Adsense

லா ஸ்ட்ராடா (The Road) *- 1954


நன்றாக மழை பொழிந்த ஒரு தினத்தில் தெருவெங்கும் தண்ணீர். அந்த மழை நீர் தேக்கத்தில் காகிதத்தில் கப்பல் செய்து விடத்துவங்கிய குழந்தைகள் அவர்கள் விட்ட கப்பல் ஒவ்வொன்றும் இதுவென நிர்ணயிக்கப்படாத துறைமுகத்தை சேரும் என ஸ்திரமாக நம்பியபடி கப்பல்களுக்கிடையே ரேஸ் விடத் துவங்கினர். ஒவ்வொரு கப்பலும் கவிழும் போது அவர்கள் அந்த கப்பல்கள் அதிகமாக அலை (!) அடித்ததனால் கவிழ்ந்ததாகவும் கத்திக் கப்பல் செய்தால் அந்த அலையை கிழித்துக்கொண்டு கப்பல் சீறிப்பாயும் என்றும் பேசிக்கொண்டனர். கத்திக்கப்பலும் சில தூரம் சென்ற பின் கவிந்து விடவே வேறு ஒரு வகையிலான கப்பல் செய்யத்தெரியாததால் அவர்கள் மழை நீரில் கால்களை நனைப்பதை மட்டுமே விளையாட்டாக்க மாற்றிக் கொண்டனர். பின்னர் மழை நீரை வாரி இறைப்பதை விளையாட்டாக கொண்டு மழையைக் கொண்டாடத்துவங்கினர்.

இந்த காட்சி ஒரு சராசரி மனிதனின் வாழ்விலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதில்லை. ஒரு வேளை இயற்கை சமரசம் செய்து கொள்ளும் மனப்பக்குவத்தை மனிதனுக்கு சிறுவயதிலேயே ஏற்படுத்திக் கொடுக்கவே இது போன்ற மழை விளையாட்டுகளை தோற்றுவித்திருக்கிறதோ. இது போன்ற சமரசம் செய்து கொள்ளாவிட்டால் நம்மில் எத்தனைப்பேர் சுய நினைவில் இன்று உலவிக்கொண்டிருக்க முடியும் - சமரசம் என்பது எல்லா நிலைகளிலும் தோன்றியே ஆக வேண்டிய கட்டாய சூழலில் சில சமயம் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் நட்பு கூட சில சமயம் கிடைப்பதில்லை.

ஃபெட்ரிகோ ஃபெலினி(1920-1993)-இன் லா ஸ்ட்ராடா என்னும் இத்தாலிய திரைப்படம் முன் வைக்கும் சில சிந்தனைகளில் இதுவும் ஒன்று. நகரம் நகரமாக சென்று வித்தைக் காட்டி அதன் மூலம் வரும் வருவாயில் பிழைப்பை ஓட்டும் மனிதன் "சம்பானோ". குடும்பம் நன்பர்கள் என்று யாருமில்லாத ஒரு வாழ்க்கை வாய்திருக்கிறது அவனுக்கு. வித்தை காட்டுதலும் அந்த பணத்தில் குடித்தலும் பார்க்கும் பெண்களிடம் சல்லாபிப்பதுமாக வாழ்வை நகர்த்துபவன். வித்தை நடக்கும் இடங்களில் கோமாளி வேடம் தரிக்கவும், இசை வாசிக்கவும் அவனுக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள். வறுமையில் வாடும் குடும்பத்திலிருந்து "கெல்சோமினா" வை அவள் தாயிடமிருந்து வாங்குகிறான், சம்பானோ. ஏற்கனவே தன் முதல் பெண்ணை அவனிடம் விற்று அவளது மரணத்திற்கு பிறகு தனது இரண்டாவது மகளையும் அவனிடமே விற்கிறாள், அந்த தாய். கெல்சோமினாவுக்கு தொழிலுக்குத் தேவையான ஆடல் பாடலையும் ட்ரம்பட் வாசிக்கவும் அவன் கற்றுத்தருகிறான். சம்பானோவிடம் எந்த ஒரு உணர்வு பரிமாற்றமும் இல்லாமல் இயந்திரத்தனமாகவே நகரும் அவர்கள் உறவின் சலிப்பு கெல்சோமினாவிற்கு தொற்றிக்கொள்கிறது. இருப்பினும் அவனிடமிருந்து விலகாமல் தனது வாழ்வின் பொருட்டு சமரசம் செய்து கொண்டு வாழ்கிறாள்.


கெல்சோமினாவை ஒரு சக மனுஷியாக பாவிக்காமல் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கும் மனம் படைத்த, உணர்வுகள் மரத்த சம்பானோவிடமிருந்து ஒரு கட்டத்தில் தப்பிக்கப் பார்க்கும் கெல்சோமினா, அந்தரத்தில் கயிறு கட்டி கழைக்கூத்தாடும் கோமாளியை சந்திக்கிறாள். அவனிடமிருந்து கெல்சோமினாவை மீட்டு தன் வசப்படுத்திக் கொள்கிறான் சம்பானோ. வேறொரு நகரத்தில் இருக்கும் ஒரு சர்க்கஸ் கூட்டத்தில் சேர முற்படும் சம்பானோவும் கெல்சோமினாவும் அந்த கூட்டத்தில் அதே கழைகூத்தாடியை சந்திக்கிறார்கள் - அந்த கழைக்கூத்தாடி கெல்சோமினாவுக்கு ஆறுதல் சொல்கிறான். அவள் சம்போனாவை விட்டு பிரியாதிருக்க வற்புறுத்துகிறான். அவளது காதல் சம்பானோவை சுற்றியதாக இருக்கிறது என்பதை அவள் நம்பும்படி சொல்கிறான். சம்பானோ அவனது காதலை வெளிப்படுத்த இயலாதவனாகவும் இருக்கிறான் எனவும் தேறுதல் சொல்கிறான். இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக வாழும்படி அறிவுரை கூறுகிறான். ஒரு கட்டத்தில் சம்பானோவுக்கும் கழைகூத்தாடிக்கும் இடையே ஏற்படும் வாய்சண்டை கைகலப்பாக மாறி இருவருமே சர்க்கஸிலிருந்து விலக்கப்படுகின்றனர். வெவ்வேறு பாதையில் பிரியும் இவர்கள் ஒரு சாலையில் மீண்டும் சந்திக்கின்றனர் - அப்போது ஏற்படும் சண்டையில் அந்த கழைகூத்தாடியை கொன்று விடுகிறான் சம்பானோ. அந்த சம்பவம் தீவிரமாக கெல்சோமினாவை பாதித்துவிட அவள் சித்தம் பிழற்ந்து விடுகிறாள். சித்தம் சுவாதினமில்லாத அவள் தூங்கும் போது அவள் அருகில் அவள் வாசிக்கும் ட்ரம்பெட்டையும், கொஞ்சம் பணமும் வைத்துவிட்டு, அவளை சுமையாக கருதி பிரிந்து விடுகிறான் சம்பானோ. பல வருடங்களுக்குப் பிறகு வேறு ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் வேலை செய்யும் சம்பானோ அங்கு துணி உலர்த்தும் ஒரு பெண், கெல்சோமினா இசைக்கும் ஒரு பாடலை முனுமுனுக்க அந்த பெண்ணிடம் அந்த இசையை அவள் எங்கிருந்து கற்றாள் என வினவுகிறான் சம்பானோ. சில காலம் முன் அந்த இடத்தில் இருந்த ஒரு பைத்தியக்காரி அந்தப் பாடலையே அவள் சாகும் வரை மீண்டும் மீண்டும் இசைத்ததாக சொல்கிறாள். செய்தியின் துக்கம் அவனைத் தாக்கி அந்த திடலில் நிற்பதற்கும் திராணியற்றவனாய் கீழே விழுந்து சம்பானோ அழுவதுடன் படம் முடிகிறது.

கெல்சோமினாவை மையமாகக் கொண்டு நகரும் இந்த திரைப்படத்தில் கதாபாத்திரங்களை மிகவும் நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார் ஃபெலினி. சம்பானோ என்ற அந்த கதாபாத்திரத்தின் பெயர், ரோமில் இயங்கிய சம்பர்லா மற்றும் சல்தானோ என்ற இரு சர்க்கஸ் கம்பெனிகளின் பெயர்களின் கலவை. சம்பானோவின் கதாபாத்திரம் ஒரு முரட்டு சுபாவம் கொண்ட, தன்னைப் பற்றிய சுயஅறிவற்ற அதே சமயம் ஆழத்தில் உணர்வுகளை தேக்கி இருக்கும் ஒரு கதாபாத்திரமாக படைத்திருக்கிறார். ஹாலிவுட் நடிகரான ஆண்டனி குன் (1915-2001) இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். கழைகூத்தாடி இறக்கும் போது தன் நிலையை விளக்க "நான் இரண்டு அடி தான் அடித்தேன். அவனைக் கொல்ல நினைக்கவில்லை" என்கிறான். அவனது குற்றவுணர்வு மேலோங்கும் மற்றொரு காட்சி இறுதி காட்சியாக அமைத்திருக்கிறார் ஃபெலினி. அதுவரை தனது பிரியத்தை வெளிப்படுத்தாது ஒரு கல்லைப்போல வாழ்ந்த ஒருவன், தன்னால் கைவிடப்பட்ட கெல்சோமினா இறந்த செய்தி கேட்டு குற்றவுணர்ச்சியிலும், அவள் இருந்தவரை அவள் கொடுத்த அன்பை உணராத இயலாமையிலும் உடைந்து அழத்துவங்குகிறான். கெல்சோமினாவின் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது ஜெலிடோ மசினா (1921-1994) - இவர் இந்த படத்தின் இயக்குனர் ஃபெலினியின் மனைவி. இந்த கதாபாத்திரத்திற்கே உரிய அப்பவித்தனமும் குறும்பும் இவர் முகத்தில் இயற்கையாக அமைந்திருக்கிறது. இவர் குறும்பாக கோமாளித்தனம் செய்யும் இடங்கள் சாப்ளினின் சாயலில் அமைந்திருக்கின்றன. சம்ப்பானோவின் அன்பற்ற போக்கை சதா சகித்துக்கொண்டு அவன் தன்னை விரும்புவதாக தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொள்ளும் ஒரு பெண்ணாக – ஆணை சார்ந்து வாழும் ஒரு பெண்ணாக இந்த கதாபாத்திரத்தைப் படைத்திருக்கிறார் ஃபெலினி. சம்பானோ எவ்வளவு தான் உதாசினப்படுத்தினாலும் அவனது தேவைகளை நிறைவேற்றுவதையும் அவனுடன் வாழ்தலைக் கடமையாக கருதும் கதாபாத்திரம். மூன்றாவதாக கழைக்கூத்தாடி கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கவில்லை ஃபெலினி. படம் முழுவதும் இந்த கதாபாத்திரம் The fool என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் மிகவும் நடுநிலைமையாக யோசித்து விவேகத்துடன் செயல்படும் கதாபாத்திரம் இது தான். ஹாலிவுட் நடிகரான ரிச்சர்ட் பேஸ்ஹார்ட் (1914-1984) இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

1950களின் துவக்கத்தில் முடிவடைந்ததாகக் கருதப்படும் நியோரியலிசம் என்னும் சினிமா இயக்கத்திலிருந்து விலகிய இந்த ஃபெலினியின் படம் நியோரியலிசத்தின் சாயல்களைக் கொண்டிருக்கிறது. பொதுவாக நியோரியலசத்தின் முக்கியமான குணாதிசியங்களில் சில - மதக் கொள்கைகள், சாமானிய மனிதனின் பிரச்சனைளை முன்வைத்தல், தொழில்முறை அல்லாத கலைஞர்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஆவணப்படச்சாயலில் இயக்கும் பாணி. ஹாலிவுட் நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்டபடமாயினும் "அன்பு செய்யாதார்க்கும் அன்பு செய்தல்" என்ற கிறித்துவ மத கோட்பாடுகளின் சாயலைக் கொண்டிருப்பதாலும், முன் வைக்கும் பிரச்சனையினாலும், படமாக்கப்பட்ட விதத்தாலும் நியோரியலிசத்தை சார்ந்தாக தோன்றுகிறது. படத்தின் முடிவில் சம்பானோவின் மேல் நமக்கு ஏற்படுவது பரிதாப உணர்ச்சியே அன்றி ஆத்திரமல்ல. இந்த உணர்வே இந்த திரைப்படத்தின் வெற்றி.

* இந்த திரைப்படம் 1956ஆம் ஆண்டு சிறந்த பிறமொழி திரைப்படப் பிரிவின் கீழ் ஆஸ்கார் பெற்றது.

No response to “லா ஸ்ட்ராடா (The Road) *- 1954”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman