Adsense

தலைப்பற்றது


வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக புது விதமான அனுபவங்கள் ஏற்படத்துவங்கியிருக்கின்றன. பதினாறு மணி நேரம் உழைப்பதனால் கிடைத்த போதை எல்லாம் இப்போது அர்த்தமற்றவையாக தோன்றத் துவங்கிவிட்டது - இன்னும் சொல்லப்போனால் நான் அலுவலக வாசலை மிதித்து ஒரு மாதம் ஆகபோகிறது; இடைப்பட்ட ஒரு நாளில் கூட அலுவலத்தில் என்ன நடக்கிறது என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய தேவையோ ஆர்வமோ எழவில்லை - வாழ்க்கை என்னை அப்படியே கபளீகரம் செய்திருக்கிறது. நான் தான் இப்படி இருந்தேன் என்று ஒரு நிமிடம் நின்று யோசித்த போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த அனுபவம் வாழ்க்கையைப் பற்றிய எனது பார்வையை கொஞ்சம் மாற்றித்தான் போட்டிருக்கிறது - அப்படியே வாழ்க்கை பற்றிய எனது சில முன் தீர்மானங்களை இன்னும் ஆழமாக வேறூன்றச் செய்திருக்கின்றது. திடிரென்று ஒரு மனிதர் வருகிறார் - முன் பின் அறிமுகமில்லாத அவருடன், எந்த விதமான பட்டறிவோ/ படிப்பறிவோ இல்லாத ஒரு துறையில் அந்த துறை வல்லுனரான அவருடன் விவாதம் செய்கிறேன்; இப்படி செய்திருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே என்று ஆலோசனை கூறுகிறேன்; அவர் ஏற்றுக் கொள்கிறார்/ விளக்கம் சொல்கிறார்/ என்னை மூக்கறுக்காமல் மறுக்கிறார். அர்த்த ராத்திரிக்கு அரை மணி நேரத்துக்கு முன் போன் செய்து சிக்கலான அந்த ஆப்பரேஷனை காலை 7 மணிக்கு செய்யப்போவதாக சொல்கிறார். சிரித்துக் கொண்டே வந்து நல்லபடியாக முடிந்தது என்று சொல்கிறார், நான் அவருடன் விவாதிக்கும் போது இருவரிடமும் அனல் கசிந்த சந்தர்பங்களை மனதில் வைத்துக் கொள்ளாமல். நான் மனப்பூர்வமாக நன்றி சொல்லும் போது என்னால் ஒரு செயலை செய்யத்தான் முடியும், பலன்களை அவன் தீர்மாணிக்கிறான் என்று மேலே கையைத்தூக்கி காட்டுகிறார் - உன்னுடையை பங்கேற்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது என்கிறார். அவர் கண்களில் பொய்யான கவுரவமில்லை. எனக்கு மனசுக்குள் நான் ஒரு நாள் ஏறி உட்காருவேன் என்று போட்டு வைத்திருக்கும் சிம்மாசனத்துக்கான படிக்கட்டுகள் அதிகரிக்கின்றன.

இன்னொரு நாள் மருத்துவத்துறையில் என்னுடைய எல்லா சந்தேகங்களையும் சண்டிகரில் உட்கார்ந்த படியே தீர்க்கும் (சில சமயம் மருந்து கூட கொடுப்பான்) என் ஆத்மார்த்தமான நன்பன், அவனிடமிருக்கும் மிகச்சிறிய சேமிப்புத் தொகையை என்னிடம் தரட்டுமா என்று கேட்டு முதன் முறையாக நெகிழ்தல் என்ற உணர்ச்சி எப்படி இருக்கும் என்று உணரச் செய்கிறான்.

கொள்கைகள் நிலைப்பாட்டின் அடிப்படையிலும் சித்தாந்த ரீதியாகவும் தினமும் டைனிங் டேபிளிலில் அம்மா வந்து விலக்கி விடும் வரை (கோபப்பட்டு இருவரும் எழுந்து விட்டால் மீதி இருக்கும் சாப்பாட்டை யார் சாப்பிடுவது) வாக்குவாதம் செய்யும் சுயகவுரவம் அதிகம் கொண்ட மனிதன் ஒரு குழந்தையாக ஒரு கணப்பொழுதில் மாறிவிட்டிருக்கிறார். கிழமையும் தேதியையும் நினைவில் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுகிறார். ஒவ்வொரு முறை குட்டித்தூக்கம் போட்டு எழுந்த பின்னும் புதிய தினமென்று நினைக்கிறார். திடிரெண ஒரு நாள் தர்பணம் செய்யாததால் ஏற்படும் பாவங்களைப் பற்றி சொல்லி, தன் முன்னோர்களிடம் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்கிறார் - அன்று அமாவாசை என்று அம்மா எனக்கு நினைவு படுத்துகிறாள். தனக்கு என்ன நேர்ந்தது என்று தானே ஒரு கற்பனை செய்து கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் தினுசு தினுசாக சொல்கிறார். இத்தனை நாளும் மறக்காமல் செய்த ஒரே விஷயம் வரும் எல்லா டாக்டர்களிடமும் “ஐ வாண்ட் இட்லி அண்ட் காஃபி” என்று திரும்பி திரும்பி சொல்லியது தான், ரைஸ் டியுப்பை மூக்கில வைத்தபடி. படுத்த படியே தெளிவாக சில விவாதங்களை ஆரம்பிக்கிறார், இரண்டாவது வாக்கியம் பேசுவதற்குள் தூங்கிவிடப்போகிறோம் என்று தெரியாமல். மிக கனமான ஒரு பாறையைப் போல் அவரது உறக்கத்தின் மௌனம் எங்கள் மேல் விழுகிறது. வீட்டிற்கு போகலாம் என்று சொன்னவுடன் படுக்கையிலிருந்தபடியே ஒரு குழந்தை யார் யாருக்கோ டாட்டா காட்டிய படி வீடு வந்து சேர்கிறது. அவர் மீது இருந்து பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் போய் Aspirate ஆகாமல் உணவு உள்ளே சென்றாலே நிம்மதியாக இருக்கிறது இப்போதெல்லாம். சுஜாதாவின் இந்த கட்டுரை தான் ஞாபகம் வருகிறது - அதே எழுபது. கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும். அவருக்காக நான் தயாரித்துக் கொடுக்கும்/ கொடுத்த சின்ன சின்ன குறுக்கெழுத்துகளே என்னுடைய வாழ்நாளில் நான் படைக்கும் எந்த ஒரு படைப்பைக் காட்டிலும் சிறந்ததாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. வாழ்க்கையை தீவிரமாகவும் மிகவும் objective-ஆகவும் வாழ்ந்த சந்தோஷம் இந்த ஒரு மாசத்தில் தான் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.

2 Responses to “தலைப்பற்றது”

Agila said...

மிக நெகிழ்வாக இருந்தது.உங்களின் தந்தையைப் பற்றிய பதிவா? வாழ்க்கையில் முக்கியம் என்று தோன்றுவதை எல்லாம் மறுபரிசிலனை செய்ய வைக்கிறது.சுஜாதாவே சொன்ன "வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது)."
உங்களுக்கு மன உறுதியும் , நோயுற்றவருக்கு உடல் உறுதியும் பெற என் பிரார்த்தனைகள்
..Ag

அமாம். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அனைத்து material விஷயங்களின் தேவையும் தீர்ந்து விடுகிறது.
உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman