Adsense

பொன்னியின் செல்வன் - காலத்தை வென்ற புதினம்


மிக நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்த புத்தகம். 2008-இல் தான் படிக்க முடிந்தது. இதைப்பற்றி முன்பே எழுத வேண்டும் என்றிருந்தேன் - இப்போது தான் வகைப்பட்டது. நான் இந்த புத்தகத்தைப் படிக்கும் முன் தெளிவாக இருந்தேன். என்னிடம் யாரேனும் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் - சட்டென யோசிக்காமல் Ayn Rand என்றும் பிடித்த புத்தகம் Atlas Shrugged என்றும் சொல்லிவிடுவேன். இப்போது அதே கேள்வியை யாரேனும் கேட்டால் ஆங்கிலத்திலா தமிழிலா என்று எதிர் கேள்வி கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். Fountain Head-உம் பிடிக்கும். ஆனால் அதை விட ஒரு முழுமையான நாவல் என்று Atlas Shrugged தோன்றும். 2000 முதல் 2002 வரையிலான மூன்று வருடத்தில் இந்த இரண்டு நாவல்களையும் மாறி மாறி படிப்ப்பேன். அதைத் தவிர தமிழ் கவிதைகள் மட்டும் தான். சிறுகதைகள் படிப்பது கூட குறைந்து விட்டிருந்தது. மிகவும் புத்திசாலிதனமான அதே சமயம் சிக்கலான விஷயத்தை மிகவும் சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்ட சிறந்த நாவல்கள் என்று நான் இவற்றை மட்டுமே கருதினேன். Fountain Head-இல் நான் அடிக்கோடிட்டிருந்த வாசகங்களைப் பார்த்த சில நண்பர்கள் "சைக்கோத் தனமான வரிகள் அவை" என்று சண்டைக்கு வர ஆரம்பித்தார்கள். விட்டால் நம்மையும் சைக்கோ என பட்டம் கட்டி விடுவார்கள் என்று பயந்து அந்த புத்தகத்தை மட்டும் நான் யாருக்கும் இரவல் தருவதில்லை. அந்த புத்தகங்களைப் பற்றி யாரேனும் என்னிடம் பேசினாலன்றி அவற்றைப் பற்றி நானே வலிந்து பேசுவதில்லை என்று உறுதி கொண்டிருந்தேன். அப்போது பிளாக் எழுதாததால் அதைப் பற்றி எந்தவிதமான் குறிப்பும் இப்போது என்னிடம் இல்லை. அவற்றுக்குப் பின் படித்த எதுவுமே (English and Tamil) என்னை பாதிக்கவில்லை.


இந்த எண்ணம் பொன்னியின் செல்வனைப் படித்து முடித்த போது முற்றிலுமாக மாறி இருந்தது. என்ன ஒரு வேகம். என்ன ஒரு சுவாரஸ்யமான நடை. ஒவ்வொரு கதாபாத்திரமும் கண் முன் நிற்பது போன்ற தோற்றத்தையே கல்கி ஏற்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரங்களுக்கு ஒரு வரைமுறை அமைத்து அந்த வரைமுறைக்குட்பட்டு உரையாடல்கள் அமைத்து மிகவும் கோர்வையாக எழுதப்பட்ட நாவல். சரித்திர ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டதால் ஒரு வேளை கல்கி-க்கு கதாபாத்திரங்களின் outline தெளிவாக கிடைத்திருக்கும். ஆனால் நுண்ணிய விஷயங்கள் எல்லாம் கல்கியின் கற்பனையாகத்தான் இருக்க வேண்டும். முக்கியமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோற்றம், நந்தினியின் ஆண்டாள் கொண்டை, வந்தியத்தேவன் நிமித்தம் சொல்லும் காட்சி, மற்றும் கட்டங்களின் வடிவமைப்பு, கதாபாத்திரங்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும்படியான உடல் மொழி எல்லாமே கல்கியின் கற்பனைக் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும். இவ்வளவு முழுமையான எழுத்தை நான் இது வரை தமிழில் படித்ததில்லை. தமிழ்நாட்டு அரச பாரம்பரியம் பற்றிய வரலாற்றை நான் பொன்னியின் செல்வன் வாயிலாகவே அறிய முற்படுகிறேன். இந்த நாவல் ஒரு தொடர்கதையாக வந்தது என்று எண்ணும் போது இந்த நாவல் குறித்த வியப்பு பண்மடங்கு அதிகமாகிறது. எந்த இடத்தில் கல்கி ஒரு வாரத்தில் தொடரும் போட்டிருப்பார் என்று எண்ணி எண்ணி வியக்கிறேன் - ஒரு வேளை இப்போது புத்தகத்தில் வழங்கப்பட்டது போல ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு வாரத்திற்கான கதையோ ?

இந்த நாவலில் திடிர் திடிரென தோன்றும் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று எதேனும் ஒரு வகையில் பொன்னியின் செல்வனுடனும் சோழ அரச பரம்பரையுடனும் முடிச்சுப்போடப்படுகிறது - அபூர்வமான எழுத்து நடை. ஓடக்காரியாக அறிமுகமாகும் பூங்குழலி ஒரு சாதாரண ஓடக்காரியாக மட்டுமில்லை. மிகவும் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கும், அந்த காலத்தைய மற்ற பெண்களைப் போலில்லாமல் சுயசிந்தனையுடவளாய் இருப்பது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. என்னைக் கேட்டால் இந்த ஓடக்காரியின் குடும்பத்தைச் சுற்றியே சோழ சாம்ராஜ்யத்தின் பல ரஹஸ்யங்கள் பின்னப்பட்டிருக்கின்றன. முக்கியமாக ஐந்தாம் பாகத்தில் வரும் பைத்தியக்காரன் கதாபாத்திரம் சோழ சாம்ராஜ்யத்தின் மொத்த ரஹஸ்யத்தையும் அறிந்தவனாய் இருப்பது மகா ஆச்சர்யம். அவ்வளவு மிகச்சிறிய கதாபாத்திரம் கதையோட்டத்தை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டு போய்விடுகிறது - கச்சிதமான cameo. அந்த கதாபாத்திரத்தின் வாயிலாகவே நமக்கு உண்மையான மதுராந்தக சோழன் அறிமுகப் போகிறான் என்று படிக்கும் போது கனவிலும் நினைக்கவில்லை.

அதேபோல நாவலின் துவக்கத்திலிருந்து இறுதி வரை மதுராந்தக சோழன் என்ற கதாபாத்திரத்தின் மேல் ஒரு விதமான வெறுப்பையே ஏற்படுத்திவிட்டு இறுதியில் உத்தம சோழன் என்று வழங்கப்பட்ட மதுராந்தக சோழன் மன்னனானான் என்று வாசகர்கள் ஒப்புக்கொள்ளும் விதமாக மாற்றியமைத்த சாதுர்யம் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்தமாதிரியான உத்தியை கல்கி நாவல் முழுவதும் சளைக்காமல் பயன்படுத்தியிருக்கிறார். எந்த கதாபாத்திரத்தின் மீது சந்தேகப்பட வேண்டும் எது நல்ல கதாபாத்திரம் என்றே சில சமயம் குழப்பம் ஏற்படுத்திவிடுகிறார். நான் கடைசி வரை தெளிவாக் இருந்தது ஆழ்வார்க்கடியான் மீதும் அநிருந்த்த பிரம்மராயர் மீதும் தான் - தெளிவான, முன் பின் மாறாத கதாபாத்திரங்கள்.

நந்தினி தேவி ? ஒரு அபலையைப் போல அறிமுகமாகி, மோகினியாகி, சூழ்ச்சிகாரியாக, ராஜதந்திரியாக, கணவனை நேசிக்கும் பத்தினியாக, சூழ்நிலைக் கைதியாக - எத்தனை பரிமாணங்களை இந்த கதாபாத்திரம் ஏற்கிறது ? ஒரு கட்டத்தில் நந்தினி மேல் பரிதாபம் ஏற்படுத்திவிட்டு சில அத்தியாயங்கள் தாண்டி அதே நந்தினியை "அடிப்பாவி" என்று சொல்ல வைக்கிறார் கல்கி. இந்த கதாபாத்திரங்களே நிலையற்றவையாக ஒரு மனநிலையிலிருந்து மற்றோர் மனநிலைக்கு தாவும் பச்சோந்திகளாகத்தான் நம்முன் விவரிக்கிறார் - இதற்கான காரணத்தையும் ஐந்தாம் பாகத்தில் விவரித்திருக்கிறார் கல்கி.வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரம் அறிமுகமாகும் போது இந்த அளவிற்கு நுணுக்கமாக செதுக்கியிருப்பார் என்று நான் எண்ணவில்லை. ஒரு சாதாரண மனிதனைப்போல சபலப்படும், முன் கோபிக்கும், குழம்பும் வீரணை கச்சிதமாக கண் முன் கொண்டு வந்திருக்கிறார் கல்கி. எவ்வளவு திரணுடைய வீரனும் பெண்கள் விஷயத்தில் சபலப்படுவது போல நமது கதாநாயகனும் செயல் படுகிறார். எனக்கென்னமோ இந்த கதாபாத்திரத்தின் நுண்ணுணர்வுகளை வடிவமைக்க James Bond கதாபாத்திரத்தை ஆதாரமாகக் கொண்டிருப்பாரோ என்று படிக்கும் போது தோன்றியது. ஆனால் அப்படி இருக்கவும் வாய்ப்பு இல்லை - Ian Fleming James Bond கதாபாத்திரத்தை உருவாக்கிய அதே சமயத்தில் (உண்மையில் அதற்கு 2 வருடங்கள் முன்பே) கல்கி பொன்னியின் செல்வனை ஆரம்பித்திருக்கிறார். இவ்வளவு கச்சிதமாக இருவரும் சமகாலத்தில் சிந்தித்திருக்கிறார்களே என்று ஆச்சர்யப்பட்டு போனேன்.

பொன்னியின் செல்வன் என்று தலைப்பு வைத்திருந்தாலும் ராஜராஜ சோழனை மட்டும் சுற்றிவராது சோழ பரம்பரையை முற்றிலுமாக முன் வைக்கிறது இந்த நாவல். பொன்னியின் செல்வனின் உண்மையான பட்டாபிஷேகம் வரை இந்த நாவல் நீளாளது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அதுவும் இது ஒரு இதிகாச மதிப்பு வாய்ந்த நாவல் (இதிகாசம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு இது நடந்தது என்று பொருள்). வரலாற்று தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் கல்கியின் கைவண்ணத்தால் சிறப்பு பெற்றிருக்கிறது என்றால் மிகையில்லை.

இந்த நாவலில் சில விஷயங்களை கல்கி குழப்ப்த்தில் விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது.
1) மிகப்பெரிய குழப்பம் நந்தினி வீரபாண்டியனின் காதலியா மகளா ? நாவலின் இறுதி வரை நந்தினியை வீரபாண்டியனின் பத்தினி என்றே ஸ்தாபித்து விட்டு கடைசியில் மகள் என்று சொல்வது சரியாக நிருபிக்கப்படவில்லை. குந்தவையும் வந்தியத்தேவனும் கடைசியில் பேசும் போது ஆதித்த கரிகாலன் ஒருவேளை போர் வெறியில் சரியாக கேட்காமல் விட்டிருக்கலாம் என்று கூறுவதாக அமைத்தது ஒரு வேளை கல்கியின் சப்பைகட்டோ ? இவ்வளவு பெரிய நாவலில், இத்தனை கதாபாத்திரங்கள் வந்து போகும் இடத்தில் உறவுக்குழப்பத்தில் இந்த விஷயம் மறைந்து விடும் என்று நினைத்தாரோ ? ஒரு வேளை நந்தினி மகளாகவே இருந்தாலும், பள்ளிப்படை காட்டில் பட்டாபிஷேகம் செய்யும் குழந்தை நந்தினியை அம்மா என்று அழைக்கிறதே. அந்த குழந்தை நந்தினிக்கும் யார்க்கும் பிறந்த குழந்தை ? எனக்குத் தோன்றும் ஒரே விடை - பழுவேட்டரையர் வாயிலாக வெளிப்படும் கூற்றாலேயே நாம் நந்தினி வீரபாண்டியனின் மகள் என்று அறிகிறோம். ஆனால் அதைத் தவிர மற்ற இடங்களில் அவர்களை காதலி என்றே சொல்கிறார் - ஒருவேளை அந்த பழுவேட்டரையர் குறிக்கும் வீரபாண்டியனும், ஆதித்த கரிகாலன் கொன்ற வீரபாண்டியனும் வெவ்வேறு ஆசாமிகளா ? அப்படியென்றால் இரு வீரபாண்டியர்களுக்கும் என்ன உறவு ?
2) நந்தினியும் போலி மதுராந்தகனும் மந்தாகினியின் குழந்தைகள் என்று இருக்கும் பட்சத்தில், அவை பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவை என்ற பட்சத்தில் - மந்தாகினி ஏன் சுந்தர சோழரை காப்பாற்ற வேண்டும். ஒரே காரணம் அவர்களது முதல் காதல் தான். காதலிப்பது ஒருவனை கைப்பிடிப்பது மற்றொருவனை என்ற கலாசாரம் அந்த காலத்தில் கிடையாதே. அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம். வீரபாண்டியன் மூலம் குழந்தை பிறந்தது என்று வைத்துக் கொண்டாலும், பாண்டிய வம்சத்தைக் காப்பாற்றாமல் அதன் பகை வம்சமாகிய சோழ வம்சத்தை காப்பாற்றுவது ஏன் ?
3) வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்குமிடையிலான காதலை மிகவும் மேலோட்டமாக காட்டியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவ்வளவு தீரணான வந்தியத்தேவனும் புத்திகூர்மையான அரசிளங்குமரியும் இவ்வளவு மேலோட்டமாகவா மோகிப்பார்கள் ? எனக்குத் தெரிந்தவரை intensity அதிகம் இருக்கும் personlityகள் காதலில் மிகவும் தீவிரமாகவே இருப்பார்கள். ஒருவேளை கல்கி இளவரசி தனது நிலையிலிருந்து இறங்கி சொல்லுதலாகாது என்று நினைத்து அந்த காதலை அதிதீவிரமாக எழுதவில்லை போலும். வானதி ராஜராஜன் மீதும், மணிமேகலை வந்தியத்தேவன் மீதும் கொண்ட காதலின் அளவு கூட இல்லாமல குந்தவையும் வந்தியத்தேவனும் கொண்ட காதலின் தீவிரத்தை மேலோட்டமாக கல்கி ஏன் எழுதினார் ?இந்த நாவல் தமிழில் அதி முக்கியமான நாவல் என்றும் படைப்பிலக்கியத்தின் உச்சம் என்று நான் கருதிகிறேன். இந்த நாவலை நாம் எதிர் வரும் சந்ததியினருக்கு எடுத்துச்செல்லுதல் நமது கடமை என்று நான் கருதுகிறேன். அதன் முதன் படியாக, இந்த நாவலை படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட குழப்பம் காரணமாக நான் பேப்பரில் குறித்து வைத்த உறவு முறைகளை நான் படமாக வரைந்து இத்துடன் இணைத்து இருக்கிறேன். இந்த படமே இந்த நாவலின் சில மர்ம முடிச்சுகளை விளக்கிவிடுவதாக எனக்குப் பிற்பாடு தோன்றினாலும், இந்த படம் இந்த நாவலை புதிதாக படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகப்படும் என்பது என் திண்ணமான நம்பிக்கை. இந்த படம் ஒரு முதல் படியே. மேலும் இந்த நாவலில் வர்ணிக்கப்படும் ஆறுகள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கின்றது - ஓடுகின்றனவா எனபது குறித்தும், இந்த நாவலில் வழங்கப்படும் ஊர்கள் இன்றைய தேதியில் என்ன பேரில் வழங்கப்படுகின்றன என்ற பட்டியலும் மிகவும் முக்கியமானது என்று நாம் நினைக்கிறேன். இந்த பட்டியல் அனேகமாக அகழ்வாராய்ச்சி துறையினரிடம் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். சென்ற முறை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு சென்று வந்த போது அந்த அகழ்வாராய்ச்சி துறை அலுவலர் - இது குறித்து ஏதோ சொன்னதும், பசி மயக்கத்தில் அறை குறையாக கேட்டதும் என் நினைவில் இப்போது இல்லை. எத்தனை முறை பெரிய கோவிலுக்கு சென்றிருப்பேன் (பள்ளி இறுதியிலும், கல்லூரிக் காலத்திலும் தினமும் ஒரு முறை என்ற அளவில் சென்றிருக்கிறேன்) - ஆனால் இந்த நாவல் மீண்டும் ஒரு முறை கோவிலுக்கு செல்லும் ஆசையை ஏற்படுத்தி விட்டது. இந்த நாவல் "உடையார்" மற்றும் "காவிரி மைந்தன்"-ஐ படிக்கும் ஆசையை ஏற்படுத்தியிருக்கிறது - இந்த புத்தக கண்காட்சியில் இந்த இரண்டு புத்தகமும் வாங்க வேண்டும்.

டான் பிரவுன் டாவின்ஸி கோட் எழுதிய பின் அந்த கதையின் வரும் டெம்ப்ளர்களைப் பற்றியும், பிரையரி ஆஃப் சைனைப் பற்றியும், டாவின்ஸியின் சிம்பாலிஸத்தைப் பற்றியும், மேரி மெக்டலனைப் பற்றியுமே புத்தகம் எழுதியே பல பேர் காசு பார்த்து விட்டார்கள். அதில் தவறில்லை. அந்த அளவிற்கு அந்த விஷயத்தைப் பற்றி பல கோணங்களில் மக்கள் அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போட்டு விட்டார்கள். பொன்னியின் செல்வன் நாவல் குறித்து இணையத்தில் பல விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், எனக்குத் தெரிந்தவரை இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு சரித்திர புத்தகங்களோ அல்லது இந்த நாவலில் இருக்கும் சரித்திர சான்றுகள் எவ்வளவு தூரம் சரி என்று ஆராய்ச்சி செய்யும் கோணத்தில் புத்தகம் ஏதும் வெளிவரவில்லை. இப்போது நமக்கு இருக்கும் ஒரே குறை அது ஒன்று தான். நமது கலாசாரத்தில் படைப்பிலக்கியத்தை மக்களுக்கு இன்னும் எளிமைப் படுத்தி விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டு செல்லும் புத்தகங்கள் நம்மிடம் குறைவு. நாவலை அடிப்படையாகக் கொண்டு டாகுமெண்டரி எடுத்தால் கூட சுவாரஸ்யமாக இருக்கும். இதை தற்கால இயக்குனர்கள் யாரும் சினிவாக எடுக்காமல் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

பி கு: இந்த உறவு படம் குறித்தும், இந்த நாவல் குறித்த என் சந்தேகங்கள் குறித்தோ அல்லது இந்த பதிவின் பிற பகுதிகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துகள்/ திருத்தங்கள் இருந்தாலோ, பயனுள்ள வலைதள சுட்டிகள் இருந்தாலோ தெரியப்படுத்தவும் - அப்படி செய்பவர்களுக்கு முன் கூட்டியே என் நன்றிகள்.

59 Responses to “பொன்னியின் செல்வன் - காலத்தை வென்ற புதினம்”

பொன்னியின் செல்வன் தமிழ் சரித்திர நாவல்களில் ஒரு சகாப்தம் எத்தனை தடவை வாசித்தாலும் புதிதாக வாசித்ததுபோல் இருக்கும்.

நந்தினி விடயத்தில் எனக்கும் குழப்பம் இருக்கின்றது. அதேபோல் வந்தியத்தேவன் குந்தவை திருமணம் பற்றி எங்கும் காணப்படவில்லை. நாவலில் இறுதிப் பகுதியில் சில விடயங்களை கல்கி தந்திருக்கின்றார். அதனைப் பாருங்கள்.

எனக்கு புரிந்த வரையில்....

//
மிகப்பெரிய குழப்பம் நந்தினி வீரபாண்டியனின் காதலியா மகளா?
இவ்வளவு பெரிய நாவலில், இத்தனை கதாபாத்திரங்கள் வந்து போகும் இடத்தில் உறவுக்குழப்பத்தில் இந்த விஷயம் மறைந்து விடும் என்று நினைத்தாரோ ?
//

க‌ல்கி அப்ப‌டி நினைத்த‌தாக‌ தெரிய‌வில்லை. உண்மையில் அருள்மொழியின் அண்ண‌ன் ஆதித்த‌ க‌ரிகால‌னின் ம‌ர‌ண‌ம் எப்ப‌டி நிக‌ழ்ந்த‌து என்ப‌த‌ற்கு ச‌ரித்திர‌த்தில் எந்த‌ ஆதார‌மும் இல்லை.. அவ‌ன் கொல்ல‌ப்ப‌ட்டானா இல்லை த‌ற்கொலை செய்து கொண்டானா? ந‌ந்தினி வீர‌பாண்டிய‌னின் ம‌க‌ளா இல்லை காத‌லியா? அப்ப‌டியானால் ந‌ந்தினிக்கும் ஆதித்த‌ க‌ரிகால‌னுக்கும் என்ன‌ உற‌வு?

உண்மையில் பொன்னியின் செல்வ‌ன் க‌தையின் மிக‌ முக்கிய‌ முடிச்சு இந்த‌ உற‌வு சிக்க‌லே..

நந்தினியின் தாய் ம‌ந்தாகினி. த‌ப்பியோடிய‌ வீர‌பாண்டிய‌னுக்கும் ம‌ந்தாகினிக்கும் உற‌வு (ம‌ந்தாகினியின் விருப்ப‌ம் இல்லாம‌ல்) ஏற்ப‌ட்ட‌தாக‌ சிறையில் இருக்கும் பைத்திய‌க்கார‌ன் மூல‌ம் குறிப்பால் உண‌ர்த்த‌ப்ப‌டுகிற‌து.. ம‌ந்தாகினியை சில‌ கால‌ம் காத‌லித்து கைவிட்ட‌வ‌ன் சுந்த‌ர‌ சோழ‌ன். ம‌ந்தாகினி, வீர‌பாண்டிய‌னுக்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் ந‌ந்தினியும், சோழ‌ குடும்ப‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் உத்த‌ம‌ சோழ‌னும்!

அப்ப‌டியானால் ந‌ந்தினிக்கும் ஆதித்த‌ க‌ரிகால‌னுக்கும் என்ன‌ உற‌வு முறை? ஒரு வித‌த்தில் அண்ண‌ன் த‌ங்கை.

ஆதித்த‌ க‌ரிகால‌ன் சிறு வ‌ய‌திலேயே ந‌ந்தினியை காத‌லித்த‌தாக‌வும், இது த‌வ‌று என்று தெரிந்த‌ செம்பிய‌ன் மாதேவியார் அவ‌ர்க‌ளை பிரித்த‌தாக‌வும் வ‌ருகிற‌து.

இந்த‌ அண்ணன் த‌ங்கை உற‌வு முறை தெரிய‌ வ‌ருவ‌தாலேயே ஆதித்த‌ க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டு இற‌க்கிறான்..

வீர‌பாண்டிய‌ன், ந‌ந்தினி உற‌வில் எந்த‌ குழ‌ப்ப‌மும் இல்லை. ந‌ந்தினி ம‌ந்தாகினி போல் இருப்ப‌தாக‌ க‌தையில் வ‌ருகிற‌து.

இந்த‌ க‌தை 1950க‌ளில் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ தெரிகிற‌து..2008லும் (எந்த‌ கால‌த்திலும்) சொல்ல‌ முடியாத‌ ஒரு உற‌வு பிர‌ச்சினையை க‌ல்கி 1950க‌ளில் வெளிப்ப‌டையாக‌ சொல்ல‌ முடியாது என்ப‌தாலேயே இந்த‌ உற‌வு சிக்க‌ல் மூடி ம‌றைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ தெரிகிற‌து....கேட்க‌ செவியுள்ள‌வ‌ன் கேட்க‌ க‌ட‌வ‌ன்!

ஆதித்த‌ க‌ரிகால‌னை கொல்ல‌ சூழ்ச்சி செய்த‌தாக‌ ர‌விதாஸ‌னும், உட‌ந்தையாக‌ இருந்த‌தாக‌ ப‌ல‌ கேர‌ள‌த்து குறு நில‌ ம‌ன்ன‌ர்க‌ளும் பிற்கால‌த்தில் ராஜ‌ராஜ‌ சோழ‌னால் த‌ண்டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். ராஜ‌ராஜ‌ன் இத‌ற்காக‌ கேர‌ள‌த்து மீது ப‌டையெடுத்து சென்று ச‌தியாலோச‌னையின் முக்கிய‌ கேந்திர‌மாயிருந்த‌ (அல்ல‌து அவ்வாறு ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌) காந்தாளூர் சாலையை அழித்த‌து வ‌ர‌லாறு. (காந்தாளூர் சாலை க‌ல‌ம‌றுத்த‌ருளிய‌!).

ஆனால், ந‌ந்தினி எந்த‌ கால‌த்திலும் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வில்லை. அத‌ற்கு கார‌ண‌ம் அவ‌ளுக்கு ப‌ழி வாங்கும் வெறி இருந்த‌து, அத‌ற்கு கார‌ண‌மும் இருந்த‌து ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ள் ராஜ‌ ராஜ‌ன், குந்த‌வையின் ச‌கோத‌ரி என்ப‌தும் ஒரு கார‌ண‌மாயிருக்க‌க் கூடும்.

என‌க்கு புரிந்த‌ வ‌ரை, இந்த‌ க‌தை எழுத‌ ஆர‌ம்பிக்கும் போது க‌ல்கியின் முக்கிய‌ நோக்க‌மே இந்த‌ உற‌வு சிக்க‌லை விள‌க்குவ‌தாக‌ இருந்திருக்க்கூடும்..ஆனால், அத‌ன் அபாய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு தாண்டி சென்று விட்ட‌தாக‌ தெரிகிற‌து...

பின் குறிப்பு: என‌து புரித‌லில் த‌வ‌றுக‌ள் இருக்க‌லாம்..யாரேனும் விள‌க்கினால் மிகுந்த‌ ச‌ந்தோஷ‌ப்ப‌டுவேன்!

SUREஷ் said...

ஐயா,

பொன்னியின் செல்வன் பதிவுலகில் பலரும் எழுதியள்ளனர். நானும்கூட எழுதி உள்ளேன். நான் பண்ணியது தமாஷ்.


பலரும் சுவாரசியமாய். உண்மையாய் எழுதியுள்ளனர்


நந்தினி விஷயத்தைப் பற்றி கல்கியின் கருத்து என்பது கடைசி சூழலில் பெரிய பழுவேட்டரையரின் கருத்தாகவே சொல்கிறார். பெ. ப. தனது மனைவியை இன்னொருவரின் முன்னாள் மனைவி என்பதை சொல்ல சங்கோஜப் பட்டுக் கொண்டு இவ்வாறாக திரித்திருக்கலாம். இதை ஆசிரியர் சொல்லாமலே விட்டிருந்திருக்கலாம். ஆனால் ஏன் இவ்வாறு சொல்லி அதனை குழப்பத்திலேயே விட்டார் என்று தெரியவில்லை.

மரு.புருனோ, பழைமைபேசி, தமிழ்பிரியன், குடுகுடுப்பை மற்றும் பலரும் பலமாதிரி எழுதியுள்ளனர்.

Kathir said...

எனக்கு சில நாட்களுக்கு முன் தான் "உடையார்" படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் ஆதித்த கரிகாலன் ரவிதாஸனால் கொலை செய்யப்பட்டதாக விவரிக்கப்பட்டு இருக்கும். நந்தினி என்ற கதாபாத்திரமே அதில் கிடையாது.

மற்றும் கதாபாத்திரங்களுடைய குணநலன்களும் இந்த இரு நாவல்களிடையே வேறுபடுகிறது. குறிப்பாக செம்பியன்மாதேவி மற்றும் உத்தம சோழர்.அப்புறம், "காவிரி மைந்தன்" யார் எழுதியது சார்?Kathir.

உங்கள் மற்ற கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதிலை என் பதிவில் எழுதியிருக்கிறேன்...நேரம் இருந்தால் வந்து பாருங்களேன்..

http://muranthodai.blogspot.com/2008/12/blog-post_13.html

Naren said...

நண்பரே, ராஜாஜி அவர்கள் எழுதிய "சக்ரவர்த்தி திருமகன்" - ராமாயணம், மற்றும் "மஹாபாரதம்" - மும் படித்துப் பாருங்கள்..

>>ஆதித்த‌ க‌ரிகால‌ன் சிறு வ‌ய‌திலேயே ந‌ந்தினியை காத‌லித்த‌தாக‌வும், இது த‌வ‌று என்று தெரிந்த‌ செம்பிய‌ன் மாதேவியார் அவ‌ர்க‌ளை பிரித்த‌தாக‌வும் வ‌ருகிற‌து.

இந்த‌ அண்ணன் த‌ங்கை உற‌வு முறை தெரிய‌ வ‌ருவ‌தாலேயே ஆதித்த‌ க‌ரிகால‌ன் த‌ற்கொலை செய்து கொண்டு இற‌க்கிறான்>>

மீண்டும் கவனமாகப் படித்துப் பாருங்கள்..

ஆதித்தன் இறக்கும் அத்தியாயத்தில்,பழுவேட்டரையர் திருகுமடல் கத்தியுடன் வருகிறார்.வந்தியத்தேவன் மயங்கம் தறுவாயில் அந்தக் கத்தியை பழுவேட்டரையர் கையில் பார்க்கிறான்...

அந்த சமயத்தில் ஆதித்தன் பாண்டிய குல வாளுடன் பேசிக் கொண்டு இருக்கிறான்...

மீண்டும் வந்தியத்தேவன் கண்விழிக்கும் போது ஆதித்தன் இறந்து கிடக்கிறான்,திருகுமடல் கத்தி முனையில் ரத்தத்துடன் இருக்கிறது...(இவ்வாறு ரத்தமுடன் இருந்ததால் தான் வந்தியத்தேவன் மேல் கந்தமாறன் வகையறாக்கள் குற்றம் சுமத்த ஏதுவாகிறது)..

எனவே பழுவேட்டரையர் நந்தனியின் மேல் எறிந்த கத்தி குறிதவறி ஆதித்தன மேல் விழுந்த அவன் இறந்ததாகவே கருதவேண்டியிருக்கிறது.

இவ்வாறே பின்னர் அரசவையிலும் பழுவேட்டரையரும் ஒத்துக் கொள்கிறார்.

இது இவ்வாறு இருக்க பின்னால் குகையிலும் ஆதித்தன் இறப்பு இவ்வாறே நடந்தது எனபதை பழுவேட்டரையருக்கும் நந்தினிக்கும் இடையில் நடந்த உரையாடல் இறுதி செய்கிறது...

நந்தினி யார்(பாண்டியன் காதலியா,மனைவியா) என்பதிலான குழப்பம் கதையில் நீடிக்கிறது என்றே தோன்றுகிறது!!!

Please remove word verification,it prevents easy commenting

1) மிகப்பெரிய குழப்பம் நந்தினி வீரபாண்டியனின் காதலியா மகளா ?

இதற்கு நான் அளித்த பதிலை உங்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் மறுக்கவே முடியாது

//எனக்குத் தோன்றும் ஒரே விடை - பழுவேட்டரையர் வாயிலாக வெளிப்படும் கூற்றாலேயே நாம் நந்தினி வீரபாண்டியனின் மகள் என்று அறிகிறோம். ஆனால் அதைத் தவிர மற்ற இடங்களில் அவர்களை காதலி என்றே சொல்கிறார் - ஒருவேளை அந்த பழுவேட்டரையர் குறிக்கும் வீரபாண்டியனும், ஆதித்த கரிகாலன் கொன்ற வீரபாண்டியனும் வெவ்வேறு ஆசாமிகளா ? அப்படியென்றால் இரு வீரபாண்டியர்களுக்கும் என்ன உறவு ?//

தன் மனைவி பத்தினி என்று மற்றவர்களை நம்ப வைக்க அவர் பொய் கூறியிருக்கலாம் அல்லவா

//2) நந்தினியும் போலி மதுராந்தகனும் மந்தாகினியின் குழந்தைகள் என்று இருக்கும் பட்சத்தில், அவை பாண்டிய மன்னனுக்குப் பிறந்தவை என்ற பட்சத்தில் - மந்தாகினி ஏன் சுந்தர சோழரை காப்பாற்ற வேண்டும். ஒரே காரணம் அவர்களது முதல் காதல் தான்.//
ஆமாம்

// காதலிப்பது ஒருவனை கைப்பிடிப்பது மற்றொருவனை என்ற கலாசாரம் அந்த காலத்தில் கிடையாதே. அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம்.//
அவள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால்

// வீரபாண்டியன் மூலம் குழந்தை பிறந்தது என்று வைத்துக் கொண்டாலும், பாண்டிய வம்சத்தைக் காப்பாற்றாமல் அதன் பகை வம்சமாகிய சோழ வம்சத்தை காப்பாற்றுவது ஏன் ?//
அவளுக்கு சுந்தர சோழரை பிடிக்கும் என்பதால்
அவள் சோழ வம்சம் என்பதால்

//3) வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்குமிடையிலான காதலை மிகவும் மேலோட்டமாக காட்டியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவ்வளவு தீரணான வந்தியத்தேவனும் புத்திகூர்மையான அரசிளங்குமரியும் இவ்வளவு மேலோட்டமாகவா மோகிப்பார்கள் ? எனக்குத் தெரிந்தவரை intensity அதிகம் இருக்கும் personlityகள் காதலில் மிகவும் தீவிரமாகவே இருப்பார்கள். ஒருவேளை கல்கி இளவரசி தனது நிலையிலிருந்து இறங்கி சொல்லுதலாகாது என்று நினைத்து அந்த காதலை அதிதீவிரமாக எழுதவில்லை போலும்.//
அப்படித்தான்

// வானதி ராஜராஜன் மீதும், மணிமேகலை வந்தியத்தேவன் மீதும் கொண்ட காதலின் அளவு கூட இல்லாமல குந்தவையும் வந்தியத்தேவனும் கொண்ட காதலின் தீவிரத்தை மேலோட்டமாக கல்கி ஏன் எழுதினார் ?//

இதை விட தீவிரமான காதலை நீங்கள் விட்டு விட்டீர்கள் :) :)

//ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? //

அவர் இறந்து போனார் என்பது உறுதி.

ஆனால் கொல்லப்பட்டார் என்பது உறுதியல்ல. தெளிவு பெற அல்லது மேலும் குழம்ப
என் பதிவில் இருக்கும் சரியான கேள்வி கேட்பது எப்படி என்ற இடுகையை பார்க்கவும்

//ஆதித்ய கரிகாலர், இறந்துதான் போனார் என்பதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா? //

அவர் இறந்து போனார் என்பது உறுதி.

ஆனால் கொல்லப்பட்டார் என்பது உறுதியல்ல. தெளிவு பெற அல்லது மேலும் குழம்ப
என் பதிவில் இருக்கும் சரியான கேள்வி கேட்பது எப்படி என்ற இடுகையை பார்க்கவும்

@ கதிர்

காவிரி மைந்தன் எழுதியது அனுஷா வெங்கடேஷ்

@ Bruno

எந்த காதலை சொல்கிறீர்கள் - சேந்தன் அமுதன் பூங்குழலி மீது கொண்ட காதலையா ? அல்லது மந்தாகினி சுந்தர சோழர் மீது கொண்ட காதலையா ? இல்லை இதையும் தாண்டிய வேறொரு மகோன்னத காதல் பொன்னியின் செல்வனில் இருப்பதாக நினைக்கிறீர்களா ? உங்கள் கருத்தை அறிய ஆவல்.

மேலும் உங்களின் மற்ற பார்வை குறித்து என் கருத்துகள்

ஆதித்தன் பற்றி என்ன சொல்லுகிறீர்கள் - அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றா ? அப்படி தற்கொலை தான் செய்து கொண்டான் என்றால் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான மணிமேகலை ஏன் அந்த பழியை தன் மீது போட்டுக்கொள்ள வேண்டும். அவள் வந்தியத்தேவன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை நீக்க வேண்டுமானால் - ஆதித்தன் தற்கொலை செய்து கொண்டான் என்றோ அதிர்ச்சியில் இறந்தான் என்றோ சொல்லியிருக்கலாமே. அந்த வாதம் கூட வந்தியத்தேவனை கொலைப்பழியிலிருந்து காப்பற்றியிருக்கக்கூடுமே. ஆக ஆதித்தன் கொல்லப்பட்டான் என்பது ஏறக்குறைய உறுதி - அதனாலேயே மணிமேகலை மாற்று கோண்த்தை கையாளவில்லை என்பது என் கருத்து.

மேலும், உங்கள் பக்கவாட்டு பார்வையை நான் பாராட்டுகிறேன். நல்ல கோணம். ஆனால் இந்த எலக்ட்ரா கம்ப்ளக்ஸும், எடிபஸ் காம்ப்ளக்ஸும் மேற்கத்திய கலாசாரத்து விஷயங்களே தவிர இந்திய கலசாரத்துக்கு அந்த காலத்தில் ஒத்து வந்து இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்களா? அந்த கோணத்தில் விவாதிக்க முடியுமே தவிர அந்த கோணத்தில் தான் அது நிகழந்திருக்க வேண்டும் என் ஸ்தாபிக்க முடியாது. இந்த விஷயத்தில் நாம் தீவிரமாக ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். யார் கண்டது - நம் உரையாடலின் இறுதியில் நமக்கே தெரியாத சில விஷயங்களை நாம் அறிந்து கொண்டவர்களாக இருக்கக்கூடும். பழந்தமிழ் கலாசாரத்தில் இந்த சம்பவங்களுக்கு பொன்னியின் செல்வனின் இந்த சம்பவத்தைத் தவிர வேறு ஏதேனும் ஆதாரம் இலக்கியத்தில் இருக்கின்றதா ? இருந்தால் பரிசிலிக்கலாம் - நிருபிக்காதவரை இதை ஒரு விவாத கோணமாக மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்கு தோன்றுவதெல்லாம், இந்த வீரபாண்டியன் இருவர் - ஏனென்றால் பழந்தமிழகத்தில் மூத்த அரசர் பெயரை இளவல்களுக்கு வைக்கும் பழக்கம் உண்டு. ஆதித்தனின் பெயர் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதே போல வீரபாண்டியனின் அரச வம்சத்தில் பிறந்த மற்றொரு அரசனின் (நந்தினியை மணக்கும் உரிமை கொண்ட அரசனின்) பெயரும் வீரபாண்டியன் என்று இருந்திருக்க வேண்டும்.

@ அறிவன்

ஆதித்தன் கொலையுண்டான் என்பதே பொருத்தமாக இருக்குமென்றும் தற்கொலை செய்து கொண்டான் என்பது பொருத்தமான வாதமாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து. இந்த கருத்தை என்னால விவாதிக்க முடியும்
திருகுமடல் கத்தியாலேயே ஆதித்தன் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதும் அந்த கத்தி இடும்பன் காரியின் கத்தி (ஆபத்துதவி) என்பது நமக்கு காட்சியின் வாயிலாக புலனாகிறது. அப்படி இருக்க இந்த சம்பவம் நிகழ்ந்திருக்க கூடிய சாத்தியங்கள்
1) பெரிய பழுவேட்டரையரின் கூற்று அப்படியே உண்மையாக இருக்கக்கூடும்.
2) நந்தினியின் பெருஞ்சிரிப்பு சத்தத்தைக் கேட்டு (பள்ளிப்படை காட்டில் சிரிப்பை ஒரு சிக்னலாக ஆபத்துதவிகளிடம் நந்தினி சொல்கிறாள்) - ஆபத்துதவிகள் உள்ளே நுழைந்து கரிகாலனை தாக்கியிருக்கலாம் அதனால் கரிகாலன் இடும்பன் காரியை கொன்றிருக்கலாம் - அப்படி இருந்தால் பெரிய பழுவேட்டரையர் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும். இரண்டு காரணங்கள்
அ) இராஜதுரோகத்துக்கு தம்மையும் அறியாமல் துணை சென்ற குற்ற உணர்ச்சியால்
ஆ) வேளாளப்படை தலைவனாக இருந்த சமயத்தில் செய்த சபதத்தின் காரணமாகவும்

@ அதுசரி

சுட்டிக்கு நன்றி. உங்கள் பதிவில் நான் என் கருத்துகளை இடுகிறேன்.

//எந்த காதலை சொல்கிறீர்கள் - சேந்தன் அமுதன் பூங்குழலி மீது கொண்ட காதலையா ? அல்லது மந்தாகினி சுந்தர சோழர் மீது கொண்ட காதலையா ? இல்லை இதையும் தாண்டிய வேறொரு மகோன்னத காதல் பொன்னியின் செல்வனில் இருப்பதாக நினைக்கிறீர்களா ? உங்கள் கருத்தை அறிய ஆவல்.//

இரண்டும் தான் :)

இதில் மந்தாகினியின் காதலே எனக்கு தீவிரமாக படுகிறது. வேறு யாரும் காதலுக்காக உயிரை பணயம் வைக்க வில்லை என்றே நினைக்கிறேன்

வானதி அரசுரிமையை இழக்க துணிந்ததும் கூட பெரிய விஷயம் தான்

//ஆதித்தன் பற்றி என்ன சொல்லுகிறீர்கள் - அவன் தற்கொலை செய்து கொண்டான் என்றா ? அப்படி தற்கொலை தான் செய்து கொண்டான் என்றால் அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான மணிமேகலை ஏன் அந்த பழியை தன் மீது போட்டுக்கொள்ள வேண்டும்.//
மணிமேகலைக்கு என்ன நடந்தது என்றே தெரியாது

// அவள் வந்தியத்தேவன் மீது சாட்டப்பட்ட குற்றத்தை நீக்க வேண்டுமானால் - ஆதித்தன் தற்கொலை செய்து கொண்டான் என்றோ அதிர்ச்சியில் இறந்தான் என்றோ சொல்லியிருக்கலாமே. அந்த வாதம் கூட வந்தியத்தேவனை கொலைப்பழியிலிருந்து காப்பற்றியிருக்கக்கூடுமே.//
யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். அடுத்த விஷயம்.

// ஆக ஆதித்தன் கொல்லப்பட்டான் என்பது ஏறக்குறைய உறுதி - அதனாலேயே மணிமேகலை மாற்று கோண்த்தை கையாளவில்லை என்பது என் கருத்து.//
ஏறக்குறையத்தான் உறுதி :)

//மேலும், உங்கள் பக்கவாட்டு பார்வையை நான் பாராட்டுகிறேன். நல்ல கோணம். ஆனால் இந்த எலக்ட்ரா கம்ப்ளக்ஸும், எடிபஸ் காம்ப்ளக்ஸும் மேற்கத்திய கலாசாரத்து விஷயங்களே தவிர இந்திய கலசாரத்துக்கு அந்த காலத்தில் ஒத்து வந்து இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்களா?//
ஈடிபஸ் காம்ப்ளெஸ் என்பது மேற்கத்திய கலாசாரம் என்பதை நான் முழுவதும் மறுக்கிறேன். அது மனித மனதின் அடியில் இருப்பது

எப்படி மது, புகைப்பது போன்றவை எல்லாம் அனைத்து கலாச்சாரங்களிலும் உண்டோ அது போல் தான் இதுவும்.

எப்படி ராமர்-சிதை-ராவணன் போல் மெனுலாஸ்-ஹெலன்-பாரிஸோ, அதே போல் இது கலாச்சாரத்திற்கு உட்பட்டதல்ல

பிரம்மா - சரஸ்வதி கதை பற்றி உங்களின் கருத்து என்ன

இதை தவிர 20ஆம் நூற்றாண்டு உதாரணம் தந்தால் ”இறந்தவர்களை பற்றி பேசாதீர்கள்” என்று என்னை தாளித்து எடுத்து விடுவார்கள் :) :) அல்லது தேச துரோகி ஆக்கி விடுவார்கள்

// அந்த கோணத்தில் விவாதிக்க முடியுமே தவிர அந்த கோணத்தில் தான் அது நிகழந்திருக்க வேண்டும் என் ஸ்தாபிக்க முடியாது.//

கண்டிப்பாக முடியாது. ஆனால் அதை மறுக்க முடியாது என்பது தான் விஷயம் :) :)

// இந்த விஷயத்தில் நாம் தீவிரமாக ஆதாரங்களுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். யார் கண்டது - நம் உரையாடலின் இறுதியில் நமக்கே தெரியாத சில விஷயங்களை நாம் அறிந்து கொண்டவர்களாக இருக்கக்கூடும். பழந்தமிழ் கலாசாரத்தில் இந்த சம்பவங்களுக்கு பொன்னியின் செல்வனின் இந்த சம்பவத்தைத் தவிர வேறு ஏதேனும் ஆதாரம் இலக்கியத்தில் இருக்கின்றதா ? //

இல்லை நந்தினி என்ற கதாப்பாத்திரம் வேறு புதினங்களில் இல்லை என்றே நினைக்கிறேன்

//இருந்தால் பரிசிலிக்கலாம் - நிருபிக்காதவரை இதை ஒரு விவாத கோணமாக மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்கு தோன்றுவதெல்லாம், இந்த வீரபாண்டியன் இருவர் - ஏனென்றால் பழந்தமிழகத்தில் மூத்த அரசர் பெயரை இளவல்களுக்கு வைக்கும் பழக்கம் உண்டு. ஆதித்தனின் பெயர் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதே போல வீரபாண்டியனின் அரச வம்சத்தில் பிறந்த மற்றொரு அரசனின் (நந்தினியை மணக்கும் உரிமை கொண்ட அரசனின்) பெயரும் வீரபாண்டியன் என்று இருந்திருக்க வேண்டும்.//

இந்த சிக்கலுக்கு எளிதான விடை - வீரபாண்டியர் இருவர்.(இதை மறுக்க முடியாது :) ) அப்பா மகன், அல்லது சகோதரராக கூட இருக்கலாம்

அப்படி இல்லை , ஒரே வீரபாண்டியர் என்றால் அதற்கு மறுக்க முடியாத ஒரு விடை நந்தினி தன் தந்தையை காதலித்தாள் என்பது தான்

truth is sometimes bitter

நான் ஒரே விடை என்று கூற வில்லை

This is an hypothesis you cannot disprove :) :)

நானும் இது தொடர்பாக நான்கு பதிவுகள் எழுதியுள்ளேன். நந்தினி வீர பாண்டியனின் காதலியா, மகள் என்பதையும், ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதையும் விளக்கி(?) யுள்ளேன். இது முழுக்க முழுக்க பொன்னியின் செல்வனை வைத்து மட்டுமே. வரலாற்றுக் குறிப்புகளை இணைக்கவில்லை. படித்தால் குழப்பம் தீரலாம்... அல்லது அதிகமாகலாம்(நன்றி டாக்டர் புருனோ)

பொன்னியின் செல்வன் குழப்பங்கள் என் பார்வையில்

நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் பார்வை மறுக்ககூடியது அல்ல.ஆனால் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பது தான் சிக்கலே. நான் அந்த பார்வையை 95 % நடந்திருக்காது என்றும் 5 % why not? என்ற அளவிலும் ஏற்றுக்கொள்வேன்.

அவ்வளவு ஏன் adam eve -இருவரையும் கடவுள் எப்படி படைத்தார் என்ற கதையும் நீங்கள் சொல்லும் கோணத்தை சார்ந்தது தானே.
இந்த விவாதத்தை தாண்டிய topic. ஆதி மனித ஜாதி என்பது முறைப்படுத்தப் படாத ஆண் பெண் உறவுகளிலிருந்தே தோன்றியிருக்கக்கூடும். அந்த root வரை நமது உறவுகளை நாம் map செய்து பார்த்தால் இன்று வாழும் எவ்வளவோ பேர் அவர்களின் சகோதரிகளையே மணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டிருக்கக்கூடும். கிளியோபாட்ரா சகோதரர்களை மணந்ததற்கு சரித்திர சான்றுகளே உள்ளனவே. சில உண்மைகள் தெரியாத வரை தான் மனிதன் நிம்மதியாக இருக்க முடியும். அதனால் தானோ Ignorance is always bliss ???

கலாசாரத்துக்கும் மனித மனதுக்கும் இடையேயான தொடர்பு என்பது உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு என்று என் கருத்து. கலாசாரங்களே மனித மன் உணர்வுகளை ஆட்படுத்துகின்றன என்று அந்த மன மாற்றத்தாலேயே கலாசார மாற்றங்கள் உண்டாகின்றன என்பதும் என் திண்ணமான கருத்து. அவ்வளவு ஏன் 20 வருடங்களுக்கு முன் lesbian மற்றும் gay உறவுகளை சமுகம் இப்போது அணுகும் maturity-உடனாவது அணுகியிருக்கும் என்று நினைக்கிறீர்களா ?

Btw, அது என்ன இறந்தவர்கள் சமாச்சாரம் - எனக்கு தனிமடலில் சொன்னாலும் எனக்கு பிரச்சனையில்லை :)

//கலாசாரத்துக்கும் மனித மனதுக்கும் இடையேயான தொடர்பு என்பது உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு என்று என் கருத்து. கலாசாரங்களே மனித மன் உணர்வுகளை ஆட்படுத்துகின்றன என்று அந்த மன மாற்றத்தாலேயே கலாசார மாற்றங்கள் உண்டாகின்றன என்பதும் என் திண்ணமான கருத்து. அவ்வளவு ஏன் 20 வருடங்களுக்கு முன் lesbian மற்றும் gay உறவுகளை சமுகம் இப்போது அணுகும் maturity-உடனாவது அணுகியிருக்கும் என்று நினைக்கிறீர்களா ?//

சமுகம் அணுகும் முறை என்னவென்பது முக்கியமல்ல

கலாச்சாரம் என்பது மண்ணைப்பொறுத்து மாறும் என்றாலும், சுயபால் ஈர்ப்பு என்பது நமது கோயில் சிற்பங்களில் இருக்கும் விஷயம்தான்.

நான் கூற வந்தது என்னவென்றால் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்பது (நீங்கள் கூறியது போல்) மேற்கத்திய கலாச்சாரம் (மட்டும்) அல்ல. அது அனைத்துலக கலாச்சாரம்.

//ஆனால் இந்த எலக்ட்ரா கம்ப்ளக்ஸும், எடிபஸ் காம்ப்ளக்ஸும் மேற்கத்திய கலாசாரத்து விஷயங்களே தவிர இந்திய கலசாரத்துக்கு அந்த காலத்தில் ஒத்து வந்து இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்களா?//

கண்டிப்பாக இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் பூராவும், அந்த காலம் மட்டுமல்ல எல்லா காத்திலும் இருந்திருக்கும்

--
தன் தந்தையை போலுள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதும், தன் தாயைப்போலுள்ள பெண்களை ஆண்கள் விரும்புவதும் மனித இயல்பு

--
நான் கூறியது - நந்தினி, வீரபாண்டியனை தன் தந்தை என்று அறியாமல் காதலித்திருக்க வேண்டும் என்று தானே தவிர அறிந்து காதலித்தாள் என்று அல்ல
--
அறிந்த காதலித்தால் அதன் பெயர் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் அல்ல - இன்செஸ்ட் - INCEST :) :) :)

இரண்டிற்கும் நிறைய வேறுபாடு
--
என் தந்தையை போல் ஒரு மாப்பிள்ளை வேண்டும் என்பது தான் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ்
--
என் தந்தையை கல்யாணம் செய்து கொள்வேன் என்பது இன்செஸ்ட்
--
மேலும் அந்த காலத்தில் 40 வயது ஆணும் 18 வயது பெண்ணும் காதலிப்பது தவறில்லையே
--

நந்தினி தன் தந்தை என்று தெரிந்தும் வீரபாண்டியரை காதலித்தாள் என்று வாதிட்டால் அதை நானே ஏற்றுக்கொள்ள மாட்டேன்

நான் கூற வந்தது வேறு :) :)

அதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் புரிந்து கொள்ளாமல் எழுதியது தான் Sunday, December 14, 2008 3:52:00 PM எழுதிய மறுமொழி

@ தமிழ்பிரியன்

உங்கள் வலைதள சுட்டிக்கு நன்றி. மேற்கோள்களுடன் கூடிய உங்கள் பதிவுகள் நன்றாக இருந்தது - நன்றி

@ புருனோ

நந்தினி வீரபாண்டியன் தன் தந்தை என்று தெரிந்து காதலித்தால் என்று நான் எங்கேயும் சொல்லவில்லை.

அவள் காதலித்த வீரபாண்டியனும் - பெரிய பழுவேட்டரையர் "நந்தினி வீரபாண்டியனின் மகள்" என்று குறிப்பிடும் போது சொல்லும் வீரபாண்டியனும் வெவ்வேறு ஆசாமிகளாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

மேற்கூறிய இரண்டுமே என்னுடைய வாதங்களுக்கு அடிப்படை.

இப்போது நீங்களும் நானும் முரண்படும் இரண்டு விஷயங்களை பற்றி விவாதிக்கலாம்.

1) முதலில் INCESTக்கும் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் சமாச்சாரத்தையும் கையில் எடுத்துக் கொள்வோம்.

எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்பது பெண் தன் தந்தையின் மீது கொள்ளும் காதல் என்பது என் புரிதல்.

விக்கிபீடியாவின் விளக்கம்.
The Electra complex (colloquially Daddy issues or the Bernfeld factor) is the psychoanalytic theory that a female's psycho-sexual development involves a sexual attachment to their father, and is analogous to a boy's attachment to his mother that forms the basis of the Oedipus complex.

Psycology.about.com எலக்ட்ரா காம்ப்ளெக்ஸுக்கு கொடுக்கும் விளக்கம்
A psychoanalytic term used to describe a girl’s romantic feelings toward her father

INCEST - என்பது ஒரு அதை விட பெரிய செட். நெருங்கிய சொந்தங்களுக்கு (சமுகத்தால் பொருந்தா காமம் என்று சித்தரிக்கப்படும் உறவு நிலைகளுக்குள்) இடையில் ஏற்படும் உடலுறவே INCEST. சித்தப்பா தன் அண்ணன் மகளுடன் கொள்ளும் உடலுறவு, தங்கை தன் அண்ணனுடன் etc etc

நீங்கள் சொல்வது போல "தந்தைப் போல கணவன்" என்று சொல்லும் போது அது இயற்கை தான். ஆனால் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த "தந்தையைப் போல" அல்ல - அதற்கும் அடுத்த நிலை. அதனாலேயே அது complex.


இந்த வாதம் தவறு என்றால் அதை நான் ஏற்றுக்கொண்டு என்னை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். தகுந்த literature கொண்டு மேற்கோள் காட்டவும். (யார் கண்டது ஒரு வேளை நீங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், தவறான புரிதல் கொண்ட பல பேர் தெளியலாம்)

2) மேற்கத்திய சமாச்சாரம் என்ற விவாத நிலைக்கு வருவோம். நாம் பேசும் போது பயன்படுத்தும் எந்த விதமான காம்ப்ளெக்ஸுமே மனித மனதின் ஆழ் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என்று ஏற்றுக்கொள்ளும் போது அந்த காம்ப்ளெக்ஸ்கள் உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் தோன்றியிருக்க கூடும் என்று நானும் ஏற்றுக் கொள்கிறேன், இந்தியா உட்பட, ஏன் தமிழ்நாட்டில், தஞ்சாவூரில் கூட.

அப்படி இருக்க அந்த காம்ப்ளெக்ஸ்களை நான் மேற்கத்திய சமாச்சாரம் என்று நான் கூறியதற்கு காரணம் உண்டு.
மேலை நாட்டு கலாசாரங்களைப் போலல்லாமல், தமிழ் நாட்டு கலாசாரம் மிகவும் கட்டுப்பாடு மிகுந்ததாகவும், பொருந்தாக் காமத்தை வகைப்படுத்தி அவற்றை ஒதுக்கி வைத்ததாகவும் இருந்த படியால் மேலை நாடுகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில் (இந்தியாவில்) கூட எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ்கள் தோன்றியிருக்க சாத்தியம் குறைவு. இதன் அடிப்படையிலேயே நான் இந்த பதிவு முழுவதும் பேசி வருகிறேன்.

பிகு: நல்லதொரு விவாததத்திற்கு நன்றி

//அப்படி இருக்க அந்த காம்ப்ளெக்ஸ்களை நான் மேற்கத்திய சமாச்சாரம் என்று நான் கூறியதற்கு காரணம் உண்டு.
மேலை நாட்டு கலாசாரங்களைப் போலல்லாமல், தமிழ் நாட்டு கலாசாரம் மிகவும் கட்டுப்பாடு மிகுந்ததாகவும், பொருந்தாக் காமத்தை வகைப்படுத்தி அவற்றை ஒதுக்கி வைத்ததாகவும் இருந்த படியால் மேலை நாடுகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில் (இந்தியாவில்) கூட எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ்கள் தோன்றியிருக்க சாத்தியம் குறைவு. இதன் அடிப்படையிலேயே நான் இந்த பதிவு முழுவதும் பேசி வருகிறேன்.//

ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ், எலக்ட்ரா காம்பெக்ஸ் என்பது வேறு. நீங்களே மேற்கோள் காட்டியது போல் அது girl’s romantic feelings toward her father அல்லது female's psycho-sexual development involves a sexual attachment to their father

இது தானாக தோன்றி, தானாக மறையும் ஒரு நிகழ்வு.

அப்படி இல்லாமல் அது காலம் முழுவதும் தொடர்ந்தால் அது பெருந்திணை என்று வந்து விடும்.

--

//எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்பது பெண் தன் தந்தையின் மீது கொள்ளும் காதல் என்பது என் புரிதல்.//

உங்கள் புரிதல் தவறு

எலக்டரா காம்ப்ளெக்ஸ் என்பது ஒரு பெண் தன் தந்தையின் பால் ஈர்க்கப்படுவது.

காதல் கொண்டால் அது பெருந்தினை - incest

//INCEST - என்பது ஒரு அதை விட பெரிய செட். நெருங்கிய சொந்தங்களுக்கு (சமுகத்தால் பொருந்தா காமம் என்று சித்தரிக்கப்படும் உறவு நிலைகளுக்குள்) இடையில் ஏற்படும் உடலுறவே INCEST. சித்தப்பா தன் அண்ணன் மகளுடன் கொள்ளும் உடலுறவு, தங்கை தன் அண்ணனுடன் etc etc//
தந்தை மகள் உறவு கூட incest தான்

//நீங்கள் சொல்வது போல "தந்தைப் போல கணவன்" என்று சொல்லும் போது அது இயற்கை தான்.//

// ஆனால் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் இந்த "தந்தையைப் போல" அல்ல - அதற்கும் அடுத்த நிலை.//

இது உங்களின் தவறான புரிதல்

//அதனாலேயே அது complex.//
இதுவும் உங்களின் தவறான புரிதல்

//இந்த வாதம் தவறு என்றால் அதை நான் ஏற்றுக்கொண்டு என்னை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். தகுந்த literature கொண்டு மேற்கோள் காட்டவும்.//

நீங்கள் காட்டிய literatureயே சரிதான். நீங்கள் புரிந்து கொண்டது தான் தவறு :)

மேலும் அறிந்து கொள்ள kaplan and Saddock படிக்கலாம்.

அல்லது Bhatia Essentials of Psychiatry 4th Edition பக்கங்கள் 36.2 மற்றும் 36.3 பாருங்கள் (இந்த புத்தகம் என்னிடம் உள்ளது)

அதே போல் Neeraj Ahujaவின் A short textbook of Psychiatry 4th Edition பக்கம் 194ல் தெளிவாக தரப்பட்டுள்ளது. இந்த புத்தகமும் என்னிடம் உள்ளது.

// (யார் கண்டது ஒரு வேளை நீங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், தவறான புரிதல் கொண்ட பல பேர் தெளியலாம்)//
நான் சரியாக எழுதியுள்ளதால் அனைவரும் தெளிவு பெற்றுக்கொள்ளவும் :) :)

Freudன் Psychosexual stages of developmentல் 5 நிலைகள் உண்டு

1. Oral Phase - Birth to 1-1 1/2 years

2. Anal Phase - 1- 1 1/2 years to 3 years

3. Phallic Phase - 3 to 5 years

4. Latency Phase - 5 to 6 years

5. Genital Phase - 12 years onwards

அய்யா - உடலுறவு கொள்ளுதலே incest இல்லையா

உடலுறவு இல்லாமல் தந்தையின் மீது கொள்ளும் காதல் எப்படி பெருந்திணை (INCEST) ஆக முடியும்.

மற்றும், தவறான புரிதல் என்று நிறுத்தாமல் ஐயம் திரிபுர விளக்குதல் டாக்டரின் கடமை இல்லையா ?

இதில் மூன்றாவதாக உள்ள phallic phaseல் 3 முதல் 5 வயதிற்கும் அனைத்து (அதாவது மன வளர்ச்சி சரியாக உள்ள அனைத்து) ஆண் குழந்தைகளுக்கும் தோன்றுவது தான் oedipal complex.

அதே போல் அனைத்து (அதாவது மன வளர்ச்சி சரியாக உள்ள அனைத்து) பெண் குழந்தைகளுக்கும் தோன்றுவது தான் electra complex.

--

இப்படி தோன்றுவது தவறில்லை (தோன்றாவிட்டால் தான் தவறு !!!)

--

ஆனால் இந்த சிந்தனை (அதாவது complex) என்பது phallic phaseக்கு அடுத்த லேட்டன்சி phaseல் மறைய வேண்டும்

--

அப்படி மறையாவிட்டால் பிரச்சனை

--

லேட்டன்சி phaseக்கு அடுத்த ஜெனிடல் phaseல் தந்தை மேல் காதல் வந்தால் அது incest - பெருந்திணை - பொருந்தாத காமம் - புரிகிறதா

--

சந்தேகம் என்றால் கேட்கவும்

--

அல்லது நான் கூறிய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ளலாம்

//அய்யா - உடலுறவு கொள்ளுதலே incest இல்லையா//

உடலுறவு என்ற சொல் இங்கு பொருத்தல் அல்ல

தமிழில் உடலுறவு என்றால் அது intercourseஐ குறிக்க பயன் படுகிறது. ஆனால் incest குறித்த definition - Incest refers to any sexual activity between closely related persons (often within the immediate family) that is illegal or socially taboo.

இதில் குறிப்பிடப்படும் sexual activity என்பதை உடலுறவு என்று மொழி பெயர்ப்பது தவறு


//உடலுறவு இல்லாமல் தந்தையின் மீது கொள்ளும் காதல் எப்படி பெருந்திணை (INCEST) ஆக முடியும்.//

அது தான் சார் definition.

//மற்றும், தவறான புரிதல் என்று நிறுத்தாமல் ஐயம் திரிபுர விளக்குதல் டாக்டரின் கடமை இல்லையா ?//
விளக்கியதில் என்ன சந்தேகம்

இப்பொழுது நாம் முரண் படும் இரு விஷயங்களுக்கு வருவோம்

//அப்படி இருக்க அந்த காம்ப்ளெக்ஸ்களை நான் மேற்கத்திய சமாச்சாரம் என்று நான் கூறியதற்கு காரணம் உண்டு.
மேலை நாட்டு கலாசாரங்களைப் போலல்லாமல், தமிழ் நாட்டு கலாசாரம் மிகவும் கட்டுப்பாடு மிகுந்ததாகவும், பொருந்தாக் காமத்தை வகைப்படுத்தி அவற்றை ஒதுக்கி வைத்ததாகவும் இருந்த படியால் மேலை நாடுகளைக் காட்டிலும் தமிழ்நாட்டில் (இந்தியாவில்) கூட எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ்கள் தோன்றியிருக்க சாத்தியம் குறைவு.//

நந்தினிக்கு வீரபாண்டியன் தன் தந்தை என்று தெரிந்தால் மட்டுமே நீங்கள் கூறும் ”தமிழ் நாட்டு கலாசாரம் மிகவும் கட்டுப்பாடு மிகுந்ததாகவும், பொருந்தாக் காமத்தை வகைப்படுத்தி அவற்றை ஒதுக்கி வைத்ததாகவும் ” பொருந்தும். அப்படி தெரியாத பட்சத்தில் உங்கள் கூற்று பொருந்தாது.

-

அப்படி தெரியாத பட்சத்தில் அவர்களின் காதலுக்கு இருந்திருக்கக்கூடிய தடை என்று பார்த்தால்

1. பகை நாட்டு அரசன்
2. வயது வித்தியாசம்

ஆனால் அன்றைய காலகட்டத்தில் 40 வயது ஆணும் 18 வயது பெண்ணும் காதலிப்பது தப்பில்லை என்று நினைக்கிறேன்

இப்போது நீங்களும் நானும் முரண்படும் இரண்டாவது விஷயமான எலெக்ட்ரா காம்ப்லெக்ஸ் குறித்த உங்கள் தவறான புரிதல் சரியாகி இருக்கும் என்றே நினைக்கிறேன்.

முக்கிய விஷயம் : மேலே அளித்த விளக்கங்கள் / ஆதாரங்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்த மட்டுமே

எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் சரி என்று நிருபித்ததால் நான் கூறிய படி தான் பொன்னியின் செல்வன் இருக்க வேண்டும் என்று இல்லை :) :)

நாவல் குறித்த விவாதங்களை தொடரலாம்

டாக்டர், மீண்டும் அதே கதைக்கு வந்து விட்டார். டாக்டர் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படித்து இந்த மாதிரி சொல்கின்றார் என்று நினைக்கிறேன்... ;))

நந்தினி என்ற கதாபாத்திரமே கற்பனையாகப் புனையப்பட்டது எனும் போது, பொன்னியின் செல்வனின் பர்வையிலேயே நமது கருத்துக்களைத் தர வேண்டும். அந்த காலங்களில் incest போன்றவை நமது கலாச்சாரத்திற்கு மிகவும் தூரமானவை.

மேலும் நந்தினி வரும் காட்சிகளில், எல்லா விடயங்களும் தெளிவாக வீர பாண்டியனையே காதலன்/கணவன் என்றே குறிக்கின்றன. வீர பாண்டியனின் மகள் நந்தினி என்பதற்கு பொன்னியின் செல்வனில் எந்த ஆதாராமும் இல்லை.

மனோத்துவ ரீதியாக தந்தையின் மீது ஈர்ப்பு வர சாத்தியங்கள் இருந்தாலும், பொன்னியின் செல்வனின் கதை ஓட்டத்தில் எங்குமே வீர பாண்டியனின் மகள் நந்தினி என்பதற்கு ஆதாரம் இல்லை.

பழுவேட்டரையர் சொல்வதை நம்ப முடியாது என்பதற்கு பல காரணங்களை என் பதிவில் தந்துள்ளேன்.

//அந்த காலங்களில் incest போன்றவை நமது கலாச்சாரத்திற்கு மிகவும் தூரமானவை.//
அது incest இல்லை என்று தெளிவாக விளக்கிய பின்னரும் நீங்கள் incest என்று கூறுவது ஏன் என்றே புரியவில்லை

//மேலும் நந்தினி வரும் காட்சிகளில், எல்லா விடயங்களும் தெளிவாக வீர பாண்டியனையே காதலன்/கணவன் என்றே குறிக்கின்றன//
அப்படியா. அப்படியென்றால் பிரச்சனையே இல்லையே ???

//வீர பாண்டியனின் மகள் நந்தினி என்பதற்கு பொன்னியின் செல்வனில் எந்த ஆதாராமும் இல்லை.//

அப்படியா ?? !! அப்படியென்றால் ஏன் இந்த விவாதம் ....

//டாக்டர், மீண்டும் அதே கதைக்கு வந்து விட்டார். டாக்டர் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படித்து இந்த மாதிரி சொல்கின்றார் என்று நினைக்கிறேன்... ;))//

இது மாதிரி சொல்வதற்கு படிக்க வேண்டியது ஆங்கில புத்தகங்கள் அல்ல, பொன்னியின் செல்வன் தான்.

//பொன்னியின் செல்வனின் கதை ஓட்டத்தில் எங்குமே வீர பாண்டியனின் மகள் நந்தினி என்பதற்கு ஆதாரம் இல்லை.//
அப்பாடா ஒரு பெரிய பிரச்சனையை தீர்த்ததற்கு நன்றி :)

ப்ராய்ட்-இன் தியரி குறித்த குறிப்புகளுக்கு நன்றி.

மற்றபடி - உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை. All that we can do at this point of time is "Lets agree to disagree".
இழையில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. பிறிதொரு சமயத்தில் இந்த தலைப்பில் விவாதிக்க தலைப்படும் போது டாக்டரின் கோணமும், குறிப்புகளும் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் பிரியன் - உங்கள் வலைபதிவில் இது குறித்து மேலும் (உங்கள் பாணியில் மேற்கோள்களோடு) எழுதினால் சுட்டியை இங்கு இடவும்.

SUREஷ் said...

வெற்றிகரமாக நந்தினி மேட்டரை முடித்து விட்டீர்கள். நன்றி. இப்போது நான் கேட்கும் கேள்விகளுக்கு வாருங்கள்.


ஆதித்ய கரிகாலனை பொ.செ. குந்தவை கூட்டணியே முடித்திருந்தால்..........{இறப்பு என்றில்லை.. நந்தினி மேட்டரை உபயோகப்படுத்தி அவரை சாமியாராக்கி இருந்தால்... அவர்தான் கொஞ்சம் டென்சன் பார்ட்டி ஆச்சே...)


தம்மேல் சந்தேகம் வராமல் இருக்க சேந்தன் அமுதனை பினாமி மன்னன் ஆக்கியிருந்தால்...........
(சேந்தன் அமுதன் உண்மையாகவோ கற்பனையகவோ இருக்கட்டும்)

மகாபாரததில் முன்னாள் மன்னன்(பாண்டு)வின் பிள்ளைகள் பதவிக்கு ஆசைப் படுவதற்கும்
இங்கே உத்தம சோழன் ஆசைப் படுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா..........

SUREஷ் said...

மகாபாரத்தில் பாண்டுவின் மைந்தர்கள் ஆட்சியில் பங்கு கேட்டதால் வந்த பெரும் பிரச்சனைகளை மனதில் கொண்டு செம்பியன் மாதேவி தன் மகனை சிவச் செல்வனாக வளர்த்திருக்கலாம். ஆனால் சொத்து மற்றும் திருமணம் ஆகிய கடமைகளை சரியாக செய்திருப்பதை நீங்கள் காண்லாம்

ஆகா...கிளம்பிடாங்கய்யா, கிளம்பிட்டாங்க (2nd innings-ஆ) :-)

பொ செ கூட்டணி "கொன்றிருக்கலாம்" என்று சொல்கிறீர்கள ? ஏனென்றால் சாமியார் ஆவதற்கு வாய்ப்பே இல்லை, சார் - ஏனென்றால் அவரின் சவத்தை எடுத்து வந்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அப்படி கொன்றிருக்கலாம் (ஆனால் யாரை வைத்து ?) - அதை யாருக்கும் தெரியாமல் மறைத்தும் இருக்கலாம் (5% why not category தான்). இதை சுற்றி ஒரு premise உருவாக்க முடிந்தால் சுவாரஸ்யமாக இருக்கும். அதையும் பொன்னியின் செல்வனில் இருக்கும் சம்பவங்களை வைத்து fool proof-ஆக செய்ய முடிந்தால் செய்யுங்களேன். விவாதிக்க நன்றாக இருக்கும்.

SUREஷ் said...

சரித்திரத்தில் ஒரே ஒரு சாட்சிதான் இருப்பதாக கல்கி கூறுகிறார்.
விண்ணுலகம் பார்க்கும் ஆசையில் மண்ணுலகம் நீத்த ஆதித்தர் என்று ஒரே ஒரு ஆவணம் மட்டுமே இருப்பதாக....


மற்றவர்களுக்கு இருக்கும் சமாதி இத்தனை சரித்திரபுகழ்பெற்ற வெற்றீகொண்ட வீரனுக்கு இல்லை. அவன் இறந்ததற்கு ஒரு ஒப்பாரி பாடல்கூட இல்லை.

வீரபாண்டியன் தலையை கொய்தவனை பழிவாங்கியதை புகழ்பாடும் பாடல்களும் இல்லை.


ஆதித்யன் மறைந்தான் அவ்வளவுதான்
கதையோட்டத்துக்கு கல்கி செய்த வர்ணனைகளில் அதுவும் ஒன்றாக ஏன் இருக்க கூடாது.

நமக்கு பல சரித்திர சாட்சியங்கள் கிடைக்காமல் போயிருக்கின்றன. அந்த வகையில் ஆதித்த கரிகாலன் சார்ந்த ஆவணங்களும். பல அரசர்களின் இருத்தலுக்கு ஆதாரமாக அவர்கள் கட்டிய கோயில்களும் அந்த கோயில்களில் வடிக்கப்பட்ட கல்வெட்டுகளும் இருந்திருக்கின்றன - ராஜராஜனுக்கு பெரிய கோயில் போல.

காஞ்சியில் ஆதித்த கரிகாலன் செய்த பொன் மாளிகை இன்றைய தேதியில் எந்த இடத்தில் இருந்திருக்கக் கூடும்? ஒரு வேளை ஆதித்த கரிகாலன் கட்டிய கோயில்களோ பிற கட்டிடங்களோ கண்டுபிடிக்கப்பட்டால் நமக்கு சில் சரித்திர சான்றுகள் கிடைக்கலாம்

எதை வர்ணனை என்று சொல்கிறீர்கள் - ஆதித்தன் இருந்ததையேயாவா ?

SUREஷ் said...

//எதை வர்ணனை என்று சொல்கிறீர்கள் - ஆதித்தன் இருந்ததையேயாவா ?//


அனைத்து சரித்திர நாவல்களுமே கிடைத்த துவக்கம், முடிவு மற்றும் சில சம்பவங்களை வைத்து நாவல் ஆசிரியர் உணர்வுகளின் வெளீப்பாடுதான். அதிகபட்ச உண்மை, தெளிவான சிந்தனை, வெளிப்படுத்தும் உறுதியான உத்தி மற்றும் எழுத்து வன்மை வெற்றி பெறுகிறது.


சில நேரங்களில் 23ம் புலிகேசியின் ஓவியத்தையும் நாம் நம்ப வேண்டிய சூழ்நிலைகளும் உண்டு. எது உண்மை எது 23ம் புலிகேசியின் ஓவியம் போன்றது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ???/

SUREஷ் said...

கல்கியின் கூற்றுப்படியே ஆதித்யன் கடம்பூர் மளிகையில் இறந்ததை ஒத்துக் கொண்டாலும் அவரே இவர்தான் கொன்றார் என உறுதிபட கூற தயங்கிவிட்டார். மற்ற செய்திகளை பேசிக்கொள்வதாகவே காட்டுகிறார்.


அதனால் வாய்ப்பு ஏன் இல்லை?

தொடங்கும்போது ஒரு எண்ண்த்தில் தொடங்கியவர் முடிக்கும்போது மாறி இருக்க ஏன் வாய்ப்பு இல்லை..

அந்தத் தொடர் பல ஆண்டுகள் வந்தது. மெகா சீரியல்களில் கதையின் போக்கு மாறுவது போல் மாறியிருக்க ஏன் வாய்ப்பில்லை?

SUREஷ் said...

வந்திய தேவனை சமாதான தூதுவனாகக் கூட அனுப்பி இருக்கலாம் அல்லவா......
அவர் பின்னாளில் குந்தவையின் ஆதரவாளராக மாறியிருக்கலாம்
அல்லவா.......

இதில் தூதன் என்பதை சமாதான தூதன் என மாற்றியது மட்டுமே நான். மற்றவை கல்கி.......

சரி - ஆதித்தனை யார் கொன்றது என்பது பிற கதாபாத்திரங்களைக் கொண்டு தான் நாம் அறிகிறோம் - அதனாலே தான் உங்கள் தியரியை நான் why not என்ற விகிதத்தில் ஏற்றுக் கொள்வதாகவே சொன்னேன்.

நான் வாய்ப்பு இல்லை என்று சொன்னது - ஆதித்தன் சாமியாராகியிருக்க வாய்ப்பு இல்லை என்று தான் - இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று தான்.

மேலும், நான் பொன்னியின் செல்வனின் காட்சிகளின் வரைமுறைக்கு வெளியே உரையாடலையும் கற்பனையும் விரித்தால் அது எல்லையில்லாத ifs and buts ஆகிவிடும். அதனால் இருக்கும் காட்சிகளுக்குள், நமது விவாதத்தை நிறுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் எழுதியதில் எனக்கு சில விஷயங்கள் எதை குறித்து சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

// தொடங்கும்போது ஒரு எண்ண்த்தில் தொடங்கியவர் முடிக்கும்போது மாறி இருக்க ஏன் வாய்ப்பு இல்லை..
என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை

//தொடங்கும்போது ஒரு எண்ண்த்தில் தொடங்கியவர் முடிக்கும்போது மாறி இருக்க ஏன் வாய்ப்பு இல்லை..
யாருக்கு சமாதான தூது ?

இந்த இழையை பின்பற்றும் என் நண்பன் ஒருவன் நான் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸை ஒத்துக்கொள்லாததன் காரணத்தைக் கேட்டார் - அதை நான் வலைபதிவில் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். புருனோவின் கடைசி பத்தியைக் கொண்டு அவருக்கு அளித்த விளக்கம் இங்கே (for records).

[புருனோ] நந்தினிக்கு வீரபாண்டியன் தன் தந்தை என்று தெரிந்தால் மட்டுமே நீங்கள் கூறும் ”தமிழ் நாட்டு கலாசாரம் மிகவும் கட்டுப்பாடு மிகுந்ததாகவும், பொருந்தாக் காமத்தை வகைப்படுத்தி அவற்றை ஒதுக்கி வைத்ததாகவும் ” பொருந்தும். அப்படி தெரியாத பட்சத்தில் உங்கள் கூற்று பொருந்தாது. [/புருனோ].

நந்தினியின் தகப்பன் வீரபாண்டியன் என்று தெரிந்த option-இல் சமுக காரணங்களையும் சூழலையும் காரணம் காட்டி எலக்ட்ரா காம்ப்ளெக்ஸை மறுக்கிறேன். பழந்தமிழகத்தில் இருந்த கலாசாரத்தில் இது தோன்றியிருக்க வாய்ப்பு மிகவும் கம்மி என்பது என் எண்ணம்.ஒருவேளை பிற இலக்கியங்களில் இது போன்ற சம்பவத்தின் சாட்சிகளோ, கதைகளோ கிடைத்தால் இது குறித்து மேலும் அலசலாம்.

-

[புருனோ] அப்படி தெரியாத பட்சத்தில் அவர்களின் காதலுக்கு இருந்திருக்கக்கூடிய தடை என்று பார்த்தால்

1. பகை நாட்டு அரசன்
2. வயது வித்தியாசம் [/புருனோ]

நந்தினியின் தகப்பன் வீரபாண்டியன் தான் என்று நந்தினிக்கே தெரியாத பட்சத்தில் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸிற்கே இடமில்லையே. அப்பா பிம்பம் இல்லாத போது எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் தோன்றாதில்லையா. அப்படியே கொண்டாலும், நந்தினியை வளர்த்த பட்டர் தான் அவள் அப்பா - எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் கொண்டாலும் பட்டர் போன்ற ஒரு ஆசாமி மீது தான் கொள்ள வேண்டும்.

இது தான் என் காரணம்.

நானே எதிர்பாராத அளவு இந்த இழையில் நான் நேரம் கழிக்க நேர்ந்து விட்டது. எனக்கு சுவாரஸ்யமான விவாதத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சியே. ஆனால் காலம் கருதி என்னுடைய பங்கேற்பை நான் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பிறர் பங்கேற்பின் அதற்கு இந்த வலைதளத்தளம் களமாக செயல்படட்டும். தனி நபர் தாக்குதலோ, இனம்/ ஜாதி சார்ந்த தாக்குதலோ, abusive language பயன்படுத்தும் பின்னூட்டங்களை நான் இந்த தளத்தில் இடம்பெற அனுமதிக்க இயலாது.

//நந்தினியின் தகப்பன் வீரபாண்டியன் என்று தெரிந்த option-இல் சமுக காரணங்களையும் சூழலையும் காரணம் காட்டி எலக்ட்ரா காம்ப்ளெக்ஸை மறுக்கிறேன்.//

ஐயா ,

நந்தினிக்கு வீரபாண்டியன் தன் தந்தை என்று தெரிந்திருந்தும் காதலித்தால் அது பொருந்தாக் காதல்

நான் அப்படி கூறவில்லை

நான் தெளிவாகவே கூறியுள்ளேன். மறுபடியும் வாசித்து பாருங்கள்

அறிந்த காதலித்தால் அதன் பெயர் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் அல்ல - இன்செஸ்ட் - INCEST :) :) :)

--

//நந்தினியின் தகப்பன் வீரபாண்டியன் தான் என்று நந்தினிக்கே தெரியாத பட்சத்தில் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸிற்கே இடமில்லையே.//

இல்லை உங்கள் வாதம் தவறு
உங்களது வாதத்தை தகவல்களில் அடிப்படையில் அல்லாமல் உங்களது தவறான ஊகத்தின் அடிப்படையில் கட்டமைக்கிறீர்கள்

தனது தந்தையை அவள் அறியாமல் இருந்தாலும், தன் தந்தையின் பிம்பம் போலிருக்கு ஒரு ஆண் மகனின் மீது காதல் கொள்வது எலக்ட்ரா காம்பளஸ். ஈடிபசின் கதையை வாசித்து பாருங்கள். உங்களுக்கு புரியும். As Oedipus travels he comes to the place where three roads meet, Daulia. Here he encounters a chariot, driven by his (unrecognised) birth-father, King Laius. They fight over who has the right to go first and Oedipus kills Laius in self defense, unwittingly fulfilling part of the prophecy.


//அப்பா பிம்பம் இல்லாத போது எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் தோன்றாதில்லையா.//

கண்டிப்பாக தோன்றும். அதன் பேர் தான் எலக்ட்ரா காம்பெக்ஸ்

உங்கள் ஊகம் முற்றிலும் தவறு.

// அப்படியே கொண்டாலும், நந்தினியை வளர்த்த பட்டர் தான் அவள் அப்பா - எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் கொண்டாலும் பட்டர் போன்ற ஒரு ஆசாமி மீது தான் கொள்ள வேண்டும். //

இல்லை
இது பிறப்பால் வருவது

வளர்ப்பால் வருவது அல்ல

உங்களுக்கு கற்பனை சக்தி அதிகம் :) :) அதை வைத்து கதை எழுதலாம். உங்கள் கற்பனையில் தோன்றிய கருத்துக்களை வைத்து அறிவியல் கோட்பாடுகளை நிருபிக்க முடியாதல்லவா - அதுவும் உங்கள் வாதத்திற்கு எதிராகவே அனைத்து ஆதாரங்களும் இருக்கும் போது

ஈடிபஸ் தன்னை வளர்த்த தந்தையை கொல்ல வில்லை. தன்னை பெற்ற தந்தையை கொன்றான் என்பதை கணக்கில் கொள்ளுங்கள்

//இது தான் என் காரணம்.//
ஈடிபஸ் தன்னை வளர்த்த தந்தையை கொல்ல வில்லை. தன்னை பெற்ற தந்தையை கொன்றான் என்பதை கணக்கில் கொள்ளுங்கள்

இது தான் உங்கள் காரணம் தவறு என்ற என் வாதத்திற்கு காரணம்

//நானே எதிர்பாராத அளவு இந்த இழையில் நான் நேரம் கழிக்க நேர்ந்து விட்டது. எனக்கு சுவாரஸ்யமான விவாதத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சியே. ஆனால் காலம் கருதி என்னுடைய பங்கேற்பை நான் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பிறர் பங்கேற்பின் அதற்கு இந்த வலைதளத்தளம் களமாக செயல்படட்டும். தனி நபர் தாக்குதலோ, இனம்/ ஜாதி சார்ந்த தாக்குதலோ, abusive language பயன்படுத்தும் பின்னூட்டங்களை நான் இந்த தளத்தில் இடம்பெற அனுமதிக்க இயலாது.//

உங்கள் கருத்துக்களை தவறென்று கூறும் மறுமொழிகளை அனுமதியுங்கள் !!

Wednesday, December 17, 2008 12:33:00 AM

//// தொடங்கும்போது ஒரு எண்ண்த்தில் தொடங்கியவர் முடிக்கும்போது மாறி இருக்க ஏன் வாய்ப்பு இல்லை..
என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லைமிகவும் காலந்தாழ்ந்து பதில் தருவதற்கு மன்னிக்கவும். கதை தொடங்கியதுபோது அவர் கதாபாத்திரங்களைப் பற்றி ஒரு எண்ணத்துடன் ஆரம்பித்திருக்கலாம். தொடரும்போது அவருக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டிருக்கலாம் அல்லவா


=============================

////தொடங்கும்போது ஒரு எண்ண்த்தில் தொடங்கியவர் முடிக்கும்போது மாறி இருக்க ஏன் வாய்ப்பு இல்லை..
யாருக்கு சமாதான தூது ?//


சண்டைப் போட்டுக் கொண்டவர்களுக்கிடையே சமாதானப் படுத்த அனுப்பப் படும் தூது.

கதை ஆரம்பிக்கும் முன்னரே ஆதித்ய கரிகாலனுக்கும் குந்தவை அல்லது அருள்மொழிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து அதை களைவதற்காக அனுப்பப் பட்ட தூது

சகோதரர்களிடையே லேசான கருத்து வேறுபாடுகள் சாதாரணம் அல்லவா

Dr L Kailasam said...

அய்யா
என்னுடையை மலர்ச்சோலை மங்கையும் படியுங்களேன். தங்களது சந்தேக மேகங்கள் கொஞ்சமாவது விலகும்
அன்புள்ள
டாக்டர் எல். கைலாசம்

Dr L Kailasam said...

அய்யா
என்னுடையை மலர்ச்சோலை மங்கையும் படியுங்களேன். தங்களது சந்தேக மேகங்கள் கொஞ்சமாவது விலகும்
அன்புள்ள
டாக்டர் எல். கைலாசம்

Anonymous said...

உங்கள் எழுதும் அது குறித்த விவாதமும் மிக இனிமை. உங்கள் பதிவை எங்களுடைய வலைப்பூவில் மேற்கோள் காட்ட விழைகிறேன்.
piramu.blogspot.com

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman