Adsense

ரௌத்திரம் பழகு


ஒரு மாதம் ஓடிவிட்டது. மீடியாக்களும், பத்திரிக்கைகளும் எவ்வளவு பேரை பேட்டி காண முடியுமோ அவ்வளவு பேரையும் பேட்டி கண்டு விட்டார்கள். மக்களும் Gateway of India முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி மனித சங்கிலி நடத்தி தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தி விட்டார்கள். சில சம்பிரதாய டிஸ்மிஸ்களும் நடந்து விட்டன. ஆனால் முன் எப்போதையும் காட்டிலும் அரசியல்வாதிகளின் மீதான மக்களின் கோபம் இந்த முறை தலைக்கேறியிருக்கிறது. வெளிப்படையாகவே தாக்க ஆரம்பித்து விட்டார்கள். தன் பங்குக்கு wall street journal-உம் இந்தியாவில் அரசியல் தலைமை சரியில்லை என்று முத்திரை குத்திவிட்டது.

உண்மையில் இந்திய மக்கள் கண் முன்னே இது போன்ற ஒரு வன்முறை நடத்திக் காட்டப்பட்ட பின்பே மக்கள் கண் திறந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று யோசிக்கிறார்களோ என்ற அச்சத்தை தோற்றுவித்து விட்டது. இந்த வன்முறையில் நடந்ததைக் காட்டிலும் சத்தமே இல்லாமல் பல லட்சம் குழந்தைகள் குழந்தைகள் போதிய ஊட்டசத்து இல்லாமல் இறந்து கொண்டிருப்பதாக UN-இன் சமிபத்திய அறிக்கை சொல்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் பங்களாதேஷும் நேபாளமும் கூட இந்த விஷயத்தில் இந்தியாவைக் காட்டிலும் பரவாயில்லை என்கிறது இந்த ஆய்வறிக்கை. பங்களாதேஷ் அளவிற்காவது நாம் முன்னேறியிருந்தால் கூட 200,000 குழந்தைகளை சாவிலிருந்து காப்பாற்றியிருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை. இந்த சாவுக்கு நாம் சுகாதாரத்துறை அமைச்சரை என்ன செய்யலாம் ? வேலையை விட்டு தூக்கலாமா ? இது குறித்து எத்தனை படித்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றுகிறார்கள் ?

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலுருந்து இன்றைய தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே போவதாக நாம் எல்லோருமே ஏகோபித்த மனதோடு ஏற்றுக் கொண்டாலும் இன்றைய தேதியிலும் வறுமைக் கோட்டுக்கு கீழேயும் சுமார் 260 மில்லியன் மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கிறது - அதாவது உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நாலாவது ஏழையும் இந்தியன். ஏழை என்றால் எப்படி சொல்வது - வாங்கும் வசதியை வைத்தா, குடும்ப சம்பளத்தை வைத்தா, உண்ணும் உணவை வைத்தா என்று பன்முக சண்டை நடத்தலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் நாம் பேசிக் கொண்டிருக்கும் எண்ணிக்கை சாமானியமானதா ? சஹாரா பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்க குழந்தைகளைக் காட்டிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் என்று UNICEF-இன் ஆய்வரிக்கை கூறுகிறது. இந்தியாவில் உணவு விநியோகிக்கும் முறையை சரி செய்து விட்டால் போதும் - இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. உலகத்தில் இருக்கும் நாடுகளின் பசியாது இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 66 இடத்தில் இருக்கிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தில் கூட பசி குறைவாக இருக்கிறதென்றோ, மட்டாக இருக்கிறதென்றோ இந்த ஆய்வறிக்கை சொல்லவில்லை. பசியால் துடித்துக் கொண்டிருக்கிறது இந்த தேசம். பிரதமருக்கு Economic Outlook 2007-2008 என்ற தலைப்பில் Economic advisory council-இன் ஆய்வறிக்கையில் குறிப்பிடபட்டுள்ள அசௌகரியமான உண்மை - 60 % மேற்பட்ட இந்திய குடிமக்களின் ஜீவாதரம் இன்னும் விவசாயமாகவே இருக்கும் கட்டத்தில் அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் திட்டங்கள் நம்மிடம் இல்லை. உணவு வழங்கல் துறை அமைச்சரை என்ன செய்யலாம் ? வேலையை விட்டு தூக்க சொல்லி மனித சங்கலி அமைக்கலாமா ?

இன்றைக்கு தினமும் 2 மணி நேரம் மின்சாரமில்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறோம். முன்னால் குறிப்பிட்ட பிரதமருக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடபட்டுள்ள மற்றொரு உண்மை - உற்பத்தியாகும் மின்சாரம் விநியோகிக்கப்படும் முன் காணாமல் போய்விடுகிறது ! இரண்டு காரணம் (1) T&D என்று அழைக்கப்படும் விநியோகிக்கப்படும் முறையினால் ஏற்படும் இழப்பு - இதை ஒன்றும் செய்ய முடியாது (2) மின்சார திருட்டு, நமது மீட்டரிங் முறையில் உள்ள குழப்படிகள். இதில் இரண்டாவது காரணத்தால் ஏற்படும் இழப்பே பெரும்பாண்மையானது - இந்த காரணத்தாலேயே தனியார் நிறுவனங்கள் மின்சாரத்துறையில் முதலீடு செய்ய முன் வருவதில்லை என்கிறது இந்த அறிக்கை. இந்த நிலை நமக்குத் தெரிந்தும் ஏன் நம்மால் இந்த நிலையை திருத்த முடியவில்லை என்று கேள்வி எழுப்புகிறது இந்த அறிக்கை. மின்சாரத்தேவைகளை திட்டமிடலில் உள்ள குறைபாடுகளையும் பட்டியலிடுகிறது இந்த அறிக்கை. மின்சாரத் துறைஅமைச்சர் ?

இன்றைக்கு இந்தியாவில் சட்ட ஒழுங்கு அவல நிலைக்கு போலீஸ்காரர்கள் மட்டுமே காரணமில்லை அவர்களை சுற்றியுள்ள system-உம் தான். இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 122 போலீஸ்காரர்கள் என்ற விகிதத்தில் தான் இருக்கிறார்கள். இவ்வளவு குறைவாக இருக்கும் காவலர்களாவது சூப்பர் மேன்களா என்றால் அதுவும் இல்லை. இவர்களின் பயிற்சிக்காக கவர்மெண்ட் செலவு செய்யும் பணம் நீங்கள் குடும்பத்தோடு சரவணபவனில் ஒரு நாள் டின்னர் சாப்பிட்டால வரும் பில்லை விட குறைவு. சட்ட ஒழுங்கை பாதுகாக்க வெண்டிய ஒரு துறையின் மீது நமது அரசாங்கத்துக்கு இவ்வளவு தான் அக்கறை. BPRD-இன் தகவல் அறிக்கையின் படி எல்லைக்காவல் படை வீரர்கள் ஒரு நாளில் 2 மணி நேரம் மட்டுமே தூங்குகிறார்கள் - இதில் 18 மணி நேரம் கட்டாய பணி காலம். இவர்களின் 6th pay commissionக்கு பரிந்துரைக்கப்பட்ட ஊதிய உயர்வை சில அரசியல்வாதிகளிடம் காட்டலாம்.

கல்வித்துறை என்று ஒன்று இருக்கிறது. நம்மில் எத்தனை பேருக்கும் கும்பகோணம் என்ற ஊர் நியாபகம் இருக்கிறது. இன்றைக்கு இன்னும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுக்கு அடியில் எத்தனை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நடைபெறுகின்றன. இன்றைக்கு இருக்கும் தனியார் இஞ்சினியரிங் கல்லூரிகள் எல்லாவற்றிற்குமே அங்கீகாரம் இருக்கிறதா ? இன்றைக்கு எத்தனை தரமான இஞ்சினியர்களை இந்த கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான டாக்டர்கள் இருக்கிறார்களா ? அவர்களை உருவாக்க போதிய மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றனவா ? நமது அரிய கலைகளை எடுத்து போற்ற போதுமான கலைஞர்களை உருவாக்க நம்மிடம் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவா ?

இப்போது சொல்லுங்கள் யார் மீது கோபப்படப்போகிறோம் ? ஒரு வேளை ஒரு நல்ல ஆக்ஷன் சினிமாவைப் போல தடதடவென துப்பாக்கி சத்தம் கேட்டதால் சினிமா கலாச்சாரத்தில் வளர்ந்த நமக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்ததோ ? சத்தமில்லாமல் நடக்கும் மற்ற வன்முறைகளை சவுகரியமாக மறந்து விட பழகிவிட்டோமோ ?

பி கு: ஜனவரி யுகமாயினி-இல் வெளியான கட்டுரை.

No response to “ரௌத்திரம் பழகு”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman