Adsense

கண்டவர் விண்டிலர்


இந்த மே மாதத்தில் மனிதன் பிரபஞ்ச தனிமையிலிருந்து விடுபட மேற்கொண்ட தேடுதலில் ஒரு முக்கியமான மைல்கல் எட்டப்பட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோபோ காலடி எடுத்து வைத்திருக்கிறது. அதன் மண்ணில் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆர்கானிக் காம்பவுண்டுகள் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை செய்ய அந்த ரோபோ எடுத்து வரும் சாம்பிள்கள் மேல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். பிற கிரகங்களில் உயிர்கள் வாழ்தல் சாத்தியமா என்று கண்டு பிடிப்பதில் மனிதன் கொண்ட அபாரமான ஆர்வம் கொஞ்சம் கிறுகிறுக்கவே செய்கிறது. ஒரு விதத்தில் மனிதன் அளவுக்கு வளர்ந்த உயிரணங்கள் இருக்கின்றனவா என்று யாரேனும் கேள்வி கேட்டால் அது கொஞ்சம் சின்னத்தனமான கேள்வி தான். ஏனென்றால், மனிதனை விட புத்திசாலி ஜீவராசிகள் பிரபஞ்சத்தில் இருக்க வாய்ப்பு உண்டு என்று அறிவியல் நம்புகிறது.

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் உயிரிணங்கள் மொத்தத்தையும் பல நிலைகளில் பிரிக்க முடியும் என்று நிக்கோலை கர்டாசேவ் 1964 இல் முன்மொழுந்தார் (இந்த ரஷ்யர்கள் ஏன் காராசேவ் ரேஞ்சுக்கே பெயர் வைத்துக் கொள்கிறார்கள் ?). கிரகங்கள் (பூமி), கிரக குடும்பங்கள் (சோலார் சிஸ்டம்), கேலக்ஸி (மில்கி வே கேலக்ஸி) என்று அடுக்குகளாக இந்த பிரபஞ்சம் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கேலக்ஸிக்கும் கிரக குடும்பங்களுக்கும் இடையில் பல ஸ்டெல்லார் காலனிகளும், சாம்ராஜ்யங்களும் உண்டு.

இங்கு வாழும் உயிரணங்களை, இந்த பிரபஞ்சத்தின் மேல் அவற்றால் ஏற்படுத்த முடிந்த தாக்கத்தின் அளவைப் பொறுத்து அவற்றை முன்று நிலையாக பிரித்திருக்கிறார் நமது கர்டாசேவ். முதல் நிலையால், வானிலையை மாற்றமுடியும், பல பில்லியன் வாட் சக்தியை வெளிப்படுத்த/ கட்டுப்படுத்த முடியும். இருப்பினும் இவை அழியக்கூடியவை. இரண்டாம் நிலை உயிரிணங்களால், முதல் நிலை உயிரிணங்களைப் போல பத்து பில்லியன் மடங்கு சக்தியை வெளிப்படுத்த/ கட்டுப்படுத்த முடியும். ஒரு நட்சத்திரத்தின் ஆற்றல் அத்தனையும் கட்டுப்படுத்த வல்லது. அவ்வளவு சீக்கிரம் காலியாகாது. மூன்றாம் நிலை உயிரிணங்களால் இரண்டாம் நிலை உயிரிணங்களைக் காட்டிலும் பத்து பில்லியன் மடங்கு சக்தியை வெளிப்படுத்த/ கட்டுப்படுத்த முடியும். ஒரு முழு கேலக்ஸியையும் கட்டுப் படுத்தும் வல்லமை உண்டு. இந்த பிரபஞ்சம் முற்றிலும் அழிந்தாலேயன்றி அழிவில்லை. இந்த மூன்று வகைக்கு இடையிலும் ஆற்றலை கட்டுப்படுத்தும் வல்லமையின் படி உயிரிணங்களை இன்னும் பாகுபடுத்தலாம். இந்த மூன்று நிலைக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கையைத் தந்தால் மனித இனம் 0.7 என்ற புள்ளியைப் பெறும். 2040 வாக்கில் 0.733 ஆகலாம். மனிதன் அந்த அளவுக்கு சின்னப் பயல். எதிர்காலத்தில் அறிவு அதிகமாக அதிகமாக நமது சக்தியும் அதிகமாகும். ஆதலால் வேற்று கிரக ஜீவராசிகளைக் கொண்டு அறிவியல் புணைக்கதைகள் எழுதுபவர்கள் 2500 மேற்பட்ட காலத்தை எடுத்துக் கொள்வது சாலச்சிறந்தது. அதற்கு முன் முதல் நிலை பிரபஞ்ச உயிரணமாகக் கூட மனித இனம் மாற வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதலின் விளைவின் ஒரு பகுதி தான் கடவுள்கள் என்று நம்பப்படும் கிறிஸ்து, கிருஷ்ணர் எல்லாரும் அதிக சக்தி உடைய பிரபஞ்ச ஜீவராசிகள் என்று கூறும் ஒரு conspiracy theory. கிருஷ்ணர் விஷயத்திலாவது கருவில் பத்து மாதங்கள் இருந்து, வாழ்ந்து, பின் குழந்தை பெற்று, பின் இடது காலில் அம்பு பாய்ந்து இறந்ததாக கதைகள் இருந்ததால் இந்த பிரச்சனையில் கிருஷ்ணர் அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் இயேசு Virgin Mary மகனாக பிறந்ததிலிருந்து அவர் புனித உடலை மீண்டும் கொண்டது வரை ஒரு அதிசயங்களை நிகழ்த்திய தேவனாக போற்றபடுவதால், அந்த தெய்வத்தன்மையை அறிவியல் கொண்டு அலசத்துவங்கி இயேசு பூமியில் வாழ்ந்த ஒரு வேற்றுகிரக ஜீவராசி என்று ஒரு conspiracy theory கொண்டு வந்து விட்டார்கள். இயேசுவுக்கும் மேரி மெக்டலைனுக்கும் திருமணம் நடந்து அதன் மூலம் இயேசுவுக்கு சந்ததி உண்டு என்று The Jesus Scroll முதல் Davinci Code வரை சொல்லப்பட்டாலும் அவற்றை அந்த மதமோ அந்த மத நம்பிக்கையாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு ஒரு தெய்வாம்சமாக போற்றப்படுகிறார். அந்த தெய்வாம்சத்தை அதிக சக்தி கொண்ட ஜீவராசி என்று ஒரு தியரியை கொண்டு வந்து விட்டார்கள். இயேசுவும் கிருஷ்ணரும் அதிக சக்தி கொண்ட பிரபஞ்ச ஜீவராசியா என்ற விவாதத்தை விட்டு விட்டு பூமியில் வாழாத, பிரபஞ்சத்தின் பிற ஜீவராசிகள் பூமிக்கு வந்ததுண்டா என்பதை மட்டும் கையில் எடுத்துக் கொள்வோம்.

பிரபஞ்ச ஜீவராசிகள் வந்ததற்கான சான்று என்று theoristsகளால் பெரும்பாலும் சொல்லப்படுவது பிரமிட் கட்டக்கலை பற்றிய நுண்ணிய அறிவு, சொடோம் மற்றும் கொமெரோவின் அழிவு போன்றவை சொல்லப்பட்டாலும் – சற்றே நேரிடையான ஆதாரம் என்று theorists முன் வைப்பது பெரு நாட்டில் இருக்கும் நாஸ்கா என்னும் தொல்பொருள் ஆராய்ச்சிதளம் (சமிபத்தில் வெளிவந்த “Indiana Jones and the kingdom of crystal skull” படத்தில் நீங்கள் இந்த தளத்தின் பேரைக் கேள்விப்பட்டிருக்கலாம்.) இந்த தளத்தில் ஏறக்குறைய 40 மைல் தூரம் வரையில் நேர் கோடுகளும் பல்லி, பாம்பு போன்ற ஜீவராசிகளின் படங்களும் பூமியில் வரையப்பட்டிருக்கின்றன. இந்த கோடுகளை எதற்காக வரைந்திருக்கிறார்கள் அதுவும் இந்த படங்களும் கோடுகளும் வரையப்பட்ட காலம் என்று கணிக்கப்படும் கி மு 300 முதல் கி பி 700 வரையிலான காலகட்டத்தில். இதற்கு விளக்கமாக பல தியரிகள் இதுவரை சொல்லியிருக்கிறார்கள். இந்த சமுகத்தில் வாழ்ந்த பழங்குடியினருக்கு இந்த முக்கோணங்களும், கோடுகளும் சூரியனின் திசையை கணிக்கவும் நாட்களை எண்ணவும் பயன் பட்டிருக்கலாம் என்று ஒரு தியரி. மற்றொன்று ஆகாயத்திலிருந்து கடவுள் காண்பதற்காக வரையப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறது. இங்கிருந்து தான் வேற்றுகிரக ஜீவராசி பற்றிய தியரி ஒன்று கிளைக்கிறது. அதாவது அந்த காலத்திய மக்களுக்கு வேற்றுகிரக ஜீவராசிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்திருப்பதாகவும் அவர்கள் பூமிக்கு வருவதற்காக ஆகாயத்திலிருந்து பார்த்தால் பூமியில் இறங்குமிடம் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த படங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்பதே அது. ஏறக்குறைய ரன் வே மாதிரி. இது ஒரு சுவாரஸ்யமான தியரி என்ற அளவில் மட்டுமே கொள்ள முடியும். எந்த விதமான ஆதாரமும் இந்த தியரிக்கு இல்லை. வேற்று கிரக ஜீவராசிகள் வந்து இறங்கியதாக வைத்துக் கொண்டாலும் அப்படிபட்ட ஒரு விமானம் இறங்கினால் தாங்கும் சக்தி அந்த வறண்ட நிலத்துக்கு கிடையாது என்றே இன்றைய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இதைக் காட்டிலும் சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. மார்க்கோணி ரேடியோவை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சமயம். 1899இல் அதிக சக்தியில்லாத வயர்லெஸ் ட்ராண்ஸ்மீட்டர் மூலம் மார்க்கோணி V என்ற எழுத்தை சிக்னலாக பரப்பினார். பின்னர் ஏறக்குறைய 2 வருடம் கழித்து 1901 இல் அட்லாண்டிக்கை தாண்டி வயர்லெஸ் வழிகாக சிக்னல் அனுப்பும் ஆராய்ச்சியை மேற்கொண்ட போது S என்ற எழுத்தை அனுப்புகிறார். பின்னர் அவர் உலகால் நன்கறியப்பட்டவராக மாறி அவர் தனது கப்பலில் ஆராய்ச்சியை மேற் கொண்டிருக்கும் சமயத்தில் குழப்பமான பல சிக்னல்களை அவரது ரிஸிவர் பெறுகிறது. அதில் தெளிவாக தோன்றிய ஒரே சிக்னல் V. பின்னர் 1924 இல் செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வருவதால் அதிலிருந்து ஏதேனும் சிக்னல்கள் வருகின்றவா என்று பார்க்க உலகத்தில் இருக்கும் டேடியோ ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த சமயம் அவர்களுக்கு கிடைத்த சிக்னலில் தெளிவாக தெரிந்த ஒரு சிக்னல் S. மார்கோணி அனுப்பிய சிக்னல்கள் ஏறக்குறைய 22 ஆண்டுகள் கழித்து பூமிக்கு திரும்பியிருக்கின்றன (திரும்பியிருக்கலாம்) ! அதாவது ஏறக்குறைய 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு ரிசிவரால் பெறப்பட்டு உடனேயே அந்த தொலைவில் இருக்கும் ஒரு டிராண்ஸ்மீட்டரால் அனுப்பட்டிருப்பின் இது சாத்தியம். சற்றேறக்குறைய இந்த தொலைவில் இருப்பவை Epsilon Eridani (10.8 ஒளி ஆண்டுகள்) மற்றும் Tau Ceti (11.8 ஒளி ஆண்டுகள்) என்ற இரு நட்சத்திரங்கள். ஒரு வேளை அந்த நட்சத்திரங்களில் வாழும் உயிரிணங்கள் ரேடியோ சிக்னல் வழியாக பூமியை தொடர்பு கொண்டிருக்கலாம். கொள்ளாமலும் இருந்திருக்கலாம். இதில் என்ன புதிர் என்றால் அவ்வளவு சக்தி குறைந்த ஒரு சிக்னல் எப்படி பூமியைத் தாண்டி சென்றிருக்க முடியும் என்பது தான். இந்த காரணங்களௌக்காகவோ என்னவோ இந்த நிகழ்வு அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

இது போல SETI (Search for Extra Terrestial Intelligence) இன் பல ப்ராஜெக்ட்கள் மூலம் அமானுஷ்ய சிக்னல்கள் பெறப்பெற்றிருந்தாலும் (வேற்றுகிரகத்திலிருந்து பெறப்படுவதாக கருதப்படும் சிக்னல்கள்) வேற்று கிரகத்திலிருந்தோ, பிற பிரபஞ்சத்தின் (ஆமாம் இந்த பிரபஞ்சத்தைப் போலவே இன்னும் பல பிரபஞ்சங்கள் இருப்பதாக அறிவியல் நம்புகிறது அவற்றை multiple universe என்று சொல்கிறார்கள் – இந்து மதத்தின் ரிக் வேதம் முன் வைக்கும் பிரபஞ்சம் multiple universe தான்) ஜீவராசியோ பூமிக்கு வந்ததற்கோ இருந்ததற்கோ எந்த விதமான தடயமும் இல்லை. அல்லது அத்தகைய தகவல்கள் சாதரண குடிமக்களிடையே கிடையாது. நம்மிடம் இருப்பவை எல்லாம் அவற்றை பற்றிய ஒரு விழிப்புணர்வு - அவ்வளவே. ஒரு வேளை அவை வராமலே இருந்திருக்கலாம். எப்போதோ ஒரு முறை சிக்னல்கள் அனுப்பும் (?) அந்த ஜீவராசிகள் ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டு போனால் தான் என்ன என்று Fermi கேட்ட கேள்வியை Fermi’s paradox என்று பொதுவாக சொல்வார்கள். Fermiஇன் கணக்குப்படி வேற்றுகிரக வாசிகள் அல்லது இந்த கேலக்ஸியில் இருக்கும் ஜீவராசிகளாவது பல ஆண்டுகளுக்கு முன்பே பூமிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நம்மிடம் அதற்கான ஆதாரங்கள் எங்கும் இல்லையே – சில யூகங்களைத் தவிர – ஏன்?. பறக்கும் தட்டை இது வரை பார்த்ததாக பலர் சொன்னாலும் எதுவும் ஸ்திரமாக நம்பும்படியான, அறிவியல் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. பெரும்பாலானவை பிரபலத்துக்கு ஆசைப்பட்டு மனிதர்கள் விட்ட கதைகள் தான்.

தூரம் ஒரு வேளை காரணமாக இருக்கக்கூடும். இப்போது மனிதன் கண்டுபிடித்திருக்கும் அதிவேக இயந்திரத்தின் வேகத்தைப் (32 km/sec – தரையில் அல்ல விண்வெளியில்) போல மடங்கு வேகத்தில் பயணம் செய்யும் ஒரு இயந்திரத்தின் மூலம் பயணம் செய்தாலும் நாம் இருக்கும் மில்கி வே கேலக்ஸியில் இருக்கும் 4 % நட்சத்திரத்தையும் கிரகங்களையும் ஆராய மட்டுமே 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று சமிபத்திய ஆராய்ச்சியில் கணிக்கிறார்கள் – அவ்வளவு நட்சத்திரங்களும் கிரகங்களும் நாம் இருக்கும் இந்த கேலக்ஸியில் உண்டு (கிட்டத்தட்ட 250 பில்லியன் நட்சத்திரங்கள்). நமது கேலக்ஸியைத் தவிர இந்த பிரபஞ்சத்தில் மொத்தம் 100 பில்லியன் கேலக்ஸிக்கு மேல் இருக்கின்றன (மனிதனின் மூளைக்கு எட்டிய வரை). ஒவ்வொரு கேலக்ஸியிலும் சில மில்லியன் முதல் சில ட்ரில்லியன் வரை நட்சத்திரங்களும் கிரகங்களும் உள்ளன. ஒரு கேலக்ஸிக்கும் இன்னொரு கேலக்ஸிக்கும் இடையில் ஏறக்குறைய 30 ட்ரில்லியன் கிலோமீட்டர் தூரம். ஒரு கேலக்ஸி விட்டு இன்னொரு கேலஸிக்கு போய் உயிரை தேட வேண்டுமானால் மனிதனைக்காடிலும் மிகவும் முன்னேறிய உயிரணமாகவும், பல மடங்கு முன்னேறிய டெக்னாலஜியை உபயோகிக்கும் உயிரணமாகவும் இருந்தால் தான் சாத்தியம் (ஆனால் அதற்கே பல நூறு மில்லியன் வருடங்கள் பிடிக்கும்).

இந்த பிரபஞ்சம் தோன்றியே ஏறக்குறைய 13.7 பில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன என்பது மதிப்பீடு, அதில் மனித இனம் தோன்ற ஏறக்குறைய 13.6998 பில்லியன் ஆண்டுகள் பிடித்திருக்கின்றன – கடந்த 2 லட்சம் வருடங்களாகத் தான் நாம் இந்த பூமியில் இருக்கிறோம். அப்படி இருக்கும் போது மனித இனமே இது வரை ஒரு வேற்று கிரக ஜீவராசி பூமியை பார்க்காமலே இருக்க வாய்ப்பு உண்டு. அல்லது பிற பிரபஞ்ச ஜீவராசிகள் மனிதன் என்ற இனத்தையே பார்க்காமல் இருக்க வாய்ப்பு உண்டு - மனித இனம் தோன்றுவதற்கு முன்பே பிரபஞ்ச ஜீவராசிகள் இங்கு வந்து டைனோசர்களைப் பார்த்து விட்டு போயிருக்கலாம். இன்றைய தேதியில் சூரியனுக்கு இன்னும் மீதமிருக்கும் ஆயுள் காலம் 10 பில்லியன் ஆண்டுகள் (white dwarf ஆக ஆகும் வரை). ஆனால் சூரியன் ஒரு Red Giant ஆக மாறும் போது மெர்குரி, வீனஸ் மற்றும் பூமியும் காலியாகிவிடும். பூமியைப் பற்றி நிச்சயமாக சொல்ல முடியாது – மெர்க்குரியும் வீனஸும் நிச்சயம் காலி. சூரியன் Red Giant ஆக மாறுவதற்கு இன்னும் 5.5 பில்லியன் ஆண்டுகள் தான் உள்ளன. அதற்கு முன் இன்னும் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே இந்த பூமியில் இருக்கும் முழு தண்ணீரும் வற்றி விடும். அதற்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அட்மாஸ்பியரும் அழிந்து இன்னும் ஒரு பில்லியன் வருடத்திற்குள் மனித இனம் அழிந்து விடும் (பூமியில் மட்டுமே வாழ்ந்தால் – இயற்கைக்கு எந்த இடையூரும் தராமல்). ஆக பிரபஞ்ச ஜீவராசிக்கு மனித இனம் கொடுத்திருக்கும் சமயம் ஒரு பில்லியன் வருடங்கள். அதற்குள் வந்தால் பூமியில் பார்க்கலாம். இல்லையேல் வேறு ஜாகையில் தான் பார்க்க முடியும். எனக்கென்னவோ நம் வாழ் நாளில் வேற்று கிரக ஜீவராசியை பார்க்க மாட்டோம் என்றே தோன்றுகிறது. நமது எதிர்கால சந்ததியினர் ஒரு வேளை பார்க்கக்கூடும். அதுவரை நாம் அமெரிக்கர்களின் கற்பனையை மட்டும் திரைப்படமாக பார்த்துக் கொண்டிருக்கலாம். நம்மால் வேற்று கிரக ஜீவராசிகளோடு தொடர்பு கொள்ள ஒரே வழி அவர்கள் இந்த பிரபஞ்சத்தில் நம்மைத் தேடி கண்டுபிடிப்பது தான் ! நம்மால் இந்த பிரபஞ்சத்தை அலசி ஒரு ஜீவராசியைக் கண்டு பிடிப்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை. வேண்டுமானால் Self replicating spacecraft உதவியுடன் சில மில்லியன் ஆண்டுகளுக்குள் இந்த கேலக்ஸியை அலசலாம். இன்றைய தேதிக்கு இது ஒரு concept நிலையில் தான் இருக்கிறது.

எதற்கும் இரவு தூங்கும் போது வானத்தைப் பார்க்காமல் ஜன்னலை சாத்தி விட்டு தூங்குதல் நலம்.
________

இந்த மாதம் யுகமாயினியில் வெளியான கட்டுரை. தலைப்பு வைத்த பிரசாத்-க்கு நன்றி.

6 Responses to “கண்டவர் விண்டிலர்”

Ramya Ramani said...

OMG ஒரே பதிவில் இவ்வளவு விஷயத்தை தெளிவா சொல்லமுடியுமா!!

Thanks For all the Information :)

விஜய் said...

சாஃப்ட்வேர் சயின்ஸ் சயின்ஸ் ஃபிக்ஷன்னு கலந்து கட்டி அடிக்கறீங்களே?

அதிஷா said...

அப்பாடா எவ்ளோ பிராமாண்டமான விசயம் இது , சார் இத பத்திலாம் தமிழ்ல புத்தகங்கள் வருதா அது பத்தி விபரம் தெரிந்தால் dhoniv@gmail.com க்கு ஒரு மெயில் தட்டி விடுங்களேன்

எனக்கு தெரிஞ்சு இல்லை. ஆனா இதப்பத்தி அங்கொன்னும் இங்கொன்னுமா கட்டுரைகள் இருக்கு. புத்தகம் இருப்பதாக எதேனும் தகவல் தெரிந்தால் முதல் மடல் உங்களுக்குத்தான்

Subash said...

ஆஹா. தொடர்ந்து எழுதுங்கள்.
ஆங்கிலத்தைவிட இப்படி தமிழில் வாசிக்கும்போது கிடைக்குட் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman