Adsense

அகெஸ்டோ போல் (1931 - 2009)


Photograph: Tristram Kenton/Guardian

அகெஸ்டோ போல் இறந்து விட்டார்.

இந்த உலகத்தில் மரணமும் நோயும் தரும் அனுபவத்தை அனுபவிக்காத மனிதர் யாரும் இருக்க முடியாது என்று நான், "நானே" எழுதுவது போல் எழுதினால் புத்தர் சாபம் கொடுத்தாலும் கொடுத்து விடுவார். அப்படி இருந்தாலும் "தனது 78 ஆம் வயதில் கேன்சருடன் போராடி தோற்றார்" என அகஸ்டோ போலின் மரணத்தை போகிற போக்கில் வானொலி செய்தி அறிக்கை போல் சொல்லி விட்டுப் போனால் புத்தர் தரும் சாபம் பலிக்கும்.

பிரேசிலில் பிறந்து, அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து, பிரெசிலுக்குத் திரும்பி, அடக்குமுறைக்கு ஆட்பட்டு பின்னர் பிரான்ஸுக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து கடைசியில் பிரேசிலுக்கே திரும்பி வந்து அங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார் அகெஸ்டோ. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகங்களை மேடையேற்றியதில் தான் அகெஸ்டோவின் பங்கு சமுகத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஆரம்பத்தில் அரசியல் சார்புடைய நாடகங்களை போட்டு வந்த அகெஸ்டோ பின்னர் பார்வையாளர்களும் பங்கேற்கும் வண்ணம் நாடகங்களை வடிவமைக்கத் துவங்கினார். அந்த காலத்தில் இருந்த நாடகங்கள் அதிகார வர்கத்தின் ரசனைக்கேற்றபடி மட்டுமே அமைந்திருக்கிறதென்றும் மக்களை முக்கிய பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புவதாகவும் தீவிரமாக நம்பிய அகெஸ்டோ மக்களும் பங்கேற்கும் வகையில் "Theatre of the oppressed" (ஒடுக்கப்பட்டோருக்கான நாடகங்கள்) என்ற வடிவத்தை உருவாக்கினார். பார்வையாளர்கள் நாடகங்களில் பங்கேற்கும் போது அவர்கள் அந்த கருத்துகளின் மீது மூன்றாம் நபராக இருக்கும் சூழலிலிருந்து விலகி தங்களை அந்த பிரச்சனையின் தீர்வில் மேலும் ஐக்கியப்படுத்திக் கொள்ள உதவும் என்பது அகெஸ்டோவின் இந்த நாடக வடிவத்தின் அடிப்படை தத்துவம்.

அகெஸ்டோவின் நாடகங்களில் பார்வையாளர்கள் ஒரு சமுக பிரச்சனையை எதிர் கொள்ளும் விதத்தில் காட்சிகளை அமைத்து நடித்துக் காட்ட முடியும். இப்படி நடித்துக் காட்டுவதன் மூலம அவர்கள் அந்த பிரச்சனையுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு அந்த பிரச்சனைக்கு எதிராக செயலாற்றவும் முடிந்தது. Its about building conviction in human's mind by presenting an opportunity to act freely in virtual reality. இந்த முறையின் மூலம் வெறும் பிரசாரமாகவும், பிரச்சனையின் மீது நாடக ஆசிரியரின் கோணமாக மட்டுமே நாடகங்கள் அமையாமல் ஒரு கூட்டு முயற்சியாக மாறி விடுகிறது. இப்படி செயலாற்றுவதன் மூலம் தோன்றும் சமுக நீதி குறித்த எண்ணங்களை பின்னர் செயலாக்கங்களாக எடுத்துச் செல்ல முக்கிய காரணிகளாக நாடகங்கள் மாறி விடுகின்றன.

மேடை நாடகங்கள் மட்டுமல்ல வீதிகளிலும் பொது இடங்களிலும் நாடகங்கள் (Invisible theatre என்று அழைக்கப்படும் வடிவம்) நிகழ்த்தியிருக்கிறார். அது நாடகம் என்று நீங்கள் உங்களை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்ட பின்னர் தான் தெரிய வரும். உதாரணத்திற்கு, அவர் இந்தியாவில் இருந்திருந்தால் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கும். ஒரு திங்கள் கிழமை காலையில் நீங்கள் அவசரமாக அலுவலகம் செல்லும் சாலையில் ஒரு ஹிந்துவும் இஸ்லாமியரும் (அல்லது தலித்தும் மேல் ஜாதிக்காரரும்) சண்டைபோட்டுக் கொண்டிருப்பர்கள். தீவிர நிலைப்பாட்டில் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள் - அடிதடிக்கு கூட வாய்ப்புண்டு. நீங்களோ அல்லது பொறுப்பானவர்களோ இறங்கி விலக்கிவிட வேண்டியிருக்கும். அறிவுரை சொல்ல வேண்டியிருக்கும். கடிந்து கொள்ள வேண்டியிருக்கும். இது எல்லாம் முடிந்தவுடன் அந்த ஹிந்துவும் இஸ்லாமியரும் பங்கேற்ற நாடகத்தில் நீங்களும் பங்கேற்றீர்கள் என்று உங்களுக்குப் புரிய வரும். உங்களுக்கே தெரியாமல் அந்த பிரச்சனைக்கு உங்களாலான் தீர்வை வழங்குவதன் மூலம் மத நல்லிணகத்தின் தேவை பற்றிய உங்கள் எண்ணம் வலுப்பெற்றிருக்கும்.

இதே போல பல வடிவங்களை சோதனை செய்து பார்த்தவர் அகெஸ்டோ. எல்லவற்றிலும் இருக்கும் பொதுவான அம்சம் - மக்களின் பங்களிப்பு.

பார்வையாளர்களின் நேரிடையான பங்கேற்பு இல்லாவிட்டாலும் சமுக பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை நாடங்கள் வாயிலாக ஏற்படுத்த இந்தியாவிலும் அமைப்புகள் தோன்றியுள்ளன. இந்தியாவில் ஏறக்குறைய 1942-ஆம் ஆண்டு அடக்குமுறைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவும், அவர்களின் ஜீவாதார உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தோன்றிய அமைப்பு IPTA (Indian people's theatre association). திரையுலகிலும் கலையுலகிலும் பரிமளித்த(க்கும்) பல பிரபலங்கள் (ரித்விக் கடக், ஷபானா ஆஸ்மி, பிரிதிராஜ் கபூர், பண்டிட் ரவிஷங்கர்) IPTA-இல் பங்கேற்றிருக்கின்றனர். இந்தியாவில் மக்களும் பங்கேற்கும் வகையில் வீதி நாடகங்கள் இருக்கின்றன. ஆனால், மாறி வரும் சமுக பொருளாதார சூழ்நிலைகளில் வீதி நாடகங்கள் வடிவ மாறுதல்களுக்கு உட்பட்டேயாக வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது. பார்வையாளர்களும் பங்கேற்கும் வகையில் இன்றைக்கும் Pantomime என்ற நாடக வடிவம் ஒன்று உண்டு. சென்னையில் கூட கிறிஸ்துமஸ் சமயத்தில் எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடத்துவார்கள். ஆனால் அது எந்த விதமாக சமுக பிரச்சனையையும் முன் வைக்கும் வடிவமன்று. Holiday season-ஐ வரவேற்கும் இசையோடு கூடிய நகைச்சுவை நாடகங்கள் போடுவார்கள். 2 மணிநேரம் சிரிக்கும் வகையில் இருக்கும்.

அகெஸ்டோ வின் சித்தாந்தத்தை அடிப்படியாகக் கொண்டு, இன்றைய வீடியோ கேம் தலைமுறைக்கு சமுக அவலங்களை கணிப்பொறி திரையிலும் தொலைக்காட்சி திரையிலும் நிகழ்த்திக் காட்டுவதன் மூலம் அவர்களையும் பிரச்சனையில் பங்கேற்க செய்யும் வாய்ப்பு இருக்கிறது. இந்த suggestion அகெஸ்டோ எதிர்த்த வெகுஜன பொழுது போக்கிற்கு எதிரானதாகத் தோன்றலாம். Strategy games என்று ஒரு வகை வீடியோ கேமிங்கில் உண்டு. இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதைக் கொண்டு உங்கள் வெற்றி தோல்வி நிர்ணயைக்கப்படும். இன்றைக்கு இருக்கும் ஸ்ட்ராடஜி கேம்கள் தீவிரவாதம், லஞ்சம் போன்ற சமுக அவலங்கள் காண்செப்டாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டால் பல பிரச்சனைகளுக்கு மிகவும் புதிய கோணத்தில் விடை நமக்கு கிடைக்கக்கூடும்.

தனது வாழ்நாளில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் வாங்கியவர் அகெஸ்டோ. சமுக ஆர்வலர், நாடக வடிவங்களை உருவாக்கியவர், சிறந்த நடிகர், ஆசிரியர் என்ற கட்டங்களையெல்லாம் தாண்டி தன் முன் நிற்கும் சமுகத்திற்கான தனது பங்களிப்பை தவறாது தொடர்ச்சியாக வழங்கிய ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்ததோடு தன்னைச் சுற்றியுள்ள எளிய மனிதர்களையும் வலிமையோடு சமுகத்தில் தோன்றும் பிரச்சனைகளை எதிர் கொள்ளச் செய்தவர். கடந்த மே மாததில் சமுக நீதிக்காக தொடர்ச்சியாக ஒலித்த ஒரு குரல் அடங்கியிருக்கிறது. ஆனால் அவர் விட்டுச்சென்றிருக்கும் காலடித்தடங்கள் அழியாதவை.

--
யுகமாயினி ஜூலை 2009 இதழில் வெளிவந்தது

2 Responses to “அகெஸ்டோ போல் (1931 - 2009)”

பகிர்விற்கு நன்றி..

சேரல் said...

யுகமாயினி இதழில் படித்தேன். நல்ல பகிர்வு. நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman