Adsense

ஹே, குட்பை நண்பாஇந்த இரண்டு மாதங்களில் என்னுடையா பால்ய சிநேகிதர்கள் இரண்டு பேருக்கு கல்தா கொடுக்க வேண்டிய கட்டாயம். முதல் ஆள் இங்க்லீஷ்காரன் - எப்போதும் இங்க்லீஷ் தான் பேசுவான். அவன் பெயர் The Hindu. கையில் பிடிக்க முடியாத காலத்தில் முட்டி போட்டுக் கொண்டு நாளிதழை தரையில் விரித்து விட்டு இரண்டு கைகளாலும் இரு முனைகளையும் பறக்காமல் இருக்கும் படி பிடித்துக் கொண்டு கடைசிப் பக்கத்து கிரிக்கெட் செய்திகள் படித்தது தான் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றது. கபில்தேவ் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது தான் என்னுடைய முதல் கவலையாக அந்த காலத்தில் இருந்தது. கடைசி பக்கத்தைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமாக படவில்லை.
நான் என்னுடைய மாவட்டத்திற்காக (தஞ்சை) கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு பெற்று paper score (30-40 ஓட்டங்களுக்கு மேலோ, 3 விக்கெட்டுக்கு மேலோ எடுத்தாலோ பேப்பரில் ஒரு ஓரத்தில் பெயர் போடுவார்கள்) எடுத்தாலும் Hinduவில் பெயர் வராமல் Indian Express-இல் தான் பெயர் வரும். Hindu ஸ்டேட் லெவல் ஆட்டங்களையும் Combined district ஆட்டங்களையும் தான் cover செய்வார்கள். District ஆட்டமெல்லாம் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று ரொம்ப நாளைக்குப் பின் தான் எனக்குத் தெரிய வந்தது. Hinduவில் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே எப்படியாவது ஸ்டேட் டீமில் வந்துவிட வேண்டும் என்பது அந்த நாளைய லட்சியம். பத்தாவதில் படிப்பு கெட்டு விடும் என்று கிரிக்கெட்டை நிறுத்த வேண்டிய கட்டாயம் வரும் வரை அந்த கனவு நிறைவடையவில்லை. கடைசி பிரயத்தனமாக ஜனவரியில் (ஏப்ரலில் தானே பரிட்சை) நடந்த போட்டிகள் முழு மூச்சோடு நான் விளையாடியதற்கெல்லாம் பின் புலம் Hinduவில் பெயர் வரும் ஆசை தான்.
கொஞ்சம் வளர்ந்த பின் என் அப்பாவிற்கு Hindu பிடிக்காமல் போய் வீட்டில் Hindu நிறுத்தப்பட்டது எனக்கு செம எரிச்சலைத் தந்தது. அவரைப் பொருத்தவரை தினமணி மட்டுமே நேர்மையான பேப்பர். ஏ என் சிவராமன் போன்ற ஆட்களுக்காகவே அவர் தினமணி வாங்கினார். மற்றதெல்லாம் ஆளுங்கட்சி ஜால்ரா என்றே அவர் நம்பினார். அந்த கோணத்திலே தான் அவர் Hinduவையும் எங்கள் வீட்டிலிருந்து கடாசினார். அவர் கடாசினால் என்ன ? பள்ளி library கடாசவில்லையே. பெரும்பாலும் staff room-இல் மட்டுமே இருக்கும் பேப்பரை சாயங்காலம் ஸ்கூல் விட்டு போகும் போது ஆசிரியர் அனுமதியுடன் படித்து நிம்மதியடைந்தது ஒரு காலம்.
பிற்காலத்தில் நான் சம்பாதிக்கும் போது என்னுடைய அன்றாட வாழ்கையில் Hindu என்பது ஒரு முக்கிய இடத்துக்கு வந்து விட்டது. இதற்கிடையில் கல்லூரி காலத்திலேயே வீட்டில் போனால் போகிறது என்று Hinduவிற்கு என் அப்பா அனுமதி கொடுத்து விட்டார். அதிகாலையில் பேப்பர் வாங்குவதை ஒரு கர்மமாக கொண்டிருக்கும் என் அப்பாவிற்கு Hindu வாங்குவது என்பது அவ்வளவாக பிடிக்காத காரியமாகவே இருந்தது. எனக்காகவே வாங்கி வந்தார். எனக்கு இன்றைய தேதிக்கும் Hindu Editorial மீது அதிக மரியாதை உண்டு. பல சமயங்களில் ஒரு பிரச்சனையின் புதிய கோணத்தை அறிமுகப்படுத்தும் ஊடகமாகவே எனக்கு அவை இருந்திருக்கின்றன.
அதன் பிறகு ஏதோ வசவசவென்று என்று எந்த நிலைப்படும் இல்லாமல், நீர்த்த ஒரு போக்கே Hinduவில் காணப்படுவது கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வேறு ஏதாவது paper-ஐயும் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Hindu-வில் இருக்கும் செய்திகள் கொஞ்சம் அதிகப்படியாகவே முக்கியமில்லாமல் எனக்குப்பட்டது ஏனென்று தெரியவில்லை. கடைசியாக ஹிண்டுவைப் பற்றி பெருமை கொண்டது Ramnath Goenka Memorial Debate-இல் தான். Shobana Bhartia Page 3 சமாச்சாரங்களை ஆதரித்த போதும், Barkha Dutt ஹிண்டுவை Boring newspaper என்று வர்ணித்த போதும் (popular journalism-ஐ ஆதரிக்கும் போது), "Well, It is a democratic world" என்று ராம் diplomatic-ஆக சொன்னது எனக்குக் கொஞ்சம் பெருமையாக இருந்தது - என்ன இருந்தாலும் நம்ம paper இல்லையா. Page 3 சமாச்சாரமில்லாமல் ஹிண்டு இந்த யுகத்திலும் இருப்பது எனக்கு சந்தோஷமே. சில நிமிஷங்களில் மூடி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தும் பேப்பரை வைத்துக் கொண்டு என்ன செய்வது. சென்ற வாரத்துடன் மங்களம் பாடிவிட்டேன். அப்பாவுக்கு ஆச்சர்யம்.இரண்டாவது நண்பனுக்கு நான் கல்தா கொடுக்க முடிவு செய்தது தான் வீட்டிலிருப்பவர்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். கிழவனென்றாலும் விகடன் எங்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு பிரதான நண்பன். எவ்வளவு நல்ல சிறுகதைகள், தொடர்கதைகள் வெளியிட்ட பத்திரிக்கை. உண்மையிலேயே விகடன் வாசகன் என்பதில் குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்குமே பெருமைதான். நான் சுஜாதாவை தீவிரமாக படிக்கத்துவங்கியது பூக்குட்டிக்குப் பின் தான். பின்னர் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், எஸ் ராமகிருஷணன், சிற்சில கார்டூன்கள், விகடனின் நகைச்சுவை உணர்வு இவையனைத்தையுமீறி "விகடன்" என்ற காரணத்துக்காக. ஏறக்குறைய ஒரு பாரம்பரியமகவே வீட்டில் விகடன் வலம் வந்துகொண்டிருக்கிறது.
பெரும்பாலும் சினிமா செய்திகள், விதமான சுவாரஸ்யமும் தராத கட்டுரைகள், ஜல்லியடிக்கும் சினிமா விமர்சனம் என்று விகடன் நீர்த்துப் போகத்துவங்கி பல காலம் ஆகிவிட்டது. இப்போது வரும் விகடன் விகடன் மாதிரியே இல்லை. ஏதோ கத்துக்குட்டி இதழ் மாதிரி இருக்கிறது. அதுவும் அந்த பெரிய புத்தகம் - பதினைந்து ரூபாய் தண்டம் என்ற என் எண்ணத்தை மேலும் வலுப்பெற செய்கிறது. சினிமா விமர்சனமாவது நேர்மையாக இருந்திருக்கலாம் - யாரடி நீ மோகினிக்கு அவர்கள் எழுதியிருந்த விமர்சனத்தைப் படித்த பிறகு அதை படிப்பதையே நிறுத்தி விட்டேன். ஒரு காலத்தில் தமிழில் வரும் Readers digest என்று நான் நம்பிருந்தேன். இப்போது இருக்கும் இதழில் frivolous-ஆக இருக்கும் விஷயங்களை நீக்கிவிட்டு உருப்படியான விஷயம் என்ன என்று பார்த்தால் 10 பக்கங்களுக்கு மேல் தேறாது.
Youthful விகடனாக்குவதற்கு பதில் Useful விகடனாக்கியிருக்க கவனம் செலுத்தியிருக்கலாம். மாணவ பத்திரிக்கையாளர்கள் திட்டம் இன்னும் உயிர்ப்போடு இருப்பது நல்ல விஷயம். ஒரு வார்த்தை விடாமல் விகடனை படித்த காலம் போய், சில எழுத்தாளர்களுக்காகவும், சில குறிப்பிட்ட செக்ஷன்களையும் படிக்கும் காலமும் போய், எதற்காக விகடனைப் படிக்க வேண்டும் என்றே தெரியாமல் விகடனைப் புரட்டும் காலத்தில் தான் சில மாதங்களாக இருக்கிறேன். கோலங்கள்-க்கு கதை சுருக்கம் எழுதியது last straw.
என்னுடைய இந்த முடிவுக்கு பலமான எதிர்ப்பு. "நீ வேணும்னா இண்டர்நெட்ட- கட்டிண்டு அழு - விகடன் விஷயத்தில் தலையிடாதே" என்று கட்டாயமாக சொல்லிவிட்டார்கள். வீட்டில் இன்னும் விகடன் வலைய வருவான். என் மனதில் இல்லை.
இந்த வாரம் ஜெயஸ்ரீ-இன் வலைப்பதிவை விகடன் வரவேற்பறையில் வைத்திருக்கிறார்கள்.

2 Responses to “ஹே, குட்பை நண்பா”

You are very late in your realisation. We had "gnanodaya" long back. When the Hindu turned into a "widely Red" anti-national daily and when Vikatan became to be run by half-baked and immatured group of "student editors", we gave a goodbye.
S. Krishnamoorthy

நான் சென்ற வாரம் விகடனை நிறுத்தினேன். கலர்ஃபுல்லாக மாற்றுகிறேன் என்று புத்தகத்தையே கெடுத்துவிட்டார்கள். விகடன் படிக்கவே எரிச்சல் வந்துவிட்டது. அதன் வடிவத்தை மாற்றியிருக்கவே கூடாது. 15 ரூபாய் மிகமிக அதிகம். அதனால் நிறுத்தினேன்.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman