Adsense

மெகா சீரியல்கள் தந்த மைக்ரோ சிந்தனைகள்


ஊர் உலகம் அதிகாலையில் விழித்துக் கொண்டு அரக்க பரக்க அடித்துக் கொண்டு அலுவலகம் செல்லும் ஒரு வார நாளில், இளைஞன் ஒருவன் அலுவலக பிரக்ஞை இல்லாமல் ஒன்பதே முக்கால் மணி வரை இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கி விட்டு வீட்டிற்கு வந்த நாளிதழில் இருக்கும் ஆபிட்சுவரி காலம் வரை முழுக்க படித்து விட்டு சாவகாசமாக குளித்து விட்டு மெகாசீரியல் பார்ப்பது என்பது ஒரு புழலில் அடைக்கத் தக்க குற்றத்திற்கு சமம். ஆனால் அப்படி பட்ட குற்றங்களை நிகழ்த்தும் போது கிடைக்கும் சுகத்திற்காக ஒருமுறை புழல் சென்றாலும் தப்பில்லை என்றே தோன்றுகிறது. இதில் கொஞ்ச அதிக திருப்தி உண்டாக வேண்டுமானால், உங்களைத் தவிர சர்வ லோகமும் பரபரப்பில் இருக்கிறது என்பதை உங்களுக்கு நீங்களே நினைவுருத்திக்கொள்ளவேண்டும். இந்த சந்தோஷமெல்லாம் மெகா சீரியல்கள் துவங்கும் வரை தான். ஒரு சின்ன ரியாக்ஷனுக்காக பிரேமில் இருக்கும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் (நாய் உட்பட) ஒரு க்ளோஸப் ஷாட் காட்டி உங்களை மத்தியான தூக்கத்திற்கு தயார் படுத்தி விடுகிறார்கள்.

சில பொது விதிகளை வைத்திருக்கிறார்கள். ஹீரோயின் வில்லி நிச்சயம் தேவை - நடுவில் சாக சம்மதித்தால் ஹீரோவுக்கு அனுமதி உண்டு. பெண்கள் முழியை உருட்டி டயலாக் பேசுதல் அவசியம். யாருக்கு யார் உறவு என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு ஸ்பெகட்டி குடும்பம். ஒரு பக்கம் ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் சமுகமாக நமது சமுகம் சொல்லப்பட்டாலும் இது போன்ற சீரியல்கள் அதுவும் பெண்கள் முக்கியமான பங்கு வகிக்கும் சீரியல்களுக்கு எப்படி இவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்ற கேள்விக்கான விடை ஒருவேளை நமது மரபு சார்ந்ததாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. தீவிரவாதத்தை கையிலெடுக்கும் ஒருவனின் தீவிரவாத குணம் அவனின் கோபக்கார முன்னோர் யாரிடமிருந்தாவது வந்திருக்கலாம் என்பது போல.

இன்றைக்கு 33 கட்டுப்படியாகாது என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் ஆரம்ப கால கட்டங்களில் ஆண்கள் தாராளமாகத்தான் இருந்திருக்கிறார்கள். வேத காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களை கேள்வி கேட்கும் பாரம்பரியம் சொல்லப்பட்டிருக்கிறது. கார்கிக்கும் யக்ஞவால்கியருக்குமிடையேயான விவாதம் இந்த உலகத்தைப் பற்றியும் அதன் தோற்றத்தைப் பற்றியும் இந்திய கலாசாரத்தில் இருந்த மதிப்பீடாக நமக்குக் கிடைக்கின்றன. இந்த உலகத்திலிருக்கும் செல்வங்கங்களைனைத்தும் அமரத்துவத்தை தராதெனினில் அந்த செல்வத்தால் என்ன பயன் என்று கேள்வி கேட்கும் தெளிவுடைய பிரம்மவதனியாக நாம் மைத்ரேயியை அறிகிறோம். ஆதி சங்கரரின் காலத்தில் அவருக்கும் மந்தான மிஸ்ரருக்கும் ஏற்பட்ட விவாதத்திற்கு நடுவராக அவரின் மனைவி உதய பாரதி செயல் பட்டிருக்கிறார். பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதை எந்த விதமான குழப்பமும் இன்றி வேத காலம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் பெண்ணை ஆணின் பின்னால் நிறுத்தி வைத்தலை ஒரு கடமையாக பின் வருங்காலங்கள் செய்திருக்கின்றன. குழந்தைபேறுக்குப் பின்னே பெண் முழுமையடைகிறாள் என்று காலம் தொட்டு சொல்லப்படும் சிந்தனையை இன்றைய காலகட்டத்தில் முழுமையான சிந்தனையாக ஏற்றுக்கொள்ள ஏற்படும் தயக்கத்துக்கு genetic transmission of phenotypes காரணமாக இருக்கலாம். இதன் பின்னர் சங்ககாலம் முதல் இடைகாலம் வரை பெண்கள் நிலையில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி மீண்டும் எழுதி போரடித்து மெகா சீரியல்காரர்களுடம் போட்டி போட விரும்பவில்லை.

இந்திய கலாசாரத்தைப் போல பெண்களை அதிக அளவு கொண்டாடிய இன்னொரு கலாசாரம் எகிப்திய கலாசாரம். எகிப்தில் பெண்களுக்கு அரசாளும் அதிகாரம் வரை இருந்திருக்கிறது. அரசாட்சிக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் அவர்களுக்குள் இருந்த திருமண பந்தங்கள் நமது கலாசாரத்திலிருந்து அன்னியப்பட்டாலும் நமது கலாசாரத்திலிருந்த பெண்களைக் காட்டிலும் எகிப்திய பெண்கள் தனித்துவமிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள். நவின யுகத்தின் பெண்களிடம் வெளிப்படும் ஆதாயம் தேடும் நோக்கு, கொள்கைவாதம் தவிர்த்த யதார்த்தவாதம் எல்லாமே கி மு வில் வாழ்ந்த எகிப்திய அரசிகளிடமும், பட்டத்து ராணிகளிடமும் பார்க்க முடிவது என்பது ஆச்சரியமளிக்கவில்லை. கிளியோப்பாட்ரா VII, நெஃபர்டிடி, தை போன்ற ஆற்றல் மிக்க ஆளுமைகளிடமிருந்த அரசியல்வாதம் இன்றைய சமுகத்திலிருக்கும் பெண்களிடம் தென்படுவது இயற்கையாகவே தோன்றுகிறது. நமது பெண்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விட இயற்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக எனக்குப் படுகிறது.

நீளமாக கதை சொல்வது கதைக்குள் கதை வைத்து சொல்வதெல்லாம் நம் சமுகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. நம் இந்திய கலாசாரத்தின் அடையாளமாக நாம் முன் வைக்கும் இதிகாசங்களான ராமாயணம் மகாபாரதமும் உலகின் பிற இலக்கியங்களைக் காட்டிலும் மிகப் பெரியவை. இலியாடையும் ஒடிஸியைக் காட்டிலும் மகாபாரதம் மட்டுமே பல மடங்கு பெரியது. இன்றைக்கு நடைமுறையில் எதிர்கொள்ளப்படும் எல்லா உறவு குழப்பங்களும் மகாபாரதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன. உலகின் முதல் மெகாசீரியலுக்கான ஸ்கிரிப்ட் சொன்னது வேதவியாஸராகத் தான் இருக்க வேண்டும்.

___
நன்றி: யுகமாயினி செப் 08

No response to “மெகா சீரியல்கள் தந்த மைக்ரோ சிந்தனைகள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman