்திரசேகரன்-ன்னு கூப்பிட்டேனே"
"சந்திரசேகரன் -ன்னா கூப்பிட்டீங்க"
"ஆமாம் அதானே உங்க பேரு ?"
"அப்படி தான் நினைக்கிறேன்"
_______

- நன்றி யுகமாயினி டிசம்பர் 2009

3 Responses to “என் பெயர் சந்திரசேகரன்”

butterfly Surya said...

அருமை சந்திரசேகரன். ... Sorry..

கிருஷ்ணன்.. Pch.. sorry. சாண்ட்ரா..


சூப்பர்.

யுகமாயினி பெரும்பாலும் சென்னை கடைகளில் கிடைப்பதில்லையே .. ஏன்??

யுகமாயினி முழுக்க முழுக்க சந்தாதாரர்கள் அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுகிறது. இப்போது இணைய இதழாகவும் வர இருக்கிறது - http://www.viruba.com/chiththan/default.aspx?id=1; இது சோதனை ஓட்டம். பழைய இதழ்கள் இங்கு PDF கோப்பாகவும் கிடைக்கின்றன.

சந்தா பற்றிய தகலுக்கு இந்த URL-ஐ பார்க்கவும் http://www.viruba.com/chiththan/Yugamayini.aspx

butterfly Surya said...

தகவலுக்கு நன்றி..

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman