Adsense

காசே தான் கடவுளடா


மிகப்பெரிய ரங்க ராட்டிணத்தில் ஏறி பயணம் செய்து கொண்டிருப்பது போலிருக்கிறது. எப்போது மேலே இருக்கிறோம் எப்போது கீழே இருக்கிறோம் Justify Fullஎன்று யாருக்கும் சரியாக தெரியவில்லை. உலக அளவில் நிறைய குழப்பங்கள். ஐஸ்லாந்து மொத்தமும் ஏறக்குறைய திவால் என்ற நிலை. ஐ ஐ எம் களில் படிப்பவர்கள் கனவு நிறுவனம் என்று கருதும் சில அமெரிக்க வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் குறிப்பிடும் போது இனிமேல் கடந்த காலத்திற்கான வினை சொல்லைத் தான் பயன் படுத்த வெண்டும். பல நிறுவனங்களை தொடர்ந்து லாபத்தில் நடத்த முடியாமல் மூடி விட்டார்கள். ஏ டி எம்களில் பணம் கிடைக்காது என்ற புரளி. பெரிய பெரிய பாம்புகள் நிறைந்த பரமபதம் ஒன்றை ஆடிக்கொண்டிருக்கிறது உலக பங்குச் சந்தைகள். அமெரிக்காவில் நிகழும் தற்கொலைகள். இதற்கு மத்தியில் ஏதோ வெள்ளைகாரர்கள் சமாசாரம் என்று நினைத்த இந்த பொருளாதார நெருக்கடி இந்தியாவை மெல்ல எட்டிப்பார்க்கிறது. சமிபத்தில் ஐரோப்பிய யூனியனின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனியும் இந்த பொருளாதார நெருக்கடியில் "உள்ளேன் ஐயா" சொல்லியிருக்கிறது.

உலகளவில் ஒரு மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவாவதற்கான எல்லா அறிகுறிகளையும் இந்தியா சென்ற நூற்றாண்டின் இறுதியிலிருந்தே காட்டி வந்திருக்கிறது. தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை இந்த பொருளாதாரம் எட்டிக்கொண்டிருந்தது. போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட 2008இன் உலக மிகப்பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 பேரில் நால்வர் இந்தியர்கள். இந்திய நிறுவனங்கள் வளர்ந்த நாடுகளில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய நிறுவனங்களை விழுங்கத் துவங்கியிருந்தன. இந்தியாவின் தோற்றமே கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது என்று சொன்னால் மிகையில்லை. "கடன் பட்டார் நெஞ்சம் போல்" என்று மரபிலேயே கடன் வாங்குதலை இழிவாக சித்தரித்து வைத்திருந்த இந்திய சமுகம் கடனட்டைகளையும் வங்கிக் கடன்களையும் சரமாரியாக ஏற்றுக்கொண்டது. சாலையோர துப்புரவு தொழிலாளி மொபைல் போனில் bluetooth வசதி இல்லாத போனை வாங்க இரண்டு முறை யோசித்தார். நுகரும் மனப்பான்மை சந்திராயன் போல ஆகாசத்தை நோக்கிப் பறந்தது. சமுகவியலாலர்கள் பார்வையில் சமுகத்தின் ஏற்றத்தாழ்வு சற்றே அதிகப்பட்டது. ஐ டி காரர்கள் என்று ஒரு புதிய ஜாதி தோன்றினார்கள். அவர்களிடம் ஒரு டஜன் வாழைப்பழத்தை 200 ரூபாய் என்றால் நாலு டாலர் தானே என்று வாங்குவார்கள் என்றே நிறைய பேர் நம்பினர். ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தே பலர் கோடிஸ்வரரானார்கள். பங்கு சந்தையில் IPOவில் listing gain மட்டுமே 30 - 40 % கிடைத்தன. இனிமேல் எதிர்காலம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை மிகப் பிரகாசமானது என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது, கடந்த சில மாதங்கள் வ்ரை.

உலகத்தின் மிகப்பெரிய consumer marketகளில் ஒன்று என்று வர்ணிக்கப்படும் இந்தியாவும் சீனாவும் மெல்ல மெல்ல இந்த பொருளாதார பின்னடைவின் விளைவுகளை எதிர் கொள்ளத் துவங்கியிருக்கின்றன. இந்திய தனியார் கம்பெனிகள் பலர் ஆட்குறைப்பு, ஆண்டு இறுதியில் வழங்கப்படும் போனஸ் நிறுத்தம், வார இறுதியில் யாரும் அலுவலகத்துக்கு வரவேண்டாம் என்ற கோரிக்கை, பணி நாட்களை குறைத்தல் என அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். கொஞ்ச நாட்கள் வரை இந்தியாவின் வளர்ச்சியை தடை செய்ததாக நேருவின் மீது குற்றம் சொன்ன சில பேர் சோஷலிசத்தை இப்போது பாராட்டுகிறார்கள். இந்தியா 1962 இல் முதலீட்டிற்கான காப்பீடு (deposit insurance) குறித்து யோசித்ததை மெச்சுகிறார்கள் (Deposit Insurance கொண்டு வந்த உலகின் இரண்டாவது நாடு இந்தியா). இப்போது பங்கு சந்தையைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது. முன்பைக் காட்டிலும் இப்போது நிறைய பேருக்கு ENOவும் Diegene-உம் தேவைப்படுகிறது. வேலையில்லாத அப்பாக்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனகுழப்பத்தைப் பற்றி நிறைய பேர் விவாதிக்கிறார்கள்/ வலை பதிவு/ வார மாத பத்திரிக்கைகளில் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். பல வருஷங்களுக்குப் பிறகு "கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசு" என்ற சொலவடைக்கு ஒரு மதிப்பு கிடைத்திருக்கிறது. கொஞ்சம் நிறைய படித்தவர்கள் இந்த பொருளாதார சிக்கல் 2009 இறுதி வரை முடிவுக்கு வராது என்று பயமுறுத்துகிறார்கள்.

ஒரு வட்டம் போல பணத்தோடு சம்பந்தப்பட்ட மனித வாழ்கை செயல்படுகிறது. வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது அதனால் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை/ சேவைகளை வாங்குகிறார்கள். அந்த பொருட்களை விற்கும் காசில் நிறுவனங்கள் சம்பளம் தருகின்றன. எல்லோருமே சம்பளத்துக்குட்பட்டு தேவைகளை நிறுத்தி விட்டால் வளர்ச்சி இருக்காது. அதனால் கடன் என்னும் ஒரு விஷயம் இந்த சங்கிலியில் இடை சொருகலாக வருகிறது, சம்பளத்துக்குப் பக்கத்தில். கடனும் ஒரு பொருளாக (product-ஆக) கருதப்படுகிறது. அதை தனியாக நிதி நிறுவனங்களும் வங்கிகளும் விற்பனை செய்கின்றன. இப்படி நிறைய மனிதர்கள். நிறைய நிறுவனங்கள். நிறைய பொருட்கள்/ சேவைகள். நிறைய விற்பனை. ஒன்றுக்கொன்று பின்னிப்பினைந்திருக்கின்றன. இந்த வட்டத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் லேசான சிக்கல் ஏற்பட்டாலும் இப்போது ஏற்பட்டிருப்பது போல பொருளாதார குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. இப்போது கடன் தன் பங்கை செய்திருக்கிறது. சில வளர்ந்த நாடுகள் அளவுக்கதிகமான கடன் கொடுத்து விட்டு அதை மீட்க முடியாமல் போனது இந்த வட்டத்தில் விரிசல் ஏற்பட முக்கிய காரணம். நிறுவனங்களுக்கு நஷடம் ஏற்பட்டால், வேலைக்கு ஆட்களை வைத்துக்கொள்ள முடியாமல் வீட்டுக்கு அனுப்ப வேண்டி வரும். அப்படி வந்தால் வருமான வரி மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய பணம் தட்டுப்படும். இதனால் அரசின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். வேலையும் பணமும் இல்லாத தனி மனிதன் அரசின் தயவும் கிடைக்கவில்லையென்றால் என்ன நிலைக்கு போவான் என்பது இந்தியர்களுக்கு விளக்க வேண்டிய தேவையில்லை.

நிறைய பேர் நினைப்பது போல் இந்த பொருளாதார குழப்பம் சேதாரத்தை மட்டுமே உண்டு பண்ணுவதாக எனக்குத் தோன்றவில்லை. பிரச்சனையின் போது தான் மக்களிடம் சிந்திக்கும் திறனும் செயல்பாடும் அதிகமாகும் என்பதை நாம் சுனாமி போன்ற எத்தனையோ சமயங்களில் பார்த்திருக்கிறோம். அதே போல இந்த முறையும் சில தவறுகளை திருத்திக் கொள்ள சரியான வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன். அதிக சம்பளம் என்ற வரைமுறையில் நிலையில்லாத பணி என்ற மிகப்பெரிய நிரந்திரமின்மையையும் அந்த நிரந்திரமின்மையை சட்டை செய்யாமல் அதிக கடன் கொடுத்து வந்த வங்கிகளும் நிறுவனங்களும் விழிக்கத் துவங்கியிருக்கின்றன. Personal Loans மட்டுப்பட்டிருக்கிறது. நிலையில்லாத பணியை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிகமாக உழைக்க வேண்டிய தனியார் பணியிட சூழ்நிலைகளை எதிர்த்து சங்கம் அமைக்க IT ஊழியர்கள் தலைப்பட்டிருக்கிறார்கள். ஒரு வேளை அந்த முயற்சி வெற்றி பெற்றால் சில சம நிலைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பல விழிப்புணர்வுகளை மக்களிடம் இந்த பொருளாதார குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக
- தடையற்ற வளர்ச்சி என்ற கற்பனா வாதம் பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது
- கண்டதையும் வாங்கிப் போடாமல் தேவையானதற்கு மட்டும் பணம் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது
- எதேனும் ஒரு இஞ்சினியரிங் கல்லூரிக்கு நான்கு வருடம் சென்று வந்தால் போதும். மூன்றாம் வருட இறுதியில் எதோ ஒரு ஐ டி கம்பெனி 15,000 சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும் என்ற for loop கூட சரியாக எழுதத் தெரியாத மாணவர்களின் நினைப்பில் மண் விழுந்திருக்கிறது
- பேரம் பேச வேண்டிய கட்டாயம் எல்லாருக்குமே ஏற்பட்டிருக்கிறது
- பங்கு சந்தை ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு கடிகாரத்தை திருப்பி வைத்ததைப் போன்ற விஷயம் இது
- ஆராய்ச்சியின் மீதும் மேல் படிப்பின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது
- Affordable Housing என்ற கோஷம் வலுப்பெற்றிருக்கிறது

இது போன்ற பொருளாதார நெருக்கடி யாருக்குமே விரும்பத்தகாதது தான். ஆனால் செயல்பாடுகளை சரியாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை நெருக்கடியைத் தவிர வேறு யாரால் ஏற்படுத்த முடியும். விரும்பியவைகளை செய்வதைக் காட்டிலும் சரியானவைகளை செய்வது வளர்ச்சிக்கு முக்கியமில்லையா ?
------------------
நன்றி - யுகமாயினி டிசம்பர் 2008

No response to “காசே தான் கடவுளடா”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman