Adsense

பள்ளி கல்வி சீரமைப்பு


பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, 12 ஆம் வகுப்பு இறுதியில் மட்டும் பொது தேர்வுகள் வைத்துக் கொள்ளலாம் என்று கபில் சிபல் அறிவித்தது குறித்து பல் வேறு தரப்பினரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கபில் சிபல் இந்த மாற்றத்தின் தேவைக்காக முன் வைக்கும் கருத்துகளில் முக்கியமானது "இன்றைய கல்வி முறையில் இருக்கும் அழுத்தத்தை போக்குவது" என்பது. நியாயமான விஷயம் தான். இதே போல மதிப்பெண் முறையை எடுத்து விட்டு தர வரிசை (Grading system) கொண்டுவரப்படுவதும், நாடு முழுவதும் ஒரே கல்விதிட்டமும் (Board) கொண்டு வருவது குறித்த கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன.

இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ வேண்டியவை தான் - ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நீக்குவதன் மூலம் (அல்லது optional ஆக்குவதன் மூலம்) தீர்த்து விட முடியுமா ?

இன்றைய கல்வி முறையில் ஏற்பட்டிருக்கும் அழுத்தம் எதனால் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதனை நீக்கும் வண்ணம் மறுமலர்ச்சி திட்டங்கள் தீட்டப்பட வேண்டியது முக்கியம். ஆரம்ப கல்வி அமைப்பில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தான் படிப்படியாக மேலே எழுந்து உயர் கல்வி வரை சென்றடைகின்றன. அரசு பள்ளிகளின் தரமும் தனியார் பள்ளிகளின் தரத்திற்கும் இடையே மடுவுக்கும் மலைக்கும் இடையே இருக்கும் இடைவெளியும் - கிராமத்திலிருக்கும் பள்ளிகளுக்கும் நகரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கும் இடையே தரத்தில் இருக்கும் இடைவெளியும் குறையாத வரை கல்வி முறையில் இருக்கும் அழுத்தம் நீங்காது.

மேலும், இது கல்வி முறையில் இருக்கும் சிக்கல் மட்டுமே அன்று. சமுகத்தில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அதன் தாக்கத்தினால் ஏற்படும் கல்வி முறை குழப்பத்தையும் நாம் ஒதுக்கி விட முடியாது. மிகச்சாதாரண கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பில் சேரும் போதும், உயர்கல்வி நிலைகளை அடையும் போது அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய பாடதிட்டங்கள் (Syllabus) வசதி படைத்த தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எதிர் கொள்ளும் பாடதிட்டங்களோடு ஒத்து இருப்பது தற்போதைய அழுத்தத்திற்கு முக்கியமான காரணம்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம், விருப்ப பாடங்கள் கிடைக்காத்தால் மாணவர்களுக்கு ஏற்படும் மனநிலை பாதிப்பும், சில தற்கொலை சம்பவங்களையும் பத்தாம் வகுப்பு பொது தேர்வை நிறுத்துவதற்கு காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதே போன்ற ஒரு மனநிலை பாதிப்பும் தற்கொலை எண்ணங்களும் 12ஆம் வகுப்பு தேர்வுகளின் போது ஏற்படாது என்பது என்ன நிச்சயம். இவை ஏற்பட காரணம், நம்மிடையே மாணவர்களை வலிமையானவர்களாக உருவாக்கும் மனவியல் சார்ந்த கல்வி அமைப்பு இல்லாததும், மதிப்பெண்கள் சார்ந்து ஒரே கோணத்தில் சகல மாணவர்களையும் எடை போடும் uni dimensional evaluating system-உம் தான். இவை நீங்காத வரை எத்தனை பொது தேர்வுகளை நிறுத்தினாலும் உண்மையான மாற்றம் நிகழாது.

தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் தேசிய அளவில் செயல் படுகின்றன. ஆனால் பள்ளி கல்வியோ மாநில அளவிலும், கல்வி திட்ட அளவிலும் (Board level - CBSE) செயல்படுகின்றன. இவை இரண்டிற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை நீக்க தான் தேசிய அளவில் ஒரே கல்வி திட்டம் (Board) கொண்டு வர வேண்டியதன் தேவையாக இருக்கிறது. ஆனால் இதை அமல் படுத்துவதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் ஏகப்பட்ட மொழிகளும் கலாசார பிண்ணனியும் கொண்ட இந்த தேசத்தில் தேசம் தழுவிய பாடதிட்டத்தை வடிவமைப்பது தான். இது அவ்வளவு எளிதாக நடக்கக்கூடிய காரியமாக எனக்குத் தோன்றவில்லை. தமிழ்நாடு, மஹாராஷ்டிரா போன்று மொழியை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் மனப்போக்கு கொண்ட மாநிலங்களில் இது போன்ற ஒரு திட்டம் அமல் படுத்தப்படுவதில் அதிக சிக்கல்கள் தோன்றலாம். ஏனெனில், தேசம் முழுமைக்குமான கல்வி திட்டம் ஏதேனும் ஒரு மொழியை நாடெங்கிலும் மேலோங்கச்செய்யும் (இரண்டாம் மொழியாகவாவது) செயலை மறைமுகமாகச் செய்யும் - அந்த மொழி பெரும்பாலும் ஹிந்தியாகத் தான் இருக்கும். அதை தாய் மொழி ஆதரவாளர்கள் விரும்பமாட்டார்கள். இவர்களை சரியான முறையில் எதிர்கொள்வதும், தேசிய அளவிலான கல்விமுறையை அமல் படுத்துவதும் மிகவும் அவசரமாக செய்யப்பட வேண்டியவை.

இந்த மாற்றம் மேல்நிலை கல்வியிலிருந்து ஆரம்பிக்கப்படாமல், ஆரம்ப கலவியிலிருந்து ஆரம்பிக்கப் படவேண்டும்.

இன்றைய தேதியில் கபில் சிபலும் இந்த அரசும் செய்ய வேண்டியவை என நான் நினைப்பவை

1) ஆரம்ப கல்வியை பலப்படுத்துவது - முதலில், தேசம் முழுமையிலும் இருக்கும் ஆரம்ப கல்வி நிறுவனங்களை (5ஆம் வகுப்பு வரை நடத்தப்படும் பள்ளிகள்) கட்டுமானத்தில் இருக்கும் குறைபாடு, ஆசிரியர் பற்றாகுறை மற்றும் கற்பிக்கும் முறையிலிருக்கும் வேறுபாடுகள் போன்ற கோணங்களில் நிலையிலிருந்து ஆராய்ந்து அவற்றை ஒரே நிலைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் ஆரம்ப கல்வி, கட்டாய கல்வியாக்கப்படல் வேண்டும். இது ஆரம்ப கல்வி இலவசகல்வியாதல் மூலமே சாத்தியப்படும். முட்டை தருவதாலும், வாழைப்பழம் தருவதாலும் ஆகாது.
இரண்டாவது, விளையாட்டின் மூலம் கல்வி கற்பிக்கப்படும் முறையை நாடெங்கிலும் இருக்கும் ஆரம்ப பள்ளியில் அறிமுகம் செய்தல் வேண்டும். இதற்கென பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும், தொடர்ந்து பயிற்சிஅளிக்கப்படுவதும் வெண்டும்.
2) தனியார் ஒத்துழைப்புடன் அரசால் நடத்தப்படும் பள்ளிகளை தோற்றுவித்தல் - இன்று கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருக்கும் கல்வியின் விலையை அரசு கட்டுப் படுத்த வேண்டியது மிக முக்கியம். ஏற்கனவே பார்த்த கிராமப்புற-நகர்புற ஏற்றத்தாழ்வு, தனியார்-அரசு பள்ளிகளின் தர ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை நீக்கக் கூடிய சாத்தியகூறு தனியாரை அரசு பள்ளிகளில் பங்கேற்கச் செய்வதன் மூலமே நடக்கும். தனியார் உதவியிடன் நடத்தப்படும் அரசு பள்ளிகளாக அனைத்து அரசு பள்ளிகளும் மாற வேண்டும். இப்படி செய்வதன் முலம் அதிக தரத்திலான கல்வி அனைவரையும் சென்றடைய வழி செய்ய முடியும் - ஏழைகளும் நடுத்தர வர்க்க மக்களும் பயன் பெறுவார்கள். Teach India Campaign தனியார் பங்கேற்பிற்கு நல்ல உதாரணம்.
3) ஆராய்ச்சிக்கு ஊக்கம் தருதல் - கல்வி வேலை வாய்ப்புக்கான சாதனம் என்று பார்க்கப்படும் கோணம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தவிர்க்கப் பட முடியாத ஒன்று. இருந்தாலும், ஆராய்ச்சி மாணவர்களை ஊக்கமளித்து, வேலை வாய்ப்பை தாண்டி வேலையை உருவாகும் சாதனங்களாக ஆராய்ச்சியாளர்கள் தோன்றுவது இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவை. இதற்காக மேலை நாடுகளுக்கு இணையாக அதி நவின வசதிகளுடன் கூடிய உயர்கல்வி சாலைகளை அரசே முன்னின்று நடத்த வேண்டும். இரண்டாம் நிலை மாநகரங்களில் மேலும் சில ஐ ஐ டிகளும், ஐ ஐ எம் களும், NITIEகளும் தோற்று விக்கப் பட வேண்டும் - இவற்றில் அதிக அளவில் ஆராய்ச்சி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் பின்னர் தேச வளர்ச்சியில் பங்கேற்கும் வகை செய்ய வேண்டும்.

இப்போது கபில் சிபல் சொல்லியிருக்கும் திட்டங்கள் எந்த விதத்திலும் தவறானவை இல்லை என்றாலும், நமது கல்வி முறை இன்னும் அவற்றிற்கு தயாராக இல்லை என்பதும் அந்நிலைக்கும் செல்வதற்கு முதலில் சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும் என்பதும் மறுக்க முடியாதவை. அந்த மாற்றங்களில் கவனம் செலுத்துவதே உடனடியாக செய்ய வேண்டியது.

பிகு: சில நல்ல சுட்டிகள்
Rural Context of Primary Education: http://ignca.nic.in/cd_06006.htm
UNESCO's Monitoring Report in the Education for All Series: http://unesdoc.unesco.org/images/0017/001776/177683e.pdf (9.83 MB)

3 Responses to “பள்ளி கல்வி சீரமைப்பு”

சரியான அலசல்.

அடிப்படை கல்விக்கே முன்னுரிமை தரவேண்டும்.

மற்ற சீர்திருந்தங்கள் பிறகு பார்க்கலாம்..

சேரல் said...

கருத்துக்களைத் தெளிவாக முன்வைத்திருக்கிறீர்கள். எல்லாம் ஏற்புடையவையே! எப்போது நடக்கிறது என்று பார்ப்போம்.

-ப்ரியமுடன்
சேரல்

பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3

01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?

நன்றி

http://oviya-thamarai.blogspot.com/2009/10/3_11.html

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman