Adsense

நான் கடவுள்


எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா மூலங்களிலும் எல்லா வடிவங்களிலும் எல்லா ஆற்றல்களிலும் வியாபித்திருப்பதும் அளக்க இயலாததும், விவரணைகளுக்கு அப்பார்பட்டதும் எல்லைகளுக்கு அப்பார்பட்டதும், ஹிரண்யகர்பத்தை தோற்றுவித்தமுமாகிய பிரஹ்மன் எனக்குள் உறையும் ஆத்மாவிலும் இருக்கிறது என்ற நிர்விகல்ப சமாதியை அடைந்த நிலையில் சொல்ல வேண்டிய வார்த்தையை தமிழ் கூறும் நல்லுலகம் சர்வ சாதாரணமாக சொல்லிக்கொண்டிருக்கச் செய்த பாலாவிற்கு நன்றி.

வயிற்றுப்பூச்சிகள் சாவதற்காக சிறிய வயதில் வேப்பங்கொழுந்தை அரைத்து தேனில் குழைத்து கொடுக்கப்படும் வேப்ப உருண்டைகளை (சுண்டைக்காயளவிற்கு செய்யப்படும் உருண்டை) விழுங்குவதற்கு பட்ட கஷ்டத்தைக் காட்டிலும் அதிக கஷ்டப்படவேண்டியிருந்தது ஏழாம் உலகத்தை படித்து முடிக்க. சிறிய புத்தகம். ஆனால் முதல் சில பக்கங்களை தாண்டுவதற்கு எனக்கு சில வாரங்கள் பிடித்தன. பின்னர் பழகிவிட்டது. Organized Begging பற்றி தமிழில் எழுதப்பட்ட முதல் அல்லது ஒரே புத்தகம் என்று நினைக்கிறேன். போத்திவேலு பண்டாரம் தாண்டவனாக மாறியிருக்கிறார். புத்தகத்தின் சில இதழ்களும் பத்திகளும் மட்டும் காட்சிகளாக மாறியிருக்கின்றன. ராமப்பன், குருவி, சணப்பி, முத்தம்மை எல்லாரும் உண்மையாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி அந்த புத்தகத்தின் ஆதார சுருதியை மட்டும் எடுத்துக் கொண்டு அகோரிகளின் வாழ்கையை மேம்போக்காக எடுத்துக் கொண்டு, வாரணாசியையும், ஆன்மிகத்தையும் மிகக் கொஞ்சமே கலந்து உருண்டை செய்து சாப்பிடு என்கிறார் பாலா. விழுங்க அவ்வளவு கஷடமாக இல்லை.

பதினைந்தாவது நிமிடத்தில் தூக்கிவாரிப் போடுகிறது. அந்த உடம்புகள். அந்த பார்வைகள். அந்த இருட்டு. ஏசியையும் தாண்டி மூத்திர நாத்தமும், வியர்வை வாடையும், சில்லரை சத்தமும் நாற்காலியை இறுக பற்றிக் கொள்ளச்செய்கின்றன. அடுத்த பத்து நிமிடத்தில் பழகி விடுகிறது. பெஹன் ச்சூத் என்று திட்டும் அகோரி நானே பிரம்மா, நானே விஷ்ணு, நானே ஈஸ்வரன் என்று சொல்வதும் சொல்லிவிட்டு துஷ்ட நிக்ரஹம் செய்து சர்வலோக சம்ரஷணம் செய்யும் வர்தான் கொடுப்பதும் தான் சங்கடமாக இருக்கிறது. ஹிந்து மத நம்பிக்கைப்படி இந்த பிரபஞ்சமே ஹிரண்யகர்பத்திலிருந்து தான் தோன்றியது - அந்த தோற்றப்பணியை செய்ததே பிரம்மா. பிரஹ்மனின் பரிமாணங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இந்த உலகத்தை ரஷிக்க செய்யும் மேற்கொண்ட பணிகளுள் பிறந்த உயிர்களுக்கு மரணத்தின் மூலம் விடுதலை தரும் ஈஸ்வரனின் செயலை மட்டும் எடுத்துக் கொண்டு எல்லாரையும் போட்டுத் தள்ளுவது மட்டுமே பிரஹ்மனின் பணி என்பதாக சொல்லியிருப்பதெல்லாம் நியாமா கால பைரவனிடம் தான் கேட்க வேண்டும். இப்படி destructive reasoning தெளிவாக இருக்கும் நிலையை தான் அஹம் பிரம்மாஸ்மி என்பது உணர்த்துவதாக தப்பர்த்தம் தோன்றுவதாக காட்சியமைப்புகள் இருப்பது துரதிருஷ்டம்.

நாம் வாழும் உலகத்துக்கு வெகு ஆழத்தில் உள்ள இன்னொரு உலகம் என்று ஏழாவது உலகத்துக்கு அறிமுகம் எழுதியிருப்பதால் ஒரு பாதாள மண்டபத்தை பிச்சைகார்கள் வாழும் dormitory-ஆக காட்டியிருப்பது தான் கொஞ்சமே நாடகத்தனமான metaphor. இதைத் தவிர தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட ஜோடணைகளற்ற ஒரு நேர்மையான திரைப்படம் என்று இதை நான் சொல்வேன். பாராட்டப்படவேண்டிய படம். காட்சிகளில் எனக்கு கடைசி வரை நடிகர்களின் உருவம் தோன்றவே இல்லை. அது தான் இந்த படத்தின் மிகப்பெரிய சாதனை - தமிழ் சினிமா சூழலில் கதாபாத்திரம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்படி படமெடுப்பதென்றால் திரைக்கதையையும், கதாபாத்திரத்தின் கணமும், திரைப்படத்தின் மற்ற விஷயங்களும் எவ்வளவு செய் நேர்த்தியோடு இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். ப்ராஸ்தடிக் மேக்கப் போடப்படாத, உண்மையிலேயே ஊணமான உடல்களைத் தாங்கிய அந்த ஆத்மாக்களைப் பார்க்கும் போது கொஞ்சம் கலங்கித் தான் போகிறோம்.

ராஜா - உண்மையிலேயே ராஜா. ஜெ மோ - நல்வரவு.

தமிழ் திரைப்பட சூழலில் சமிபத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் யதார்த்தவியல் இயக்கம் (யதார்த்தவியல் இயக்கம் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்) இந்த படம் உச்சத்தை தொட்டிருக்கிறது. வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களின் இருத்தலை/ இல்லாதிருத்தலை மையப்படுத்தி அவர்களுக்கு விடுதலை அளிக்கும் அகோரியை பிரஹ்மனாக உருவகப்படுத்தியிருப்பது இந்த திரைப்படத்தை ஒரு நவின இலக்கியமாக்குகிறது. பிச்சைக்காரர்கள் பிச்சைகாரர்கள் அல்லர் - அவர்கள் ஒரு குறியீடு. அகோரியும் ஒரு குறியீடே. இறுதியில் நிகழும் சரணாகதியும் ஒரு குறியீடே. இந்த தெளிவு இயக்குனருக்கும் ஜெமோ-விற்கும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இருந்தும் காட்சியமைப்புகள் சற்றே சொதப்பிவிட்டதாய் எனக்கு ஒரு எண்ணம்.

இந்த படம் எனக்கு பாலாவின் மீது மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது.

2 Responses to “நான் கடவுள்”

Anonymous said...

Very good write up about "Naan Kaduvul". Good Luck !!!

Devi

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman